Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

   முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மந்துவில் மணற்குளம் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகின்றது. இந்த ஆக்கிரமிப்பானது தொடர்வதுடன், மெதுமெதுவாகக் குளத்தை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றது.

குள ஆக்கிரமிப்பாளர்கள் இக்குளத்துக்கான நீர்வளத்தின் ஒரு பகுதியை தடுத்து நிறுத்தும் வண்ணம் சட்டவிரோத அணையைக் கட்டி, நீரைக் கடலுக்கு திருப்பி விட்டுள்ளனர். இதன் மூலம் குளத்தின் நீpரின் கொள்ளளவைக் குறைத்துள்ளதுடன், குளத்தைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கின்றனர். 

இந்த நீர் நேரடியாக விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் குளநீரை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்தடி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்;. அத்துடன் மக்களின் குடிநீருக்கான பொது ஆதாரமாகவும், கால்நடை வளர்ப்புக்கான ஆதாரமாகவும் குளம் உள்ளது. பிற உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கு, சுற்றுச்சூழலுக்குமான பொது அடிப்படையாகவுள்ளது.  

தொடரும் குள ஆக்கிரமிப்பானது, இதை நம்பி வாழும் சமூகப் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், குடியிருப்புக்கான சட்டரீதியான நிலவுரிமையைச் சிதைக்கும் வண்ணமுமுள்ளது. இந்தக் குளமானது, அக்குளத்தை நம்பி வாழும் மக்களுக்குச் சட்டரீதியான உரித்துடையதாகும். மக்களுக்கான இந்த அரசுச் சொத்தைப் பாதுகாக்கும் வண்ணம், குள ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்களின் எதிர்ப்பையடுத்து, சில உண்மைகள் வெளிவந்துள்ளது. அவற்றில் இருந்து


1.    ஆக்கிரமிக்கப்பட்டு வரும் மந்துவில் மணற்குளம் சட்டரீதியாக அரச உடைமையாகும். கமநல அபிவிருத்தித் திணைக்களம், முல்லைத்தீவு 14.05.2018 பிரதேசபைக்கு விடுத்த உத்தரவில்  "குளத்தினை பலர் தொடர்ச்சியான முறையில் ஆக்கிரமித்து வருகின்றனர். … தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு குளத்தினை இல்லாதொழிக்கும். மணற்குளத்தினுள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்றும் மண் நிரப்பப்பட்டமை, கட்டிடம் அமைக்கப்பட்டமை போன்றவற்றை அகற்றுவது தொடர்பான" உத்தரவினை, புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்துக்கு விடுத்திருந்தது.  ஆனால் இது அமுல்படுத்தப்படவில்லை.

2.    புதுக்குடியிருப்புப் பிரதேசசபை 25.04.2023 வழங்கிய தகவல் வழங்கல் கடிதத்தில் "கட்டிட அமைப்புக்கு புதுக்குடியிருப்பு பிரதேசசபையால் கட்டிட அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் கட்டிட அனுமதிக்கான ஆவணங்கள் எவையும் எமது கட்டுக்காப்பில் இல்லை" என்று கூறுகின்றது.

3.    இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 16.10.2019 கொடுத்த தனது விசாரணை அறிக்கையில் "குறித்த குளத்தின் சட்டவிரோத முறையிலான ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு காணிகளை பிடித்துள்ளவர்களிற்கு பிரதேச செயலகமும் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களும் இணைந்து முறையாக அறிவிப்பு ஒன்றினை வழங்கி பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவானது கேட்டுக் கொள்கின்றது…. சட்டவிரோதமான அடாத்து தொடர்பில் இணங்காவிடின் அரச காணியின் ஆட்சி உரிமையின் மீளப்பெறுமாறு சட்டத்த்pன் கீழ் சம்மந்தப்பட்டவர்களை வெளியேற்றுமாறு" கேட்டுக்கொண்டது. அத்துடன் "குளத்தின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது இரண்டு சமூகங்களிற்கிடையிலான பிணக்காக தற்சமயம் பார்க்கப்படுவதுடன் இதற்கு அரச அதிகாரிகளின் தலையீடும், நடவடிக்கைகளும் இன்மையே காரணமாக அமைந்துள்ளதனை" சுட்டிக் காட்டியுள்ளது.

4.    மந்துவில் கமக்காரர் அமைப்பு 17.04.2023 யுத்தகால "இடிபாடுகளை அதன் மேல் கோயில் என்ற பெயரில் பாரிய கட்டுமானங்களை"; அமைப்பதைத் தடுக்குமாறு விவசாய அமைச்சர், ஆளுநர், ஜனாதிபதி செயலகம்;, பிரதேசசபைக்கு அறிவித்தனர்.
       
இது போன்று பல அரசதரப்புச் சார்ந்த தெளிவுறுத்தல்கள் இருக்க, அரசு ஆதரவுடன் குளம் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றது. சட்டத்தையும், நீதியையும்.. ஓடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கும் வண்ணம், அரசின் மறைமுகமான ஆதரவுடன் ஆக்கிரமிப்பு தொடருகின்றது. அரசு இதற்கு எதிரான தனது அதிகாரத்தையோ, நீதிமன்றத்தையோ நாட மறுப்பது ஏன்?

•    ஏழை எளிய மக்களின் மீதான வெறுப்பா! 

•    சாதிய, மத .. மீதான வக்கிரங்களா! 

•    குள ஆக்கிரமிப்பாளர்களின் தயவில் அரசு அதிகாரிகள் இயங்குகின்றார்களா?  

•    தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்கின்றவர்கள், கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? 

•    தமிழ் மக்கள் எமக்கு வாக்களித்தனர் என்று கூறுக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தியின் அரசு, ஏன் சட்டத்தின் ஆட்சியை அமுல் செய்யவில்லை?.

யாழ்ப்பாண சர்வதேச விளையாட்டு மைதானத்துக்கு எதிராக, சுற்றுச்சூழல் காவலர்கள் என்று கூறி மரத்தைப் பாதுகாக்க வழக்குப் போட்டவர்கள், ஒரு குளம் ஆக்கிரமிப்பதைக் கண்டுகொள்ள மறுப்பது ஏன்? அவர்களின் கட்சியே புதுக்குடியிருப்புப் பிரதேசசபையில் ஆட்சி அமைத்துள்ளது. அவர்களின் நிர்வாகத்தில் உள்ள குள ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லையா? அக்கட்சியை எதிர்க்கும் தரப்புகள் கள்ள மவுனத்துடன் கூட்டுக் களவாணியாக இருப்பது ஏன்!?  

தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டிய விகாரையானது, தனியார் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படுள்ளது. இதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் தரப்புகள், இதே போன்று தமிழரால் தமிழர் குளத்தை ஆக்கிரப்பதை கண்டுகொள்ள மறுப்பது ஏன்? 

தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கோரும் தரப்புகளின் கையில் பிரதேசசபை அதிகாரம் இருக்கின்றது. அந்த அதிகாரத்தைக் கொண்டு ஆக்கிரமிப்பை சட்டரீதியாக அகற்றவோ, நீதிமன்றத்தை நாடவோ மறுப்பது ஏன்!?

திருகோணமலைக் கடற்கரையை ஆக்கிரமிக்க திடீர் புத்தர் சிலை நாட்டிய விவகாரத்தின் போது கடல் பாதுகாப்பு அரசு அமைப்பு சட்டரீதியாக அணுகியது. பொதுக் கருத்தும் உருவானது. இப்படியிருக்க மந்துவில் மணற்குளத்தின் விடையத்தில் அரசு தரப்பு நீதிமன்றத்தை நாடவில்லை ஏன்? இதன் மூலம் ஆக்கிரமிப்பை மறைமுகமாக அங்கீகரிக்கும் தரப்பாக அரசு உள்ளதா எனக் கேள்வி எழுகின்றது.  

அரசு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருக்க, மக்கள் போராடும் போது அதற்கு உதவ மறுக்கின்றனர். ஆக்கிரமிப்புக்கு எதிரான  பொதுக் கருத்து இல்லாமல் போகின்றது.  

மக்கள், நீதிமன்றத்தை நாடிய போதும், வழக்கறிஞர்கள் மறைமுகமாக ஆக்கிரமிப்பாளருக்கு உதவும் வண்ணம் வழக்கை நகர்த்தியுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது. நீதிமன்றமோ, தொடரும் குள ஆக்கிரமிப்பைத் தடுக்கும் உத்தரவை வழங்கவில்லை. இதை எதிர்த்து, குளத்தைப் பாதுகாக்க அரசுதரப்பு வாதிடவில்லை. நீதிமன்றம் தானாக முன்வந்து அரச காணியைப் பாதுகாக்கும் பொது உத்தரவைப் போடவில்லை. வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கறிஞர்கள் வழக்கைச் சரியாக நடத்தவில்லை என்பது புலனாகின்றது. மீள வழக்கு தீர்ப்பின்றியிருக்க, ஆக்கிரமிப்புத் தொடருகின்றது. 

பாதிக்கப்படும் மக்கள் சமூக, பொருளாதாரரீதியாக மிகவும் பலவீனமானவர்கள். சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள். ஒடுக்கும் சாதிகளால் காலகாலமாக ஒடுக்கப்பட்ட மக்கள். ஒடுக்கும் இந்தச் சாதிய சமூக அதிகாரப் பின்புலம், குள ஆக்கிரப்புக்கு உதவுகின்றதா? மதரீதியான சமூக பின்புலங்கள் இதற்கு பக்கபலமாக இருக்கின்றதா?  

•    ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தையும், நீதியையும் ஒடுக்கும் சமூகத்திடமிருந்து பெற முடியாதா!? 

•    சட்டத்தின் ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இல்லையா? 

•    சட்டமும், நீதியும் ஒரு தலைபட்சமானதா? 

•    அரசியல் அமைப்பை (சிஸ்ரத்தை) மாற்றுவோம்; என்று சட்டத்தின் ஆட்சியை முன்வைத்த ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ், மக்கள் பயன்பாட்டிலுள்ள அரச உடைமைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்குமா? 

•    சமூகப் பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனை என்பதாலா தமிழன் கண்டு கொள்வதில்லை? 

•     தமிழனைத் தமிழன் ஒடுக்குவதா நீங்கள் கோரும் அதிகாரப் பகிர்வு? 


சட்டவிரோதமான அனைத்து ஆக்கிரப்புகளுக்கும் எதிராகக் குரல் கொடுங்கள்! 

சமூக முரண்பாடுகளை தூண்டும், எல்லா வகையான ஆக்கிரமிப்புகளையும் அரசியல்ரீதியாக இனம் காணுங்கள்! 

பாரபட்சமான குறுகிய இனம், மதம், சாதிய.. கண்ணோட்டங்களை இனம் காணுங்கள்! 


புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
10.09.2026