Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லகத்தின் சிகரம் நேபாள நாட்டின் தெருக்களில் தங்களின் சக்தியை தாமே உணர்ந்து கொண்டனர் மக்கள். மன்னராட்சியின் அடக்குமுறைக்கெதிராக வீதிப் போராட்டங்கள் கிளர்ச்சிகள் மறுப்பு இயக்கங்கள் நடாத்தியும் மாவோயிஸ்ட் போராளிகளின் ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும் எதேச்சதிகார முடியாட்சி மன்னர் ஞானேந்திராவின் அதிகாரத் திமிருக்கு ஆப்பு வைத்திருக்கின்றார்கள். முடியாட்சியினை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையின் பின்னால் அணிதிரண்ட சக்திகளை அடக்க இராணுவம் ஏவிவிடப்பட்டது.

 இவ்விராணுவ அடக்குமுறைக்கெதிராக மாவோயிஸ்ட் போராளிகளின் தீரமிக்க மக்கள் படை எதிர்த்துக் களப்போராடியது. நேபாள நாட்டின் கிராமங்களில் செல்வாக்குப் பெற்று வளர்ந்து வரும் மாவோயிசப் போராளிகளின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான உள்ளுர் கிராமங்கள் இருக்கின்றன.

 

பெருகிவரும் மாவோயிசப் போராளிகளின் பலம் அதன் பின்னால் அணிதிரளும் மக்களினதும் சக்தி ஆகியவற்றைக்கண்டு நேபாளத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் கிலியும் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்திய அரசம் தங்கள் சகபாடி மன்னர் ஞானேந்திராவுக்கு வழங்கிய ஆலோசனைகளின் பேரில் ஜனநாயக முறைமையிலான பாராளுமன்ற ஆட்சிக்கு " நிறைவேற்று அதிகாரத்தை" தான் கையளிக்க முன்வருவதாக முடியாட்சி மன்னர் அறிவித்திருக்கின்றார். தன்னுடைய முடியைக் காப்பாற்றுவதற்காக சமரசம் என்ற இந்த வழிக்கு அவர் வந்திருப்பது நிச்சயம்.

 

அணிவகுத்தெழுந்த மக்கள் ஊரடங்கு உத்தரவுகளையும், கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ கெடுபிடி பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளையும் மீறி வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். எதிர் முழக்கமிட்டனர். வீறாப்பான விடாப்பிடியான தங்கள் நடவடிக்கைகள் மூலம் தடைகள் தாண்டியும் போராட்டத்தில் தங்கள் வீரியத்தைக் காட்டினர்.

 

மாபெரும் மக்கள் போராட்டத்துக்கும், மாவோயிஸ்ட் கெரில்லாக்களின் ஆயுதக் கிளர்ச்சிக்கும் பெருகி வரும் மக்கள் ஆதரவுக்கும் ஆப்பு வைக்கும் முகமாகவும் போராட்டத்தை சிதறடிக்கவென ஏழுகட்சிக் கூட்டணிகளை குறிவைத்தும் மன்னர் செய்த இந்த அறிவிப்பு கபடமானது. சூத்திரதாரிகளாக அமெரிக்காவும் அதன் வாலாக இந்திய அரசும் பின்னணியில் இருக்க இந்த அறிவிப்பு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

 

மாவோயிசப் போராளிகள் இந்த அறிவிப்பானது சதியெனவும் தாங்கள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றார்கள்.

 

மன்னரின் இவ்வறிவிப்பை வரவேற்ற ஏழு கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான நேபாள காங்கிரஸ் கட்சியின் (ருஆடு) தலைமை இது அரசியல் நிர்ணய சபை நோக்கிய முதலாவது அடியெடுப்பாகும் எனவும் அதன் தொடர்ச்சியாய் அரசியல் யாப்பினை மாற்றியமைக்க வழிவகுக்கும் எனவும் வரவேற்றிருக்கும் அதேவேளை இந்தக் கூட்டணியில் மன்னராட்சி கலைக்கப்படும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என்ற நிபந்தனையில் இணைந்திருக்கும் மாவோயிச போராளிகளின் மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசாந்தா இது மக்களை ஏமாற்றி பிளவுபட வைக்கும் சூழ்ச்சி என்றும் அதன் மூலம் முடிக்குரிய ஆட்சியைப் பாதுகாத்து தக்கவைக்கும் சதி எனவும் நேபாள மக்களை நோக்கி அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

 

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த ஏழு கட்சிக் கூட்டணியில் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி என்ற நிபந்தனையுடன் இணைந்து கொண்ட மாவோயிசப் போராளிகள் மற்றைய கட்சிகளின் இந்த முடிவை ஓப்பந்தத்திற்கு செய்த துரோகம் என சாடியுள்ளார்கள்.

 

நேபாள காங்கிரஸ் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(UML) போன்ற கட்சிகளுடன் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 அம்ச கோரிக்கையுடன் இந்தக் கூட்டணிக்குள் நிபந்தனைகளுடன் இணைந்திருக்கின்ற கட்சிகளாகும். இந்த மாவோயிஸ்ட் கம்யூனிசக் கட்சியின் போராளிகள் தான் கஜேந்திர மன்னரின் இராணுவத்தை கிராமங்களிலிருந்து விரட்டியடித்த மக்கள் விடுதலை இராணுவமாகும். 1996 ஆண்டிலிருந்து தீவிரமடைந்த மாவோயிச போராளிகளின் கெரில்லா ஆயுதப் போராட்டமானது மன்னரின் இந்த அறிவிப்பின் பின்னரும் தொடரும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

 

ஏழு கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான நேபாள திருத்தல்வாத கம்யூனிஸ்ட் கட்சியின்(UML) (இந்தக் கட்சியானது 1990 களில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தது) தலைவர் குமார் மன்னரின் அறிவிப்பானது ஒரு படி முன்னேற்றமென வரவேற்றிருப்பது இக் கூட்டணிக்குள் குழப்பங்கள் உருவாகுவதற்கான முதலாவது படி என்றும் கூறலாம்.

 

கூட்டணியிலுள்ள நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற ஆட்சி மீளப்பெறப்பட்டு முடியாட்சிக்குள் ஏகபோக ஆட்சி அதிகாரங்களை மன்னர் கையகப்படுத்துவதற்கு முன்னர் பிரதமர் பதவியில் இருந்தவருமான கிரிஜா பிரசாத் என்பவரை (வயது 83 ) புதிய அரசுக்கான தங்கள் தலைவராக நியமித்திருக்கிறார்கள்.

 

நேபாள தேசமானது தேசிய ஓருமைப்பாடு நிலையான சமாதானம் ஐனநாயகம் என்பனவற்றை நோக்கிய பாதையில் நகரும் என தான் திடமான நம்பிக்கை கொண்டிருப்பதான ஞானேந்திரரது இரவோடிரவான தொலைக்காட்சி அறிக்கைக்கு மாவோயிசக் கட்சியின் மற்றுமோர் தலைவர் பாபுராம் முடியாட்சிக்கலைப்பும் 12 அம்ச கோரிக்கைகளும் முற்றாக நடைமுறையாக்கப்படும் வரை காத்மண்டு மற்றும் ஏனைய நேபாள நாட்டின் பிரதான நகரங்கள் தொடர்ந்தும் முடக்கப்படும் என்றறிவித்திருப்பதானது போராட்டம் ஓயவில்லை என்பதை பறைசாற்றுகிறது.

 

நேபாள முடியாட்சியினது கொடுங்கோன்மைக்கும் அதன் இராணுவம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கொடுரமான படுகொலைகள் சித்திரவதைகளுக்கும் மற்றும் காணமற்போனோரின் நீண்ட பட்டியலுக்கும் நேபாள நாட்டிற்கு இராணுவ தளபாடங்களையும் உதவிகளையும் நேரடியாகவே வழங்கி வந்த அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, பெல்ஜியம் பிரான்சு நாடுகளின் ஆயுத தளபாட உதவியானது வலுச்சேர்த்திருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை நேரடியாகவே குற்றம் சாட்டும்(ஒப்புக்கொள்ளும்) அளவுக்கு இந்நாடுகளின் ஜனநாயகக் காவலர் வேசங்கள் அம்பலமாகிப் போய்விட்டிருக்கின்றன.

 

எலும்புக் குவியல்களின் மேலாவது தமது உலகமயமாதல் சுரண்டும் அதிகாரங்களை நிர்மாணிக்க முடிக்குரிய ஞானேந்திரா கொடுங்கோலாட்சியை தூக்கிநிறுத்தும் ஜனநாயகம் இங்கே அம்பலப்பட்டு நிற்கின்றது.

 

மன்னராட்சி ஆட்டம் கண்டு விழுந்தால் கூட மாவோயிச கொரில்லாக்களை முடக்கி பதிலாக நேபாள காங்கிரஸ் கட்சியையோ அல்லது திருத்தல்வாத நேபாள கம்யூனிசக் கட்சிகளின் கூட்டு அரசாங்கத்தையோ தங்கள் அடியாட்களாக அரசேற ஆவன செய்வதில் இந்தியா அதிக அக்கறை காட்டுகிறது. ஞானேந்திரரின் அம்பலப்பட்டுப் போன முகம் இனி அவர்களுக்கு அதிகம் உதவப் போவதில்லை.

அதனாலேயே தான் இந்திய அமெரிக்க அழுத்தங்கள் ஞானேந்திரா மீது செலுத்தப்பட்டன.

 

இராணுவத்தின் மீதான கட்டுப்பாட்டையும் மன்னருக்கென இருக்கும் பிரத்தியேக உல்லாச சலுகைகளையும் அபகரித்த சொத்துக்கள் மீதான அதிகாரங்களையும் காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் தெளிவாக நடைபோடும் முடிக் கொடுங்கோன்மை நாளை இவற்றின் ஊடாக மீண்டும் சதிக்கவிழப்புக்கள் செய்வதன் மூலம் அரியாசனக் கதிரைக்கு வரும் திட்டங்களை திரைமறைவில் தீட்டிக் கொண்டிருக்கலாம்.

 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உலகின் வறுமை நாடுகளில் இரண்டாவதாக வறுமைப்பிடிக்குள் இருக்கும் நேபாள நாடானது இந்தியாவினாலும் அமெரிக்காவினாலும் கேந்திர முக்கியத்துவமான நாடுகளிலொன்றாக கருதப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்திய உபகண்ட தெற்காசிய வியூகப்பார்வைக்குள் நேபாள நாட்டையும் உள்ளடக்குவது அவர்களின் நோக்காகும்.

 

இமயத்தின் சிகரத்தில் நேபாளம் மாவோயிஸ்டுக்களால் வெற்றி கொள்ளப்படுவதை இந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் கொள்ளைக்கார சக்திகள் பார்த்து கைகட்டி நின்று வாழாதிருக்கப்போவதில்லை. சதியும் சமாதானமும் சலுகைகளும் என்று அள்ளி வீசத்தான் போகின்றார்கள். இவற்றைக் கவ்விப் பிடிக்கும் விசுவாச நாய்கள் எங்கும் உள்ளது போல் நேபாளத்திலும் இருக்கவே போகின்றார்கள்.

 

இதற்கெல்லாம் பதிலடி கொடுத்து தங்கள் போராட்டத்தை நிதானமாகவும் அவதானமாகவும் சுயவிமர்சனங்களினூடகவும் செழுமைப்படுத்தி முன்னேறும் இதுவரையான போராட்டத்தின் எதிர்காலம் உறுதி குலையாத அதன் தொடர்ச்சியிலேயே தங்கியிருக்கிருக்கிpன்றது.

 

இராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட நிலக்கண்ணி வெடி தாக்குதலில் 45 பொதுமக்கள் கொல்லப்பட்டதும் மேலும் 70 பேர் காயமடைந்ததுமான நிகழ்வொன்று தெற்கு நேபாளத்தின் சிற்வான் மாவட்டத்திலுள்ள “Madi” என்னுமிடத்தில் 2005 ம் ஆண்டு யூன் மாதம் ஏழாம் திகதி காலை நேரத்தில் நடந்தது. இதையிட்டு சர்வதேச மன்னிப்புச்சபை மாவோயிசக் கட்சித் தலைமையிடம் பொறுப்பானவர்களை உள்ளக விசாரணைக்குட்படுத்தி பகிரங்க அறிக்கை தருமாறு வலியுறுத்தியது.

 

இந்தக் தாக்குதலுக்கான முழுப் பொறுப்பையும் தயங்காது நேர்மையுடன் ஏற்றுக்கொண்டு, நடந்த இந்த நிகழ்வுக்கும் பொதுமக்கள் உயிரிழப்புக்கும் தனது ஆழ்ந்த மனவருத்தத்தை தலைமை தெரிவித்திருந்தது. அதற்கான தனது பொறுப்பிலிருந்து வழுவாமல் இத்தாக்குதலில் ஈடுபட்ட தனது அணி மீது முற்று முழுதான விசாரணைக்கும் கடும் நடவடிக்கைகளுக்கும் உத்தரவு இட்டது.

 

மக்களை கவசமாக இராணுவம் பயன்படுத்துகின்ற வேளைகளில் இது போன்ற தவறுகளுக்கான நிலைமைகள் உருவாகுகின்றன என இராணுவத்தின் மீது மட்டும் பழிபோட்டு தப்பித்துக் கொள்வதிலிருந்து தனது தவறுகளை விமர்சனமாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறை சரியான தடவழியாகும்.

 

நேபாள நாட்டின் முதுகெலும்பாக உள்ள சிறுவிவசாயிகளின் உழைக்கும் மக்களின் வாழ்வின் வறுமைக்கு வகை சொல்லாத சொல்ல முடியாத முடியாட்சிக்கு முட்டுக் கொடுக்கும் ஏகாதிபத்தியத்துக்கான எதிர்ப்பும், தமது எதிர்காலத்தை தாமே சமைக்க ஆயுத பாணிகளாகும் ஏழைக் கிராமங்களின் வறிய விவசாயிகளினதும் உழைப்பாளிகளினதும் போர் முழக்கம் இவ்வளவு சீக்கிரமான வேகத்தில் உலகத்தின் செவிப்பறையை கிழிக்கும் என எதிர்பார்த்திராது மிரளும் அதிகாரவர்க்கங்கள் தங்கள் சதி வேலைகளை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

 

வேறென்ன பாலஸ்தீனம் இலங்கை என்ற வரிசையில் இப்போது நேபாளத்தையும் சேர்த்துக் கொண்டு தனது சமாதான சதிவேலைகளுக்கு நோர்வே தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

 

நோர்வே அம்பலப்படுமா அல்லது சதி வெற்றிகொள்ளுமா? இது நேபாள நாட்டு போரிடும் மக்கள் கைகளில் தான் தங்கியுள்ளது.

  

சிறி
03.05.06