Language Selection

பி.இரயாகரன் -2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

இருந்த போதும் மதங்கள் தங்கள் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அளவும், மத ஒடுக்குமுறையைக் கையாளும் போக்கும், ஒரே அளவில் இருப்பதில்லை. அதை தீர்மானிப்பவையாக இருப்பது,

1.மதத்துக்கும் அரசியலுக்குமாக உறவும்,

2.அரச அதிகாரத்துக்கும் மதத்துக்குமான உறவும்

3.சர்வதேச வலைப்பின்னலுடனான மதத் தொடர்புகளும்

இந்தப் பின்னணியில் இலங்கையில் பிரதானமான நான்கு மதங்களினதும் அடிப்படைவாத வரலாறு என்பது, ஒன்றையொன்று ஒடுக்கவும் அதேநேரம் தமக்குள் கூட்டு அமைத்துக் கொண்டு ஒடுக்குவதும் காணப்படுகின்றது.

சமகாலத்தில் தமிழர்கள் மீதான இனவொடுக்குமுறையை பேரினவாத அரசு, இஸ்லாமிய முஸ்லிம் தலைவர்கள் மூலம் முன்னெடுக்கின்ற அதேநேரம், அது  தமிழர்களை மட்டும் ஒடுக்கவில்லை. முதலில் முஸ்லிம் தேசியத்தை அழிக்கும் வண்ணம், தன்னைத்தான் இஸ்லாமிய மயமாக்கி வருகின்றது. இதை மூடிமறைக்க இஸ்லாம் முஸ்லிம் இனவாதத்தைத் தூண்டி, தமிழர்களை ஒடுக்கும் இனவாத அரசின் எடுபிடிகளாக செயற்படுகின்றனர்.

இப்படி செய்வதன் மூலம் இலங்கை முஸ்லிம் மக்களை, இஸ்லாம் சிறை வைக்கின்றது. முஸ்லிம் மக்கள் தேசிய இனமாக வளர முடியாத வண்ணம், தன்னை இஸ்லாமிய மதமாக முன்னிறுத்துகின்றது. முஸ்லிம் தேசிய இனம் வளரத் தேவையான ஜனநாயகத்துக்கு, இஸ்லாம் முதல் வேட்டு வைக்கின்றது. அதை மூடிமறைக்க முஸ்லிம் இனவாதத்தை இஸ்லாம் தூண்டிவிடுகின்றது.

முஸ்லிம் தேசிய இனம் - இஸ்லாம் மதம் இரண்டும், அடிப்படையில் வேறு வேறானவை. இதை வேறு பிரிக்கமுடியாத அளவுக்கு, முஸ்லிம் சமூகத்தை இஸ்லாம் முடமாக்கி இருக்கின்றது. இஸ்லாம் மதம் மூலம் முஸ்லிம் இனத்திற்கான வேறுபட்ட சமூக பொருளாதார அடையாளங்களையும் போராட்டங்களையும், வாழ்க்கை முறைகளையும் இல்லாதாக்குவதன் மூலம், ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களை சுரண்டுவதற்கு உதவுகின்றது.

சமூகத்தில் நிலவும் ஜனநாயகம் தான், சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றது. எல்லா மதங்களைப் போலவே இஸ்லாமும் ஜனநாயகத்துக்கு முரணானது. இஸ்லாம் தனது மதக் கட்டுப்பாட்டை முஸ்லிம் தேசிய இனம் மீது செலுத்துவதால், தேசிய இனமாக வளர முடியாத அளவுக்கு இனவாதம் கொண்டதாக குறுகி வருகின்றது.

முஸ்லிம் சமூகத்தில் உள்ளான சமூகரீதியான அக முரண்பாடுகளை முரணற்ற ஜனநாயகம் மூலம் இல்லாது ஒழிப்பதற்கான போராட்டம் தான், முஸ்லிம் தேசிய இனம் வளருவதற்கான சாரம். இது தான் தேசிய இலக்கியங்களையம், விமர்சனங்களையும் உருவாக்கும். அதற்கு முஸ்லிம் சமூகத்தில் இடமில்லை. இஸ்லாமை மீறி வளர்ச்சி பெறுவதற்று முஸ்லிம் சமூகத்தில் இடமில்லை. இது இலங்கையில் மற்றைய இனங்களுக்கு இல்லாத, முஸ்லிம் மக்கள் மீதான சிறப்பான மத ஒடுக்குமுறையாகும்.

இதேபோன்று மற்றைய தேசிய இனங்களிலும் இப்போக்கை உருவாக்கவே ஆளும் வர்க்கங்கள் முனைகின்றன. தமிழர்களை இந்துத்துவமாக்க முனைகின்ற அண்மைய மத அடிப்படைவாத முனைப்புகள் தொடங்கி, தமிழர் மீதான முஸ்லிம்-இஸ்லாமிய இனவொடுக்குமுறையை எதிர்கொள்ள இந்து-பௌத்த அடிப்படைவாத  கூட்டு முயற்சிகள் வரை, தேசிய இனங்களின் வளர்ச்சியைத் தடுக்க விரும்புகின்ற நவதாராளவாத முதலாளித்துவ நிகழ்சிக்குநிரலுக்கு ஏற்றவாறான மத அடிப்படைவாதங்களே. இந்த வகையில் இலங்கையில் முதலில் பலியான தேசிய இனம், முஸ்லிம் தேசிய இனமாகும். முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய மயமாகியவுடன், தனது ஜனநாயகத்தை இழந்து விடுகின்றது. இதை மூடிமறைக்கும் இனவாதமும், பிற இனங்களை ஒடுக்குகின்றதாக  மாறுகின்றது. அடிப்படையில் ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தை இழக்கின்ற போது, அங்கு பாசிசம் குடிகொள்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் வெள்ளாளிய இந்துத்துவ சிந்தனைமுறைக்கு முரணாக, தமிழ் மக்கள் வேறு - இந்துமதம் வேறு என்ற சமூக உள்ளடக்கம் தான், தமிழ் மக்கள் தேசிய இனத்தைக் கடந்த தேசமாக வளர்வதற்கு வித்திட்டது. அண்மையில் சிவசேனா தொடங்கி இந்து வெள்ளாளிய சமுதாயப் போக்குகள், முஸ்லிம் சமூகம் போல் இனத்தையும் மதத்தையும் ஒன்றாக கட்டமைக்க முனைகின்றது. இதன் மூலம் தமிழ் தேசத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முனைகின்றனர்.

தேசியக் கூறுகள் உலகமயமாதலுக்கு எதிரானது என்ற அடிப்படையில், தேசியக் கூறுகளை மதங்களைக் கொண்டு இல்லாதாக்க நவதாராளவாத சக்திகள் முனைகின்றனர். இந்த பின்னணியில் இஸ்லாமுக்கு எதிரான தேசியக் கூறுகளோ, ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களை முன்னிறுத்தும் போராட்டங்களோ.. முஸ்லிம் சமூகத்தில் காண முடிவதில்லை. தமிழ் இலக்கிய மரபில், சிங்கள இலக்கிய மரபில் முஸ்லிம் முற்போக்கு இலக்கியத்தைக் காண்பது அரிது. முஸ்லிம் சமூகத்தின் உள்ளான காட்டுமிராண்டித்தனமான மத அடக்குமுறைகளயும், கட்டுப்பாடுகளையும் எதிர்க்கின்ற, சுரண்டிக் கொழுக்கும் வர்க்கத்தை எதிர்க்கின்ற, ஆணாதிக்க மதக் காட்டுமிராண்டித்தனங்களை எதிர்க்கின்ற.. சமூக இயக்கம் கிடையாது. உண்மையான சமூக இலக்கியங்கள், முஸ்லிம் சமூகத்தில் படைக்கப்படுவதில்லை.

முஸ்லிம் இலக்கியம் என்ற பெயரில் வெளிவருபவை முஸ்லிம் தேசிய இனம், சர்வதேசியம்  சார்ந்த இலக்கியங்களல்ல. இஸ்லாமிய மத அடிப்படைவாதங்களை அனுசரிக்கின்ற, இஸ்லாமிய அடிப்படைவாத உலகமயமாதலை முன்வைப்பவையாக இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் ஜனநாயகத்திற்கான குரலாக இருப்பதில்லை. ஒடுக்கும் இஸ்லாமியத்தின் குரலாக இருக்கின்றது. மக்களைச் சார்ந்து இலக்கியம், மக்கள் சார்ந்த அரசியல் விமர்சனம் முஸ்லிம் சமூகத்தில் உருவாக முடியாத வண்ணம், இஸ்லாமிய மதம் முஸ்லிம் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கின்றது. முஸ்லிம் இலக்கிய - அரசியல் எழுத்தாளர்கள் இதற்குத் தாளம் போடும் எல்லையைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து நிற்பதில்லை.

முஸ்லிம்-இஸ்லாமிய அரசியல் தலைவர்களின் குத்தகைக்கார அரசியலுக்குள் குத்தி  முனகுகின்ற விமர்சன எல்லையைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தை முன்னிறுத்தி செயற்படும் செயற்பாட்டாளர்களை, முஸ்லிம் சமூகத்தில் காண்பது அரிது.

முஸ்லிம் சமூகம் வேறு - இஸ்லாம் வேறு என்ற அளவுகோலைக் கொண்டு, இஸ்லாம் முஸ்லிம் தேசிய இனத்தை கட்டுப்படுத்துவதை எதிர்ப்பதன் மூலமே, முஸ்லிம் முற்போக்கு இயக்கமும் - இலக்கியமும் தோன்ற முடியும். அதேநேரம் முஸ்லிம் சமூகத்தின் சொந்த அகமுரண்பாடுகளை எதிர்த்தும், பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றிணையும் போது தான், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உண்மையான மனிதநேயத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய இனமாக வளர்ச்சி பெறமுடியும. இதற்கு உதவுவதும், தவறுகளை சுட்டிக்காட்டுவதும், இன்றைய காலத்தின் சரியான அரசியல் அணுகுமுறையாகும்.