Language Selection

பி.இரயாகரன் -2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

இலவசக் கல்வியை வேட்டு வைக்கின்ற அரசின் செயற்திட்டங்களையே பாடசாலைகள் மூலம் முன்நகர்த்த, அதை பழைய மாணவர் சங்கங்கள் முன்னெடுப்பதுமான நிகழ்ச்சிநிரல்களைக் கொண்டுதான், பழைய மாணவர்கள் சங்கங்கள் இயங்குகின்றது. சுயாதீனமாக சிந்திக்கக் கூடிய, சமூக நோக்கம் கொண்ட பழைய மாணவன் அல்லது பழைய மாணவர் சங்கங்கள் செயற்படாமல் இருக்க, மாலை மரியாதைகள், பதவிகள் மூலம், பணத்தை கறப்பதையே பாடசாலை நிர்வாகங்கள் தங்கள் குறிக்கோளாகக் கொள்கின்றனர்.

 

இந்தப் பின்னணியில் அனைவருக்கும் இலவசக் கவ்வி மூலம், அனைவருக்கும் சம வாய்ப்பு கொண்ட கல்விக்கொள்கை படிப்படியாக பறிபோய்க்கொண்டு இருக்கின்றது. உதாரணமாக யாழ் இந்துக் கல்லூரியை எடுத்தால், பணம் இன்றி அங்கு கல்வியைப் பெற முடியாது. கல்விக்காக பணம் அறவிடுதல் என்பது, எங்கும் எல்லா வடிவங்களிலும் நடக்கின்றது. இதற்கு அமைவாகவே இலங்கை அரசின், கல்விக்கொள்கை உள்ளது. தனியார் கல்விகொள்கையை அரசு கொண்டுவரும் முறை என்பது, படிப்படியாக கல்விக்கு பணம் கொடுக்கும் நடைமுறையை உருவாக்குவதன் மூலமே முன்னெடுக்கப்படுகின்றது.

ரீயூட்டரிக் கல்விமுறைக்குள் மாணவர்களைக் கொண்டு செல்லுகின்ற பின்னணியும் இதுதான். பாடசாலைகளின் கல்வித்தரத்தைக் குறைத்து, தனி மனிதனை முதன்மையாக முன்னிறுத்தும் போட்டிக் கல்விமுறையைப் புகுத்தி, பரீட்சையில் சித்தியடைய ரீயூட்டரி முறையை திட்டமிட்டே நவதாராளவாதம் முன்நகர்த்தி வருகின்றது. கல்விக்காக உழைப்பின் ஓரு பகுதியை செலவு செய்கின்ற நிலைமைக்கு, இலங்கைச் சமூகமானது தனியார் கல்விமுறைக்குள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். வெளியில் ரீயூட்டரிக் கல்விக்குப் பதில், பாடசாலைக்குள்  தங்கள் பணத்தைக் கொடுத்து மாலை நேர இலவச ரியூட்டரி முறையைக் கொண்டு வர முனையும் பழைய மாணவர்கள் சங்க முயற்சி, தனியார் கல்விமுறையை முற்றுமுழுதாக பாடசாலைக்குள் நகர்த்துவதற்கான ஒன்றாக பரிணமிக்கும். இலவசப் பாடசாலையில் பணம் கொடுத்து கறக்கும் முறையை, உதவி வடிவில் கொண்டு வருவது தான்; இது. மாலை நேர இலவசக் கற்கைமுறைக்கு,  பணமின்றி சமூக நோக்கில் கற்பித்த முறைமைக்கு இது வேட்டு வைக்கின்றது.

நவதாராளவாத அரசாங்கம் பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்களையும், நிர்வாக ஊழியர்களையும் வழங்காது, பாடசாலைகளே சுய நிதியைத் திரட்டி நியமனம் செய்யக் கோருகின்றது. அதேநேரம் அதிபர் – ஆசிரியர்கள் - மாணவர்கள் சமூக உணர்வுடன் சேவையாற்றிய கடந்தகால சமூகப் பண்பை சமூகத்தில் இருந்தும் ஒழித்துக்கட்டி, பணத்துக்கு உழை – பணத்துக்குக் கல்வி என்ற, தனியார் கல்விமுறைக்கு ஏற்ற சமூக மனப்பாங்கை உருவாக்கி வருகின்றது.

இலங்கையில் மருத்துவத்தை எடுங்கள். இலங்கை மக்கள் மருத்துவத்திற்காக பணத்தை தனியாருக்கு கொடுக்கின்ற அவலம் என்பது, மிகமிக அண்மைய வரலாறாகும். புற்றுநோய் போல் படிப்படியாக மருத்துவம் தனியார் மயமாகி வருவது என்பது, வெளிப்படை உண்மை. பணமின்றி தரமான மருத்துவத்தையோ, மனித மதிப்பையோ பெற முடியாது.

தனியார் மருத்துவம் போல் கல்வியில் இன்னமும் முழுமையான தனியார் முறை வெற்றி பெற முடியாமைக்கு காரணம், கடந்த மற்றும் நிகழ்கால தொடர் போராட்டங்கள் தான்.

1971, 1989-1990 ஜே.வி.பியின் "வர்க்கப்" போராட்டங்கள் பெருமளவில் மாணவர்களைச் சார்ந்து இருந்ததும், 1980-2009 வரை "தமிழ் தேசிய இனப்" போராட்டம் மாணவர்களை இளைஞர்களை சார்ந்து நீடித்ததும், கல்வியை தனியார் மயமாக்குவதற்கு தடையாக இருந்தது. குறிப்பான இக் காலகட்டத்தை கடந்து, தனியார் கல்விமுறைக்கு எதிராக தொடரும் இன்றைய போராட்டங்கள், கல்வியை தனியார் மயமாக்குவதை தாமதமாக்குகின்றது.

தனியார்மயக் கல்வி என்பது உலகளாவிலான நவதாராளவாத உலகமயமாதல்; கொள்கையாகும். இதை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் மட்டும் தான், தனியார்மயத்தின் அளவை மட்டுப்படுத்துகின்றது. இப்படி உலக வங்கியின் தனியார்மயக் கொள்கை நடைமுறையில் இருக்க, தனியார் கல்வியை நியாயப்படுத்த முன்வைக்கும் காரணங்கள், தர்க்கங்கள் போலியானவை, புரட்டுத்தனமானவை.

அனைவருக்குமான இலவசக் கல்வி அடிப்படை மனித உரி;மையாக இருக்க வேண்டும். அதேநேரம் கல்வியின் தரம், அனைவருக்கும் பொதுவானதாக சமமானதாக இருக்க வேண்டும்;. பல்கலைக்கழகம் வரை, "தகுதியான" அனைவரும் கல்வியை தொடர்வதற்கான அடிப்படை வசதியை அரசு ஏற்படுத்தவேண்டும். அதை நோக்கி நாம் சிந்திக்க வேண்டும். அதை விடுத்து கல்வியை பணத்துக்கு விற்பதை நியாயப்படுத்த முடியாது.

இன்று கல்வியை காசுக்கு விற்கும் போக்கை மூடிமறைக்க முனைகின்றனர். அரசு தனியார் கல்விமுறைமையை கொண்டு வருகின்றது என்று கூறுவதே தவறானது, மாறாக போராட்டம் நடக்கும் வைத்தியத்துறையில் தான் அது நடக்கின்றது என்று சிலர் காட்ட முற்படுகின்றனர். அதிலும் அது வைத்தியர்கள் பற்றாக்குறையை தீர்க்க அவசியமானது என்று நியாயப்படுத்துகின்றனர். வேறு சிலர் நடக்கும் போராட்டத்தை அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிநிரலே ஒழிய, தனியார் கல்வி என்பதே உண்மை அல்ல போலி என்கின்றனர்.

இன்று இலவசப் பாடசாலைகள் என்பதே பொய் விம்பம். வெளிப்படையாக பல பெரிய பாடசாலைகளில் பணம் கொடுக்காமல், அப்பாடசாலைகளில் அனுமதியைப் பெற முடியாது. கற்கும் காலத்தில் கற்பதற்காக பணத்தைக் கொடுக்காது கற்க முடியாது.

வைத்தியத் துறையில் வைத்தியப் பற்றாக்குறை இருந்தால், அதை ஈடுசெய்ய அரசு புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும். அதை காசு கொடுத்து கற்றுக்கொள் என்று கூறுவது எந்த வகையில் நியாயமானது?

இரண்டாவது வைத்தியர்கள் பற்றாக்குறை என்பதற்கு பின்னால் உள்ள உண்மை என்ன? அரசு திட்டமிட்டு ஊக்குவிக்கும் தனியார் வைத்தியத்துறையில் வைத்தியர்கள் குவிவதால், அரசு சார்ந்த மருத்துவத்துறையில் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதே போன்று இலங்கை மக்களின் வரிப்பணத்தில் உருவாகும் வைத்தியர்களை, இலவசமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அரசின் கொள்கை என்பது, இலங்கை மக்களுக்கான மருத்துவத்தை இல்லாதாக்கி, அதை காசுக்கு வாங்கக் கோருகின்றது.

தனியார் மருத்துவக் கல்வியை காசு கொடுத்து கற்கும் ஒருவன், அதை காசுக்கு விற்பானே ஒழிய அரசுதுறை மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்வான் என்று கூறுவது படுமுட்டாள்களின்,  வெற்றுத் தர்க்கவாதங்களே.

இது போன்று மற்றுமொரு தர்க்கவாதமே, பல்கலைக்கழக கல்வியை பெற முடியாது "விளிம்பு நிலை" புள்ளியைப் பெற்றவர்கள், பணத்தை கொடுத்து படிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்றனர். தனியார், கல்வியை விற்று பணம் சம்பாதிப்பதை ஆதரிக்கும் அரச எடுபிடிகளும், முட்டாள்களுமே இப்படி தர்க்கிக்கவும் சிந்திக்கவும் முடியும். "விளிம்பு" என்பது, அனைவருக்கும் கல்வியை மறுக்கின்ற அரசின் வெட்டுப்புள்ளியின் விளைவு. வெட்டுப்புள்ளி இருக்கும் வரை "விளிம்பு" என்பது, எப்போதும் எங்கும் முடிவின்றி தொடரும். இங்கு "விளிம்பில் உள்ளவர்களில்" பணம் உள்ளவன் பற்றிப் பேசப்படுகின்றதே ஒழிய, பணம் இல்லாதவன் கதி குறித்து அல்ல.

இதன் மூலம் கல்வியை மொத்தமாக விற்கும் சூழ்ச்சிதான் "விளிம்பு" மாணவர்களின் பிரச்சனையாக முன்னிறுத்தப்படுகின்றது. "தகுதியான" அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வியை அரசு வழங்க மறுப்பதன் மூலம், தனியார் முறையை புகுத்துகின்றனர். இதை மூடிமறைக்க, அரசிடம் பணமில்லை என்கின்றனர்.

அபிவிருத்தியின் பெயரில் தனியார்மயத்துக்கு ஏற்ப மக்கள் கேட்காமலே, மக்களின் வாழ்;க்கையுடன் தொடர்பற்ற ஆடம்பரமான மாடமாளிகைள் தொடங்கி பாரிய வீதிகளை  அமைக்கும் அரசு, மக்கள் கோரும் அனைவருக்குமான பட்டக் கல்வியை கொடுக்க மறுப்பதும், பணம் இல்லை என்று கூறுவதும் தனியார்மயத்தை கல்வியில் புகுத்தத்தான். இந்த அடிப்படையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு படிப்படியாகக் குறைத்து வருவதும், கல்வியில் ஆசிரியர் நியமனங்களைக்; குறைத்தும் வருகின்றது. அதேநேரம் வாழ்க்கைக்கு தேவையானதை தனியார் கல்வி மூலம் சம்பாதிக்குமாறு ஆசிரியர்களையும்,  மருத்துவர்களையும் ஊக்குவிப்பதும் அரசின் கொள்கையாகவும் இருக்கின்றது.

நவதாராளவாதம் தனியார்மயம் மூலம் அனைத்தையும் காசுக்கு விற்க முனைகின்றது. கல்வி, மருத்துவம், குடிநீர்… என்ற எதையும் விட்டுவைக்காது, அத்துறைகளை நலிவடைய வைத்து விற்பனைக்குரிய சந்தைப் பொருளாக மாற்றுகின்றது.

இலங்கை கல்விமுறை குறித்த அடிப்படை புரிதலுடன், பழைய மாணவர் சங்கங்கள் தங்களை மீள் உருவாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம்.