கொரோனா நோய் தொற்று (08.04.2020) உறுதி செய்யப்பட்ட, ஒரு மாதம் கடந்துவிட்டது. உடலின் ஏற்பட்ட வலிகள் படிப்படியாக குறைந்து, நோயிலிருந்து மீண்டு தேறியிருக்கின்றேன். இது மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதல்ல, எனது உடல் மற்றும் மனவுணர்வு சார்ந்தது.
இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களில் ஐந்தில் ஒருவர் இறக்கின்றனர். இது தான் அதிகாரபூர்வமான தரவு. உடல் மற்றும் மருத்துவ உதவி சார்ந்து நிகழ்கின்றது. நான் தேறிய போதும் அன்றாடம் ஆயிரக்கணக்கான மரணங்கள் தொடர்ந்து நிகழ்கின்றது. இன்று உழைப்பு முடக்கப்பட்ட போது, புதிதாக நோய்த்தொற்று பத்தாயிரக்கணக்கில் (சில நாட்கள் இலட்சம் வரை) நிகழ்கின்றது. அதேநேரம் இதற்கான மருத்துவரீதியான தீர்வுகள் - அணுகுமுறைகள் ஒன்றுபட்டனவல்ல, அவையும் தொடர்ந்து வேறுபடுகின்றன. இதுதான் எதார்த்தம்.
எனக்கு மனவுறுதியைத் தந்தது நான் போராடிய வாழ்க்கையும், தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மனவுறுதியும் தான். எனக்கு ஏற்பட்ட கொரோனாவுக்கு மருத்துவரீதியாக காய்ச்சல் - உடல் வலியைப் போக்க டொலிப்பிரான் தரப்பட்டது. வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கினை நிறுத்த மருந்தும், சளியை வெளியேற்ற வழமையாக பாவிக்கும் சிராப்பு மருந்தும் மருத்துவரால் தரப்பட்டது. இதைத் தவிர வேறு எதையும் பாவிக்கவில்லை. நோய் எதிர்ப்பு சத்தியை பலப்படுத்த தோடம்பழச்சாறு (விற்றமின் சி) குடித்தேன். மற்றும்படி வழமையான உணவு தான். இதுதான் கொரோனாவுக்கு எதிரான எனது மருத்துவம் மற்றும் உணவாக நான் கையாண்டது. இது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவும் முடியாது.
உண்மையில் இயற்கை ஆற்றலே, நோயில் இருந்து என்னை மீள வைத்தது. தனிப்பட்ட ரீதியில், நான் இந்தப் பூமிக்கு ஒரு விருந்தினர் - அவ்வளவுதான். அப்படிப்பட்டதே இயற்கையின் விதி. இந்த இயற்கையின் ஆற்றலே, மீண்டும் எனக்கு உயிர் வாழ்க்கையைத் தந்தது.
நோய்த்தொற்று (08.04.2020) உறுதி செய்யப்பட்ட போது, 10 நாள் உயிர் வாழ்வதா அல்லது இன்னும் 10 வருடம் உயிர் வாழ்வதா என்பதையே, என் பகுத்தறிவு கேள்விக்குள்ளாக்கியது. அதேநேரம் அறிவு மரணத்துக்கு என்னை தயார் செய்தது. மரணம் குறித்த பொதுவான உளவியல் அச்சம் - என்னை அதிரவைக்கவில்லை, மரணம் என்பது, என்னுடைய 40 வருட பொது வாழ்வு சார்ந்து - எப்போதும் தரிசித்து வந்த ஒன்று தான். என் கண் முன் பலதரம் நிழலாடிய மரணம் - எனக்குப் புதிதல்ல. மரணத்தின் விளிம்பில் இருந்து, பலதரம் தப்பியும் இருக்கின்றேன். எனக்கு ஏற்கனவே பொது வாழ்வு சார்ந்து கல்வெட்டுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றது.
இதில் இருந்து மாறுபட்டதே கொரோனா தொற்று என்பது மரணத்தையே நிகழ்தகவாகக் கொண்ட, புதிய தொற்று நோய். சிலருக்கு அதுவே இறுதியாக இருக்கும் என்று அறுதியிட்டு சொல்லுமளவுக்கு, மருத்துவ அறிவு – உலகின் பொது எதார்த்தமாக மாறி இருக்கின்றது.
கொரொனா வைரஸ்சானது அறிவுபூர்வமான மருத்துவ உலகம் தடுமாறுமளவுக்கு, பாரிய மனித உயிர் இழப்புகளையும் - சமூக அழிவுகளையும் தரவல்லதாக மாறி, அது நவீன உலகையே முடக்கியிருக்கின்றது.
பொருளே உலகம், அதுதான் எல்லாம் என்று சிந்திக்கின்ற மனிதனையும், அது சார்ந்த மனித முடிவுகளையும் - நடத்தைகளையும், செயலற்றதாக மாற்றிக் காட்டியிருக்கின்றது.
உழைப்பைக் கொடுத்து வாழும் நவீன கூலி வாழ்க்கை முறை நிரந்தரமானது - அது எம்மையும் எம் வாழ்வின் இருப்பையும் அசைக்காது என்று நம்பி வாழ்ந்த மனித வாழ்க்கையையும் - அது சார்ந்த நம்பிக்கைகளையும் அசைத்து வருகின்றது.
பல பத்து கோடிக்கணக்கான மக்கள், தங்கள் வேலைகளை இழந்து வருகின்றனர். ஒருநேர உணவு இன்றிக் கையேந்தும் மக்கள் எண்ணிக்கையோ, பல மடங்காக – அது பல பத்து கோடிக்கணக்காக மாறி வருகின்றது. போலி ஜனநாயகம், போலி சுதந்திரத்தின் பின்னான உலகத்தின், பொது வெட்டுமுகம் இதுதான்.
அறிவுக்கு புறம்பான மத நம்பிக்கைகளும், பகுத்தறிவற்ற வாழ்க்கை நெறிகளும், தனிமனித பிரமைகளும்.. ஏதுமற்ற வெற்றுப் புலம்பலாக - கொரொனா மாற்றி வருகின்றது.
தனிமனித சுதந்திரமும் - அது சார்ந்த நடத்தைகளுமே சமூகத்தை விட முதன்மையானது என்று கூறி, சமூகத்தை மிதித்த நடத்தைகள் அடங்கியொடுக்குமளவுக்கு கொரோனாவின் இயற்கை விதி - சமூகத்தை வழி நடத்துகின்றது.
அரசும் - ஆட்சியும் குறுகிய நலன்களைப் பேணுகின்ற சர்வாதிகார அமைப்பு வடிவம் என்பதையும், அது மக்களுக்கு எதிரானவை என்பதையும், உலகெங்குமான ஆட்சியாளர்கள் தங்கள் நடத்தைகள் மூலம் எடுத்துக் காட்டி வருகின்றனர்.
இயற்கை விதிக்கு உட்பட்ட உயிர் தான் மனிதன் - இயற்கையை மிஞ்சி பணமுள்ளவனின் உலகமாக கட்டமைக்கப்பட்ட பொருள் சார்ந்த உலகப் பிரமைகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.
இனம், மதம், நிறம், சாதி, வர்க்க ஒடுக்குமுறையாளர்களே அஞ்சி நடுங்குமளவுக்கு, இயற்கையே மனிதனுக்கு பாடத்தை புகட்டி வருகின்றது.
மனித உழைப்பு தான் அனைத்து செல்வத்தையும் உருவாக்குகின்றது என்பதை, செல்வத்தைக் குவிக்கின்ற முதலாளித்துவ முடக்கம் மனிதனுக்கு எடுத்துக் காட்டுகின்றது.
கார்ல் மார்க்ஸ் கூறியது போல் "இந்தப் பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்தின் உடையதோ, ஒரு தேசத்தினுடையதோ அல்ல".. "ஏன் மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல" "நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே." ஆம் இது தான், எங்கும் தளுவிய உண்மை.
இவை அனைத்தையும் கொரோனா வைரஸ் - இயற்கையின் போக்கில் கட்டமைத்துக் காட்டி வருகின்றது. இயற்கையில் சமூகமாக வாழ வேண்டிய மனிதன், இயற்கை விதிக்கு புறம்பாக வாழ்கின்றதன் பொது விளைவை - உணர வைக்கின்றது. மனித சிந்தனைகள், நடத்தைகள் தனிநபராக குறுகி கிடப்பதால் - கொரோனா மூலமான மனித அவலமும் - பாதிப்பும் பல மடங்காக மாறி வருகின்றது.
இதனால் பலர் தொடர்ந்து மரணிக்கின்றனர். இப்படிப்பட்ட மரணத்தை நோக்கி எனது பயணம், என் முன்னால் நிழலாடியது. கொரோனா குறித்து சமூகப் பொறுப்பற்ற தனிமனித கண்ணோட்டங்களையும், சமூக விழிப்புணர்வையும் கொண்டு வரும் நோக்கில், என்னை வைரஸ் தாக்கிய சூழலை விளக்கி கட்டுரையை பதிவிட்டேன். எதிர்பாராதவிதமாக பல ஆயிரம் பேர் அக்கட்டுரையைப் படித்ததுடன், பலர் அதை தனிப்பதிவாக வெளியிட்டு பலருக்கு கொண்டு சென்றதையும் அறிய முடிகின்றது. நான் நோயில் இருந்து மீள வேண்டும் என்று, பலர் அக்கறை காட்டினார்கள். சிலர் அரசியல்ரீதியாக கவலைப்பட்டனர். சிலர் அஞ்சலியை வெளியிட்டனர். இப்படி பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டதையும் செவிவழியாக கேட்க முடிகின்றது. அதை தேடிப் படிக்க விரும்பவில்லை.
நான் எந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடினேனோ. அதுவே எனது எதிர்கால நம்பிக்கையாக இருந்தது. தொடர்ந்து போராடும் நம்பிக்கையே, என்னை வாழ வைக்கின்றது. ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான என்னுடைய பயணத்துடன் இணைந்ததாக இல்லாத எதையும் - என்னால் அங்கீகரிக்கவும் முடியாது.
சமூகத்தின் விடுதலையை முன்வைத்து அவர்களுக்காக நடைமுறையில் உழைக்கின்ற சமூக மனிதர்களுடன் - என் மீது அக்கறை கொண்ட அனைவரையும் இணைந்து கொள்ளக் கோருகின்றேன். அதைத்தான், என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் என்னால் கூறமுடியும்.