செல்வந்தர்களை உருவாக்கும் உற்பத்தி நின்று போவதென்பது, முதலாளித்துவத்தின் இதயமே நின்று போவதற்குச் சமமானது. உழைப்பு முடக்கமானது, உழைப்பிலான கூலியை நம்பி வாழும் மனிதர்கள் சந்திக்கின்ற பொது நெருக்கடியை விட, உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளித்துவத்தின் நெருக்கடிதான் - அரசுகளின் முடிவுகளாக இருக்;கின்றது.
உழைப்பினால் குவிந்த செல்வத்தை (உபரியை) பறிமுதல் செய்தோ அல்லது அதை அரச உடமையாக்கியோ, கூலியை நம்பி வாழும் மனிதர்களுக்கு பகிரவில்லை. உபரியை (குவிந்த செல்வத்தை)பறிமுதல் செய்யுமாறு பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை முன்வைத்து, பாட்டாளி வர்க்கம் உலகெங்கும் அதை அரசியலாக்கவுமில்லை. முதலாளித்துவம் எந்த வர்க்க அரசியல் நெருக்கடியுமின்றி இருக்க, அரசுகள் மனித உழைப்பினால் செல்வந்தர்களிடம் குவிந்துவிட்ட செல்வத்தின் ஒருபகுதியை வட்டிக்கு எடுத்து, அதையே நிவாரணமாக வழங்கியது. மறுபக்கம் அதையும் கொடுக்கவில்லை. உலக முதலாளித்துவம் ஏற்றத்தாழ்வான இரு பொது வழிமுறைகளை கையாண்டது.
அதாவது அரசுகளின் உத்தரவுக்கு ஒடுங்கி வாழ்தல் காலத்தில் ஏற்படும் பொருளாதாரத் தேவைகளை சில அரசுகள் பூர்த்தி செய்யும் வழிமுறைகளை முன்வைக்க - வேறு சில நாடுகள் பொருளாதார ரீதியாக மக்களுக்கு கைகொடுப்பதை மறுதளித்தது. உலக மக்களின் பொருளாதாரத் தேவைகளை கையாளும் அரசு வடிவங்கள் வேறுபட்டு, ஒருபுறம் பள்ளத்தை தோண்ட மறுபக்கமோ மலையாகக் காட்சியளிக்கின்றது.
இதனால் முதலாளித்துவம் கொந்தளிப்பற்ற வர்க்க அமைதியைப் பெற்ற போதும், செல்வத்தை தொடர்ந்து குவிக்க முடியாத முதலாளித்துவ சுய நெருக்கடியை எதிர் கொள்கின்றது. இதில் இருந்து மீள, நோயும் - மரணம் தொடர்கின்ற சூழலில் - மீண்டும் செல்வத்தை குவிக்கும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக் கோருகின்றது.
மனிதர்களின் சுயநல உணர்வுகளையும் - நுகர்வு வெறியையும் துணை கொண்டு ஊடகங்கள் சுரண்டும் உழைப்புக்கு திரும்புவது பற்றி – பொது எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றது. கொரோனாவுக்கு எதிரான உலக மக்களின் பொது உளவியல் களைத்துப் போகும் அளவுக்கு - மனிதனை தனிமனிதனாக தனிமைப்படுத்தி - இயல்பு வாழ்க்கைக்கு மீள்வது பற்றிப் பேச வைத்திருக்கின்றது.
இந்த அடிப்படையிலேயே அரசுகள் திட்டமிட்டே மக்களை உணர்வுபூ+ர்வமாக கொரோனாவுக்கு எதிராக அணிதிரட்டவில்லை. மாறாக சட்டங்களும் - ஒடுக்குமுறைகள் மூலமும் மக்களை கட்டிப்போட்டதே, முதலாளித்துவ வழிமுறையாக இருந்தது. மனிதனை தனிமைப்படுத்தி, மேல் இருந்து போடும் உத்தரவுகள் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசு நடைமுறைகள் மூலம் - மக்களை ஒடுங்கி தனித்து வாழக் கோரியது. இதன் மூலம் கூட்டாக தனித்து வாழும் மனிதனின் கூட்டு சமூகப் பண்பை மறுதளித்தது.
கொரோனாவுக்கு எதிராக மக்களின் மருத்துவமானது முதலாளித்துவ நலன் சார்ந்த அதன் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் அலட்சியம், பொறுப்பற்ற தனம், பொய்கள், விடையத்தை திருப்பும் மொள்ளைமாரித்தனங்கள் .. மூலம் கட்டமைக்கப்பட்டது. தாம் அல்லாத நாடுகளின் மரணப் புள்ளிவிபரங்களைக் கொண்டு, தாங்கள் சிறப்;பாகவும் – சரியாகவும் செயற்படுவதான ஒரு பொதுப் பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றனர். மரண எண்ணிக்கை குறைந்துவிட்டால், உற்பத்தியையும் - சந்தையையும் மீளத் திறந்துவிட முடியும் என்பதே முதலாளித்துவ அரசுகளின் மருத்துவக் கொள்கையாக மாறி இருக்கின்றது. இதன் மற்றொரு வடிவம் மரணம் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் - கொரொனாவுக்குள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று மனநிலை உருவாக்கப்படுகின்றது.
இப்படிபட்ட அரசியல் பின்னணியில் கொரோனா ஒவ்;வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மனிதர்களைக் கொன்று வருகின்றது. பல நாடுகள் அரையும் குறையுமாக முடக்கப்பட்டு இருக்கின்றது. மருத்துவ கண்டுபிடிப்புகள் பற்றி மிகைப்படுத்திய நம்பிக்கை ஊட்டி, மக்களை அதற்குள் அமுக்கிவிட முனைகின்றனர். இதுதான் மருந்து, இந்தா மருந்து என்று கூறி, அறிவிழந்த முட்டாள்தனங்களை கொண்டு - மனிதனின் பகுத்தறிவுவாதத்தை இல்லாதாக்குகின்றனர். தொற்று ஏற்பட்டடால் மீள தொற்று ஏற்படாது, தோற்று ஏற்பட்டவரின் நோய் எதிர்ப்பு சக்தியைக் (பிளாஸ்மா) கொண்டு பிறரைக் குணப்படுத்த முடியும் … என்று, மருத்துவரீதியாக இன்னமும் உறுதி செய்யாத வழிமுறைகளை எல்லாம் முன்வைத்து, மக்களின் சுய எச்சரிக்கையைச் சார்ந்து சிந்திக்கும் மனித உணர்வுகளை தகர்க்கின்றனர். தங்கள் நாடுகளில் மரணப் புள்ளிவிபரங்களை திசை திருப்ப, கொரோனா தோன்றிய விதம் பற்றியும் - மரணத் தரவுகளின் நம்பகத்தன்மை பற்றியும் கேள்வி எழுப்பி - அதை விவாதமாக மாற்றுகின்றனர்.
பல தரவுகளையும் - உண்மைகளையும் மூடி மறைத்தபடி, நிகழும் மரணங்களை இட்டு அலட்டிக் கொள்ள வேண்டிய விடயமேயல்ல என்ற பொது உளவியலை ஏற்படுத்துகின்றனர். மாஸ்க்(முகக்கவசம்), கையுறை, கிருமிநீக்கி, இடைவெளி, நோயை கண்டறியும் பரிசோதனைகள் மூலம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்ற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றது. வெய்யில் வந்தால் வைரஸ் தானாக செத்துப் போகும் என்பது தொடங்கி எங்களுக்கும், எங்கள் இன - மத – சாதி – உணவு பண்பாட்டுக்கும் தொற்று உருவாகாது என்று நம்புமளவுக்கு, பெரியளவில் மக்கள் கூட்டம் தொடர்ந்து வழிநடத்தப்படுகின்றது. மனிதனின் கூட்டுச் சமூகப் பொறுப்பு உருவாகாத வண்ணம், கூட்டு சமூகப் பொறுப்பிலிருந்து கொரோனாவுக்கு எதிரான மனிதப் போராட்டம் உருவாகாத வண்ணம் - முதலாளித்துவம் தன் வழித்தடத்தின் வழியே மக்களை வழிநடத்தி வருகின்றது.
கொரோனா தொற்று குறித்தோ – நிகழும் மரணங்கள் குறித்தோ மனித சமூகம் பொது அக்கறை கொள்ளத் தேவையில்லை, அதை அரசுகள் எதிர்த்து போராடுகின்றது என்ற பொது நம்பிக்கையை உருவாக்கி இருக்கின்றது. கொரோனா மரணங்கள் ஒரு விடையமே இல்லை. மரணங்கள் என்பது வெறும் புள்ளிவிபர தரவாக மாறிவிட்டது. பிற நாடுகளுடன் ஒப்பிட்டு, பேசும் தேசியவாதக் கருத்தியலாக, ஒரு நாட்டுக்கு எதிரான இன்னொரு நாட்டை ஆதரிக்கும் அரசியலாக மாறி இருக்கின்றது. அனைவருக்கும் கொரோனா தொற்றும் - மரணமும் நிகழாது என்ற பொது மனநிலை பரிணமித்திருக்கின்றது. மரணம் என்பது இந்த உலகில் வாழத் தகுதியற்ற மனிதர்களின் இறப்பாகவும், அது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் கருதுமளவுக்கும் - மனிதத்தை மனிதனில் இருந்து ஒழித்துக்கட்டி வருகின்றனர்.
இப்படி தனிமனிதர்கள் சிந்திக்கின்றளவுக்கு அரசும், ஊடகங்களும், சமூகத்திற்கு எதிராக தனிமனித மையவாத சுயநல சிந்தனைய காறி உமிழும் சமூக வலைத்தளங்களும் செயற்படுகின்றன. கொரோனா குறித்து அரசு சட்டதிட்ட நடைமுறைகள் எதை முன்வைக்கின்றதோ, அதைக் கடந்து மனித சமூகமாக சிந்திக்க முடியாத அளவுக்கு முடமாக்கப்பட்டிருகின்றது. மனிதனை வீட்டிற்குள் மட்டும் முடக்கவில்லை, மனித மூளையையும் சிந்திக்க முடியாத வண்ணம் - முடமாக்கி இருக்கின்றது.
கொரோனாவுக்கு எதிரான மனித (தனிமனித) பாத்திரம் என்ன? அரசு சொல்வதை கடைப்பிடித்தல். அதாவது மேல் இருந்து வரும் உத்தரவைப் பின்பற்றல். இதைக் கடந்து சிந்திக்க, செயலாற்ற முடியாத சிந்தனை முடக்கம். இதைதான் நடைமுறைப்படுத்தி இருக்கின்றது.
சமூகம் தன்னை ஒருங்கிணைந்த மனித சமூகமாக உணர்ந்து கொள்ள முடியாதவாறு, பிறர் குறித்த பொது அக்கறை கொள்ள முடியாதவாறு, எதுவும் உலகில் நடக்காதது போன்ற பொது மனப்பாங்கை உருவாக்கி இருக்கின்றது. மறுபக்கம் இலாபத்துக்கான முதலாளித்துவ உற்பத்தி முடக்கம், வேலையின்மையாக மாறி வருகின்றது. உலகில் பட்டினி மரணங்களை பலமடங்காக மாற்றுகின்ற முதலாளித்துவக் கொள்கைகளை அமுல்படுத்தி வருகின்றனர். மறுபுறம் சுரண்டும் தங்கள் முதலாளித்துவ இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் பொருளாதார நடவடிக்கையை தொடங்குமாறு கோருகின்றனர். இதற்காக தங்கள் குறுக்கு வழிமுறைகளை – மீள முன்வைக்கின்றனர். இவை அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக செயற்படும் மருத்துவ துறையின் முடிவுகளுக்கும் - வழிகாட்டலுக்கும் முரணான - ஆளும் வர்க்கத்தின் வர்க்க தேவைகளை பூர்த்திசெய்யும் அரசியல்வாதிகளின் முடிவுகளாக இருக்கின்றது.