Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போராட்டம் வீறுகொண்டு எழுந்திருக்கின்றது. கொரோனாவால் வேலையிழந்த உழைக்கும் வர்க்கம், முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டமாக இதை ஒருங்கிணைத்துப் போராடுகின்றது. உதிரி வர்க்கங்களோ தமது வர்க்கக் கலகமாக - சூறையாடலாக நடத்துகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போராட்டத்தை பயங்கரவாதமாக அறிவித்ததுடன், இராணுவத்தையும் இறக்கியிருகின்றான். நாய்களை விட்டு கொல்லப்பட வேண்டிய  "பொறுக்கிகளே" போராடுவதாக கூறியதுடன், துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் கொக்கரித்துள்ளான்பொலிசாரால் கொல்லப்பட்ட ஃபளாய்ட் உயிர் வாழும் தனது இறுதிப் போராட்டத்தின் போது “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று கூறிய வார்த்தை, அமெரிக்காவின் முதலாளித்துவ  "ஜனநாயகத்தில்' வாழமுடியாத மக்களின் பொதுக் கோசமாக மாறியிருக்கின்றது. அமெரிக்க சொர்க்கத்தில் மனிதனாக வாழ்வதற்காக - சுவாசிக்கும் உரிமைக்காக போராடுவதன் அவசியத்துடன் - மக்கள் வீதிகளில் இறங்கி இருக்கின்றனர்.

அமெரிக்காவே முதலாளித்துவத்தின் சொர்க்கம்; என்று நம்பும் உலகின் பொதுப்புத்தி நாற்றங் கண்டு - அம்மணமாகி நிற்கின்றது. ஏகாதிபத்திய ஊடகங்களால் உலகச் சிந்தனைமுறையாக்கப்பட்ட, முதலாளித்துவ சொர்க்கத்தை - மக்கள் தங்கள் போராட்டங்கள் மூலம் தலைகீழாக மாற்றி காட்சியாக்கி இருக்கின்றனர்.

இந்த நவீன அமெரிக்காவில் வன்முறை நிறவெறிப் படுகொலைகள் முதல் மருத்துவமற்ற கொரோனாப் படுகொலைகள் வரை அரங்கேறுகின்றது.

அதிகாரம் கொண்டு கறுப்பின மனிதனை நிறவெறி கொலைவெறியுடன் கொல்லும் காட்சிகள், உலகெங்கும் அதிர்வாகியுள்ளது. அமெரிக்கா முழுக்கவே, இந்த நிறவெறிக்கு எதிரான போராட்டங்களும்;, ஆங்காங்கே கலகங்களும் வெடித்திருக்கின்றன.

நிறவெறி அரசுக்கு எதிரானதாகவும், சட்டம் - நீதியை கறுப்பின மக்களுக்கு மறுதளிக்கும் அதிகார வர்க்கத்தின் நிறவெறி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், அதைச் சுற்றி நிகழும் வன்முறைகள் காட்சிகள்.. நிறவெறி கொண்ட சுரண்டல் சமூகத்தைக் கட்டிக் காக்கும் ஏகாதிபத்திய ஊடகங்களில் தவிர்க்க முடியாத காட்சியாக – செய்தியாக மாறியிருக்கின்றது.

கொங்கொங், வடகொரிய அரசுக்கு எதிராக மாத்திரம் இருந்தாலே அதை "முதலாளித்துவ ஜனநாயகத்தின் மக்கள் புரட்சியாக" முக்கி முனங்கி காட்சியாக்கி செய்தியாக்கும் மேற்கு ஏகாதிபத்திய ஊடகங்கள், தங்கள் முதலாளித்துவ சொர்க்கம் நாற்றமெடுத்து மக்கள் ஒடுக்கப்படுவதையும் - கொல்லப்படுவதையும் காட்டுவதில்லை. மாறாக ஒடுக்குகின்ற தங்கள் தரப்பை நியாயப்படுத்தவும், போராடும் மக்களை எதிரியாக காட்டவும், காட்சிகளையும்  - செய்திகளையும் உருவாக்குகின்றன.

இந்த நிறவெறி என்பது அமெரிக்கச் சிந்தனைமுறையாகும்;. மனித சிந்தனைமுறைகள் குறித்து விளங்கிக்கொள்ள நல்ல உதாரணமாகும். இது போல் இலங்கையில் தமிழர்களின் சிந்தனைமுறையானது இனவெறி கொண்ட வெள்ளாளிய சாதியச் சிந்தனைமுறையாக இருக்கின்றது. இன்று இனவெறி கொண்ட வெள்ளாளிய இந்துத்துவ சாதியச் சிந்தனைமுறையாக மாறி வருகின்றது. இலங்கையில் சிங்களவர் மத்தியில் இனவெறி கொண்ட பௌத்த கோவிகம சாதிய சிந்தனைமுறையாக இருக்கின்றது. இந்தியாவில் பார்ப்பனிய சிந்தனைமுறையாக இருக்கின்றது.

இப்படி நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்கு பிரதேசம் மக்களை பிரித்தொடுக்கும் சிந்தனைமுறைகள் மூலம் தான், ஆளும் வர்க்கங்கள் மக்களை அடக்கியாள்கின்றன. இந்த சிந்தனைமுறைகளானது, முதலாளித்துவ வர்க்க ஆட்சி அதிகார நலன்களை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்காவில் கறுப்பின மனிதர்களை மனிதனாகவே அங்கீகரிக்க முடியாத நிறவெறி சிந்தனைமுறையாக இருக்கின்றது. அதுவே ஒடுக்குமுறையாக, அதிகாரம் கொண்டதாகவும், சட்டம் - நீதிக்கு உட்படுத்த முடியாத - அமெரிக்கச் சிந்தனைமுறைக்கு உட்பட்டதாகி விடுகின்றது.

இப்படி ஒடுக்கப்படும் கறுப்பின மக்கள், ஆபிரிக்காவில் இருந்து பிடித்துவரப்பட்ட, சந்தைகளில்  அடிமைகளாக விற்கப்பட்டவர்கள். அமெரிக்க முதலாளித்துவம் உருவாகுவதற்கான  மூலதனத்திற்கு அடித்தளமிட்ட நிலப்பிரபுத்துவ உற்பத்தியில் திரண்ட செல்வமானது,  கறுப்பின அடிமைகளின் கூலியற்ற மனித உழைப்பு தான். அடிமைகளை விலைக்கு வாங்கிய  தனிப்பட்ட ஒருவரின் உடமையாக சட்டத்தையும் நீதியையும் வரையறுத்ததுடன், மதம் அதை நியாயப்படுத்தியது. மூலதனத்தை திரட்டிய கொடூரத்தை, மார்க்ஸ்சின் மூலதனம் பாகம் 1, 2 சாட்சியாக எம்முன் காட்சிப்படுத்துகின்றது.

இப்படி அடிமையாக்கப்பட்ட கறுப்பின அடிமைக்கு எந்த மனிதவுரிமையையும் - அமெரிக்காவில் ஆக்கிரமிப்பாளனாக வந்தேறிய வெள்ளையின சிந்தனைமுறை வழங்கவில்லை. இந்த வம்சாவழியில் வந்த வெள்ளையின சிந்தனையானது - கறுப்பின மக்களை சட்டத்தின் ஆட்சியின் முன் சமமாக நடத்துவதில்லை.

இந்த வெள்ளையினச்  சிந்தனையிலான அமெரிக்காவே உலகின் ஜனநாயகம் பற்றியும், பிற நாடுகளின் சட்டம் - நீதிகள் குறித்தும் வாய்கிழிய பேசுகின்றனர். இவர்களின் ஊடகங்கள் தான், தம் மூலதனத்துக்கும் - உலக மேலாதிக்கத்துக்கும் தடையாக இருக்கும்   நாடுகளையும் - அங்கு நடக்கும் சம்பவங்களையும் ஊதிப்பெருக்கி - அதையே உலக மக்களின் சிந்தனைமுறையாக மாற்றுகின்றனர்.சொந்த நாட்டில் சட்டமும், நீதியும் மறுக்கப்பட்ட - எண்ணிக்கையில் சிறுபான்மையான கறுப்பின மக்கள், அமெரிக்காவில் வறுமையில் வாழும் மக்களில் பெரும்பான்மையாகும். உலகின் செல்வங்களை எல்லாம்  உலகின் மேலான அதிகாரம் மூலம் தனியாரிடம் குவித்து வரும் அமெரிக்கா தான், வீடின்றி - உணவின்றி - மருத்துவமின்றி.., ஏழை மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறி இருக்கின்றது.

இதில் பெரும்பான்மை கறுப்பின மக்கள்;. இந்த மக்கள் அடிமையாக இருந்த போது - அவர்களை வாங்கியவர் சுட்டுக்கொல்வதையும், பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதையும் யாரும் கேள்விகேட்கவும் முடியாது. அடிமைகளுக்குள் திருமணம் செய்ய வைத்து குழந்தைகளை உருவாக்கி விற்றவர்கள், தாய் தந்தையை தனித்தனியாக சந்தையில் விற்றவர்களின் வழிவந்த மூலதனச் சிந்தனைமுறை தான் - வெள்ளையினவாத சிந்தனைமுறையாகும். இப்படி புளுத்த முதலாளித்துவ மூலதனச் சிந்தனைமுறை அமெரிக்காவின் இன்றைய வாழ்க்கை முறை.

வெள்ளையின அதிகார வர்க்கம் தன் நடத்தையை மறைப்பதில்லை. திமிராகவே அதிகாரத்துடன் காட்சிப்படுத்துவதை, அமெரிக்க ஜனாதிபதி கருத்துகள் - நடத்தைகள் மூலம் பிரதிபலிக்கின்றார். இது அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்பினதோ, வலதுசாரிகளினதோ தனி இயல்பேயல்ல. டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக கூறுவதன் மூலம் அமெரிக்க சிந்தனை மற்றும் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கின்றார், டொனால்ட் டிரம்ப்  அல்லாத மற்றவர்கள் அமெரிக்கச் சிந்தனையையும் அதன் விளைவுகளையும் கண்டிப்பதன் மூலம், அமெரிக்காவின் ஒடுக்குமுறையிலான மூலதன அதிகாரத்தைக் காப்பாற்ற முனைகின்றனர்.