பேரினவாத அரச ஒடுக்குமுறையாளர்களால் 1981 யூன் 1ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. மாவட்டசபையை ஏற்று தேர்தலில் பங்குகொண்டோரை தனிநபர் பயங்கரவாதம் மூலம் கொன்றதற்கு பதிலடியாக, அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அன்று எரிக்கப்பட்ட - உடைக்கப்பட்ட – கொல்லப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில், எரிந்த யாழ் நூலகமும் அடங்கும்.
இதில் யாழ் நூலகமானது இனவொடுக்குமுறையின் வரலாற்று அடையாளமாகிப் போனது. இச் சம்பவம் மூலம் ஓடுக்கப்பட்ட தமிழ் தேசமும், அதில் வாழும் தேசிய இனங்களும், தனிமனிதர்களும் எதைக் கற்றுக்கொண்டு, எதை மீள உருவாக்கினர்!?
சமூகம் சார்ந்த வரலாற்று அழிவை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பணியை - ஒடுக்கப்பட்டவர்கள் செய்யவில்லை. பதிலுக்கு யாழ் நூலகத்தை எரியூட்டியவனின் அதே இனவாத உணர்வுக்கு நிகராக - தமிழினவாதத்தை பேசுகின்றதைத் தாண்டி, எதையும் சமூகத்துக்காக உருவாக்கவில்லை, எதையும் கற்றுக்கொள்ளவுமில்லை.
1981 இல் எரிக்கப்பட்ட நூலகத்துக்கு மாற்றாக, இன்று எத்தனை நூலகங்களை உருவாக்கி இருக்கின்றனர். ஏத்தனை தனிநபர்கள் தங்கள் வீடுகளில் நூலகங்களை வைத்திருக்கின்றனர். வாசிப்பைத் தூண்டும் வண்ணம் எத்தனை சமூக ஊக்குவிப்புகளை சமூகம் வழங்குகின்றது? எதுவுமில்லை.
அன்று எம்மிடம் யாழ் நூலகம் மட்டும் இருக்கவில்லை. ஊருக்கு ஊர் பொது நூலகங்களும், நூல்களும் இருந்தன. வாசிக்கும் பழக்கமும், அதன் அடிப்படையில் மனித வாழ்க்கையை வளப்படுத்தும் அறிவு வளர்ச்சியும் இருந்தது. புதிய அறிவுத்தேடல் சமூக அசைவின் உயிர் நாடியாக இருந்தது. இன்று எதையும் காண முடியவில்லை. நூலகங்களை உருவாக்கும் சமூக நோக்கு கொண்ட சமூகப் பார்வை கூட, சமூகத்திடம் காணாமல் போய் இருக்கின்றது.
இதற்கான காரணத்தை எமது அரசியலில் தேட வேண்டும். 1980 களில் ஆயுதப் போராட்டமாக மாறிய போது, தனிமனித அதிகாரம் குறித்த மனப்பாங்கானது, மனித அறிவை மறுதளிக்கத் தொடங்கியது. கேள்வி கேட்பதையும், போராட்டத்தின் மீதான அறிவியல் தேடலையும். தமிழ் இனவாதத்தை முன்னிறுத்திய அதிகாரம் மறுதளித்தது. ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டமாக மாறி வளர்ச்சி பெறும் போது, அது குறித்த அறிவுவளர்ச்சி பெற்றாலே போராட்டம் சரியான திசையில் பயணிக்கும்;. இது பரஸ்பர இயங்கியல் விதி. ஆனால் எமது போராட்டத்தில் அறிவுவளர்ச்சி என்பது, தங்கள் அதிகாரத்துக்கும் தங்கள் தலைமைக்கும் எதிரானதாக கருதிய போக்கானது - கற்றலை மறுதளித்தது. கற்றல் என்பது போராட்டத்தை வளப்படுத்தும் திசையில் வளரும் இயங்கியல் தன்மை கொண்டது. இதுவே போராட்டம் வெற்றி பெற அடிப்படையான விதி. நூல்களை கற்றலை போராட்டத்துக்கு எதிரானதாகவும், கற்றல் போராட்ட தலைமைக்கு எதிரானதாகவும், நூல்களுக்கு பதில் ஆயுதங்கள் முன்னிறுத்தப்பட்டது. கற்பதை ஊக்குவிப்பதற்கு பதில், கற்பதையே எமது போராட்டம் மறுதளித்தது. இதுதான் இன்றைய இந்தத் தலைமுறையில் அறிவுவரட்சிக்கான பின்னணி. இதனால் புதிய தலைமுறை மனப்பாடமாக்கும் பாடசாலைக் கல்வியில் கூட முன்னேற முடியாத சமூகமாக – மிகப் பின்தங்கி இருக்கின்றது.
பாடசாலைக் கல்வியில் சித்தி பெற்றவர்கள் கூட, பண்பாட்டு ரீதியான சமூகத் தகுதியை பெறமுடியாத அளவுக்கு பண்பாடற்று பின்தங்கி இருப்பதுடன் - பொது அறிவு இல்லாததால் உளவியல் ரீதியாக பின்தங்கி இருப்பதுடன் - ஒடுக்கப்படுகின்றனர்.
இப்படி அறிவால் வரண்டுபோன தமிழ் சமூகத்தின் இன்றைய இந்த நிலைமைக்கு, இனவாத அரச ஒடுக்குமுறையாளன் காரணமல்ல. மாறாக வெள்ளாளியச் சிந்தனைமுறையே, கற்றலை மறுதளித்து விடுகின்றது. மனப்பாடமாக்கும் கல்விமுறையை மட்டுமே கற்றல் முறையாக பார்க்கின்றது, திணிக்கின்றது. இந்த வெள்ளாளிய சிந்தனையிலான இச் சமூகமானது, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வியை மறுத்த வரலாற்று ரீதியாகவே ஒடுக்குமுறையாளர்கள். அதையும் மீறிப் படித்த போது, வன்முறை மூலம் ஓடுக்கிய - பல வரலாறுக்கும் சொந்தக்காரர். இன்று பாடசாலைக்கு வெளியில் கல்வி கற்பதையே மறுக்கின்றது. நூல்களை கற்பதை பணம் காசு இல்லாதவனின் "வெட்டி" வேலையாகவும், பணம் சேர்க்கும் பொருளாதாரத்துக்கு எதிரானதாகவும் - தடையாகவும் கருதுகின்றது.
இப்படிப்பட்டதே எமது யாழ் நூலக வரலாறு. யாழ் நூலகம் என்பது சமூகத்தைப் பிரதிபலிக்கவில்லை. நூல்கள் என்பது தமிழரின் சிந்தனைமுறைக்கு முரணானது. நூலகம் என்பது, இந்த சமூகத்தின் கற்பனைக்கு அப்பாற்பட்டது. 1960களின் சாதியப் போராட்டத்தை ஓட்டி உருவான கற்றல் முறை, 1980 வரை நூல்களை படிக்கும் வாசிகசாலைக்கு வித்திட்டது.
வெள்ளாளிய சிந்தனையில் கிணற்றுத் தவளையாக மூழ்கிக் கிடந்த சாதிய சமூகத்தில் நூல்கள், ஆவணங்கள் குறித்து அக்கறை கொண்ட தனிநபர்களின் முயற்சியும் அக்கறையுமே, யாழ் நூலகத்துக்கு வித்திட்டது. எரிக்கப்பட்ட நூலகத்தின் வரலாறு தமிழரின் சிந்தனைமுறையில் யாரை துரோகி என்கின்றதோ, அவர்கள் முன்னின்று உருவாக்கிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.
1933 ஆண்டு செல்லப்பா என்ற தனிநபரின் முயற்சியே, தனியார் இலவச நூலகத்துக்கு அடித்தளமிட்டது. 1934ம் ஆண்டு ஆஸ்பத்திரி வீதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் இருந்து, யாழ் நூலக வரலாறு தொடங்குகின்றது. 1934 ஆம் ஆண்டு 844 நூல்களுடன் ஆரம்பித்த இந்த நூலகத்தினை, 1935 ஜனவரி முதலாம் திகதி யாழ் மாநகர சபை பொறுப்பேற்றது. இவை அனைத்தும் காலனிய ஆட்சியாளர்களின் காலத்தில் நிகழ்கின்றது. காலனிய ஆட்சியாளர்கள் நூல்களை வாசிக்கின்ற மரபில் இருந்தும் இது வித்திடப்படுகின்றது. நூலகம், படிப்பது என்பது வெள்ளாளிய சிந்தனையிலான தமிழரின் சிந்தனைமுறையல்ல.
1950 களில் இந்த நூலகத்தை விரிவுபடுத்த எடுத்த முயற்சி, 1952, யாழ் நகரசபை தலைவர் சாம்.ஏ.சபாபதியின் தலைமையில் தொடங்கியது. இதை முன்நகர்த்த வண.பிதா லோங் அடிகளாரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்ததுடன், இந்தியாவின் இருந்து நூலகர் எஸ்.ஆர் இரங்கநாதனை அழைத்து வந்ததன் மூலம் திட்டவரைபுகள் உருவாக்கப்பட்டது. யாழ் சிந்தனை முறையிலான இனவாத வெள்ளாளிய சிந்தனையிலான அரசியல் இதை எதிர்த்தது.
யாழ் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதை வெள்ளாளிய சிந்தனையிலான தமிழர்pன் இனவாத அரசியல் எப்படி எதிர்த்ததோ, அதேபோல் யாழ் நூலகத்தின் உருவாக்கத்தையும் எதிர்த்தது. அரசியல் தலையீடுகள், இழுத்தடிப்புகள் பின் நகரபிதாவின் உத்தரவுக்கு அமைய உருவான யாழ் நூலகம், 11 ஒக்டோபர் 1959 அன்று யாழ் முதல்வர் அல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டது. 1981 இல் எரிக்கப்பட்ட பின், மீள் உருவாக்கி அதை திறக்க முற்பட்ட போது - தமிழரின் சிந்தனைமுறைக்கு முரணான ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த செல்லன் கந்தையன் திறப்பதை எதிர்த்ததுடன் - புலிகளின் கொலை மிரட்டலுக்கு உள்ளாகியதால் யாழ் நகரசபையின் முதல்வர் பதவியை விட்டு விலகினார். செல்லன் கந்தையன் இன்றி நூலகம் திறக்கப்பட்டது.
இந்த பின்னணியில் இன்று வெள்ளாளிய சிந்தனையிலான தமிழரின் நூலகமாக இருக்கின்றதே ஓழிய, வெள்ளாளிய சிந்தனைக்கு வெளியில் கற்றுக் கொள்ளும் சமூகமாக - சமூகத்தை வழிகாட்டவில்லை. வெறும் அடையாளம், மற்றும் இனப்பெருமை பேசவும், இனவாதம் காக்கவுமே நூலகம். 1981 இல் எரியூட்டப்பட்ட நூலகத்தின், இன்றைய கதி இது தான்.
அரச இனவொடுக்குமுறையாளன் யூன் முதலாம் திகதி யாழ் நகரில் எரியூட்டிய பல கட்டிடங்களில் நூலகம் அடங்கியது.