Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். இனம், மதம், சாதி.. என்று மக்களைப் பிரித்து – அவர்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தி ஒடுக்குவதே, அரசுகளாக இருக்கின்றது. வர்க்கங்களுக்கு இடையில் சமரசம் செய்து சொத்துடமை வர்க்கத்தை பாதுகாக்க உருவான அரசுகள், இன்று மக்களிடையே இன, மத, சாதி பிரிவினையை உருவாக்கி, சொத்துடமை வர்க்கத்தைப் பாதுகாக்க முனைகின்றது.

உழைப்பைச் சுரண்ட பண்ணை அடிமைகளாக அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்களை, முதலாளித்துவ உற்பத்திக்கு தேவையான உழைப்பு சக்தியை திரட்டுவதற்கு ஏற்ற «சுதந்திர» மனிதனாக கறுப்பின மக்களை மாற்றியது. அதேநேரம் முதலாளித்துவ வர்க்கச் சுரண்டல்முறைக்கு எதிராக கறுப்பின வெள்ளையின மக்கள் அணிதிரண்டுவிடாத வண்ணம், நிறவொடுக்குமுறையாக மாற்றியது.

இந்த அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவினைவாத நிறவொடுக்குமுறையை எதிர்த்து, நிறபேதமற்ற மக்கள் போராட்டமாக எழுந்திருக்கின்றது. அமெரிக்க மக்களின் முன்மாதிரியான போராட்டத்தை போல், இன-மத ஒடுக்குமுறை மூலம் ஆளப்படும் இலங்கை மக்கள் கற்றுக் கொள்ளவும் - போராடவும் வேணடும். அமெரிக்க நடைமுறைகள் எமக்கு முன்மாதியாக இருக்கின்றது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவன் கொல்லப்பட்ட போது, வெள்ளையின மக்கள் அலைஅலையாக அணிதிரண்ட நிகழ்வுதான், அமெரிக்காவின் நிறவெறி அதிகார வர்க்கத்தை திணறடித்திருக்கின்றது. அதிகார வர்க்கத்தின ஒரு பகுதி மண்டியிட்டு மன்னிப்பு கோர வைத்திருக்கின்றது. கையை குலுக்குகின்றது, கட்டி அணைக்கின்றது.

இப்படி இலங்கையின் இன-மத ஒடுக்குமுறைக்கு எதிராக நடக்க வேண்டும் என்றால், மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றால், அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.

மக்கள் முன் அதிகாரம் என்பது தூசு என்பதை, அமெரிக்க மக்கள் உணர்த்தி இருக்கின்றனர். வெள்ளையின மக்கள் ஒன்றிணைந்து போராடுகின்ற பின்னணியில், கறுப்பின மக்களின் நிறவாதமற்ற கண்ணோட்டம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது. கறுப்பு – வெள்ளை நிறவாதமற்று கூடிவாழும் சமூகப் பண்பாடு, நிறவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துக்கு வித்திட்டது.

பரஸ்பரம் நிறவாதமற்ற அணுகுமுறை இன்றி, அமெரிக்க மக்கள் ஒருங்கிணைந்து இருக்க முடியாது. நிறவாத ஒடுக்குமுறைக்கு எதிரான சிந்தனைமுறை, நிறவாதம் கடந்த வாழ்க்கை முறையில் இருந்துதான் உருவாகின்றது. இனவாதமாகச் சிந்தித்துக் கொண்டு, இனவாதமற்ற வாழக்;கையையோ - போராட்டத்தையோ உருவாக்க முடியாது.

 

அமெரிக்க கறுப்பின மக்கள் மத்தியில் காணப்படும் அதிகமான குற்றங்களுக்கு காரணம், சமூக பொருளாதார விளைவாக உணர்கின்ற - புரிந்துகொள்கின்ற - அணுகுகின்ற பார்வை, வெள்ளை இன மக்கள் மத்தியில் வளர்ச்சி பெற வர்க்கக் கண்ணோட்டம் உதவி இருக்கின்றது. இது கறுப்பின மக்களை குற்றவாளிச் சமூகமாக பார்ப்பதை மறுதளித்து, நிறவெறி வர்க்க அமைப்பே இதற்கு காரணம் என்பதை - அமெரிக்க மக்கள் தங்கள் போராட்டம் மூலம் முகத்தில் அடித்தால் போல் கூறி இருக்கின்றனர். அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு ஆதரவான உலகெங்கும் நடந்த போராட்டங்கள் இதை உணர்த்தி இருக்கின்றது. நிறவெறியிலான வர்க்க அமைப்பே குற்றங்களுக்கு அடிப்படை என்பதை கற்று வருகின்றது. போராட்டங்கள் மூலம் பலருக்கு அதை கற்றுக் கொடுக்கின்றது.

இதற்கு எதிராக இன, நிற, மதம் தொடங்கி சுரண்டும் வர்க்கம் வரை ஒன்றிணைந்து நிற்பதும், அனைவரும் சமன் என்ற மக்களின் ஜனநாயக கோரிக்கையை தடுத்து நிறுத்தவும் முனைகின்றது.

ஒடுக்கப்பட்ட இலங்கை தேசிய இனங்களும், மதங்களும், ஒடுக்கும் தேசிய இனங்களும் கற்றுக் கொண்டாக வேண்டும். இனவாதமற்ற கூடிவாழும் வாழ்க்கை மூலம், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்தாக வேண்டும்.

ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கவும் - வீதியில் இறங்கிப் போராட்டத்தை நடத்தும் ஜனநாயக மரபை உருவாக்க வேண்டும். இதற்கு அமைவாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் இனவாதம் கடந்து சிந்திக்கவும் - ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்த மக்களுடன் இணைந்து போராட கற்றுக்கொள்ள வேண்டும். ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்த மக்கள் போராட தவறும் பட்சத்தில் - அதை உருவாக்கும் வண்ணம் - ஒடுக்கப்பட்ட மக்களின் நடைமுறைகள் இருக்க வேண்டும்.

நிற, இன, சாதி.. ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு, அமெரிக்க மக்கள் தங்கள் போராட்டங்கள் மூலம் சொல்லும் செய்தி இதுதான். ஒன்றிணைந்து போராடுவதன் மூலம தான், ஒடுக்குமுறையை அதிகாரமாகக் கொண்ட அரசை எதிர்கொள்ள முடியும்.