Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒருவரின் தலைமையில் திறப்பதை தடுத்து நிறுத்திய வெள்ளாளியம், இன்று திடீரென தோன்றி நாங்கள் அதை சாதி அடிப்படையில் தடுக்கவில்லை என்று புதிய பித்தலாட்டத்தை தொடங்கினர். இதையடுத்து அன்று யாரை தலைமை தாங்கக் கூடாது என்று கூறினரோ, அந்த செல்லன் கந்தையாவிடம் எடுக்கப்பட்ட பேட்டியொன்று வெளியாகியுள்ளது. வரலாற்று மோசடி - தொடரும் ஒடுக்குமுறை சார்ந்த ஆவணமாகிவிட்டது.

இந்த பேட்டி குறித்தும், வடிவம் குறித்தும், நோக்கம் குறித்துமான வெள்ளாளியப் புலம்பல்கள் எல்லாம், தங்கள் சாதிய ஒடுக்குமுறை சமூகத்தின் பெருமிதங்களை பாதுகாக்கவே ஒழிய உண்மையை தரிசிப்பதறகாக அல்ல..

இந்தப் பேட்டியானது அரசியல்ரீதியாகவும் – அனுபவரீதியாகவும் நாம் முன்வைத்த உண்மையை உறுதி செய்கின்றது. புலிகளின் தேசியம் வெள்ளாளிய தமிழ் தேசியமல்ல, சாதி ஒழிப்பைக் கொண்டது என்ற மாயைகளை, மீளத்; தகர்த்து இருக்கின்றது. செல்லன் கந்தையா போன்றோர் ஒடுக்கும் வெள்ளாளிய சமூக அமைப்பைப் பாதுகாக்கும் அரசியல் பயணத்தின் போது, சாதி எப்படி குறுக்கிடும் என்பதற்கான உதாரணமாகி விடுகின்றது.

ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து எந்த உயரத்தில் பறந்தாலும், சாதிய சமூகம் குறுக்கிடுகின்ற தருணங்கள் தற்செயலானதல்ல. பறக்கும் உயரங்கள் எதுவாக இருந்தாலும், சமூகத்தின் கீழ் தான் பறக்க முடியும். சமூகத்தின் மேலாக பறப்பதாக நினைப்பது, வெள்ளாளிய மயமாக்கம் தான். வெள்ளாளிய வாழ்க்கையை உயரமாகக் கருதி, அதை எட்டிப்பிடிப்பது அல்லது அதற்கு மேலாக தன்னை கருதுவது, வெள்ளாளிய மயமாக்குவது.

பொருளாதார ரீதியாக மேலே சென்றுவிட்டால் சாதி ஒழிந்துவிடும் அல்லது ஒழிந்துவிட்டது என்று கருதுவது, ஒடுக்கும் தனியுடமைவாதக் கண்ணோட்டமே. இது சாதிய சமூக அமைப்பில் வெள்ளாளியமாகும்.

இப்படி தாங்கள் «மேலே» வந்துவிட்டமாக நம்புபவர்கள் சாதிய சமூக அமைப்பின் சடங்குகள் பண்பாடுகளை பின்பற்றுவது மட்டுமின்றி, அதை முன்னின்று செய்பவராக மாறிவிடுகின்றனர். சாதிய சமூக அமைப்பை பாதுகாக்கும் வெள்ளாளிய அரசியல் - இலக்கியத்துக்குள்; சங்கமித்து, சாதியில்லை என்று கூவுவதன் மூலம் நவீன வெள்ளாளியத்தின் பாதுகாவலாராகி விடுகின்றனர். சமுதாயத்தின் வளர்ச்சியில் ஏற்படும் கால இடைவெளியானது, ஒடுக்குமுறையின் வடிவங்களை சூட்சுமாக நுணுக்கமாக வேறுவிதமாக மாற்றுகின்றது. இதை அடிப்படையாக கொண்டு, இன்று வெள்ளாளிய ஒடுக்குமுறையே கிடையாது என்று கூறுவது தான் நவீன வெள்ளாளியம். இந்த ஒடுக்குமுறையை செய்பவர் வெள்ளாளனாக கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

உதாரணமாக அமெரிக்க கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறை முந்தைய வடிவில் இல்லை என்பதும் - கறுப்பினத்தவரைச் சேர்ந்த ஒருவர் ஜனதிபதியாக வரமுடிகின்றது. இதைக் கூறி வெள்ளையின ஒடுக்குமுறையையே இல்லை என்று கூறிக்கொண்டு செயற்படும் நவீன வெள்ளையின ஒடுக்குமுறை போன்று, நவீன வெள்ளாளியம் களத்தில் இறங்கி இருக்கின்றது.

அமெரிக்க கறுப்பின மக்களின் இனவெறிக்கு எதிரான அண்மைய (2020) போராட்டம், பல பொய்களை போட்டுடைத்து இருக்கின்றது. வெள்ளாளியம் மூடிமறைக்க முனையும் ஒடுக்குமுறை என்பது, வரலாற்றை திரிப்பது தான். நாங்கள் முன்பு போல் ஒடுக்குவதில்லை என்பதும், ஆக நாங்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை அடைந்துவிட்டோம் என்று ஒடுக்கப்பட்டவனைக் கொண்டே சொல்ல வைப்பதும் தான்.

செல்லன் கந்தையாவும் உயரப் பறந்தவர்தான்

1960 களில் பொது இடங்களில் சாதியப் பாகுபாடுகள் காட்டப்படுவதை எதிர்த்து போராட்டங்கள் நடந்த போது, தமிழரசுக்கட்சி அப் போராட்டங்களை எதிர்த்து நின்றது. தேசியத்தின் பெயரில் ஒடுக்கும் வெள்ளாளியத்தைப் பாதுகாக்கப் போராடிய கட்சி.

ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த செல்லன் கந்தையாவின் அண்ணனோ, சாதியப் போராட்டத்தை எதிர்த்த தமிழரசுக் கட்சிக்காக முழுமூச்சாக செயல்பட்டவர். அவரின் திருமணத்துக்கு செல்வநாயகம் உட்பட முக்கிய தமிழரசுக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளுமளவுக்கு, ஒடுக்கும் வெள்ளாளியத்துக்காக உழைத்த முக்கிய புள்ளி.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு எதிராய் நின்ற வெள்ளாளிய கட்சியின் அரசியலுக்கு உழைத்தவர். தெளிவாகச் சொல்லப்போனால் வெள்ளாளிய தமிழ் தேசியத்தின் தூணாக இருந்தவர்.

அண்ணா இறந்த பின்னான காலத்தில், தம்பி செல்லன் கந்தையா அதை தொடர்ந்தார். செல்வநாயகம் இறந்த உடல் யாழ் முற்றவெளியில் வைக்கப்பட்ட போது, இலையான் மொய்க்காது இருக்க வேப்பிலை கொண்டு செல்லன் கந்தையா விசுறுமளவுக்கு தமிழ் தேசியத்தின் தூணாக இருந்தவர். வேப்பிலை கொண்டு விசுறுவதற்கு ஒடுக்கப்பட்ட ஒரு மனிதனையே வெள்ளாளியம் தேர்ந்தெடுக்கும். அந்த சாதியக் கொடுமையை உணராதளவுக்கு – கண்டுகொள்ளாது இருக்குமளவுக்கு, ஒடுக்கும் வெள்ளாளிய தமிழ் தேசியத்துக்காக உழைத்தவர். இப்படி உழைத்ததை பெருமையாக செல்லன் கந்தையா கருதுகின்றார். தான் இருந்த கட்சியே புலியைப் போல், வெள்ளாளிய கட்சி என்பதை ஏற்க மறுக்கின்ற அளவுக்கு அதற்காக உழைத்தவர்.

1974 ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தை திறப்பதை தங்கள் வெள்ளாளிய கட்சி எதிர்த்ததை மறுக்கின்றார். அன்று முன்னின்று திறந்த கைலாசபதிக்கு துரோக முத்திரை இட்டு குண்டு வீசியது – அவர் பாதுகாத்த வெள்ளாளிய தேசியம் தான்.

புலிகள் 2003 இல் திறப்புவிழாவை சகித்துக் கொண்டு மௌனமாக அனுமதித்து இருந்தால், வெள்ளாளிய செல்லன் கந்தையாவின் சாதிய ஒடுக்குமுறை குறித்த கருத்து என்னவாக இருந்து இருக்கும். வான் உயரப் பறக்கும் வெள்ளாளியக் கண்ணோட்டமே இருந்து இருக்கும்.

சாதி முகத்தில் அறையாத வரை, சாதி சமூகத்தின் கீழ் பறக்கின்றோம் என்பதை நம்புவதில்லை. யாழ் மேயராக இருக்கலாம், ஒடுக்கும் வெள்ளாளிய சாதிய சமூகத்தின் வரம்புகளை மீறக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. தன் பெயரை வெள்ளாளிய மாடமாளிகைகளில் பதிக்க நினைப்பது என்பது, ஒடுக்கும் சமூகத்திற்கு எதிரான சவால்;. இதை அன்றைய வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் பிரதிநிதியான புலிகள் தங்கள் பாசிச வழியில் அதை தடுத்து நிறுத்தினர். அந்த பாசிச வழியில் சாதியில்லை என்ற இன்றைய வெள்ளாளியப் புலம்பல்கள், அன்று புலிகள் விடுத்த வெகுஞன அறிக்கையின் மற்றொரு பிரதி தான்;.

செல்லன் கந்தையாவை மேயராக தேர்ந்தெடுத்தது ஜனநாயகமா?

யாழ் மேயராக தன்னை தெரிவு செய்தது ஜனநாயகமே என்று கூறுவது, வெள்ளாளிய பிதற்றல். அவரை தேர்வு செய்தது ஒடுக்கப்பட்ட மக்கள் அல்ல, வெள்ளாளியமே. அன்றைய அரசியல் சூழலில். வெள்ளாளிய அதிகாரப் போட்டில் உயிர் தப்பிப் பிழைக்க, தனது பலியாடாகவே செல்லன் கந்தையாவை தேர்ந்தெடுத்தது.

உயிர் அச்சுறுத்தல் இல்லாத நிலையில், செல்லன் கந்தையாவை வேட்பாளராகக் கூட நிறுத்தி இருக்காது. அரசின் இனவொடுக்குமுறை உச்சத்தில் இருந்த காலம்;. ஜனநாயகமற்று இருந்த காலத்தில், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகம் என்பது கேலிக் கூத்து.

இங்கு மக்கள் தேர்ந்தெடுக்கும் வாக்கு சுதந்திரம் என்பது, ஒடுக்குவோரின் அதிகாரம் - தேர்வுக்கு உட்பட்டது. எந்த தமிழ் தேசியத்துக்காக உழைத்தாரோ, அதை ஒடுக்குகின்ற அரசு அனுசரணையுடன் மேயரானார் என்பது, அதைக் கொண்டு தன்னை முதன்மைப்படுத்த முனைந்தார். ஒடுக்கும் வெள்ளாளியம் அதில் குறுக்கிடுகின்ற போது, தான் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த அடையாளம் எப்படிப்பட்ட கொடூரமானதாக தனக்கு எதிராக மாறுகின்றது என்பதை கொண்டு, பேரினவாத ஒடுக்குமுறையின் முகத்தை மூடிமறைக்க முடியாது.

ஒடுக்கும் தரப்பில் இருந்து கொண்டு சாதிய ஒடுக்குமுறையைச் சந்தித்த ஒருவராகி விடுகின்ற சுய அவலம், ஒடுக்குமுறையிலான சமூகம் மீதான பொது ஒடுக்குமுறையுடன் தொடர்புபட்டு விடுகின்றது. பல முரண்பாடுகள் - ஒடுக்குமுறைகள் கொண்ட சமூகத்தில், ஒற்றைப் பரிமாணம் கொண்டு நியாயப்படுத்தி குறுக்கிவிட முடியாது.

வெள்ளாளிய சாதி ஒடுக்குமுறை குறித்து பேசுவது தேசியத்துக்கு எதிரானதா?

சாதியம் குறித்து பேசுவது தேசியத்துக்கு எதிரானது, மக்களை பிரிக்கும் அரசியல் சதி, இப்படி வெள்ளாளிய சாதிய புலம்பல்கள் முன்தள்ளப்படுகின்றது.

சாதியம் குறித்து பேசும் போது ஒடுக்கும் வெளளாளியத் தேசியத்துக்கு எதிரானதே ஒழிய, ஒடுக்கப்பட்ட தேசியத்துக்கு எதிரானதல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட தேசியத்தை வலுவூட்டக் கூடியது. சாதியற்ற தேசியமே ஒடுக்கப்பட்ட தேசியத்தின் அடித்தளம்.

வெள்ளாளியத்தை முன்னிறுத்திக் கொண்டு அனைவரும் தேசியத்துக்காக போராட வாருங்கள் என்பது, எங்கள் சாதிய ஒடுக்குமுறையை அங்கீகரியுங்கள் என்று தான் பொருள். இதைத் தான் கடந்த வெள்ளாளிய இயக்கங்கள் செய்தன. புலிகள் இதைத் தான் முன்னிறுத்தினர். செல்லன் கந்தையாவை தடுத்து நிறுத்தியது இந்த தேசிய உள்ளடக்கத்தில் தான்.

சாதியமற்ற தேசியத்தை இனவொடுக்குமுறைக்கு எதிரான முன்னிறுத்த, சாதி பேசப்பட வேண்டிய அடிப்படையாக இருக்கின்றது. தேசியத்துக்கான அரசியல் வேலைத்திட்டத்தில் வெள்ளாளியத்தை எதிராக முன்வைத்து, அணிதிரட்டப்பட வேண்டும். இதுவல்லாத எதுவும் சாராம்சத்தில் வெள்ளாளியம் தான்.