மாடு "புனிதமானது" என்பது பகுத்தறிவின்றி மூளை முடங்கிவிட்டவர்களின் நம்பிக்கையே. இந்த நம்பிக்கையை முழு மக்களினதும்; புனிதமாக கட்டமைக்கின்ற – காட்டுகின்றதன் மூலம், மத அடிப்படைவாதமானது மேலேழுகின்றது. இதன் மூலம் நாளைய ஒடுக்குமுறைகளுக்கும் - மத வன்முறைகளுக்குமான விதைகள் இடப்படுகின்றது.
தனிமனிதன் மாட்டு இறைச்சியை உண்பதும் உண்ணாமல் விடுவதும் அவரவர் தேர்வு. அதை நீயும் உண்ணக் கூடாது என்பது, மற்றவர் உணவுச் சுதந்திரத்தில் தலையிடுவது. இந்த தலையீடு ஒடுக்குமுறையாக மாறுகின்றது. மனித உணவிலும் மனிதர்களின் ஜனநாயகத்தை மறுக்கின்ற செயற்பாடானது, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற அரசியல் செயற்பாட்டின் ஒரு தொடர்ச்சியே. இது இலங்கையின் இன-மத ஒடுக்குமுறையின் நீட்சியாகவே மேலெழுகின்றது.
இந்த பின்னணியில் சிங்கள - தமிழ் இனவாதிகளும், பௌத்த - இந்து அடிப்படைவாத மதவாதிகளும் கூட்டாகக் கூடி, கும்மாளம் அடிக்கின்றனர். தமிழ் - சிங்கள இனவாதிகள் முன்வைக்கும் தேசியம் - கலாச்சாரம் இதுதான். நாட்டை இனரீதியாக பிரித்து ஒடுக்குவோரும், இனரீதியாக பிரிவினையைக் கோரி நாட்டைப் பிரிக்கக் கோரும் தமிழனைத் தமிழன் ஒடுக்கும் இனவாதக் கூட்டமும், நாணயத்தின் இரு பக்கங்களாக மாறி - மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க முனைகின்றனர்.
இலங்கையில் மாட்டு இறைச்சியை உணவாக கொள்வது கிறிஸ்துவ – முஸ்லிம் மக்கள் என்பது பொய். கிறிஸ்துவ – முஸ்லிம் அல்லாத உழைக்கும் மக்களின் உணவாக மாடு இருக்கின்றது என்பதே உண்மை. இந்த உண்மை இந்து – பௌத்த அடிப்படைவாதிகளின் மதக் கொள்கைகளைத் திணிக்க தடையாக இருக்கின்றது.
மாட்டுடனான மனிதவரலாறு என்பது, உழைப்புச் சார்ந்தது. மதம் மற்றும் "புனிதம்" சார்ந்ததல்ல. கோயில்களில் வளர்க்கப்பட்டதல்ல மாடு. மாறாக உழைப்பில் ஈடுபட்ட உழவர்களால், விவசாய உழைப்பு மற்றும் பால் சார்ந்த உணவுப் பயன்பாடுகள் அடிப்படையில் வளர்க்கப்பட்ட மிருகமே மாடு. மாட்டின் முதுமையுடன் அது மனிதனுக்கு உணவாகும் போது, விவசாயிக்கு மறுமூலதனமாக மாறுகின்றது. மாட்டை வைத்து பிழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்க மதவாதிகளும் - அரசும் கூட்டாக களமிறங்கி இருப்பதன் மூலம் - மாட்டை நம்பி வாழும் ஏழை மக்களை வறுமைக்குள் வாழுமாறு தள்ளிவிட முனைகின்றது.
மனிதனுடைய பயன்பாட்டில் இருந்து மாடு முதுமையடையும் போது, அது மனிதனுக்கு உணவாகவும், தோல் உட்பட பிற பொருட்கள் மனிதப் பயன்பாட்டுப் பொருளாகவும் இருக்கும் வரை தான், மாடு வளர்ப்பில் மக்கள் ஈடுபட முடியும். இதை மறுப்பதன் மூலம், அன்றாட உணவுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு கிடைக்கும் சத்துள்ள – மலிவான உணவான மாட்டு இறைச்சியை பறித்துவிடுவதே.
மாட்டை வளர்த்தவன் அதை உண்பதென்பது அவன் உரிமை. இந்த உழைப்பில் பங்குகொள்ளாத ஒருவன், மாடு புனிதமானது என கூறுகின்றதன் பின்னால் இருப்பது - பகுத்தறிவற்ற மூடத்தனமான மூளை வளர்ச்சியற்றுப் போன ஒருவனின் தனிப்பட்ட குருட்டு நம்பிக்கையே. அறிவியல் ரீதியாக பார்த்தால் மூளை வளராத மனிதனின் பண்பாடற்ற நடத்தை.
தங்களின் இந்த நம்பிக்கையை சமூகம் மீது திணிக்கின்றதன் மூலம், தனது அறியாமையை சமூக அதிகாரமாக மாற்றுகின்ற செயல்தான் "புனிதம்" குறித்த எல்லாவிதமான கற்பிதங்களும்.
இந்த பின்னணியில் அரசு பிறரின் உணவுப் பழக்க வழக்கத்தை கட்டுப்படுத்த முனையும் போது, அரசு மதவாதத்தின் கைத்தடியாக மாறி - மத ஒடுக்குமுறைகளை ஆட்சி முறையாக்குகின்றது என்பதே பொருள். ஜனநாயக முதலாளித்துவ அரசு என்பது மதத்தை தனிப்பட்ட மனிதனின் உரிமையாக அங்கீகரித்து, மதத்தில் இருந்து அரசு சுதந்திரமானதாக இருக்கவும் - இயங்கவும் வேண்டும். மதமானது அரசு - அரசியலில் தலையிடுவது என்பதன் பொருள், ஜனநாயகத்தை வெட்டிச் சுருக்குவதே.
இலங்கை அரசின் இனவாத - மதவாத செயற்பாடு என்பது ஒடுக்குமுறையாக மாறி, இலங்கை மக்களைப் பிளந்து - பிரிவினையை உருவாக்கி இருக்கின்றது. இந்தச் சூழலில் அதை ஆழமாக்கும் வண்ணம் மாடு குறித்த விவாதம், இலங்கைப் பிரதமரால் தொடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது.
இதைக் கொண்டாடும் மனநிலையில், இந்து வெள்ளாளிய அடிப்படைவாதமும், பௌத்த அடிப்படைவாதமும் கூட்டு சேர்ந்து நிற்கின்றது.
இதன் மூலம் தமிழனைத் தமிழன், சிங்களவனை சிங்களவன் ஒடுக்கும் அக மத அதிகாரங்களைப் பாதுகாக்கவும் - கூர்மையாக்கவும் முனைகின்றனர். இதை ஜனநாயகத்தின் ஆட்சியாக - இந்து வெள்ளாளிய தமிழ் இனவாதிகளும் - பௌத்த சிங்கள இனவாதிகளும் கூட்டாக முன்வைக்கின்றனர். இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாளர்களின் புதிய ஒடுக்குமுறையாகும்.