எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை.
ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை கூறுவதற்கும், காண்பதற்கும் ஒடுக்கப்பட்டோர் சிந்தனையும் - அதற்கான அரசியல் நடைமுறையும் இருக்கவேண்டும். இல்லாதபோது ஒடுக்குவோர் கண்ணோட்டங்களிலேயே வரலாறுகள் கூறப்படுகின்றது.
ஒடுக்குவோரின் அரசியல் பின்னணியிலேயே சிவகுமாரன், திலீபன்.. போன்றவர்கள் முன்னிறுத்தப்படுகின்றனர். இந்தவகையில் வரலாறாக இருப்பதெல்லாம், ஒடுக்குவோரின் சிந்தனையும் - ஒடுக்குவோரின் அக முரண்பாடுகளுமே. தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற சிந்தனையை யார் கொண்டுள்ளனரோ, அவர்கள் திலீபனைக் கொண்டாடுகின்றனர்.
இப்படி கொண்டாடப்படும் திலீபன் 1987 வரை புலிகள் அரங்கேற்றிய இயக்கப் படுகொலைகளில் முன்னின்று பங்காற்றிய கொலைகாரன். நடந்த படுகொலைகளுக்கு தலைமை தாங்கியதுடன், தாங்கள் நடத்திய மனிதவிரோதச் செயல்களை அரசியல்ரீதியாக நியாயப்படுத்தியவன். புலிகளின் ஜனநாயக விரோத அரசியலை நியாயப்படுத்த – புலிகளின் அரசியல் பொறுப்பாளனானவன். இப்படி கொலைகளுக்கு எல்லாம் பொழிப்புரை வழங்கிய கொலைகாரக் கும்பல்களின் தலைவர்களில் ஒருவனே, இந்தத் திலீபன்.
இந்தக் கொலைகார புலிக் கும்பல் ஆரம்பம் முதலே பல இயக்கத் தலைவர்களைக் கொன்று குவித்தது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (PLOTE) உருவாக்கிய சுந்தரத்தை 02.01.1982 அன்று புலிகள் சுட்டுக் கொன்றனர். அப்படி புலிகள் சுட்டுக்கொன்ற போது பிரபாகரன் ரெலோ இயக்கத்தில் இருந்தபடியே இதைச் செய்வித்தான். சுந்தரத்தை சுட்டுக் கொன்றதுக்கு எதிராக புலிகளில் இருந்து விலகி – புளட்டை உருவாக்கிய நாகராஜா, புளட் இன்னுமொரு புலியாக மாறிய போது அதில் இருந்தும் விலகி இருந்த போதும், சுந்தரம் படுகொலையை எதிர்த்து துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார். இப்படி கொலைகாரக் கும்பலை அம்பலப்படுத்தியதை அடுத்து, ரெலோ இயக்கத்தைச் சார்ந்த சிறீ சபாரத்தினமும், பிரபாகரனும் நாகராஜாவைக் கொலை செய்வதற்காகக் கடத்திச் சென்றனர். இப்படி பிரபாகரன் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராக இருந்தபடி - புலியாகச் செயற்படத் தொடங்கிய காலம். மாற்று அரசியல் கருத்துகளையும் - இயக்க செயற்பாடுகளையும் முன்வைக்கும் நபர்களை கொன்று உருவான கொலைகாரர்களின் வரலாறுகள் இப்படிதான் தனியாகவும் - கூட்டாகவும் உருவானது. இது புளட், ரெலோ, ஈரோஸ் .. இயக்கங்களுக்கும் பொருந்தும்.
திலீபன் உள்ளடங்கிய புலிகள் தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) இன் தலைவர் ஒபரோய் தேவனை 14.08.1983 அன்று சுட்டுக் கொன்றனர். இதே போல் தமிழீழ விடுதலை தீவிரவாதிகள் (TELE) இயக்க தலைவர் ஜெகனை 09.09.1984 இல் சுட்டுக்கொன்றனர். எப்படிப்பட்ட கொலைகார அகிம்சாவாதிகள், திலீபன் பெயரால் கொண்டாடப்படுகின்றனர் என்பதை வரலாற்றில் இருந்தே தேட வேண்டும். தாம் அல்லாத மற்றவர்களை கொன்று, தங்களை மட்டும் முன்னிறுத்தியதைக் கொண்டாடும் சமூக மனநிலையை நியாயப்படுத்தவும், அதைக் கொண்டாடவும் திலீபன் என்ற கொலைகாரனுக்கு அகிம்சாவாதி என்ற பூச்சு தேவைப்படுகின்றது.
கொலைகார புலிகளின் வரலாற்றில், 29.04.1986 திகதி ரெலோ அழிப்பு மனித படுகொலைகளாக அரங்கேறியது. வீதி வீதியாக உயிருடன் மனிதர்களை சந்திகளில் எரித்த கும்பல்களுக்கு, தலைமை தாங்கியவர்களில் திலீபனும் அடங்கும். இதை நியாயப்படுத்திய அரசியலுக்கும், இந்த அகிம்சாவாதியான திலீபன் தலைமை தாங்கினான். ஏன், எதற்கு இன்று கொண்டாடுகின்றனர் என்றால், தமிழனை தமிழன் ஒடுக்கிய அந்த வரலாற்றை போற்றத்தான். தமிழனைத் தமிழன் ஒடுக்குவது என்பது, வெள்ளாளிய சமூக அதிகாரத்தின் அரசியல் குறியீடு.
சமூகத்தின் ஜனநாயக மூச்சையே வெட்டிய கும்பல்களுக்கு தலைமை தாங்கியவர்களில் திலீபனும் அடங்கும். சமூக நலன் சார்ந்த சமுதாய முன்னோடிகளின் செயற்பாடுகளை அழித்தொழித்த வலதுசாரி அரசியலின் கதாநாயகன் திலீபன். சமூக இயக்கமாக இயங்கும் மனித இயக்கத்துக்கு வேட்டு வைத்த சமூக விரோதி. திலீபன் அகிம்சைவாதி என்பதே, புனையப்பட்ட பொய்.
இவன் அதிகாரத்தில் உயிருடன் இருந்த காலத்தில் தான், யாழ் பல்கலைக்கழக மாணவ தலைவன் விஜிதரன் 04.10.1986 காணாமலாக்கப்பட்டான். இறுதி யுத்தத்தில் அரசால் காணாமலாக்கப்பட்டவர்கள் போராட்டங்கள் இன்று நடப்பதற்கு முன்பே, 1986ம் ஆண்டுகளில் இயக்கங்களால் காணாமலாக்கப்பட்டவருக்கான போராட்டத்தை - யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் பொது மக்களும் இணைந்து நடத்திய வரலாறு - இந்த அகிம்சவாதிகளின் வேடத்தை அம்பலமாக்கியது.
பார்க்க
பல்கலைக்கழக போராட்டங்கள்
றாகிங் என்பது பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு பண்பாட்டு அம்சமா
இப்படி இலங்கை மண்ணில் தமிழ் இயக்கங்களிடம் தமிழ் மக்கள் ஜனநாயகத்தை கோரி நடத்திய மாபெரும் போராட்டங்கள், வரலாற்றின் இருட்டில் புதைந்து கிடக்கின்றது. அன்று ஆற்றிய உரைகள்.- மற்றும் விடியோக்கள்
1987 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புலிகளால் கடத்தப்படட விஜிதரனுக்காக நடந்திய ஊர்வலம் மற்றும் ஆவணங்கள்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 01)
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 02)
அன்று விஜிதரனை புலிகளே கடத்தி காணாமலாக்கிய சூழலில் நடந்த இந்தப் போராட்டம், நேரடியாக தனியே புலிகளை மட்டும் குற்றம் சாட்டவில்லை. இயக்கங்களை குற்றம் சாட்டியே நடந்தது.
மக்களுக்கு தெரியும் யார் கடத்தியது என்பது. இந்த சூழலில் புலிகள் தாமாக தம்மை அம்பலப்படுத்திக் கொண்டு போராட்டத்தை ஒடுக்க வன்முறைகளை கையாண்டனர். தங்களின் வன்முறை மற்றும் தங்கள் அரசியல் வக்கிரங்களுக்கு விளக்கம் கொடுப்பதற்கு இந்த அகிம்சைவாதியான திலீபன் தலைமை தங்கினான். கடத்தல்காரர்களும் - கொலைகாரர்களுமாக புலிகள் அன்று வெளியிட்ட துண்டுபிரசுரம் அதற்கு ஓரு சாட்சி.
தமிழீழ விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு
இந்த «அகிம்சாவாதியான ஜனநாயகவாதிகளான» புலிகள் 28.11.1986 வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் "..விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று கூறி வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில், மாணவர்களின் கோரிக்கை புலிகளை அரசியல் அனாதையாக்கிவிடும் என்று உறுமுகின்றனர். புலிகள் தங்கள் ஜனநாயக விரோதத்தையும் - அகிம்சை வேசத்தையும் அதன் மூலம் அம்பலமாக்கிக் கொண்டனர். புலிகளை அரசியல் அனாதையாக்கும் வண்ணம் பல்கலைக்கழக மாணவர்கள் கோரியது என்ன? "மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என்பதுதான். இது புலிகளை அனாதையாக்கிவிடும் என்றனர். ஜனநாயகத்தைக் கண்டு அஞ்சும் புலிகளின், வீர வரலாறு என்பதே கொலைகளின் வரலாறு தான்.
பார்க்க
பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து முன்னேறுவோம்
நாம் பேசவேண்டும்! எழுதவேண்டும்!! வாழ வேண்டும்!!
இதன் பின்னான திலீபன் காலத்தில் தான் யாழ் பல்கலைக்கழக மாணவ போராட்டத்தில் தலைமை தாங்கிய இரயாகரனாகிய நான் 28.04.1987 காணாமலாக்கப்பட்டேன். 17.07.1987 அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பித்ததால் இன்று உயிர் வாழ்கின்றேன். புலிகளால் காணாமலாக்கப்பட்ட வரலாற்றிற்கு சாட்சியாக உயிர் பிழைக்க முடிந்தது.
புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை
யாழ் பல்கலைக்கழக மாணவன் றயாகரன் விவகாரம்: "புலிகள்" விளக்கம்
இக்காலத்தில் இந்த கொலைகார அகிம்சைவாதியான தீலிபன் புலிகளின் அரசியல் பொறுப்பாளர். இதன்பின் யாழ் பல்கலைக்கழக மாணவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலைமைதாங்கிய விமலேஸ்வரனை 18.06.1988 அன்று புலிகள் சுட்டுக்கொன்றனர்.
இதற்கு இடையில் 1987 ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களையும் தடைசெய்து – பலரைப் படுகொலை செய்தனர்.
இப்படி «அகிம்சாவாதிகளான» கொலைக்கரங்கள் தமிழ்மக்கள் வரலாறு முழுக்க நீண்டு கிடக்கின்றது. தமிழனைத் தமிழன் ஒடுக்கிய வரலாறுகள்.
சமூகத்தை முன்னின்று தலைமைதாங்கக் கூடிய, வழிநடத்தக் கூடிய மனிதர்களை எல்லாம் கொன்றது மட்டுமின்றி, தமிழ் மண்ணில் சமூக நோக்கு கொண்ட மனிதம் உருவாகாத வண்ணம் - சமூகத்தை வரண்டு போன வெட்டவெளியாக்கியவர்கள் புலிகள். அதை கொண்டாடும் யாழப்பாண வெள்ளாளியப் பன்னாடைகளே – திலீபன் பெயரால் உறுமுவது, தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தத்தான். இன ரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சொல்லி, தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற கூட்டம் - தங்கள் வலதுசாரிய அரசியலை பாதுகாக்க கொலைகாரன் திலீபனை முன்னிறுத்துகின்றது. இதற்கு முன்னோடியான வலதுசாரிய கொலைகாரன் சிவகுமாரனை முன்னிறுத்துகின்றது.