ஜனநாயகம் இன்று நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு காரணம், தனிநபர் சர்வாதிகாரம் மூலம் தீர்வைக்; காணமுடியும் என்கின்றனர். மனித வரலாற்றையும், அதில் மனித அவலத்தையும் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
இந்த தனிமனித சர்வாதிகாரத்தையே பிரபாகரன் கையாண்டவர். புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட சர்வாதிகார வழிமுறை என்பது. தன் தனிப்பட்ட சிந்தனைக்கு முரணான அனைத்தையும் தனக்கு எதிரானதாக கருதியதுடன் - அவர்களை கொன்றனர். இதன் மூலம் தமிழ்மக்கள் சிந்திக்கும் ஜனநாயகத்தையே ஒழித்துக் கட்டியதன் மூலம் - மக்களை தோற்கடித்தனர். இதன் மூலம் தங்களைத் தாங்கள் குறுக்கி அழித்துக் கொண்டனர். தமிழ்ச் சமூகம் இலங்கையிலேயே மிகப் பின்தங்கிய கிணற்றுத் தவளையாக மாறி – மனிதத் தன்மைக்குரிய எல்லா சமூகக் கட்டமைப்பையும் இழந்திருக்கின்றது.
தனிநபர் சர்வாதிகார சமூகத்தில் வாழ்ந்த தமிழனின் இன்றைய நிலை இதுதான். அடிமை சமூகத்தில் வாழ்ந்தவன் தன் அடிமை வாழ்வைப் போற்றுவது போல், தனிநபர் சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்ந்த தமிழன் - அந்த சர்வாதிகார தலைமையைப் போற்றுகின்ற மட்டத்தில் - தன் சிந்தனையை குறுக்கிக் கொண்டு குத்தலாட்டம் போடுகின்ற அளவுக்கு சமூகம் கூனிக் குறுகிக் கிடக்கின்றது.
இன்றைய 20 வது திருத்தச்சட்டம் இதையே கோருகின்றது. பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் நாட்டை ஆள்வதைவிட, தனிநபர் சர்வாதிகாரம் மூலம் நாட்டையாள்வதே சிறந்தது என்று கூறி, அரசியல் அமைப்பு திருத்தத்தை முன்வைக்கின்றனர். இதனால் 19வது திருத்தச் சட்டம் ஜனநாயகத்தை கொண்டு இருந்ததென அர்த்தமல்ல. ஆளும் வர்க்கங்கள் தங்கள் முரண்பட்ட அதிகார ஒடுக்குமுறையை எப்படி தொடர்வது என்பதற்கே திருத்தச் சட்டங்களை முன்வைக்கின்றனரே ஒழிய, மக்களின் பொது நலனில் இருந்தல்ல.
தேர்தல் ஜனநாயக ஆட்சிமுறைமை என்பதே சர்வாதிகாரம் தான். அதாவது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் தான். உழைக்கும் மக்களைச் சுரண்டும் வர்க்க சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பு சட்டமுறையில், தனிப்பட்ட அதிகாரங்களை மையப்படுத்திய திருத்தங்கள் என்பது – ஓடுக்கப்பட்ட மக்களை மேலும் ஓடுக்கவே உதவுகின்றது. இதுதான் அரசியல் அமைப்பு சட்டத்தின் உள்ளார்ந்த சாரம்.
தனிநபருக்கு அதிக அதிகாரத்தை கொடுக்கும் இன்றைய திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்த, இரண்டு வரலாற்று உதாரணங்களை முன்வைக்கின்றனர்.
1.புலிப் "பயங்கரவாதத்தை" தோற்கடிக்க தனிநபர் சர்வாதிகாரமே உதவியது என்ற தர்க்க வாதங்கள்
2.அண்மையில் நடந்த இஸ்லாமிய "பயங்கரவாதம்" தடுக்க முடியாது போனதற்கு தனிநபர் சர்வாதிகாரத்தை குறைத்த 19வது திருத்தச் சட்டமே காரணம் என்கின்றனர்.
தவறான தர்க்கங்கள் மூலம் தனிமனித சர்வாதிகாரமே நாட்டை ஆளத் தேவை என்கின்றனர். இது உண்மையா?
புலிகளை தோற்கடித்தது எது?
அரசு கூறுவது போல் தனிநபர் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை புலியைத் தோற்கடிக்கவில்லை. புலிகளைத் தோற்கடித்தது தமிழ் மக்கள் தான். தமிழ்மக்கள் புலிகளை தோற்கடிக்கவில்லை என்றால், ஒருநாளும் அரசால் புலியைத் தோற்கடித்திருக்க முடியாது.
தமிழ் மக்கள் மேலான புலிகளின் சர்வாதிகாரமானது - ஜனநாயகமற்ற பாசிச கட்டமைப்பாக மாறி - மக்களை புலிகளில் இருந்து அன்னியமாக்கினர். இதையே தான் புலிகள் அரசியல் ரீதியாக செய்தனர்.
மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் முறையில் இருந்து அன்னியமான லும்பன்களும் - புலிகளை அண்டிப் பிழைத்த கூட்டமும், புலிகளாக தம்மை முன்னிறுத்திக் கொண்டதன் மூலம், மக்களை புலிகளில் இருந்து மேலும் மேலும் தனிமைப்படுத்தினர். வியாபார மாபியாக் கும்பல்கள், புலியைச் சுற்றி அரணாக மாறி - தம்மை முன்னிறுத்திக் கொண்டனர்.
வெள்ளாளிய சமூக பொருளாதார நலன்களைப் பேணி பாதுகாப்பதை விடுதலைப் போராட்டமாக குறுக்கிக் கொண்டு, புலிகள் தங்களைத் தாங்கள் தோற்கடித்த போது - அந்த உளுத்துக் போன வெறும் இராணுவ கட்டமைப்பையே - அரசு படைகள் அழித்து வெற்றி கொள்ள முடிந்தது. இதுதான் அரசு படைகளின் வெற்றிக்கு பின் இருந்த வரலாறு.
இதை வெள்ளாளிய புலித் தேசியவாதிகளும், அரசும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், இது பொய்யாகிவிடாது.
19 வது திருத்தச் சட்டமா இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கான வேர்?
இப்படியான வாதமானது மக்களை ஏமாற்ற பயன்படுகின்றது. மாறாக 19வது திருத்தச்; சட்டத்தின் பின் ஜனாதிபதிக்கு இருந்த தனிநபர் சர்வாதிகாரமானது - இஸ்லாமிய பயங்கரவாதத்தை பாதுகாத்ததுடன் - அதை அரசியல் நோக்குக்காக அரங்கேற்றபட்ட அரச பயங்கரவாதமாக கருமளவுக்கு - இன்றைய விசாரணைகள் அம்பலமாக்குகின்றது.
சட்ட ஓழுங்கை தடுக்கும் வண்ணம் சர்வாதிகாரத்தை கையாண்டு - இஸ்லாமிய பயங்கரவாதமானது வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி – குண்டு வெடிக்க போவதை தெரிந்து அதை தடுத்காமை - அண்மைய விசாரணைகளில் அம்பலமாகி வருகின்றது.
தனிநபர் சர்வாதிகாரம் மூலம் முன்கூட்டியே கைது செய்வதை தடுத்து – குண்டு வெடிப்பை அரங்கேற்றிய அரசியல் பின்னணியில் - இந்த தனிநபர் சர்வாதிகாரமே உதவியமை - அண்மைய விசாரணையில் அம்பலமாகி வருகின்றது.
இஸ்லாமிய பயங்கரவாத பீதி ஊட்டி ஓடுக்கும் அரசியல் நோக்கமும் - வாக்கைப் பெறும் அரசியல் காரணங்களும் இதன் பின் இருந்த இருக்க முடியும்.
சர்வாதிகாரம் என்பது மக்களின் பிரச்சனை தீர்ப்பதற்கல்ல. ஓடுக்கவும் - மக்களை திசை திருப்பவும் உதவுகின்றது. அண்மையில் புதிய ஜனாதிபதி கோத்தபாய அதிரடியாக அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், மக்கள் வாழ்விடங்களில் திடீரென நுழைவது, மக்கள் சார்ந்து முடிவுகள் எடுப்பதைக் காட்டி, இதற்கு அதீத அதிகாரம் தேவை என்ற பொதுப் புத்தியை உருவாக்குகின்றனர்.
இது ஒரு மாயை. தனிநபர் பிரச்சனையை மையப்படுத்தி தனிநபர் செயற்பாடுகள் என்பது, ஓட்டுமொத்த மக்களுக்கமான வழியுமல்ல, தீர்வுமல்ல.
அரசு அலுவலகங்கள் ஊழலற்ற மக்கள் சேவையை விரைவாகவும் - உண்மையாக நடக்க வேண்டும் என்றால், மக்கள் கண்காணிக்கும்; பொதுவான மக்கள் அதிகாரங்களை உருவாக்க வேண்டும். அதாவது ஜனாதிபதியின் அதிகாரத்தை போல். மக்கள் அதிகாரங்கள் உண்மையான பொது மாற்றத்தை உருவாக்க முடியும்.
பாடசாலைகள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்தும் இடங்களின் பொதுத் தேவைகளை, அந்த சமூகம் முன்னெடுக்கும் வண்ணம் - அதற்கான அதிகாரத்தை வழங்க வேண்டும்.
தனிப்பட்ட மனிதனின் வாழ்விடம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பது, தனிநபருக்கானதல்ல அனைவருக்குமான உரிமையாக இருக்க வேண்டும். வாழ்விடங்கள் குறித்த பொதுச் சட்டங்கள் தொடங்கி சமூக பொருளாதார அளவீடுகளை பொதுச்சட்டம் மூலம் - அனைவருக்குமாக பொதுமைப்படுத்தி - அதை நடைமுறையில் ஜனநாயகப்படுத்த வேண்டும்.
இப்படி இல்லாது தனிநபர் அதிகாரம், தனிநபர் நடத்தை சமூகப் பிரச்சனைகளை தீர்க்காது. அது மக்களை ஓடுக்கும் சர்வாதிகாரமாகவே இருக்கும், இருக்கவும் முடியும். இந்த சர்வாதிகார இடத்தில் யார் இருந்தாலும், அதையே செய்வார்கள்.