20வது திருத்தச் சட்ட மூலம் சட்டமாகிவிட்டது. இதன் மூலம் அதிக அதிகாரங்களைக் கொண்ட ஒரு நபர் நாட்டை ஆளப்போகின்றார். இந்தச் சர்வாதிகாரம் மூலம் நாட்டில் ஜனநாயகமும், நீதியும் கொண்ட, மகிழ்ச்சியான ஒரு நாட்டை உருவாக்கப் போவதாக ஆட்சியாளர்கள் பிரகடனம் செய்கின்றனர்.
முந்தைய தங்கள் ஆட்சிமுறைக்கு மாறாக, எத்தகைய பித்தலாட்டம். முதலாளித்துவச் சட்டங்களின் வரலாறு என்பது, ஓடுக்கப்பட்ட மக்களை ஓடுக்குவதற்கானதே. அதிலும் தனிநபர்களின் அதிகாரம் என்பது, ஒடுக்குமுறையை ஈவிரக்கமற்றதாக – எதையும் எவரும் கேள்வி கேட்கமுடியாத ஒன்றாகவே இருக்கும். இதுதான் உலக வரலாறு. இலங்கைக்கு என்ன, இது விதிவிலக்கா!?
இலங்கையை ஆளும் ஆட்சியாளர்கள் சட்டரீதியாகவே சமவுரிமையற்ற வகையில், இன-மத ஆட்சியைக் கொண்டிருப்பதால், ஓடுக்குமுறையயானது ஓடுக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு விதிவிலக்கல்ல. ஆட்சி என்பது அனைத்துச் சிங்கள மக்களுக்குமான ஆட்சியல்ல. மாறாக சிங்களவனை சிங்களவன் ஓடுக்கும் ஆட்சிதான். இப்படி இருக்க சிங்களவனின் ஆட்சியாக பிற இனத்தால் காட்டப்படுகின்றது. இது உண்மையல்ல. சாhரம்சத்தில் சுரண்டும் வர்க்கத்தின், வர்க்க சர்வாதிகாரமே - ஆட்சி அதிகாரமாகும். இது அரசு இயந்திரம் மூலம் மக்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதமாகும்.
இப்படி உண்மைகள் இருக்க தமிழ் - முஸ்லீம் - மலையக தரப்புகளோ, இதை தமிழ் - முஸ்லீம் - மலையக மக்கள் மீதான சிங்கள ஆட்சி என்று கூறுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களின் மேலான ஒடுக்குமுறையை மறைப்பதுடன் - அதேயொத்த தன் இன மக்களை ஓடுக்கும் வர்க்க ரீதியான ஒடுக்குமுறையை மறுத்துவிடுகின்றனர்.
இதன் மூலம் தமிழனைத் தமிழன் ஒடுக்குவதையும், முஸ்லீமை முஸ்லீம் ஓடுக்குவதையும், மலையகத்தவனை மலையகத்தவன் ஓடுக்குவதையும் மூடிமறைக்க முனைகின்றனர். 20 வது திருத்தச் சட்டம் மூலம் எதற்காக சிங்கள மக்களை ஒடுக்குகின்றதோ, அதே காரணங்களுக்காக, தமிழ் - முஸ்லீம் - மலையக மக்களை ஒடுக்கும் போது, அதை ஒடுக்கப்பட்ட தமிழ் - முஸ்லீம் - மலையக மக்களை ஓடுக்கும் தரப்பு ஆதரிக்கின்றது. ஓடுக்கும் ஓத்த சுரண்டும் வர்க்க கண்ணோட்டமே, இதைத் தீர்மானிக்கின்றது.
20 வது திருத்தச் சட்டத்தை ஆதரித்த தமிழ் - முஸ்லீம் - மலையக பாராளுமன்ற உறுப்பினர்களின் இன-மத அடையாளத்தை முன்னிறுத்தி, 20வது திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசுவது போலி ஜனநாயகம். புரட்டுத்தனமான அரசியல். அடிப்படையில் சுரண்டும் வர்க்கக் கண்ணோட்டம். இதில் தனிப்பட்ட பிழைப்புவாத கண்ணோட்டம் என்பது சுரண்டும் வர்க்கத்தின் பண்பு. 20வது திருத்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் கூட, ஒடுக்கும் தங்கள் நிலையை முன்னிறுத்தியே ஒழிய - ஒடுக்கப்பட்ட தன் இன மக்களை முன்னிறுத்தியல்ல.
20 வது திருத்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தவனை முன்னிறுத்தும் தமிழ் - முஸ்லீம் - மலையக கண்ணோட்டம், அவர்களை ஒடுக்கும் வர்க்கக் கண்ணோட்டத்திலானது.
அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் என்பதும், நிலவும் இன-மத ஓடுக்குமுறை காரணமாக, தமிழ் - முஸ்லீம் - மலையக மக்கள் மேலான ஒடுக்குமுறை - இரட்டை ஒடுக்குமுறையைக் கொண்டதாக இருக்கும். இப்படி இரட்டைத் தன்மையிலான ஓடுக்குமுறையை விடுத்து, இன-மதமாக மட்டும் குறுக்கி சிந்திப்பது, விளங்கிக் கொள்வது, விளக்குவது, அடிப்படையில் தங்கள் இன-மத ஒடுக்குமுறைக் கண்ணோட்டத்தில் இருந்து தான்.
20 வது திருத்தச் சட்டம் இலங்கையில் வாழும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் ஓடுக்கும் வர்க்க அதிகாரத்துக்காகவும், இந்த வர்க்க ஓடுக்குமுறையை மூடிமறைக்க கையாளும் இன-மத மேலான ஓடுக்குமுறையையும், சட்ட ரீதியாக தனிமனித அதிகாரமாக்க கோருகின்றது. இந்த வர்க்க அரசியல் பின்னணியில் தனிப்பட்ட பிழைப்புவாத மற்றும் குடும்ப நலன்களும் பின்னிப்பிணைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஓடுக்கும் தனிமனித வக்கிரங்களும் கூடவே - இந்த 20 வது திருத்தச் சட்டத்துடன் தன்னை ஒருங்கிணைத்த சட்டமாக்கி இருக்கின்றது.
ஒடுக்குபவனுக்கு இனி சட்டத்தில் விதிவிலக்கு, ஒடுக்கப்பபட்டவனுக்கு சட்டம். நவதாராளவாத முதலாளித்துவம்; உருவாக்கும் ஜனநாயகம், ஓடுக்குபவனையும் – சுரண்டுபவனையும் சட்டத்தில் முன் நிறுத்த முடியாது. இந்தியா முதல் பல நாடுகள் இதற்கு முன்னுதாரணமாக இருக்கின்றது. அதே திசையில் இலங்கை பயணிக்கின்றது.
நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தச்சட்டம் குறித்து இனவாதங்கள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode