இலங்கைக்கு என்று இறையாண்மை கிடையாது. எந்த நாட்டு மூலதனம் இலங்கையை கட்டுப்படுத்துகின்றதோ, அந்த நாட்டுக்கு இலங்கை அடிமை. இது பொதுவான அரசியல் உண்மை. இது சீன மூலதனத்தின் விதியல்ல, உலக மூலதனத்தின் பொது விதி. இதுவரையான உலகம் மேற்கு மூலதனத்தினால் கட்டுப்படுத்தபட்ட சூழல், இன்று மாறி வருகின்றது.
அமெரிக்கா கொதித்தெழுந்து "இலங்கையை, சீனா சூறையாடுகின்றது" "வன்முறை வெறி கொண்ட மிருகம்' என்று குற்றம் சாட்டுகின்றது. இதுவரை அமெரிக்கா எதைச் செய்ததோ, அதையே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்மியோ இலங்கையில் வைத்து சீனாவுக்கு கூறுமளவுக்கு, அமெரிக்க - சீன ஏகாதிபத்திய முரண்பாடுகள் தென்னாசியாவில் கூர்மையாகியிருக்கின்றது.
அண்மைக்காலமாக சீனாவின் பகுதியாக இருந்த தாய்வான், கொங்கொங் முதல் அதைச் சுற்றிய கடல் குறித்த சர்ச்சைகள், மோதல்கள், இராணுவ தயாரிப்புகள் அனைத்தும், அமெரிக்க மூலதனத்தின் நெருக்கடியே. சீன - இந்திய எல்லைத் தகராறு என்பது, அமெரிக்க இராணுவ – பொருளாதார நலன் சார்ந்த, இந்தியக் கொள்கைகளே. காஸ்மீர் மீதான அண்மைய இந்திய நிலைப்பாடு, சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நகர்வே.
அமெரிக்க நலன் சீன - இந்திய எல்லையில் பிரதிபலிக்கின்றது. அமெரிக்கா "சீனாவுடனான எல்லைத் தகராறு விடையத்தில் இந்தியா தனியாக இருப்பதாகக் கருதக்கூடாது" என்று அமெரிக்கா கூறுவதன் மூலம், சீனாவுடன் யுத்தத்தை நடத்துமாறு வேண்டுகின்றது. இதன் மூலம் இந்திய "இறையாண்மை மற்றும் சுதந்திரம் மீதான தாக்குதல் ஏற்பட்டால் இந்திய மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்" என்கின்றனர். அமெரிக்க வெளியுறவுச் செயலாளர், “இந்த மோதலில் அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாகவும் பங்காளராகவும் இருப்பது முற்றிலும் அவசியம்” என அறிவித்துள்ளார். இராணுவ ரீதியாக சீனாவுக்கு பதில் கொடுக்குமாறு, இந்தியாவுக்கு மறைமுகமாக அமெரிக்கா கோருகின்றது
இன்று அமெரிக்க மூலதனச் சந்தைக்கு உலகளவில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி என்பது - சீன மூலதனத்தின் வளர்ச்சி தான். மேற்கு ஏகாதிபத்தியம் எந்த மூலதனத்தைக் கொண்டு உலக மேலாதிக்கத்தை உருவாக்கியதோ, அதே வழியில் சீன மூலதனமும் பயணிக்கின்றது. இதை அமெரிக்கா தன் மூலதனம் மூலம் எதிர்கொண்டு தடுக்க முடியாத நிலையில், இராணுவ ரீதியாக அணுகுகின்றது. சீனக் கடல் மற்றும் தென்னாசிய கடலிலும், எல்லைகளிலும் ஏற்பட்டு வரும் இராணுவ பதற்றத்தின் பின்னணியில், அமெரிக்காவே இருக்கின்றது. நேரடியாக சீனாவல்ல.
அமெரிக்காவின் இந்த இராணுவ மேலாதிக்கத்தை சீனா மறுதளிப்பதை குறித்த அமெரிக்கா "சீனாவுக்கு ஜனநாயகம், சட்டம், வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை ஆகியவை குறித்த அக்கறை இல்லை" என்று கூறுகின்றது. இப்படி கூறியபடி பிற நாடுகளின் உள் விவகாரங்களில் பகிரங்கமாவே தலையிடுவதன் மூலம் - நவகாலனிய ஆக்கிரமிப்பை தொடங்கி இருக்கின்றது.
இந்த நிலை உருவாக மறைமுக காரணமாக இருப்பது சீன உற்பத்தி மூலதனமும், நிதி மூலதனமுமே. 1980 களில் சீனாவில் நடந்த முதலாளித்துவ மீட்சியால், அமெரிக்கா உள்ளிட்ட மூலதனத்தின் திறந்த சந்தையாக சீனா மாறியது. இதன் மூலம் சீன உற்பத்தி மூலதனமும் - நிதி மூலதனமும் பல்கிப் பெருகியது.இதன் மூலம் உலகமயமாதல் விதிக்கு அமைவாக உலகெங்கும் வியாபித்த சீன மூலதனம், தன்னை ஏகாதிபத்தியமாக்கியது. இந்த மூலதனத்தின் விரிவாக்கம் என்பது, உலகை மூலதனச் சந்தையை மீளப் பங்கிடத் தொடங்கி இருக்கின்றது. இதை இன்று இராணுவ ரீதியாக தடுக்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கை, யுத்தப் பதற்றங்களாக உருமாறுகின்றது. பதிலுக்கு சீனா இராணுவ ரீதியாக தன்னை தயார் செய்;வதுடன், பதிலடி கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது.
1980 களில் அமெரிக்க மூலதனத்தின் எண்ணைக் கொள்கை, இஸ்லாமிய நாடுகளின் மக்கள் பகுத்தறிவு பெற்று வளர்ச்சி பெற்று வந்ததை தடுக்க, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உருவாக்கியது. இந்த அடிப்படைவாதம் எல்லா மதங்களிலும் சமாந்தரமாகவே வளர்ச்சி பெற்றது. இன்று உலக மக்களின் எல்லாவிதமான பகுத்தறிவுவாதத்தைக் குறிவைத்து வன்முறையாக மாறி வருகின்றது. முதலாளித்துவ சட்டம், நீதியை அடிப்படையாக கொண்ட தேர்தல் ஜனநாயகத்தின் வெளிப்படைத் தன்மையை ஒழித்துக் கட்டி சர்வாதிகார வடிவம் பெறும் அரசுகள், மக்களின் பகுத்தறிவை ஒடுக்கும் பாசிச (மதம், இனம், நிற.. ) அரசுகளாக உருவாகின்றது.
இந்த மேற்கின் எண்ணைக் கொள்கை போல் தான், சீன தேசிய உற்பத்தி மூலதனத்தை அழித்த மேற்கு ஏகாதிபத்தியங்கள், பதிலுக்கு சீன ஏகாதிபத்திய மூலதனத்தை உருவாக்கியது. இது அதை ஒடுக்க இராணுவ வழிமுறை முன்வைக்கின்றது.
இந்த அரசியல் பின்னணியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்மியோ இலங்கையை சீனாவுக்கு எதிரான "தங்கள் இராணுவக் கூட்டில் இணைந்து கொள்ளுமாறு" கோரியதை, அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறவும் செய்தார். அத்துடன் "பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டு யுத்தப் பயிற்சி சம்பந்தமாகவும் பேசப்பட்டதாகவும், இலங்கை தங்கள் கடல் எல்லையை திறக்க உடன்பட்டதாக" கூட கூறியுள்ளார். இதற்காக "இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்க விருப்பத்துடன் இருப்பதாகவும், ஒப்பந்தங்கள் தயாரிக்கப்படுவதாகவும்" கூட கூறியுள்;ளார்.
இதன் பொருள் மிகத்தெளிவாக இலங்கையை சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவக் கூட்டில் இணையுமாறு மிரட்டியுள்ளார். இதை மறுத்தால் யுத்தக் குற்ற விசாரணைக்கு, மகிந்த குடும்பம் நிர்ப்பந்திக்கப்படும். இதுதான் மறைமுகமாக அமெரிக்கா சொல்லும் செய்தி.
இந்த வருகையின் அரசியல் - இராணுவ நோக்கத்துக்கு எதிராக, முன்கூட்டியே சீனா எதிர்வினையாற்றவும் செய்தது.
சீனத் தூதரகம் வெளியிட்ட பகிரங்க அறிக்கையில், "இலங்கைக்குத் தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டு வரவேண்டாம்" எனக் குறிப்பிட்டது. "இலங்கை சீன உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது" என்று சீன தூதரகம் குற்றம்சாட்டியது.
அமெரிக்காவின் உண்மை முகம் இது தான்;. அமெரிக்காவோ “நாங்கள் நண்பர்களாக வருகின்றோம், சகாக்களாக வருகின்றோம். ஆனால் சீனாவோ, இலங்கையின் இறையாண்மையை மோசமாக மீறும் வகையில் மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமீறல்களையும் கொண்டு வந்திருக்கின்றது. இலங்கையின் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி பிறரை சூறையாடும் தன்மை கொண்டது” என்று கூறுகின்றார். இலங்கை அரசின் இறையாண்மை முதல், எதுவும் அமெரிக்காவுக்கு கவலையில்லை. இது அமெரிக்காவின் உலக ஓழுங்குக்கு எதிரான "சட்ட மீறல்" என்கின்றது. அமெரிக்கா என்ன சொல்லுகின்றதோ, அது தான் இலங்கை அரசின் கருத்து என்று கூறுமளவுக்கு – அடிவருடித்தனமாக அமெரிக்கா இலங்கையில் தலையிட்டதுடன் - அதை வெளிப்படையாக வெளிப்படுத்தியுமுள்ளது.
இதற்கு இலங்கை அரசல்ல, பதிலுக்கு சீனாவே பதில் சொல்லுகின்றது. "மன்னிக்கவும் இராஜாங்க அமைச்சர் பொம்பியோ. நாம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் பிஸியாக இருக்கின்றோம். உங்களது ஏலியன் எதிர் பிறிடேட்டர் விளையாட்டுக்கான அழைப்பில் எமக்கு அக்கறையில்லை. என்றும் போல அமெரிக்கா இரட்டைப் பாத்திரத்தை ஒரே நேரத்திலேயே விளையாட முடியும்" என்கின்றது.
இப்படி அமெரிக்க - சீன மூலதன முரண்பாடு, இராணுவ ரீதியாக மாறிவருவதுடன், இலங்கை இராணுவ ரீதியான மையப்புள்ளியில் சிக்கி இருக்கின்றது. இதில் இருந்து மீள்வதற்கான அரசியல் என்ன என்பதை, தனியாக வேறு ஒரு கட்டுரை மூலம் பார்ப்போம்.
அமெரிக்கா தனது இராணுவக் கூட்டுக்கு வருமாறு நாடுகளிடம் கூறுகின்றது "நாங்கள் அவர்களை (சீனாவை) எதிர்கொண்டு அவர்கள் மீது சுமைகளைச் திணிக்கப் போகிறோம்" என்கின்றது. இதற்கு பங்காளியாக இருக்குமாறு இலங்கை மிரட்டுகின்றது.
அமெரிக்க, இந்திய, அவுஸ்திரேலியா, ஜப்பான் இராணுவக் கூட்டும், இராணுவ பயிற்சியும் இதற்கானது தான். இந்த இராணுவ ரீதியான மேலாதிக்கத்தை தென்னாசியாவில் நிறுவ இலங்கை முழுக்க, அமெரிக்க இராணுவம் சுதந்திரமாக நடமாடும் சுதந்திரத்தை அமெரிக்கா கோருகின்றது. இதற்கான "படை நிலை உடன்படிக்கையை (ளுழுகுயு)" புதுப்பிக்குமாறு மிரட்டுகின்றது. பிற நாடுகள் அமெரிக்க ஒழுங்குக்கு அடிபணிந்து இருப்பது போல், சீனாவை இருக்குமாறு மிரட்டுகின்றது.
அமெரிக்கா தங்கள் மேலாதிக்கத்தை தொடர்ந்தும் உறுதி செய்ய "சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் நிஜத்தில் பெரும் அச்சுறுத்தல்" என்கின்றது. "சர்வதேச அரங்கில் மற்றைய நாடுகளை எவ்வாறு ஈடுபாடு காட்ட வேண்டும் என நாம் கோருகின்றமோ அதே மாதிரித்தான் சீனாவும் இருக்க வேண்டும்" என்கின்றது. இல்லையேல் ஒடுக்குவோம். இதுதான் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லும் செய்தி. மூலதனத்திலான தங்கள் உலக மேலாதிக்கம் என்;பது, முதலாளித்துவ உலகமயமாதலின் சுதந்திர சந்தைவிதிக்கு அப்பாற்பட்டது என்று - இராணுவ மேலாதிக்கம் மூலம் உலகையே அச்சுறுத்துகின்றது.
அமெரிக்க - சீன மூலதனங்களின் தாளத்துக்கு ஆடும் தென்னாசிய நாடுகள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode