இலங்கையில் இன-மத ஒடுக்குமுறை எதார்த்தமாக இருக்க, அதை அரசியல்ரீதியாக முன்வைக்க முடியாது இருப்பது ஏன்? இன்று இதை அரசியல்ரீதியாக கேட்பது "துரோகமாக" கருதுமளவுக்கு, இனவொடுக்குமுறைக்கு மறைமுகமான ஆதரவை தமிழ் தேசியம் வழங்குகின்றது.
இன்று தமிழினவாதத்தை, தமிழ் தேசியவாதத்தை முன்வைக்கின்றவர்களின் இன்றைய நி;லை இது. இன்றைய இனவொடுக்குமுறை எப்படி எந்த வடிவில் இருக்கின்றது என்பதை, அரசியல்ரீதியாக முன்வைக்கவும் - விளங்கப்படுத்தவும் வேண்டும். அதை செய்ய முடியாதுள்ளது. சாதியை பாதுகாத்துக் கொண்டு எங்கே சாதி இருக்கின்றது எனக் கேட்கின்ற அதே மனோநிலைக்கு ஏற்ப, எதிர்மறையில் தமிழ் தேசிய ஒடுக்குமுறையை முன்வைக்க முடியாதுள்;ளது. இதற்கான அடிப்படைக் காரணம், இன்று இனவொடுக்குமுறையாக இருப்பது, தேசியவாதிகளுக்கு இனவொடுக்குமுறையல்ல.
இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் - இன்று மூன்று விதமான ஒடுக்குமுறைகளை சந்திக்கின்றனர்.
1.முழு இலங்கை மக்களையும் ஒடுக்கும், வர்க்க ரீதியான ஒடுக்குமுறைக்குள்ளாகின்றனர்.
2.இன ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாகின்றனர்.
3.இனத்தை இனம் (உதாரணமாக தமிழனைத் தமிழன்) ஒடுக்கும், ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர்
இப்படி மூன்றுவிதமான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் ஒடுக்கப்பட்ட இனத்தின் மீதான ஒடுக்குமுறையை, (தமிழ்) இனவாதிகள் - (தமிழ்) தேசியவாதிகள் ஏற்றுக்கொள்வதில்;லை. அவர்கள் இனரீதியான ஒடுக்குமுறையை மட்டும் ஏற்றுகொண்டு, பிற இரு ஒடுக்குமுறைகளை மறுதளிக்கின்றனர். இதனாலேயே இன்றைய இனவொடுக்குமுறையை, அரசியல்ரீதியாக முன்வைக்கவும் - விளக்கவும் முடிவதில்லை. அரசியல்ரீதியாக அதை முன்வைக்கவும் தயாராகவுமில்லை.
உதிரியாக எப்போதாவது நடக்கும் ஒரு சம்பவத்தை இனவொடுக்குமுறையாக காட்ட முடிகின்றதே ஒழிய, இனவாதம் எப்படி அரசு வடிவில் – சமூக வாழ்வியலில் இயங்குகின்றது என்பதை, அரசியல்ரீதியாக (தமிழ்) இனவாதிகளால் - (தமிழ்) தேசியவாதிகளால் விளக்க முடிவதில்லை.
இதற்கான அடிப்படைக் காரணம் என்ன?
1.இவர்களே இனவாதிகளாகவும் - இனவொடுக்குமுறையாளராகவும் இருக்கின்றனர்.
2.இவர்கள் வர்க்க ரீதியாக சொந்த இன மக்களை சுரண்டுவதற்காக ஒடுக்குவதை, ஆதரிப்பவராக இருக்கின்றனர்.
3.தன் இன மக்களை (உதாரணமாக தமிழனைத் தமிழன்) ஒடுக்குகின்ற ஒர தரப்பாக இருக்கின்றனர்.
இதனால் தான், இவர்களால் இனரீதியான இன்றைய ஒடுக்குமுறையை இனம் காண முடியாது இருக்கின்றனர் அல்லது அதை மூடிமறைக்கின்றனர். இன்னுமொரு புறத்தில் இவர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் இருந்து சிந்திப்பதில்லை, போராடுவதில்லை. (தமிழ்) இனவாதிகள், (தமிழ்) தேசியவாதிகள் தங்கள் சொந்த நலனில் இருந்து சிந்திப்பவர்கள், தங்கள் நலனுக்காக மற்றவர்களை பயன்படுத்துபவர்களே.
தங்கள் நலன் சார்ந்து இனவொடுக்குமுறையை பயன்படுத்தியதன் மூலம், புலியை பலியிட்டவர்கள் இவர்கள். தாங்கள் பலியிட்ட புலியை புனிதப்படுத்திக் காட்டும் தங்களது இனவாத அரசியல் நடவடிக்கையையும் அதற்கான அங்கீகாரத்தையும் மறுப்பதையே இன்றைய ஒடுக்குமுறை வடிவமாக முன்னிறுத்துவது நடக்கின்றது. அதேநேரம் இனவாதம் பேசும் தேர்தல் கட்சிகளை முன்னிறுத்தி, பதில் இனவாதத்தை பேசுகின்றனரே ஒழிய - இனவொடுக்குமுறையை பேசுவதில்லை. இன்றைய இனவொடுக்குமுறையை அரசியல்ரீதியாக முன்வைக்க முடியாத, இனவாதச் (தமிழ்) சங்கிகளாக மாறிவிடுகின்றனர்.
தங்களின் இனவாத வங்குரோத்தை மூடிமறைக்க, இன்றைய இனவொடுக்குமுறையாக காட்டுவது - யுத்தகாலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் - நிகழ்ச்சிகளையுமே.இன்றைய இனவொடுக்குமுறை எப்படி எந்த வடிவில் இருக்கின்றது என்பதை கூற முடிவதில்லை. இதை கூற முடியவில்லை என்றால், எப்படி இனவொடுக்குமுறைக்கு எதிரான உண்மையான போராட்டம் நடக்கும்? மாறாக போலியான ஒன்று, மீள மீள முன்வைக்கப்படுகின்றது. இதன் மூலம் உண்மையான இன்றைய ஒடுக்குமுறை வடிவத்தை மூடிமறைத்து, ஒடுக்குமுறையாளனின் தொடர் ஒடுக்குமுறைக்கு உதவுகின்றனர்.
இன்றைய ஒடுக்குமுறையைப் பேசாத போலித் தனம், எதுவும் உண்மையாகிவிடாது. இன்றைய ஒடுக்குமுறை என்ன என்பதற்கு, முந்தைய ஒடுக்குமுறை தொடர்ந்து இருக்கின்றதா என்பது குறித்து – பொது தெளிவு இருக்கவேண்டும்;. 1980 – 2009 வரையான யுத்த கால பொது நெருக்கடிகள் - ஒடுக்குமுறை வடிவங்கள், இன்று கிடையாது.
1.தமிழன் என்பதால் யாரும் கைது செய்யப்படுவதில்லை. யாரும் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்படுவதில்லை, யாரும் காணாமல் போவதில்லை.
2.வீதிக்கு வீதி இருந்த இராணுவ சோதனைச் சாவடிகள் கிடையாது. கெடுபிடிகள் கிடையாது.
3.எப்பொழுமும் கேட்டுக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுகளும், குண்டுச் சத்தங்களும் கேட்பதில்லை.
4.பெண்கள் மீதான இன ரீதியான பாலியல் வன்முறை நடப்பதில்லை.
5.இராணுவ சுற்றி வளைப்புகள், கெடுபிடிகள் கிடையாது.
6.யாரும் அடையாள அட்டையை வீதிக்கு வீதி கேட்பதில்லை.
7.இலங்கையில் பொதுவான சட்டரீதியான நடைமுறைகளே எங்கும் காணப்படுகின்றது.
7.தமிழருக்கு வேலைவாய்ப்புகள் - அரச முகவர்கள் மூலம் கிடைக்கின்றது.
8.பொலிஸ், இராணுவத்தில் தமிழர்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகின்றனர்.
9.யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை கட்டும் உதவிகள் வழங்கப்படுகின்றது.
10.கடலில் கெடுபிடியின்றி மீன் பிடிக்க முடிகின்றது.
11.நாட்டின் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக சென்று வர முடிகின்றது.
12.எந்தப் பொருளையும் எந்தப் பகுதிக்கும் எடுத்துச் செல்ல முடிகின்றது
13.இப்படி பல
இலங்கையின் பிற பகுதிகளில் வாழும் (சிங்கள்) மக்கள் எப்படி வாழ்கின்றனரோ, அப்படி தமிழ் பகுதிகளிலும் நி;லைமை காணப்படுகின்றது. எந்த வேறுபாட்டையும் பொதுவில் - வெளிப்படையாகவும் காண முடியாது. இந்தச் சூழலை தமிழ் இனவாதிகள் விரும்புவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, இனவாதிகள் இதற்கு வெளியில் இனவொடுக்குமுறையை காணவும் - காட்டவும் முடியாதுள்ளது.யுத்தத்தை தொடர்ந்து அதிகளவில் இன்னமும் வடகிழக்கில் குவிந்துள்ள இராணுவம், முகாம்களில் முடங்கி இருக்கின்றனர். புலனாய்வாளர்கள் மக்களுடன் மக்களாக கலந்து விட்டனர்.
யுத்தத்துக்கு முந்தைய காலத்தில் இராணுவமும் - புலிகளும் மக்களிடம் இருந்து எடுத்த நிலங்கள், வீடுகள், பெருமளவில் விடுவிக்கப்பட்டு – தொடர்ந்து படிப்படியாக விடுவிப்பது நடந்து வருகின்றது. சில பகுதிகள் சட்டரீதியாக நஸ்ட ஈடு மூலம் சுவீகரிப்பு குறித்து பேசப்படுகின்றது.
இத்தகைய பின்னணியில்
1.நில உரிமை மீதான உரி;மையைக் கொண்டவர்கள், தன்னியல்பாக தங்கள் நிலத்தை மீட்கும் போராட்டங்களை நடத்துகின்றனர்.
2.யுத்தகாலத்தில் கைதான கைதிகளை (படிப்படியாக விடுவிக்கப்பட்டு - இன்று 100 க்கு உட்பட்ட கைதிகள்) அரசியல் கைதியாக அங்கீகரிக்கவும், விடுவிக்கவும் நடக்கும் போராட்டங்கள் - அவர்களின் குடும்பங்களால் தொடர்ந்து நடத்தப்படுகின்றது.
3.காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னிறுத்திய போராட்டங்கள் - அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் தொடர்ந்து நடத்;தப்படுகின்றது.
குறிப்பாக இதை முன்வைத்து நடக்கும் போராட்டங்கள், இன்றைய இனவொடுக்குமுறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டவையல்ல. மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் தன்னியல்புப் போராட்டமாக இருக்கின்றதே ஒழிய, ஒடுக்கப்பட்ட இனத்தின் பொதுப் போராட்டமாக ஒன்றிணைக்கப்படவில்லை - முன்னெடுக்கப்படவுமில்லை. அதாவது இன்றைய இனவொடுக்குமுறை அரசியல்ரீதியாக இனம் காணப்பட்டு - அதனுடன் ஒருங்கிணைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக இவை இல்லை என்பதுடன் - இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக இதை அடையாளப்படுத்த முடியாதுள்ளது. அவர்களின் தனிமனித உணர்வு சார்ந்த தனிப்பட்ட போராட்டமாக குறுகி இருக்கின்றது. இது தான் எதார்த்தம்.
தொடரும்
அதிகாரத்தை மறுப்பதா இனவொடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 02)
1970-1980 களில் உருவான ஆயுதப் போராட்டம் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 03)
இனவாதச் சிந்தனைமுறை! - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 04)
ஒடுக்குமுறையை அடையாளப்படுத்த தடையாக இருப்பது எது? - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 05)
தமிழினவாதமும், தேசியவாதமும் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 01)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode