Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"நான் சாதி பார்ப்பதில்லை!", "எங்கே சாதி இருக்கின்றது!!?" "யார் சாதி பார்க்கின்றனர்!!!" என்று இலங்கையில் நவீன வெள்ளாளியம் எப்படி தன்னை தகவமைக்கின்றதோ, அதேபோல் தான் கமல் எங்கே மனுதர்ம நூல் நடைமுறையில் இருக்கின்றது என்று கேட்கின்றார். பார்ப்பனியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுவார்ப்புச் செய்வது தான், கமலின் பகுத்தறிவுவாதம்.

கமலின் பகுத்தறிவுவாதம் என்பது பழைய பார்ப்பனிய ஒடுக்குமுறைக்குப் பதில் இன்றைய ஒடுக்கல் சூழலுக்கு ஏற்ப மாறி வாழ்வதே. அதாவது இவ்வகை «பகுத்தறிவுவாதம்» என்பது ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதல்ல. மாறிவந்த சமூகத்தை புதிய பார்ப்பனிய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதும் - அதற்கு ஏற்ப மாற்றுவதும் தான், பழையதை தூக்கி நிறுத்துவதற்கு பதில், புதிய பார்ப்பனியத்தை உருவாக்குவது. பார்ப்பனியத்துக்கு எதிரான கமல்ஹாசனின் சிந்தனைமுறை இதுதான்;. சாதிக்கு எதிராக கவி பாடிய பாரதியின் சிந்தனை முறையும் இதுதான்.

இந்த நவீன பார்ப்பனியத்தை உருவாக்கும் பின்னனியிலேயே மக்கள் நீதி மய்யம், மனுதர்ம நூல் எங்கே நடைமுறையில் உள்ளது என கேட்கின்றது. கலாச்சாரத்தில் மனுதர்மம் உள்ளதே என்ற கேட்க "உடன் கட்டை ஏறுதல் இன்று இல்லையென்று கூறுவது", பார்ப்பனியத்தை பாதுகாக்கவே. பழைய பார்ப்பனியத்தைக் கொண்டு தமிழகத்தை பார்ப்பனியமாக தக்க வைப்பதற்கு பதில், அறிவுபூர்வமாக புதிய பார்ப்பனியத்தை உருவாக்குவதே தமது கடமை என்கின்றார். அதற்கு ஒரு கட்சி.

"மக்கள் நீதி மய்யம்" முன்வைக்கும் சமூக கண்ணோட்டம் காலத்துக்குப் பொருந்தாத பார்ப்பனியக் கூறுகளை கைவிட்டு – காலத்துக்கு பொருந்தும் பார்ப்பனியத்தை உருவாக்குவதே. அது தான் அவர் முன்வைக்கும் பகுத்தறிவுவாதம்.

கமல் முன்வைக்கும் இந்த நவீன பார்ப்பனியக் கண்ணோட்டம் என்பது மனுதர்ம நூல் குறித்தும், அதன் இன்றைய பயன்பாடு குறித்தும் பேசுகின்றதன் மூலம், சாதிய வரலாற்றை பித்தலாட்டம் செய்கின்றார். மனுதர்ம நூலும் - அதன் உள்ளடக்கமும், சாதியை உருவாக்கவில்லை. மாறாக 2000 வருடங்களுக்கு முந்தைய சாதிய சமூகப் பொருளாதார பண்பாட்டு சமூக அமைப்பை மனுதர்மம் தொகுத்து - அதை சமூக ஒழுங்கான பொது வழிகாட்டியாக முன்வைக்கின்றது. இதைக் கற்றுக்கொண்டு பார்ப்பான் என்ற சாதி, சமூக வாழ்வியல் நெறியாக – அதாவது பார்ப்பனியமாக சமூகத்திற்கு உபதேசம் செய்தது. இதுவே இன்றைய பார்ப்பனிய சமூகம்;. சாதிய ஒடுக்குமுறையை, சமூக அறமாக முன்வைக்கின்றது. இன்று வரை அந்த சாதிய சமூக வாழ்க்கை முறையே - சமூக வடிவில் நீடிக்கின்றது. மனு தொகுத்தெழுதிய பார்ப்பனியம் காலாவதியாகிவிடவில்லை. அது இன்னமும் பல்வேறு வடிவங்களில் நடைமுறையில் இருப்பதுடன், பாரதி முதல் கமல் வரை முன்வைக்கும் நவீன பார்ப்பனியம், மனுதர்ம உள்ளடக்கத்தில் இருப்பதைக் காணமுடியும்.

மனுதர்மத்தை எழுதிய காலகட்டத்தில் இருந்து சாதிய சமூக அமைப்பும் - அதன் ஒடுக்குமுறை வடிவங்களும் - கலாச்சாரக் கூறுகளும் இன்று இல்லை. பொருளாதார வளர்ச்சியாலும், சாதியற்ற அன்னியர்களின் ஆட்சிகளாலும்;, சாதி ஒடுக்குமுறை வடிங்களும் கூட நவீன வடிவம் பெற்று விடுகின்றது. காதில் ஈயம் ஊத்தவில்லை என்பதால், ஒடுக்கப்பட்ட சாதிகள் கற்கக் கூடாது என்பது மறைந்துவிடவில்லை. நவீன பார்ப்பனியம் நீட் பரீட்சையை நடத்துகின்றது. சாதிப் படிநிலையில் உச்சியில் இருக்கும் சாதிக்கு (3சதவீதம்), இட ஒதுக்கீட்டை (10 சதவீதம்) கொடுக்கின்றது. பார்ப்னியத்தின் ஒடுக்குமுறை இப்படி நவீன வடிவம் பெற, இதை இன்னும் நவீனமாக பகுத்தறிவு கொண்டு மூடிமறைத்துக் கொண்டு வருவது எப்படி என்பது தான், கமலின் மக்கள் நீதி மய்யம் முன்வைக்கும் பகுத்தறிவுவாத அரசியல்;.

மாறிவிட்ட சமூக பொருளாதாரத்துக்கு ஏற்ப பார்ப்பனியத்தையும், தனிப்பட்ட தன்னையும் முன்னிறுத்தி சமூகப் பிரச்சனைகளுக்கு பதில் சொல்வதன் மூலம், பார்ப்பனியம் குறித்து பேசாமல் விடுவதும் பார்ப்பனிய நரித்தனம். பார்ப்பனியமானது - பிறப்பின் அடிப்படையிலேயே இன்னமும் வாழ்க்கை முறையாக கட்டமைக்கப்பட்டு, சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் மிக தெளிவாகவே மனுதர்ம சமூக ஒழுங்கில் - சற்று மாறுபடவே தொடருகின்றது. அவரின் கட்சி இதைத்தான் பின்பற்றுகின்றது.

இப்படி சாதியாக நிலவும் இந்திய சமூக அமைப்பில், மனுதர்மம் என்பது வடக்குத் - தெற்காக வேறுபட்ட ஒடுக்குமுறை வடிவங்களுடன் - கட்டியமைக்கப்பட்ட வாழ்க்கை முறை என்பது - முன்னும் பின்னுமாக இயங்குகின்றது. வடக்கில் உள்ள ஒடுக்குமுறை வடிவம் தெற்கில் இல்லை என்பதைக் கொண்டு, எங்கே மனுவின் வடிவில் சாதி உள்ளது என்று கேட்கின்ற பார்ப்பனிய சிந்தனைமுறை தான், இன்று எங்கே மனுதர்மம் நூல் நடைமுறையில் இருக்கின்றது என்று கேட்கவும் - கூறவும் வைக்கின்றது.

பார்ப்பனியம் அழிவதைத் தடுக்க பகுத்தறிவைக் கொண்டு அதைப் பாதுகாக்க வேண்டும்;. அந்தக் காலத்தில் முட்டாள்தனமான மத செயற்பாடுகளை இன்று நவீன அறிவியல் கொண்டு காரணங்கiளை கண்டுபிடித்து கூறுவதன் மூலம் எப்படி அதைப் பாதுகாக்க முனைகின்றனரோ, அதேபோல் பார்ப்பனியத்தை பாதுகாக்கவே கமலுக்கு பகுத்தறிவு தேவைப்படுகின்றது. அவரின் அரசியல் நோக்கமும் இதன் பாலானதே.