Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் எதை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கின்றதோ, அந்த சிந்தனைமுறையே இனவொடுக்குமுறையைக் காணமுடியாமல் செய்கின்றது. அந்த சிந்தனைமுறை என்ன என்பதை, எங்கள் நடத்தையில் இருந்து கண்டறிவோம்.

நாம், நாமல்லாத மனிதர்கள் குறித்துக் கொண்டிருக்கும் எதிர்மறைக் கண்ணோட்டமே, எம்மை குருடாக்கி விடுகின்றது. பிரச்சனையை இனம் காணவும், தீர்வை வந்தடையவும் தடையாக மாறுகின்றது. இதுதான் இன்றைய தமிழ் சமூகத்தின் நிலை.

தாம் அல்லாத மனிதர்களை இழிவாகப் பார்ப்பதும், ஒடுக்குவதும் மனிதப் பண்பா எனின் இல்லை. பிற மனிதருக்கு எதிரான கருத்தை அரசியலாக, அரசியல் அதிகாரமாகக் கோருவதா ஜனநாயகம் எனின் இல்லை. இதை ஏற்றுக்கொள்ள தவறும் போது, நாங்கள் யாராக, எப்படி இருக்கின்றோம்!? எமது மனசாட்சி, அறத்தின் முன் கேள்வி எழுப்பியாக வேண்டும்;. மனிதர்களைப் பிரிக்கவும் – ஒடுக்கவும் செய்கின்றவன் போல் சமூகம்; (நான்) இருக்க முடியாது என்பதை, தனிமனிதன் முதல் சமூகம் வரை உறுதி செய்தாக வேண்டும்;.

கொள்கையளவில் பிறருக்கு எதிராக இருப்பதை ஏற்றுக்கொள்ளாத ஆழ்மனம், நடத்தையில் பிறரை இழிவாக பார்ப்பதையும், ஒடுக்குவதையும் அறமாகவும் - ஜனநாயகமாகவும் கருதும் போக்கே - இன்றைய சமூகப் போக்காக, மனித குலத்துக்கே எதிரானதாக பயணிக்கின்றது.

இந்த பின்னணியில் இனவொடுக்குமுறைக்கு எதிரான இனவாதமானது, எதிர் இனவொடுக்குமுறையை செய்கின்ற அரசியல் கூறாக இயங்குகின்ற சூழலிலேயே, இனவொடுக்குமுறை பற்றிப் பேசுகின்றோம். இதில் ஒன்றை ஆதரிக்கக் கோருவது என்பது பொது உளவியலாகவும், அரசியலாகவும் இன்று இருக்கின்றது. இதற்குள் நின்று கருத்துச் சொல்லாது - செயற்படாத போக்கு என்பது, பிழைக்கத் தெரியாதவனின் செயலாக கருதுகின்ற போக்கு – ஒடுக்குமுறையை கொண்டாடுவதன் மூலம் பிழைத்துக் கொள்ளுவதே.

இங்கு இனவொடுக்குமுறையாளனுக்கும், எதிர் இனவாதிக்கும் வித்தியாசமில்லை. இதில் எந்த இனம் என்ற, எந்த வேறுபாடுமில்லை. இல்லை, வேறுபாடு உண்டு என்று கூறுவதே, மனித தன்மைக்கே எதிரானது.

இனவொடுக்குமுறை என்பது ஒரு மனிதனுக்குரிய பண்பு கிடையாது. இனமாக சிந்திப்பதில் இருந்து எழும் கூட்டு மனப்பாங்கு, மனிதப் பண்பு கொண்டதல்ல. பிறர் மீது வெறுப்புக் கொண்ட இந்த மனப்பாங்கு என்பது, அடிப்படையில் தன்னலம் சார்ந்தது. இதனால் அது இயல்பிலேயே தன் இனத்தைக் கூட நேசிப்பதில்லை, மாறாக தன் இனத்தை தன் நலனுக்கு பயன்படுத்துகின்றது. இதை மறுக்கும் போது, மனிதப் பண்பற்ற இந்தக் கூறு தன் இனத்தையே ஒடுக்குகின்றது.

இது இனவொடுக்குமுறை செய்கின்றவனை மட்டும் குறிப்பதில்லை, இனவொடுக்குமுறையை எதிர்ப்பதாக கூறும், எதிர் இனவாதம் கூட இதே பண்பால் - நடத்தையிலானது. இது மதம், இனம், சாதி, நிறம் பால்.. என்று எங்கும், பொது இயல்பாலானது. இவை ஒன்றையொன்று சார்ந்து இருப்பதை, எங்கும், எதிலும் காணமுடியும்;. அரசியல் ரீதியாக இனவாதம் என்பது, வலதுசாரி அரசியலாகும். இடதுசாரி அரசியலாக இருப்பதில்லை. வலதுசாரி அரசியலான சுரண்டும் வர்க்கத்தின் அரசியல் கூறாக மட்டுமே, இனவாதம் இருக்கவும் - செயற்படவும் முடியும்;.

இந்த சுரண்டும் வர்க்க அரசியல் பின்னணியில் தான் இனவாதம் சமூகத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு, அரசியல் அதிகாரத்துடன் பிணைக்கப்படுகின்றது. ஒரு சிறிய பிரிவு தன் குறுகிய நலன் சார்ந்து ஒட்டுமொத்த மக்களையும் ஒடுக்குவதை மூடிமறைக்கவே, இனத்தை, மதத்தை, நிறத்தை, சாதியை … முன்னிறுத்துகின்றது. இதை அரசு மட்டுமே முன்வைக்கும் என்பது, ஒரு பொய். இந்தப் பொய் மூலம், தானும் இன-மத மூலம் ஒடுக்கும் வடிவமாக தன்னை முன்னிறுத்துவதை மூடிமறைக்க முனைகின்றது. இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் எந்த பகுதிக்கும் - எந்தவகையான மனிதனை பிளக்கும் வாதங்களுக்கும் பொருந்தும்;. இதன் பின்னால் வர்க்க நோக்கம் இருப்பதும் - அது உலகெங்குமாக பொதுவானதாகவும் இருக்கின்றது. எங்கும் விதிவிலக்கல்ல.

இனம், நிறம், மதம், சாதி போன்றவற்றை எடுத்தால், அதை முன்வைத்து மக்களை பிரிக்கின்றவர்களின் வர்க்க அரசியல் மிகத் தெளிவாக சுரண்டும் வர்க்கக் கண்ணோட்டம் கொண்டதாக – மனித வெறுப்பு கொண்டதாகவும் இருக்கும். மனிதப் பிரிவினையை எதிர்க்கின்றவர்களின் கண்ணோட்டத்தின் பின்னாலேயே - மனிதத் தன்மையை எங்கும் காணமுடியும்;.

இந்த பின்னணியில் இலங்கையில் இன-மத ஒடுக்குமுறையின் வெளிப்படையான வடிவங்கள் எந்த வடிவில் எதுவாக இருந்தாலும், அதை பேசுபவர்கள் தம் பின்னால் இயங்கும் வர்க்க (அக வடிவக் காரணங்களை) அரசியலை முன்வைத்துப் பேசுவதில்லை. இதற்கான அரசியல் காரணம் அந்த ஒடுக்குமுறைக்கான வர்க்க (அக வடிவக் காரணங்களுடன்) அரசியலுடன் ஒன்றுபட்டு இருப்பது தான்;.

வெளித்தோற்றத்தில் இனவெறுப்பாக கட்டமைக்கப்பட்டு இயங்கும் இனவொடுக்குமுறையானது, உண்மையில் தனிப்பட்ட மனிதர்களின் இனவெறுப்பிலானதல்ல. மாறாக வர்க்க நோக்கிலானது. மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பில், அதை மூடிமறைக்கவே இன-மத-நிறம்-சாதி குறித்த வெறுப்புகள் கட்டமைக்கப்படுகின்றது.

இந்த வெறுப்புணர்வை நம்பி அதற்கு பலியாகிய மக்கள் கூட்டத்தை வழிநடத்துகின்ற கோட்பாடு மற்றும் அரசியல், சுரண்டும் வர்க்க நலன்களாலானது. இனவொடுக்குமுறை, இனவாதம் மூலம், அந்த இனத்துக்கு கிடைப்பது எதுவுமில்லை. சமத்துவமற்ற சமூகத்தில் ஒரு சிலர் லாபம் பெறும் நோக்கிலேயே, இனவொடுக்குமுறையும், இனவாதமும் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் இனவொடுக்குமுறையை மூடிமறைக்கின்றது.

சுரண்டும் வர்க்கக் கண்ணோட்டத்திலான சிந்தனைமுறையில் இருந்து கொண்டு, இனவொடுக்குமுறையை காணமுடியாது. இதனாலேயே இன்று இனவொடுக்குமுறை எங்குள்ளது என்று கேட்கின்றனர். வேறு சிலர், எங்காவது வெளிப்படையாக நடக்கும் உதிரிச் சம்பவத்தை மட்டும் கொண்டு, இனவொடுக்குமுறையைக் காட்ட முனைகின்றனர். இன்னொரு பகுதியினர் இரு இனங்களின் இயல்பாக நடக்கும் மனிதக் கூட்டுகளை, இனரீதியாக பிரித்து இன ரீதியாக பிளந்து, அதை இனவாதமாக காட்டி அதை இனவொடுக்குமுறையாக காட்ட முனைகின்றனர். இன்னொரு தரப்பு யுத்தகால விளைவையும் – அதன் எச்சசொச்சத்தையும் இனவொடுக்குமுறையாக காட்டி சொதப்புகின்றனர்.

இனவொடுக்குமுறையும் வர்க்க அரசியல் நோக்கில் அரசியலில் நீடிக்கின்றது. இனவாதமென்பது வெள்ளாளிய வர்க்க அரசியல் கண்ணோட்டத்தில் தொடருகின்றது.

தொடரும்

தமிழினவாதமும், தேசியவாதமும் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 01)

அதிகாரத்தை மறுப்பதா இனவொடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 02)

1970-1980 களில் உருவான ஆயுதப் போராட்டம் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 03)

இனவாதச் சிந்தனைமுறை! - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 04)