Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1980 களில் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதில், முன்னோடியாக யாழ் பல்கலைக்கழகம் மாறியது. இனவாதம் பேசி வாக்குகள் பெற்ற தேர்தல் கட்சிகளின் போலித்தனமும், அதன் கையாலாகாத்தனமும், 1970, 1977 தேர்தலின் பின் படிப்படியாக அம்பலமாகி வந்த சூழலில், அது யாழ் பல்கலைக்கழகத்தில் பிரதிபலித்தது. தேர்தல் அரசியலையும் அதன் பிழைப்புவாதத்தையும் அம்பலப்படுத்திய அதேநேரம் - இதற்கு சமாந்தரமாக உருவாகி வந்த இயக்கங்களையும் ஆதரித்தது. அதேநேரம் அரசியல்ரீதியாக, எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் இடமாகவும் யாழ் பல்கலைக்கழகம் இருந்தது.

இயற்கையாகவும் இயல்பாகவும் ஒடுக்கும் சிந்தனைமுறைமைக்கு முரணானதே, மாணவ, மாணவிகளின் சிந்தனைமுறை. ஏன், எதற்கு என்று அனைத்தையும் கேள்வி கேட்கும் மாணவ, மாணவிகளின் இயல்பு, எப்போதும் இருப்பதை பகுத்தறிவுக்குள்ளாக்குகின்றதன் மூலம், மாற்றத்துக்குள்ளாக்குகின்றது, சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுகின்றது. இதுதான் இயங்கியல் விதியும் கூட.

இந்த மாற்றத்தை ஒடுக்கும் சிந்தனைமுறையும், அதை ஆட்சி அதிகாரமாகக் கொண்டுள்ளவர்களும் அனுமதிப்பதில்லை. இருக்கின்ற அமைப்பை கைமாற்ற முனைகின்றது. இந்தப் பின்னணியில் மாணவர்களை மந்தைகளாக கருதுவதுடன், தங்கள் மேற்பார்வையில் மேய்ப்பதே அரசுகளின் கல்விக் கொள்கையாக இருக்கின்றது. மாணவ மாணவிகள் மாறுபடச் சிந்திப்பதோ, தான் விரும்பும் வண்ணம் சமூகத்தை மாற்ற முனைவதையோ, முரணாகப் பார்க்கின்றது. இந்த வகையில் மாணவமாணவிகள் தங்கள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதை அனுமதிக்காத கொள்கையையும் – நடைமுறையையுமே கல்வியாக, சட்ட ஒழுங்கு சமூகமாக வரையறுக்கின்றது.

ஆனால் இயற்கையோ இதற்கு முரணானது. எல்லாம் மாறிக்கொண்டு - வளர்ந்து கொண்டு இருக்கும் போது, மாணவர்கள் விதிவிலக்கா என்ன!

மாணவமாணவிகள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்பதும், தன்னை சுற்றி போடப்பட்டு இருக்கும் பகுத்தறிவற்;ற மூடத்தனங்களையும் – ஒடுக்குமுறைகளையும் அகற்றுவதற்காக, போராடுகின்ற குணமும் - இயல்பும் கொண்டவர்கள்.

இந்த நிலையில் சமூகம் தன்னை முன்னோக்கி நகர்த்தும் போது, மாணவமாணவிகளே அதன் முன்னணி சக்தியாக இருப்பார்கள். சமூகம் பின்நோக்கி திரும்பி பயணிக்க எத்தனிக்கும் போது அல்லது தேங்கிவிடும் போது, மாணவமாணவிகள முன்னோடியாக இருக்கும் தமது சமூகப் பாத்திரத்தை இழந்து அட்டைகள் போல் சுருண்டு விடுவார்கள். இன்று தமிழ் மாணவர்களின் நிலை இத்தகையதே. ஆனால் 1980 களில் இப்படி இருந்ததில்லை.

இன்று போல் 1980 களில் பல்வேறு அடக்குமுறைகளை மாணவமாணவிகள் எதிர் கொண்டார்கள். இனம், வர்க்கம், சாதி, பிரதேசம், மதம், பால் ... என்று எல்லாவிதமான குறுகிய சமூக அடையாளங்களையும் - ஒடுக்குமுறைகளையும் தன்னகத்தே கொண்ட சமூகத்தில் இருந்து, இதற்கு மாறாக குறுகிய அடையாளங்களைக் கடந்து சிந்தித்துப் – போராடிய வரலாற்றுக்கு உரித்துடையவர்களாக தமிழ் மாணவர்கள் இருந்திருக்கின்றார்கள். ஆனால் இவை இன்றைய வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டு பின்நோக்கி நகர்த்தப்படுகின்றது.

சமூகத்தை பின்நோக்கி நகர்த்தும் இன்றைய போக்கு என்பது, எல்லா குறுகிய அடையாளங்களையும், ஒடுக்குமுறைகளையும் மீள முன்னிறுத்தும் போக்காகும். இதுவே இன்றைய மாணவர்களின் சிந்தனைமுறைக்கான அடிப்படையாக இருக்கின்றது. எதையும் முன்னோக்கிப் பார்க்க முடிவதில்லை.

1980 கள் இதற்கு எதிர்மறையாக இருந்தது. இதற்கு முதன்மைக் காரணமாக இருந்தது, 1960 களில் பொது இடங்களில் சாதித் தீண்டாமைக்கு எதிரான போராட்டமும் - மரபார்ந்த வெள்ளாளிய சமூக அமைப்பு முறையில் ஏற்பட்ட அதிர்வும்தான். பொது இடங்களை பயன்படுத்துவதில் கடைப்பிடிக்கப்பட்ட வெள்ளாளியத் தீண்டாமை அடிப்படையிலான சாதிய சமூக பழக்க வழக்கங்களுக்கும், அதன்வழியான ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டமானது, அனைத்தையும் கேள்வி கேட்கும் புதிய தலைமுறைக்கும் - புதிய பண்பாட்டுக்கும் வித்திட்டது.

இக்கால கட்டத்தில் (1970) இனவொடுக்குமுறையானது, இனவாதமும் பண்புரீதியாக மாற்றம் பெற்று மேலெழுந்து வந்தது. இப்படி ஏற்பட்ட பண்புமாற்றம், 1980 களில் பாய்ச்சல் நிலையை எட்டியது. 1960களில் வெள்ளாளிய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம், 1970, 1980 களில் இனவொடுக்குமுறையில் ஏற்பட்ட பண்புரீதியான – அளவுரீதியான மாற்றத்திலும் பிரதிபலித்தது. ஆனால் இது உதிரித்தனமான இடதுசாரியமாகவே வளர்ந்தது.

1960 களில் பொதுவெளியில் கடைப்பிடிக்கப்பட்ட வெள்ளாளிய தீண்டாமையை எதிர்த்த போராட்டத்திற்கும், சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கான பின்னணியில், மார்க்சிய தத்துவார்த்த வழிகாட்டலாக இடதுசாரி அமைப்பு இருந்தது. ஆனால் 1970, 1980 கலில் அப்படி நடக்கவில்லை. இடதுசாரியமானது அமைப்பு ரீதியாக, நடைமுறை அரசியலில் செயல் இழந்த பின்னணியில், உதிரித்தனமான இடதுசாரிய தலையீடுகளே அங்குமிங்குமாக இருந்தது.

1970 - 1980 களில் புதிதாக தோன்றி வளர்ந்த வலதுசாரிய எழுச்சியும் - அதற்குள் உதிரியான இடதுசாரிய தலையீடும், முரண்பாடுகளுடனேயே வளர்ச்சியுற்றது. இந்த முரண்பாட்டின் வளர்ச்சியானது, 1985 - 1987 இல் யாழ் பல்கலைக்கழக மாணவமாணவிகளுடன் ஒருங்கிணைந்த மக்கள் திரள் போராட்டம் மூலம் பிரதிபலித்தது. தமிழ் இனவாத – வலதுசாரி- வெள்ளாளிய எதிர்ப்புக்கு மத்தியில் 1974 இல் உருவாகிய யாழ் பல்கலைக்கழகமானது, 1979 ஆண்டு சுயாதீனமான பல்கலைக்கழகமாக மாறியது. இந்த பல்கலைக்கழகம் தான், 1960 களில் தோன்றிய இடதுசாரிய போராட்ட மரபிற்கு வலுச்சேர்க்கும் வண்ணம் 1985 - 1987 களில் மீண்டும் பிரதிபலித்தது.

இதற்கு முன்பாக 1980 களில் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதில், முன்னோடியாக யாழ் பல்கலைக்கழகம் மாறியது. இனவாதம் பேசி வாக்குகள் பெற்ற தேர்தல் கட்சிகளின் போலித்தனமும், அதன் கையாலாகாத்தனமும், 1970, 1977 தேர்தலின் பின் படிப்படியாக அம்பலமாகி வந்த சூழலில், அது யாழ் பல்கலைக்கழகத்தில் பிரதிபலித்தது. தேர்தல் அரசியலையும் அதன் பிழைப்புவாதத்தையும் அம்பலப்படுத்திய அதேநேரம் - இதற்கு சமாந்தரமாக உருவாகி வந்த இயக்கங்களையும் ஆதரித்தது. அதேநேரம் அரசியல்ரீதியாக, எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் இடமாகவும் யாழ் பல்கலைக்கழகம் இருந்தது.

1980 என்பது இயக்க அக முரண்பாடுகளும், இயக்க உடைவுகளும், உதிர்வுகளும் கூர்மையடைந்து வந்த பின்னணியில், முரண்பட்ட அரசியல் முன்வைக்கப்பட்டது. எது விடுதலை, எப்படி போராட்டம் நடத்துவது, அமைப்பு ஜனநாயகம் குறித்த விவாதங்களே மேலெழுந்தது. இதன் பின்புலத்தில், தேசிய விடுதலை மூலம் மார்க்சியத்தை (மார்க்சியத்தில் இருந்து தேசியத்தை முன்வைக்கவில்லை) உள்வாங்கிக் கொண்ட கருத்தியல் போக்கு வளர்ச்சியுற்று - வலதுசாரி வழிவந்த இயக்கங்களின் பொது அரசியலுக்குமான முரண்பாடு - எங்கும் எதிலும் எதிரொலித்தது. இரு வழிப் பாதையும், முரண்பாடுகளும் கூர்மையான விவாதப் பொருளாகியது. யாழ் பல்கலைக்கழகத்தின் இதற்கான வேர்களும் - விவாதங்களும்; தோன்றின. இந்த முரண்பாடு சார்ந்து இயக்கத்தில் இருந்து சில மாணவர்கள் - இயக்கங்களில் இருந்து விலகி சுதந்திரமான - தமிழ் இடதுசாரியத்தை முன்வைத்து விவாதிக்கின்ற சூழல் உருவானது.

தொடரும்