பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் உரிமை மனித உரிமையாக, ஜனநாயகமாக, சுதந்திரமாக இருக்கும் வரை, மனித விடுதலை என்பது போலியானது, கற்பனையானது. எத்தகைய விடுதலைக் கோட்பாடுகளும் சுரண்டி வாழும் உரிமையை அங்கீகரிக்கும் வரை, அவை அடிப்படையில் போலியானவை. அது தன்னளவில் ஏதோ ஒருவகையில் ஒடுக்கும் தன்மை கொண்டவையே.
உழைப்பின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்பதும், மறுபக்கத்தில் குடும்பத்தின் வளர்ச்சி எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்பதுமே, இந்த அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றது" என்றார் ஏங்கெல்ஸ். இது உலகமயமாதல் சமூக அமைப்பை புரிந்து கொள்ள உதவுகின்றது. நிலவும் சிந்தனை முறைகளை விளங்கிக் கொள்ளவும், எம்மைச் சுற்றிய வாழ்க்கை முறைகளை புரிந்து கொள்ளவும் எங்கெல்ஸ் உதவுகின்றார்.
ஆண்-பெண் உறவாகட்டும், உற்பத்தி உறவாகட்டும், எல்லா வகையான மனித உறவுகளுக்கு இது தான் அடிப்படை.
மனித வரலாற்றையும், அதன் இயங்கும் தன்மையையும் குறித்து மார்க்ஸ் "மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை, தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்திலிருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைகளுக்கு , தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்" என்றார். வரலாற்று இயங்கியல் போக்கில் மனிதர்கள் எப்படி உலகை மாற்றுகின்றனர் என்பதை விளக்குகின்றார்.
இணைபிரியாத இருவர் அடித்தளமிட்ட வரலாற்றில் ஏங்கெஸ்சை புரிந்துகொள்வது என்பது, மனிதனை மனிதன் புரிந்து கொள்வதுதான். மொத்த மனிதசாரமே இதில்தான் அடங்கி இருக்கின்றது. மனிதன் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு மார்க்ஸ் ஏங்கெல்ஸ் போதித்ததன் மூலம், கனவுகளில் இருந்த இடத்தில் சமூக விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள்.
சமூகம் குறித்தான சமூக விஞ்ஞானத்தைத் தெரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் முனையும் போதுதான், மனிதன் மனிதனாக மாறுகின்றான். மனித சமூகத்துக்கு வெளியில் பொருட்கள் குறித்த மனிதனின் அறிவு விஞ்ஞான அறிவாக மாற்றுவது போல், மனித சமூகம் குறித்தான விஞ்ஞான அறிவு சமூக விஞ்ஞானமாக – சமூகத்தை மாற்றும் உந்துவிசையாக மாறுகின்றது.
மனித வாழ்வில் மிக எளிமையான உண்மைகளே மார்க்சியம். இந்த எளிய உண்மை எளிமையாக தீர்க்கப்பட முடியாத வண்ணம் சிக்கலானவையாக இருக்கின்றது. அது முழு மனிதகுலத்துடன் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகின்றது. பல்வேறு சித்தாந்த கோட்பாடுகளால் சிக்குண்டு கிடக்கின்றது. இந்தச் சிக்குகளை மார்க்சியம் மூலம் அவிழ்கின்ற போது, அதை எப்படி அவிழ்ப்பது என்பதை விளங்கிக் கொள்வது கடினமாகின்றது.
இன்று பல்வேறு சமூக முரண்பாடுகளுக்கு எதிராக விழிப்புற்று போராடும் போதும், ஒடுக்குமுறைகளிருந்து விடுபட முடிவதில்லை.
முழு மனித வாழ்வை மாற்றியமைக்கவில்லையெனில், மாற்றியமைக்கவே முடியாதவாறு, அனைத்தும் முழுமையுடன் இணைந்து, ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயங்குகின்றது. இதைத்தான் மார்க்சியம் முழுமையில் பேசுகின்றது. மனித வாழ்வின் சிக்கலானதும், முழுமையானதுமான கூறுகளை, அதன் காரண காரியங்களுடன், முரணற்றவகையில் ஒருங்கிணைந்த வண்ணம், மார்க்சியம் எடுத்துரைக்கின்றது.இதனாலேயே மார்க்சியத்தை எளிமைப்படுத்தி புரிந்து கொண்டு விட முடியாது. ஒரே தரத்தில், ஒரே பாய்ச்சலில் மார்க்சியத்தை கற்றுவிடவும், புரட்சியை செய்துவிடவும் முடியாது. மனித வாழ்வுடன், அதன் ஒருங்கிணைந்த போராட்டத்துடனேயே கற்க முடியும். மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருப்பதால், மார்க்சியம் அதையொட்டி தன்னை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு செல்லுகின்றது. முடிந்த முன் முடிவுகள், எதுவும் சூத்திர வடிவில் இருப்பதில்லை.
நாம் நடைமுறையுடன் கூடிய மாற்றங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டி இருக்கின்றது. எப்போது மாற்றத்துடனும், போராட்டத்துடனும் கற்பதை நிறுத்துகின்றோமோ, அப்போது மார்க்சியம் வரட்டு சூத்திரமாகிவிடும். மார்க்சியத்தை மிக எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளும் போது, அதை புரிந்து கொள்ள முடியாத அவநம்பிக்கையை உருவாக்கின்றது.
மார்க்சியம் முழுமை தழுவிய முரணற்ற தத்துவமாக இருப்பதால் தான், அனைவரும் இலகுவாக புரிந்துகொள்வதற்கு நடைமுறையுடன் கூடிய தொடர்ச்சியான கற்றல் அவசியமானது.
ஏங்கெல்ஸ் வார்த்தையில் சொன்னால் எங்கள் போதனை செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர வரட்டுச் சூத்திரம் அல்ல; இதையே லெனின் வார்த்தையில் மார்க்சியம் உயிரற்ற வரட்டு சூத்திரமல்ல செயலுக்கு உயிருள்ள வழிகாட்டி
ஏங்கெஸ்சின் வரலாற்றுப் பாத்திரம் என்பது, இன்றைய செயலுக்கான வழிகாட்டியே. மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ்சின் காலத்துக்கு முன்போ அல்லது பின்போ, எக்காலத்திலும் சமூக வளர்ச்சியிலும், அதன் மாற்றத்திலும் தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய பங்கு பற்றி ஒரு உயர்ந்த, உண்மையான, அறிவியல் கோட்பாடுகள் எவராலும் உருவாக்கப்படவில்லை. அந்தப் பெருமை மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் என்ற மாபெரும் தத்துவ மேதைகளையே சாரும்.
உண்மையான மானிட விடுதலை என்பதும், உண்மையான ஜனநாயகம் என்பதும், உண்மையான சுதந்திரம் என்பதும், மக்கள் பற்றிய பொதுவான சமூக நடைமுறைகளில் இருந்துதான் தெரிந்து கொள்ளமுடியும். அலங்காரமான வார்த்தை ஜாலங்களாலோ, ஏமாற்றுக்களாலோ, எதையும் எதார்த்த வாழ்வின் மீது மெய்ப்பித்து விட முடியாது. எதார்த்தம் கடந்து, எதுவும் உண்மையாகிவிடாது.
பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் உரிமை மனித உரிமையாக, ஜனநாயகமாக, சுதந்திரமாக இருக்கும் வரை, மனித விடுதலை என்பது போலியானது, கற்பனையானது. எத்தகைய விடுதலைக் கோட்பாடுகளும் சுரண்டி வாழும் உரிமையை அங்கீகரிக்கும் வரை, அவை அடிப்படையில் போலியானவை. அது தன்னளவில் ஏதோ ஒருவகையில் ஒடுக்கும் தன்மை கொண்டவையே.
எல்லா தத்துவ மற்றும் கோட்பாடுகளை விட, மார்க்சியம் உழைப்பைச் சுரண்டி வாழ்வதை மனிதவுரிமையாக அங்கீகரிப்பதில்லை. உழைப்பையும், கூலியையும் சமவுடமையைக் கூட அங்கீகரிப்பதில்லை. உழைப்பில் ஒருநாளும் சமவுடமையை உருவாக்கவே முடியாது. தேவைகளில் சம தேவை என்பது, ஒரு நாளும் இருக்கவே முடியாது. இயற்கையில் தனிமனிதனாக உயிர் வாழவே முடியாது என்பது எப்படிப்பட்ட உண்மையோ, சமூகமாக மட்டும் தான் உயிர் வாழ முடியும் என்பதே அடிப்படை உண்மை. மனிதனை உருவாக்கிய சமூகத்தன்மையும், மனித உழைப்புமே. அனைத்தும் இதற்குள் அடங்கும். இதனால் மனித உழைப்பை பொதுவுடமையாகவும், மனிதத் தேவையை சமூகத்தில் இருந்து சுதந்திரமாக எடுத்துக் கொள்ளும் இயற்கையின் தேர்வை முன்வைக்கின்றது. இதைத்தான் மார்க்சியம் முன்வைக்கின்றது. இயற்கை பற்றிய மனித அறிவு தான், சமூகம் பற்றிய அறிவுக்கான அடிப்படை. இதற்கு வெளியில் அல்ல.
இதற்கு மாறாக மனித உற்பத்தி மூலம் உருவாக்கிய பொருளை முதன்மைப்படுத்தி சிந்திக்கின்ற சிந்தனை முறை என்பது, இயற்கைக்கே விரோதமானது. மனித குலத்துக்கு எதிரானது. இது மனிதனின் உழைப்பின் மூலம் உருவான பொருளை, தனியுடமையாக்கி விடுகின்றது. இதை மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் உருவாக்கிய மார்க்சியம் விளக்குகின்றது.
இதை எதிர்த்தே தனியுடமையிலான சட்டங்கள், நீதிமன்றங்கள், ஒடுக்குமுறையலான அரச இயந்திரங்கள், அதை பாதுகாக்கும் அரசு அமைப்பு, அதை உருவாக்க ஜனநாயக வடிவங்கள், இதற்கு ஏற்ப மனித சுதந்திரம் குறித்த கோட்பாடுகளைக் .. கொண்டதே இன்றைய உலகமயமாதல் உலகம்.
ஆம் இந்த உலகமயமாதலை இன்று "ஒரு பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றது – அதுதான் கம்யூனிசம் என்னும் பூதம்". 1850 களில் "கம்யூனிச பூதம்" குறித்து கம்யூனிச கட்சி அறிக்கை எதைக் கூறுகின்றதோ, அது இன்று வரையான உண்மையாக இருப்பதுடன் தனியுடமை அஞ்சி நடுங்கும் ஒரே தத்துவமாக மார்க்சியம் இருக்கின்றது.
ஒடுக்குவோர் இந்தப் பூதத்தைக் கண்டு அஞ்சி நடுங்க, ஒடுக்கப்பட்டவர்கள் மூச்சுவிடுதற்கும், விடுதலைக்கு வழிய காட்டியாக இந்த கம்யூனிச பூதமே இருக்கின்றது. மனிதனை மனிதன் ஒடுக்கும் இன்றைய உலகமயமாதல் சமூக அமைப்பில், வாழ்தற்கான மனித போராட்டத்திற்கு வழிகாட்டும் தத்துவமாக மார்க்சியமே இருக்கின்றது.
இந்த மார்க்சியம் என்பது கற்பனையில் உருவானதல்ல. 1837 ஆண்டு மார்க்ஸ் கூறியது போல் "ஆழமான உண்மையைத் தேடுகிறேன். அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்" என்றார். ஆம் மக்களின் வாழ்க்கையில் இருந்து, அவர்களின் வாழ்வு மீதான அன்பில் இருந்து மார்க்ஸ்சும், எங்கெல்ஸ்சும் இணைபிரியாத ஒரு போராட்டத்தில் இருந்து கண்டு எடுத்தனர்.
அந்த போராட்டம் என்பது கற்பனையிலானதல்ல. மார்க்ஸ் தனது மகள் இறந்த போது தன் இணைபிரியா தோழருக்கு எழுதிய கடிதத்தில் "இந்நாட்களில் நான் அனுபவித்த மிகையான துன்பங்களுக்கு இடையேயும் உன் நட்பும் நாம் இவ்வுலகத்திற்கு செய்ய வேண்டிய அறிவார்ந்த பணியும் இருக்கின்றது என்ற நம்பிக்கையுமே என்னை நிமிர்த்தி வைத்துள்ளது" என்றார். மார்க்சியம் உருவான வரலாறு இப்படித்தான்.
குறைந்தபட்ச தேவையைக் கூட பெறமுடியாது, அடுத்த நேரம் உணவுக்கு வழிதெரியாத வாழ்க்கை போராட்டத்தின் போது, மார்க்சின் குழந்தைகள் இறக்கின்றனர். அப்போது மார்க்சியத்தை எழுத மார்க்ஸ்சுக்கு துணை நின்ற தோழி ஜென்னி ஒரு தாயாக எழுதுகின்றார் “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்தக் குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை;" எத்தகைய சூழல். இங்கு தான், மார்க்சியமென்னும் குழந்தை பிறந்து வளர்ந்தது.
மார்க்சியதுக்கு உயிர் கொடுக்கும் இந்த வாழ்க்கையின் போராட்டத்தில் தன்னோடு பயணித்த ஏங்கெஸ்சுக்கு 1862 இல் எழுதுகின்றார் "நானும் குழந்தைகளும் செத்து விட்டால் நல்லது என்று என் மனைவி தினமும் சொல்கின்றாள். நான் அவளைக் குறை கூற முடியாது. இந்த நிலைமையில் நாங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய அவமரியாதைகளும் கடும் துன்பங்களும் பயங்கரங்களும் உண்மையிலேயே வர்ணிக்க முடியாதவை" என்கின்றார். தாயாக பெண்ணின் கொடூரமான வாழ்க்கை சூழல் வருணிக்க முடியாதவை. இன்று வறுமையில், ஒடுக்குமுறைகளின் பல பெண்கள் சந்திக்கின்ற துயரங்களுக்கு நிகரானது. மனித வாழ்வுக்கு தேவையான பொருளை மனிதனுக்கு வழங்க மறுக்கும் தனியுடமை அமைப்பு, தனிமனித எழுத்து சுதந்திரத்தை முடக்க வறுமையை பரிசாக கொடுத்தது.
மாறாக மார்க்ஸ் தனியுடமையை புகழ்ந்து எழுதி இருந்தால் எப்படிப்பட்ட வாழ்க்கையை தங்கத் தட்டில் வைத்து கொடுத்து இருக்கும் என்பதை இன்றைய உலகில் நடப்பதை ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும்.
இப்படிப்பட்ட துயரமான, கொடுமையான வாழ்க்கைப் போராட்டத்தை நடத்திய மார்க்ஸ்சை ஜென்னி விரும்பிய காரணம் என்ன? ”மனிதன் தனக்காக மட்டுமே வாழ்பவன் அல்லன், அவன் சக மனிதர்களுக்காகவும் பாடுபட வேண்டும். தனக்காகப் பாடுபடுபவன் நல்ல சிந்தனையாளனாக இருக்கலாம், நல்ல நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், நல்ல மனிதனாக இருக்க முடியாது" என்ற மார்க்ஸ்சின் உணர்வுபூர்வமான நடைமுறை வாழ்க்கையுடன், ஜென்னியுடன் நடத்திய வாழ்க்கைப் போராட்டமும், ஏங்கெல்ஸ்சின் தோழமையும் ஈடு இணையற்றது.
அனைத்து மனிதர்களை நேசிக்கின்ற, மனிதர்கள் மீதான ஒடுக்குமுறையில் இருந்து மீட்டெடுக்கின்ற போராட்டம், மார்க்ஸ் ஏங்கெல்ஸ்சுக்கு உரியதாக இருந்தது. இதையே மார்க்ஸ் "நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயற்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகியது!" இதை முன்னின்று வழிநடத்திய கார்ல் மார்க்ஸ் தடங்களில், ஏங்கெல்ஸ் கால் தடங்களை என்றும் வேறு பிரித்தறிய முடியாதாகியுள்ளது மனித வரலாறு.
லண்டன் ஹைகேட்டில், 1883, மார்ச் 17ம் தேதி காரல் மார்க்ஸின் சிதையருகே நின்று ஒரு சிலர் முன் ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையின் கடைசி வாக்கியம் இதுதான் "அவரது பெயர் காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும்"ஆம் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலை நோக்கிய போராட்டத்தில் மார்க்சியம் இன்றி வேறு வடிவத்தில், போராடி வெற்றி பெற முடியாது என்பது உண்மையாகி நிற்கின்றது. மார்க்சியம் என்பது எல்லா ஒடுக்குமுறைக்குமான அகக்காரணத்தைக் கொண்டு உலகை முரணற்ற வகையில், முழுமையில் விளக்குகின்ற உண்மை, காலத்தைக் கடந்து எம்முன் ஒளியாகி நிற்கின்றது.
முதலாளித்துவம் என்பது பொய்களின் மேல் வாழ்வதே. தனியுடமை சிந்தனையை ஏற்றுக் கொண்ட எல்லா வகையான சிந்தனைகளும், உண்மையைச் சார்ந்து இருப்பதில்லை.
ஜெர்மனிய நாஜி தத்துவவாதியான கோயரிங் கூறியது போல்
"தலைவர்கள் தாம் விரும்பியபடியெல்லாம் மக்களை ஆட்டுவிக்க முடியும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். நாம் தாக்கப்படுகிறோம் என்று சொல்லுங்கள். சமாதானம் பேசுபவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லையென்றும், நாட்டை ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள் என்றும் தூற்றுங்கள். இந்தச் சூத்திரம் எந்த நாட்டிலும் வேலை செய்யும்."
இதுதான் தனியுடமை அமைப்பின் பிரச்சார அடித்தளம். தனியுடமை ஏற்றுக் கொள்ளும் எந்த விடுதலைக் கோட்பாடுகளும் இதையே அடிப்படையாக கொள்கின்றது. இனம், மதம், சாதி, பால், நிறம் .. ஒடுக்குமுறைக்கு எதிராக தனியுடமை ஏற்றுக்கொண்டு போராடும் போது, முரண்கொண்டதாகவும் – தன்னகத்தே ஒடுக்குமுறை கொண்டதாகவுமே இயங்குகின்றது.
இந்த அணுகுமுறை தான் உலகமயமாதலின் இன்றைய எல்லா ஒடுக்குமுறை கூறுகளிலும் தனியுடமை ஆதரவு விடுதலை போராட்டங்களிலும் கையாளப்படுகின்றது. ஒரு எதிரி கட்டமைக்கப்பட்டு காட்டப்படுகின்றது. இதன் மூலம் மக்களை வெறும் மந்தைக் கூட்டங்களாக தம்பக்கம் அணிதிரட்ட முனைகின்றனர். இதன் மூலம் மனித அடிமைத்தனத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும், மிருகத்தனத்தையும் அடிப்படையாகக் கொண்ட சமூக உணர்வுகளை, உலகமயமாதலின் நுகர்வுக்குரிய உணர்வாகின்றது. இதற்காக பொய்யையும், புரட்டையும் உள்ளடக்கிய பரபரப்புகளூடாக மனித அறிவையே திறனற்றதாக்குகின்றனர். அவை, சுய சிந்தனை முறையையும், கேள்வி கேட்கும் விமர்சன, சுயவிமர்சன முறையையும் தகர்க்கின்றது. ஒரு மனிதன் தன் சுயம் என்று கருதுவது, உலகமயமாதல் கொடுக்கும் நுகர்வைத் தான். மனிதனின் பொழுது போக்கு இடமாக சந்தையும், சந்தைக்குரிய இடங்களும் மாறிவிட்டது. இதன் மூலம் இயற்கை மறுதளிக்கப்பட்டு, நுகர்வது எப்படி எந்த வடிவில் நுகர்வது என்பதே, அறிவாக மாறி இருக்கின்றது.
சுதந்திரமான சந்தையே அனைத்துக்குமான சமூக அடிப்படையாகிவிட்டது. இதன் மூலம் மனித உழைப்பையும், வாழ்வையும் சூறையாடுவதே உலகமயமாதலின் குறிக்கோளாக இருக்கின்றது. தனிமனித சமூக அமைப்பே உலகம் என்ற கோட்பாடு முதன்மை பெற்று இயங்குகின்றது. தனிமனித நலனை மையப்படுத்தி, பிற அனைத்தையும் அழிக்கின்றது. இதன் விளைவாக அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும் மனிதருக்கிடையிலான ஒரேயொரு சமூக உறவாக்க முனைகின்றது. இதன் மூலம் உலகின் அனைத்துச் செல்வத்தையும், தனியொருவனின் தனிப்பட்ட சொத்தாக மாற்ற முனைகின்றது.
இத்தகைய தனியுடமை நடத்தையை மார்க்ஸ் ஏங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் "ஒரு துண்டுச் சதை, ஒரு நரம்பு, ஒருதுளி இரத்தம் இருக்கும் வரை கதையில் வருகின்ற உயிருள்ள மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் பணம் போன்று, மூலதனமானது அவனை முழுதும் சுரண்டாமல் அவன்மீது தான் கொண்ட பிடிப்பைத் தளர்த்தாது" என்கின்றார். இது பொய்யென்று, எதார்த்ததில் யாரும் நிறுவ முடியாது.
உலகில் பேய் பற்றிய கற்பனையான புனைவுகள் எதுவாக இருந்தாலும், எதார்த்தத்தில் எது பேயாக இருக்கின்றதோ, அதையே மார்க்ஸ் தெளிவாகவே படம் பிடித்துக் காட்டுகின்றார். அந்தப் பேய், தனிநபர்களின் கையில் குவியும் பணம். இந்த பணத்தை முழுமையாக தனதாக்கும் வரை, மனித உழைப்பின் இறுதி மூச்சுவரை சுரண்டுவதை மூலதனம் நிறுத்துவதில்லை. இதுதான் இந்த அமைப்பு முறை.
மூலதனத்திற்கு மனித அறம் கிடையாது. மனிதனைத் துன்புறுத்தி கொழுக்கும் இன்பம் தான், அதன் இலட்சியம். ஏங்கெல்ஸ் வார்த்தையில் “ஆளும் வர்க்கத்தின் நலனுக்குத் தேவைப்படும் வரை மட்டுமே தொழிலாளியை வாழ அனுமதிக்கின்றது. இதனால் இந்த இழிவான தன்மையைத்தான் நாங்கள் அழித்திட விரும்புகிறோம்” என்றார் ஏங்கெல்ஸ்.
ஏங்கெல்ஸ் கூறுகிறார் "உலகின் ஒற்றுமை என்பது அதன் வாழ்நிலையில் அடங்கியிருக்கவில்லை உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாதார தன்மையில் அடங்கியிருக்கின்றது." இதிலிருந்து தான் வர்க்க போராட்டம் நீறு கொண்ட நெருப்பாக, அணைக்கவே முடியாத மனித வரலாறாக இருக்கின்றது.
முலதனம் அஞ்சி நடுங்கும் கம்யூனிசம் என்னும் பூதம், மானிட விடுதலைக்கும் அதன் மகிழ்ச்சிக்குமான படிகற்களாக இருக்கின்றது. அதற்கான ஆயுதமாக இருக்கும் மார்க்சியம், தத்துவார்த்த ரீதியாக மனித குலத்தை வழிகாட்டுகின்றது.
மார்க்ஸின் கால் தடங்களிலிருந்து ஏங்கெல்ஸை பிரிக்க முடியாது
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode