தமிழினவாதம் தன் சொந்த இனவாத அரசியலை, அதன் ஜனநாயக மறுப்பை, அதன் பாசிசப் போக்கை விமர்சிப்பதில்லை. மக்களின் விடுதலைக்காக தனது கடந்தகால மக்கள் விரோத அரசியலை சுயவிமர்சனம் செய்வதில்லை. தமிழினவாத அரசியல் பின்னணியில் புலியின் கடந்தகால மக்கள் விரோத அரசியலையும், அதன் பாசிச ஆட்சியமைப்பு முறையையும் கொண்டாடுகின்றவர்களே. இவர்கள் தான் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை பயணிக்கின்றனர்.
1987 இல் மக்களும் மாணவர்களும் இணைந்து நடத்திய பாதயாத்திரையை, புலிக்குண்டர்கள் அடித்து நொருக்கிய அன்றைய வரலாற்றுக்கு இன்றும் அரசியல் நியாயம் பேசக் கூடியவர்களே, இன்று பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை பேரணி நடத்துகின்றனர்.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை தமிழினவாதிகள் நடத்துகின்ற இந்தப் பேரணி, ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரான அரசியலை முன்வைத்து நடத்தப்படவில்லை. தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற வர்க்கமும், அது தன்னைச் சமூகத்தில் நிலைநிறுத்தியுள்ள சாதி சமூக மேலாண்மையை முன்னிறுத்தியே இந்தப் பேரணியை நடத்துகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் இலங்கை அரசு, பாராளுமன்ற எம்.பி களுக்கு சலுகையாக கொடுத்த குளிரூட்டப்பட்ட சொகுசு வாகனங்களிலும், அந்த இனவாத அரசின் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை இந்த தமிழினவாத போராட்டத்தை நடத்துகின்றனர். இது எந்தவகையிலும் இன ரீதியாக ஒடுக்கப்படும் தமிழ்மொழி பேசும் மக்களுக்கானதல்ல. தங்கள் வர்க்க ரீதியான அரசியல் இருப்புக்கானது.
இந்த நவதாராளவாத தேர்தல் கூத்தாடிகளின் பின் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அரபு மொழிக் கோசங்களுடன் தொப்பிகளை அணிந்தபடி தங்களை முன்னிறுத்துகின்றனர். இந்துத்துவக் காவி அடிப்படைவாதிகளும், தங்கள் காவிகளுடன் தம் சாதிய பூணூலுடன் தம்மை முன்னிறுத்திக் கொள்கின்றனர். கோடிகோடியாக பணத்தின் மேல் படுத்துப் புரளும் கிறிஸ்துவ மதவாதிகள் தங்கள் மத அடிப்படைவாதத்தை பறைசாற்றும் உடைகளுடன் தம் பங்குக்கு காவடி எடுக்கின்றனர். ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுடன் மக்களாக தம்மை முன்னிறுத்தாது, தத்தம் ஒடுக்கும் இன, வர்க்க, சாதி, மத அடையாளங்களுடன் போராட்டத்துக்கு காட்சியளிக்கின்றனர். இப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எல்லா சமூகவிரோதிகளும் கூடிக் கூத்தாடிகளாக கும்மியடிக்க, அரங்கேறிய தமிழினவாதக் கூத்து, எந்தவகையிலும் எப்படித் தேடினாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானதல்ல. பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை இயங்கும் சர்வதேசிய நாடுகளின் பொருளாதார நலன்களும், புலம்பெயர் தமிழினவாதிகளின் இனத்தை சொல்லிப் பிழைக்கும் பிழைப்புவாதிகளும் ஒருங்கிணைந்து – வெறுமையான தமிழினவாத உணர்ச்சி நாடகங்களே அரசியலாக அரங்கேறின.
காலகாலமாக ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காது வாக்குப் போடும் பரம்பரையில் வளர்ந்த சிலர் இதில் கலந்து கொள்ள, வேடிக்கை பார்க்க சென்றோரையும் காட்டியே, பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது.
இதற்குப் பதிலளிக்கும் அடுத்த சுற்று இனவாதத்துக்காக சிங்கள இனவாதிகளும்;, பௌத்த அடிப்படைவாதிகளும் தயாராகின்றனர். தம் பங்குக்கு இதை வேறு வடிவில் தொடங்குவார்கள். மாறி மாறி இதுதான் நடக்கும். இனவாதத்தை தடுக்க, இனவாத ஒடுக்குமுறையை நிறுத்த, தமிழினவாதம் ஒருநாளும் உதவாது. தமிழினவாதமல்லாத அரசியல் சிங்கள இனவாதமல்லாத மக்களுடன் இணைந்தால் மட்டும் தான், இனவொடுக்குமுறையையும் - இனவாதத்தையும் ஒழிக்கும்.
இன்று பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை பேரணி குறித்து கூச்சல் போட்டு கும்மியடிக்கும் கூட்டம், புலிகளின் ஜனநாயக மீறலையும் - அதன் பாசிசத்தையும், அது முன்வைத்த தமிழினவாத அரசியலையும் என்றைக்கும் விமர்சிப்பது கிடையாது. மாறாக புலியையும், அது முன்வைத்த தமிழினவாத அரசியலையும் ஆதரித்துக் கொண்டு - அனைத்தையும் அரங்கேற்றுகின்றனர்;.
இல்லை நாங்கள் தமிழினவாதியாக, மதவாதியாக முன்னிறுத்திப் போராடுவது எங்கள் ஜனநாயக உரிமை, போராட்டம் என்று, இனவாதத்துக்கும் - மதவாதத்துக்கும் ஜனநாயக விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் பச்சோந்திகளுக்கும், வரலாற்று அறிவற்ற இனவாதிகளுக்கும், இருட்டடிப்பு செய்ய கடந்தகால போராட்ட வரலாற்றைக் கொண்டு பதிலளிக்க வேண்டி இருக்கின்றது.
"யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள்"; என்ற நூலுக்காக எழுதும் எனது வரலாற்று தொடரில் இருந்து, இன்றைய உடன் வரலாற்று தேவை கருதி சிலவற்றை இங்கு எடுத்துக் காட்ட முடியும்;.
24.11.1987 ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் - பொது மக்களும் இணைந்து, ஏழு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர். ஆயிரக்கணக்கான மாணவர்கள், மக்களும் இணைந்து நடத்திய அன்றைய ஊர்வலம் குறித்து, அன்றைய செய்தி பத்திரிகைகள் தங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றது. இது தமிழினவாதிகளுக்கு எதிரான, வெறும் கற்பனையல்ல. (பார்க்க ஈழநாடு 25.11.1987)
இந்தப் போராட்டத்தை ஒடுக்க புலிகள் அன்றைய தினம் வடக்கில் கர்த்தாலை அறிவித்து, போக்குவரத்தை முடக்கினர். பாடசாலைகளும் விடுமுறையை அறிவித்தனர். இது நடந்த அரசியல் சூழல் என்பது, ரெலோ அழிக்கப்பட்ட பின், ஒரு சில நாட்களுக்கு முன் புளட் தடை செய்யப்பட்டிருந்த காலம்;. பலநூறு பேர் வீதிகளில் கொல்லப்பட்ட, பல நூறு பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்த காலம்;. புலிப் பயங்கரவாதம் நிலவிய சூழல். இந்த ஊர்வலம் நடந்து பத்து நாட்களில் பின் ஈ.பி.ஆர்.எல்.எப் தடைசெய்யப்படுகின்றது. இப்படிப்பட்ட தமிழினவாத புலிப் பயங்கரவாதம் நிலவிய சூழலில், பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க, தனியார் பேருந்துகளில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றக் கூடாது என்றனர். போராட்டத்துக்கு ஆதரவானவர்களை ஏற்றி வரக் கூடாது என்றனர். சகல தனியார் பஸ்களும் தாம் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு எதிராக நடத்தவுள்ள போட்டி ஊர்வலத்துக்கு ஆட்களை ஏற்ற வேண்டும், எனவே மதியம் வரை பஸ்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இப்படிப்பட்ட பயங்கரவாதத்தை தமிழ் மக்கள் மேல் ஏவிய சூழலில், அன்று இரு ஊர்வலங்கள் நடந்தன. அன்று என்ன நடந்தது என்பது, 25.11.1987 இல் ஈழநாடு செய்தியாக்கி இருக்கின்றது. எமது போராட்டத்தின் முன் திட்டமிட்டே புலிகள் தங்கள் ஆயுதமேந்திய ஊர்வலத்தை கொண்டு வந்து நிறுத்தினர். அன்றைய அந்தப் போராட்டத்தை முன்னின்று தலைமை தாங்கி நடத்திச் சென்றவன் என்ற வகையில், போராட்டத்தை நடத்த வேண்டிய பொறுப்பில் இருந்தே அதை வழி நடத்தினேன். நவீன ஆயுதங்கள் கொண்ட ஊர்வலங்களைக் கொண்டு, எம்மை கொன்றுவிடப் போவதாக மிரட்டினர். கலைந்து செல்லக் கோரினர். நாம் இதை மறுத்துடன், ஆயிரக்கணக்கான மக்களும் மாணவர்களும் வீதி நெடுகிலும் அமர்ந்ததுடன், ஜனநாயக கோசங்களை எழுப்பத் தொடங்கினோம்.
மாணவர்களினதும் - மக்களினதும் போர்க்குணாம்சம் கொண்ட போராட்டத்தைக் கண்டு பின்வாங்கிய புலிகள், தங்களது ஆயுதம் தாங்கிய ஊர்வலத்தை வேறு திசையில் திருப்பி நல்லூரை சென்று அடைந்தனர். அங்கு அவர்கள் நடத்திய கூட்டத்தில் கிட்டு «தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான சில சக்திகள் எமக்கெதிராக சில பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்த போதிலும், அவற்றுக்கு மத்தியில் நீங்கள் எமது கோரிக்கைக்கும் எவ்வளவு ஒத்துழைப்பு வழங்குகின்றீர்கள் என்பதை இக் கூட்டம் எடுத்துக் காட்டுகின்றது» என்று திரு கிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்" என்ற செய்தியை ஈழநாடு வெளியிட்டு இருக்கின்றது.புலிகளுக்கும், அதன் ஜனநாயக விரோத அரசியலுக்கும் இந்தப் போராட்டம் கொடுத்த அரசியல் நெருக்கடியை, கிட்டுவின் உரை பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றது. புலிகளுக்கு எதிரான போராட்டத்துக்கு பின்னால் இருந்தது, ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உணர்வு தான். புலிகளின் பின் இருந்தது பாசிசவுணர்வே. இப்படி மக்கள் தமிழினவாத புலிக்கு எதிராக போராடிய, தனித்துவமிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் இனவாதமல்லாத வரலாறு - எம் மக்களிடம் உண்டு.
மாணவர்கள் - மக்கள் நடத்திய போராட்டத்தை எதிர்த்த புலிகள் நடத்திய போட்டி ஊர்வலத்தின் பின் கிட்டு கூறிய, அதாவது "போராட்டத்துக்கு எதிரான சில சக்திகள்" அப்படி என்னதான் கோரினார்கள்?
"மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகை சுதந்திரம் வேண்டும்." என்றும்
"மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ, அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்" என்றே கோரினர்.
இவற்றைத் தான் தமிழினவாதிகளின் போராட்டத்துக்கு எதிரானதாக புலிகள் கூறினர். இன்று இனவாதம் பேசும் பல பத்து தமிழினவாத கட்சிகள், புலிகளின் இந்தப் பாசிச அரசியலை கேள்விக்குள்ளாக்குவதில்லை. புலிகள் இந்தக் கோரிக்கையை தமிழின விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்று கூறியதுடன், இதை "விடுதலைப்புலிகளை அரசியல் அனாதையாக்கும் கோரிக்கை" என்று, துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டனர். (பார்க்க ஈழநாடு 29.11.1987). இப்படிப்பட்ட புலிகளின் இனவாத பாசிச அரசியலை ஆதரித்துக் கொண்டு, பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை பயணிக்கின்றனர். இப்படிப் பயணிக்கின்ற கூட்டம், தாங்கள் புலிகளை விமர்சிக்கின்றோம் என்றும், புலிகளின் அரசியல் தவறானது என்றும் சொல்லட்டும் பார்ப்போம்! சொல்ல மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் அதிகாரத்துக்கு வந்தால், புலிகள் பாணியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பதே பொருள். பாசிசமே ஆட்சி மொழியாக இருக்கும்.
அன்று புலிக் குண்டர்கள் இதை மட்டும் செய்யவில்லை. 07.12.1987 அன்று மாணவர்கள் - மக்கள் இணைந்து நடத்திய நான்கு வெவ்வேறு பாதயாத்திரைகளை, ஒரே இரவில் புலிக் குண்டர்கள் அடித்து நொருக்கினர். (பார்க்க ஈழநாடு 09.12.1987). அன்று ஈழநாடு பத்திரிகை வெளியிட்ட தலையங்கங்கள் 'யாழ்-பல்கலைக்கழக யாத்திரிகைகள் மீது குண்டர்கள் தாக்குதல்", "குருதியுறைந்த நம் தேசத்தில் குண்டர்களின் அடக்குமுறை", "மாணவரின் நிலை கவலைக்கிடம்", என்று அமைப்புக் குழு முன்வைத்த செய்திக்கு தலைப்புகளையும், "ஜனநாயக அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு வேண்டும்" என்று ஈரோஸ் விடுத்த அறிக்கைகளையும், இந்தப் பத்திரிகையில் காண முடியும். அதில் உள்ளேயுள்ள செய்தியில் "இரவு தங்கி இருந்த இடத்தில் 20 மேற்பட்ட குண்டர்கள் மின்விளக்குகளை அடித்து நொருக்கிய பின், டோர்ச்லைட் மூலம் தாக்குதலை நடத்தினர். இப்படி தாக்க வந்தவர்கள் கைத்துப்பாக்கி, கிரனைட்டுகளுடன் சுற்றி வளைத்து தாக்கினர்… மாணவர் தப்பியோடினர்" மற்றொரு இடத்தில் தாத்குதலை நடத்தியவர்கள் "20 ஆயிரம் ரூபா பெறுமதி கொண்ட பொருட்களை திட்டமிட்டே அடித்து நொருக்கினர்." இப்படி நடந்த விரிவான தரவுகளை, மூடிமறைக்கப்பட்டுள்ள வரலாற்;றை, வெளிவரவுள்ள வரலாற்று தொடரில் காணலாம்.
தமிழினவாதம் என்பது இப்படிப்பட்ட பாசிசத்தையே, தமிழ்மக்கள் மேலான தனது அரசியல் அதிகாரமாக பேரினவாதிகளிடம் இருந்து கோரினர். கோருகின்றனர். பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்காக இவர்கள் போராடவில்லை. பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை முன்வைப்பது, ஜனநாயக விரோத புலிகளின் பாசிச ஆட்சிமுறையைத்தான். இதற்கு மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின், அனைத்து ஒடுக்குமுறையில் இருந்து விடுதலையை அல்ல.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை உறுமுகின்றவர்கள், புலிகளைக் கொண்டாடுபவர்களே
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode