Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒத்தோடியது யார் மறுத்தோடியது யார்?

சுழிபுரத்தில் ஆறு இளைஞர்கள் புளட்டினால் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் தோண்டிப் புதைக்கப்பட்டதனை ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

புளட்டின் பின்தளத்தில் பி.காம்பில் நடந்த சித்திரவதைகளையும் கொலைகளையும் ஒத்தோடியது யார்? ஒத்தூதியது யார்? மறுத்தோடியது யார்?

முதல் முதலில் ஒரு இயக்கத்தின் ரெலாவின் முகாமைத் தாக்கி அங்கிருந்தவர்களை தப்பித்துக் கூட போகாதபடி வளைத்துத் தாக்கி படுகொலை செய்தவர்கள் புளட் இயக்கத்தினர். கோண்டாவிலில் வைத்து ரெலா இயக்கத்தினை பூண்டோடு அழித்ததை ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியது யார்?

கூச் எனப்படும் ரெலா இயக்கப் போராளியை படுகொலை செய்த போது ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

தீப்பொறி புளட்டுக்கு எதிராக மறுத்தோடித் தலைமறைவாகிப் போனபோது அவர்களை அழிக்க ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

சந்ததியாரை கண்தோண்டி சித்திரவதை செய்து கொலை செய்து சாக்குப் பையில் வீசிய போது ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

புலிகளால் பின்நாட்களில் மாமனிதர் எனக் கொண்டாடப்பட்ட தாரகி சிவராம் (எஸ்.ஆர்) செய்த அகிலன் செல்வன் கொலைகளை ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

 

அதே சிவராம் தீப்பொறிக் குழுவினரை படுகொலை செய்ய துப்பாக்கியோடு வெறியோடு அலைந்ததை ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

பின்னர் தீப்பொறிக் குழு « கிட்டுவுக்கு கிறனைற் எறிந்து கொல்லும் தீர்மானம் எடுத்து அதனைச் செய்விக்கும் முடிவை ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

அவ்வாறு கிரனைற் எறிந்து கிட்டு கால் இழந்ததனால் அதன் பழி ஈ.பி.ஆர்.எல்.எவ். மேல் சுமத்தி «கந்தன் கருணை» படுகொலைகள் புலிகளால் நடாத்தப்பட்டு இரத்த ஆறு ஓடியதே, அதை ஒத்தோடியவர் யார் மறுத்தோடியவர்கள் யார்?

யாழ் ஆஸ்பத்திரிக்குள் வரலாற்றில் முதன் முதல் நோயாளர் வார்ட்டுக்குள் உள்நுழைந்து காயப்பட்ட நோயாளியாக சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த «போசா» என்பவனை கட்டிலில் வைத்தே புலிகள் சுட்டுக்கொன்ற போது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

ரெலோ இயக்கம் அவர்களின் உள்ளியக்க முரண்பாட்டால் மாறுபட்டு நின்றபோது பேச்சுவார்த்தைக்கென தாஸ் குழுவினரை யாழ் ஆஸ்பத்திரிக்குள் அழைத்து படுகொலை செய்தபோது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

ஆலாலசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் ரெலோ சுட்டுக்கொன்றபோது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

மனோ மாஸ்டரை புலிகள் சுட்டுக்கொன்ற போது ஒத்தோடியவர் யார் ! மறுத்தோடியவர் யார்?
நெப்போலியன் (தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை) படுகொலை செய்யப்பட்டபோது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ராக்கிங்குக்கு எதிராக போராடிய விஜிதரன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட போது ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

சக பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து இயக்கங்களுக்கும் முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரன், படுகொலைப் பட்டியலில் பேரிடப்பட்டு «பொபி» என்பவனால் பின்தொடர்ந்து சென்று சட்டநாதர் கோவில் வீதியில் சைக்கிளில் சென்றவேளை படுகொலை செய்தபோது ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

செல்வநிதி தியாகராஜா) பல்கலைக்கழக மாணவி «செல்வி» புவிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலையானபோது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

பல்கலைக்கழக மாணவன் தில்லை புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட போது ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

பல்கலைக்கழக பேராசிரியை ரஜனி திரணகம பல்கலைக்கழகம் விட்டு சயிக்கிளில் சென்றபோது பின்புறமாய் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட போது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

பல்கலைக்கழக மாணவன் தர்மலிங்கம் கடத்தப்பட்டு சித்திரவதைக்காளாக்கப்பட்டு படுகொலைக்காளான போது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

புதியதோர் உலகம் நாவல் ஆசிரியர் டொமினிக் (கேசவன், நோபர்ட்) புலிகளால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

ரமணி(என்.எல்.எவ்.ரி), அன்ரன் (வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்) (என்.எல்.எவ்.ரி) (விசுவானந்த தேவன்(என்.எல்.எவ்.ரி), ஒபரேய் தேவன் (ரெலா), பத்மநாபா (ஈ.பி.ஆர்.எல்.எவ்), சிறிசபாரத்தினம் (ரெலோ), அமிர்தலிங்கம் (தமிழரசுக்கட்சி, கூட்டணி), யோகேஸ்வரன் (யாழ். எம்.பி) (தமிழரசுக்கட்சி, கூட்டணி ), உமாமகேஸ்வரன் (புளட்), ஜெகன் (ரெலி) இயக்கத் தலைவர்கள் படுகொலைகள். ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

சுந்தரம் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட இறைகுமாரனையும், உமைகுமாரனையும் அளவெட்டியில் தோட்டத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டனர். இவைகளை ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

புலிகள் இலங்கை இராணுவத்துடன் கூட்டுவைத்துக் கொண்டு வவுனியாவில் புளட் முகாமை தாக்கியழித்த போது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

யாழ் சென் பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா மாணவர்களுக்கு இராணுவத்துடன் உதைபந்தாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

யாழ் மத்திய கல்லூரி அதிபர் இராஜதுரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

ஈ.பி.டி.பியினால் நடாத்தப்பட்ட படுகொலைகளோடு ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

இத்தனையும் நடந்தபோதும் பிரபல ஊடகங்களோடு இணைந்து ஊடகவியலாளர் என்ற பெரும் பெயரோடு அன்றும் இனந்தெரியாதவர்களால் சுடப்பட்டனர் என உண்மையை மறைத்து அன்றும் இன்றுவரையும் எந்த உண்மைகளையும் வாய்திறக்காது ஒத்தோதியவர்கள் யார்?

வெளிநாடுகளில் விடுதலை இயக்கங்கள் போதைவஸ்துக் கடத்தலை செய்து படுகொலைகளையும் செய்தபோது ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

இன்பம், செல்வம் தொடங்கி வெலிக்கடை சிறைக்கைதிகள் படுகொலை, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வரை பேரினவாதிகள் செய்த படுகொலைகளை இனவொடுக்குமுறைகளை ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

சிங்களக் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டபோது ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

முஸ்லிம் மக்கள் இரவோடிரவாக யாழில் இருந்தும் மூதூரிலிருந்தும் வெளியேற்றப்பட்டபோதும்
காத்தான்குடிப் பள்ளிவாசலிலும் கிராமங்களிலும் படுகொலை செய்யப்பட்டபோதும் ஒத்தோடியவர் யார்? மறுத்தோடியவர் யார்?

இந்திய இராணுவத்தோடு சேர்ந்தியங்கிய ஈ.என்.எல்.எவ் செய்த படுகொலைகளோடு ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

இந்திய இராணுவம் செய்த அத்துமீறல் யுத்தம் மற்றும் படுகொலைகளைகளோடு ஒத்தோடியது யார்?
மறுத்தோடியது யார்?

மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கத்தை தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்தபோது ஒத்தோடியது யார்? மறுத்தோடியது யார்?

இந்த படுமோசமான வரலாற்றில் பேரினவாத அரசு மற்றும் தமிழ் பாசிச இயக்கங்களின் ஒடுக்குமுறைகளும் படுகொலைகளும் கிளற கிளற வந்து கொண்டேயிருக்கும்.

கிளற கிளற வந்துகொண்டேயிருக்கும் இந்த வரலாறு முழுவதும் ஒத்தோடிகள் யார்? மறுத்தோடிகள் யார்?

இன்றும் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரைக்கும் போராட்டத்தில் இணைந்திருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் முதுகுக்குப் பின்னிருந்து அதே தங்கள் பழைய பாதைக்கு இழுத்தோடுவது யார்? எல்லா ஒடுக்குமுறைகளையும் மறுத்தோடுவது யார்?

இத்தனை அவலங்களையும் சுமந்து நிற்கும் ஒடுக்கப்படும் மக்களோடு ஒத்தோடுவது யார்? மறுத்தோடுவது யார்?