Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை முன்வைக்காது முன்வைக்கப்படும் எத்தகைய பிரிவினைவாதமும், எப்போதும் எங்கும் மக்களை ஒடுக்குகின்ற அரசியலே. ஒடுக்குமுறைகளைக் காட்டி முன்வைக்கும் பிரிவினைவாதம் ஊடாக, ஒடுக்கும் தங்கள் முகத்தை மூடிமறைக்க பயன்படுத்துகின்றனரே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அரசியலை முன்வைப்பதில்லை. வடக்குக்கு எதிராக கிழக்குப் பிரிவினையை முன்வைக்கும் பிள்ளையான் - ஸ்ராலின், ஒடுக்கும் தங்கள் தேர்தல் அரசியல் வெற்றிக்காகவே அதை முன்வைக்கின்றனரே ஒழிய, ஓடுக்கப்பட்ட கிழக்கு மக்களின் விடுதலைக்காகவல்ல. தமிழினவாதம் போன்று கிழக்கு வாதமும், வாக்குகளுக்காகவே பிரிவினைவாதத்தை முன்வைக்கின்றனர்.


கிழக்குப் பிரதேசவாதமும், யாழ்ப்பாணிய எதிர்ப்பாக ஏன் முன்வைக்கப்படுகின்றது என்ற நேரடி கேள்வியை பகுத்தறிவுடன் கேட்டால், மக்களை பிரிப்பதன் மூலம் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதே இதன் இலக்கு. தேர்தல் வெற்றி மூலம் பின்னர் அரசுக்கு உதவுவதே. இப்படி உதவுவதை பூசி மெழுகவே, கிழக்கு "அபிவிருத்தி" என்று, கட்டிட – வீதி விளம்பரங்களை முன்வைக்கின்றனர்.

வடக்கில் 1975 இல் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட துரையப்பாவின் ஒடுக்கும் அரசியலை நியாயப்படுத்த, அவர் முன்னின்று கட்டிய கட்டிடங்களைக் காட்டி செய்யும் அதே அரசியல் விளம்பரங்களையே பிள்ளையான் - ஸ்ராலின் கையாளுகின்றனர். புலிகள் துரையப்பாவைக் கொன்றதால், அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார் - உயிரிழந்தார் என்பதா பொருள்!? இல்லை, இதனால் புலிகள் கொன்றது சரி என்பதுமல்ல. தமிழினவாதமும், புலிகளும் துரையப்பாவைக் கொலை செய்ததன் மூலம், சமூகத்தின் ஜனநாயகத்தையே கொன்று ஒழித்தனர். புலியெதிர்ப்பு அரசியல் துரையப்பாவை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக காட்டுவதன் மூலம், தங்கள் இனவொடுக்குமுறை அரசியலை நியாயப்படுத்துகின்றனர்.

இப்படித்தான் புலியெதிர்ப்பு அரசியல் இன்று பல முனைகளில் புளுத்துக் கிடக்கின்றது. பிள்ளையானின்; தத்துவவாதியான ஸ்ராலின் (ஞானம்) இதைத்தான் முன்வைக்கின்றார். கட்டிட – வீதி விளம்பரங்கள், மூலம் ஒடுக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு "யாழ்ப்பாணியத்தில்" இருந்து விடுதலையாம்! நம்புங்கள்!!

இன்றைய இந்தக் கிழக்குப் பிரிவினைவாதத்தை புலிகள் காலத்தில் கருணா மூலம் முன்வைத்தவர் சிவராம் என்ற சதிகாரன். அவன் தனது இறுதிக் காலம் வரை "ஒத்தோடி" குறித்து புலம்பும், அசோக்குடன் ஒத்தோடியாகவே செயற்பட்டவர். அசோக் கிழக்கு பிரிவினையை முன்வைத்த புலிப்பிளவுக்கு அரசியல் விளக்கம் கொடுத்த சிவராமுக்கு எதிராக மறுத்தோடியது கிடையாது. சிவராம் அன்னிய நாடுகளின் உளவாளியாக செயற்பட்டதுடன், புலிகளைப் பிளக்க புலிகளின் ஜனநாயகமற்ற அதிகார முரண்பாட்டுக்கு கிழக்கு பிரிவினைவாதமாக அரசியல் விளக்கம் கொடுத்துப் புலியைப் பிளந்தவர்;. கருணா உருவாக்கிய பிள்ளையானையும், அவரின் தத்துவஞானி ஸ்ராலினையும் "ஒத்தோடி" என்று முன்வைக்கும் அசோக், கிழக்கு பிரிவினையை முன்வைத்து கருணாவை முன்னிறுத்திய சிவராமின் இணைபிரியாத அரசியல் கூட்டாளி. இந்த சிவராம் புளட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்களை கொன்ற பின்னணியில், அப்போது தளத்தில் புளட்டுக்கு பொறுப்பாக இருந்த மத்தியகுழு உறுப்பினரான அசோக் உத்தரவிட்டதை, யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்; அறிக்கையாக ஆவணப்படுத்தியுள்ளது. இந்த சிவராமின் பாரிஸ் வருகைகளின் போது, ஒன்றாகவே அசோக்கோடு கூடி சதிகளை வகுத்தவர்கள், அரசியல்ரீதியாக தம்மை வேறுபடுத்தி, ஒரு நாளும் பிரிந்து நின்றது கிடையாது. கிழக்கு பிரிவினைவாதம் இந்தக் கூட்டுக் கயவாளிகளின் பின்னணியில் ஆரம்பித்து, இன்று பிள்ளையான் - ஸ்ராலின் கூட்டாக வக்கிரமடைந்து இருக்கின்றது.

கிழக்கு மையவாதமும் பிரிவினைவாதமும் யாழ்மையவாதத்தின் உள்ளான அதிகார முரண்பாடுகளே. எப்படி யாழ்மையவாதம் தமிழினவாதத்தைக் கையாண்டு வருகின்றதோ, அதே அடிப்படையில் கிழக்கு மையவாதமும் தன்னை முன்னிறுத்துகின்றது. யாழ் மையவாதமும் கிழக்கு மையவாதமும், வெள்ளாளிய சமூகத்தின் அதிகாரத்தின் அக முரண்பாடுகளே ஒழிய. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி ஒன்றிணைக்கும் முரண்பாடுகளல்ல.

கிழக்கு மக்களின் மேலான பிரதேசவாத ஒடுக்குமுறை என்பது, தமிழினவாதத்தின் அரசியல் கூறாகவே இருந்து வந்தது. இது கிழக்குக்கு மட்டுமல்ல, வடக்கிலும் இந்த பிரதேசவாதங்களே காணப்படுகின்றது. வெள்ளாளிய சமூக அமைப்பில் சாதியம், ஆணாதிக்கம், வர்க்க ரீதியான ஒடுக்குமுறை என்று, தமிழனைத் தமிழன் ஒடுக்கும் பலமுனையிலான சமூக ஒடுக்குமுறையில் கிழக்கு விதிவிலக்கல்ல. இதற்கு எதிராக கிழக்கில் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து, பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராடாத அரசியல் என்பது, கிழக்கின் பெயரிலான அதே வெள்ளாளிய யாழ்ப்பாணியமே.

புலிகள் ஆயுதமேந்தி ஒடுக்கப்பட்ட தமிழ்மக்கள் மேல் வன்முறையைக் கையாண்ட போது, அதற்கு தத்துவ விளக்கம் வழங்கிய பாலசிங்கம் போல், பிள்ளையானின் ஒடுக்குமுறை அரசியலுக்கு ஸ்ராலின் "புரட்சிகர" விளக்கம் கொடுத்து வாக்குப் பெறுவதன் மூலம், ஒடுக்கும் அரசுக்கு முண்டு கொடுக்கின்றார்.

ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்தும் வடிவில், ஒடுக்குமுறைகளை எதிர்த்து இது போராடுவதில்லை. பிள்ளையானும் - ஸ்ராலினும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கு எதிரான பிரிவினைவாதிகளாக, தமிழினவாத பிரிவினைவாதிகள் முன்வைக்கும் அதே வெள்ளாளிய அரசியலையே தம் பங்குக்கு தொடருகின்றனர்.

இதை மூடிமறைக்க முன்வைக்கும் கிழக்கு "அபிவிருத்தி" அரசியல் 12 வருடங்களுக்கு முந்தையது. அரசு வடக்கின் "வசந்தமும்", கிழக்கின் "உதயமும்" என்று கூறி, வட்டி கட்டவென திணிக்கப்பட்ட பன்னாட்டு நிதிமூலதனத்தை கொண்டு, வீதிகளையும் கட்டிடங்களையும் கட்டிக் குவித்ததன் எச்சமே, கிழக்கு "அபிவிருத்தி" என்ற பிரிவினைவாத அரசியல் நாடகம். மக்கள்நலன் சமூக பொருளாதாரத்துக்கு நிதிமூலதனத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற சர்வதேச நிதிமூலதன நிபந்தனைக்கு அடிபணிந்து உருவாக்கப்பட்ட, பிள்ளையானின் கட்டிட அபிவிருத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதல்ல.

தேர்தல் வாக்குகளுக்காக, கட்டிட விளம்பரங்கள், கட்டிடங்களாகின்றது. இதைத்தான் கிழக்கு அரசியலாக ஸ்ராலின் (ஞானம்) தலைமையில், விளம்பரங்கள், கோட்பாடுகள், தர்க்கங்களாக முன்வைக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளையும், பிரபாகரனின் தனிநபர் நடவடிக்கையையும் தமிழ் மக்களின் விடுதலையாக, விடுதலைப்புலிகளின் தத்துவஞானி பாலசிங்கம் எப்படி முன்னிறுத்தினாரோ, அதையே அதே பாணியில் ஸ்ராலின் (ஞானம்) ஒரு பாலசிங்கமாக இறங்கியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட கிழக்கு மக்களின் விடுதலை என்பது, அனைத்து இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையுடன் ஒருங்கிணைந்தது, என்பதை மறுக்கும் பிரிவினைவாதம், வெள்ளாளிய தமிழினவாத பிரிவினைவாதத்தின் மற்றொரு அரசியல் நகலே.