தமிழினவாதத்தை முன்வைக்கும் இலங்கைத் தமிழர்களின் சமூக அமைப்புமுறையும் - சிந்தனைமுறையும் வெள்ளாளியமே. இந்தியாவைப் போல் பார்ப்பனியமல்ல. பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவ பார்ப்பனிய பாசிசக் கண்ணோட்டத்துக்கு இந்த வெள்ளாளியம் முரணாக இருந்த போதும், இரண்டும் ஒரு நாணயத்தின் இரு வேறு பக்கங்களே.
சாதிய சமூக படிநிலையில் பூனூல் போட்ட பார்ப்பனர்களுக்கு உயர்ந்த இடம் என்பது, வெள்ளாளிய சமூக அமைப்பில் சடங்குகள், சம்பிரதாயங்கள் மூலமான வெறும் அங்கீகாரமே. கலாச்சார ரீதியான இந்த பூனூல் அதிகாரமானது, அரசியல் - பொருளாதாரம் சார்ந்த அதிகாரமாக இருப்பதில்லை. இந்த நிலைமை இன்று படிப்படியாக மாற்றப்படுகின்றது. சமூக அதிகாரம் கொண்ட தரப்பாக, அவர்களே தீர்மானங்கள் எடுக்கும் சக்தியாக மாற்றுகின்ற முயற்சியில், கணிசமான அளவுக்கு வெற்றி பெற்று வருகின்றனர். இந்த அரசியல் பிரதிபலிப்பு தான், பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை கிளை – மற்றும் இலங்கை கட்சி பற்றிய அறிவிப்புகள். தமிழினவாதம் பேசும் வடகிழக்கைச் சார்ந்த தேர்தல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் நபர்கள், மதம் சார்ந்து கட்சி அமைப்பது பற்றிய அறிவிப்புகள் முதல், இந்திய பாராளுமன்றத்திற்கு எமது இந்து பிரதிநிதிகளை அனுப்புவது பற்றி பேசுகின்ற அளவுக்கு இந்திய கைக்கூலிகளாகவும், இந்திய நலனை முன்வைத்து அதீதமான தமிழினவாதத்தை முன்வைப்பவராகவும் தம்மை முன்னிறுத்துகின்றனர். இலங்கை தமிழினவாதமான, இந்துத்துவ வடிவத்தை பெற்று வருகின்றது.
இலங்கை மேலான பிராந்திய மேலாதிக்க போட்டியில் சீனாவுக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான மோதலின் அங்கமாகவே, இந்த இந்துத்துவ காவிக் கூட்டம் அரசியல்; களத்தில் இறக்கி விடப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் காவி மயமாக்கமும் மறுபக்கம் இலங்கை அரசை மிரட்டி அடிபணிய வைப்பது என்ற இந்திய பார்ப்பனிய கொள்கையும் முன்வைக்கப்படுகின்றது.
இந்திய இந்துத்துவ பார்ப்பனிய ஆட்சி அதிகாரமானது, இலங்கை மேலான தனது பிராந்திய மேலாதிக்கத்தை இந்துத்துவம் மூலமும் கையாளுகின்றது. இலங்கை தமிழினவாத தேர்தல் கட்சிகளும், இலங்கை காவிக் கும்பலும் செய்கின்ற அண்மைய தமிழினவாத கூச்சல்கள் இந்த பின்னணியில் இருந்து எழுவதே.
1983 களில் ஆயுதப் பயிற்சி கொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்தியக் கூலிப்படைகளை தமிழினவாதமாக்கிய அதே அடிப்படையில், இன்று காவி மயமாக்கிய தமிழினவாத இந்தியக் கூலிக் கும்பல்களின் போராட்டங்களாக கட்டமைக்கின்றது.
இந்த அரசியல் பின்னணியில் புதிய கோயில்கள், புதிய கடவுள்கள், புதிய சடங்குகள், பழைய கலாச்சார வடிவங்களுக்குள் புகும் இந்துத்துவ மாற்றங்கள், பதிய மத அடையாளங்கள், எங்கும் காவி மயமாதல் .. மூலமான மாற்றங்களின் பின், காவி உடை அணிந்த கூட்டம் - அதிகாரத்தின் அடையாளமாக தங்களை முன்னிறுத்தி வருகின்றனர். இது அண்மைய மாற்றங்களாகும்;;.
தலைமுறை தலைமுறையாக பண்பட்ட வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் கூட, இன்று காவி மயமாகின்றது. மதம் கடந்த எதையும் சுயாதீனமான வாழ்வியல் கூறாக காட்ட முடியாத அளவுக்கு, மனித பண்பாட்டுக் கூறுகள் காவிமயமாகின்றது.
வடகிழக்கில் நடக்கின்ற மாற்றங்கள் அனைத்தும், இந்தியாவின் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலுடன் தொடர்புபட்டதே. இலங்கையில் வெள்ளாளிய அமைப்புமுறை கொண்டிருக்க கூடிய சமூக மேலாதிக்கத்தின் இடத்தில், பார்ப்பனிய அதிகாரம் கோலோச்சும் வண்ணம் - சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆழமாக்கப்பட்டு, புனிதமாக்கப்பட்டு வருகின்றது. பொது நிகழ்வுகளில் திடீர் காவிக் கும்பல்கள் முதன்மைப்படுத்தப்பட்டு, முன்னிலைப் படுத்தப்படுகின்றனர்.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை நடந்த போராட்டத்தின், அரசியல் குறிக்கோள் காவிமயமாக்குதலே. அரசியலில் திடீர் காவிக் கும்பல் நுழைந்திருக்கின்றது. பாரதிய ஜனதா கட்சி இப்படிப்பட்ட பின்னணியிலேயே தன்னை முன்னிறுத்தி, தனக்கான அரசியல் அடித்தளத்தை உருவாக்குகின்றது.தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முன்னிறுத்தி வேலுடன் ஊர்வலத்தை எப்படி முன்னெடுத்ததோ, அதேபோல் ஒடுக்கப்பட்ட தமிழ் மொழி பேசும் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி, காவிகளின் தலைமையிலேயே பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தின் மூலம், காவிகள் தங்கள் அதிகாரத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
சாதி ரீதியாக தம்மை அடையாளப்படுத்தும் பூனூலை போட்ட பார்ப்பனர்கள், சமூகத்தின் பல முனைகளில் முன்னிறுத்தப்படுவதும், அவர்களே தீர்மானிக்கின்ற சக்திகளாகவும் மாறி வருகின்றனர். இவை அனைத்தும் வெள்ளாளிய தமிழினவாத அரசியல் பின்னணியில் மேலோங்கி வருகின்றது.
தமிழினவாதம் பேசும் இந்துத்துவக் காவிகளை முன்னிறுத்தும் கோயில்களின் சாதிய தீண்டாமையையுடன் (அதாவது பிறப்;பால் பூனூல் போட்டவர்களை முன்னிறுத்தும் தீண்டாமை), தமிழ் தீண்டத் தகாத மொழியாகவும் இருக்கின்றது. தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் காவிக் கூட்டம், சாதிய வேறுபாட்டை தங்கள் கோயில்களில் வெளிப்படையாகக் கடைப்பிடிப்பதும், சமஸ்கிருதத்தை பூசை மொழியாகக் கொண்டிருப்பதும், சடங்குகள் சம்பிரதாயங்களில் இதை முதன்மைப்படுத்தும், இந்துத்துவக் கலாச்சாரமயமாவதும் வெள்ளாளிய தமிழினவாதம் மூலமே வெற்றிகரமாக நடந்தேறுகின்றது. இவர்கள் சிங்கள பௌத்த ஒடுக்குமுறை பற்றி பேசுபவர்களாக இருக்கும் அதேநேரம், தங்கள் வெள்ளாளிய - பூனூல் பார்ப்பனிய ஒடுக்குமுறைகள் பற்றி பேசமாட்டார்கள். சாதி பூனூல் போட்டு தமிழில் பூசை செய்ய மறுக்கும் காவிக் கும்பல், மொழி ஒடுக்குமுறை பற்றி பேசுவார்கள். இந்த காவிக் கூட்டத்துக்கு இன்று வெள்ளாளியம் காவடி எடுத்தாடுகின்றது.
தமிழனின் மீதான ஒடுக்குமுறைகளைப் பேசுகின்ற இந்தக் காவிக் கூட்டம், தங்கள் சாதி அடையாள மற்றும் ஒடுக்குமுறையை முன்னிறுத்தியும், தமிழ் மொழியை சிறுமைப்படுத்தியபடியே தான், காதுக்கு பூ வைக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளும், அக்கட்சி முன்வைக்கக்கூடிய இந்துத்துவ நிகழ்ச்சிநிரலும் ஏற்கனவே இலங்கையில் காலூன்றிவிட்டது. படிப்படியாக அது வளர்ந்து வருகின்றது. தேர்தல் கட்சியாக இன்னமும் வடிவம் பெறவில்லையே ஒழிய, இந்துத்துவ இயக்கம் பொது விடையங்களிலும் - அரசியலிலும் தன்னை முன்னிலைப்படுத்தி வருகின்றது. பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான தமிழினவாதப் பின்னணியில், பாரதிய ஜனதாக் கட்சியின் இந்துத்துவ அரசியல் நிகழ்ச்சிநிரல் உண்டு.
இந்திய உளவு அமைப்புகள் தொடங்கி இலங்கையில் தனது மூக்கை நுழைக்கும் இந்தியக் கொள்கைகள், பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவ நிகழ்ச்சியுடன் இணைந்ததே. இலங்கையில் யாழ் இந்தியத் தூதரகம் வெளிப்படையாக இந்துக் கோயில்களை மைய்யப்படுத்தி முன்னெடுக்கும் நிகழ்ச்சிநிரல் என்பது, பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவ கொள்கைக்கு அமைவாக - இந்துத்துவத்தை அமுல்படுத்துவதே.
தமிழினவாதம் பேசும் தேர்தல் கட்சிகள் தொடங்கி தமிழினவாதம் பேசும் மதவாதிகள் வரை, பாரதிய ஜனதா கட்சியின் இந்தியக் கொள்கை தமக்கு சார்பானதாக கொண்டாடுகின்ற, காட்டுகின்ற அரசியல் பின்னணியில் இருப்பதும் செயற்படுவதும், பாரதிய ஜனதாக் கட்சியுடனான முரணற்ற இணக்க இந்துத்துவ அரசியல் தான்.
1950 களில் தமிழரசுக்கட்சி தமிழை முன்னிறுத்தி இனவாதத்தை மைய்யப்படுத்திய தேர்தல் அரசியலின் போது, மதவாதங்கள் மூலம் மக்களைப் பிரிப்பதை எதிர்த்தே வந்தது. இன்று மதவாதங்களை முன்னிறுத்தியே தமிழ் மக்களை அணிதிரட்டும் கோசம், அரசியல் சர்வசாதாரணமாகிவிட்டது. தேர்தல் அரசியலில் மதவாத வேட்பாளர்களை முன்னிறுத்துவது, சாதி ரீதியாக வேட்பாளர்களை நிறுத்;துவது .. தமிழினவாதமானது இந்துவமாக மாறி வரும் சூழலின் அரசியல் பிரதிபலிப்பே.
தமிழினவாதம் பேசும் கூட்டம் மதவாதம் மூலம் தமிழினவாதத்தை முன்வைக்கும் கூட்டத்திற்கு பின்னால் கைகட்டி, அடிமையாக மந்தைக் கூட்டமாக அணிவகுத்து செல்லும் காட்சிகள், மதவாதக் கட்சிகளின் வருகைக்கான மணியோசை தான்.
முதலில் வந்த சிவசேனை ஆரம்பப் புள்ளியே. இந்துத்துவம் பல முகம் கொண்டு, பல வடிவில் தன்னை முன்னிறுத்தக் கூடிய, பாசிச சாதிய இந்துத்துவ சித்தாந்த அடிப்படைகளைக் கொண்டது. இது இன்று தமிழினவாதமாக தகவமைத்துக் கொண்டு வருகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள், காவிமயமாகி வரும் தமிழினவாதத்தை இனம் கண்டு, இந்தக் காவிக் கூட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அன்றாட வாழ்க்கையில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தும் வண்ணம், வெள்ளாளிய – பார்ப்பனிய சடங்குகள் சம்பிரதாயங்களை நிராகரிக்க வேண்டும். இதைச் செய்யத் தவறும் பட்சத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை தமிழினவாதம் மூலம் ஒடுக்கவும், சாதிய ஒடுக்குமுறைகளுடன் கூடிய சாதிய அடையாளங்கள் கூர்மையுமடையும்.
பாரதிய ஜனதா கட்சியும் - தமிழினவாத வெள்ளாளியக் கட்சிகளும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode