Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வாக்களிக்கும் தேர்தல் முறை என்பது, அரசுகளை யார் ஆள்வது என்பதைத் தீர்மானிப்பதற்கே. அதற்காக மக்களை வாக்குபோட வைத்து தேர்ந்தெடுக்கும் முறைமையையே "ஜனநாயகம்" என்கின்றனர். மக்கள் வாக்குகள் போட்டு ஆள்பவரை தேர்ந்தெடுத்தாலும், அரசு என்பது மாற்ற முடியாத வர்க்க சர்வாதிகாரத்திலானது. தேர்தல் மூலம் ஆள்பவர்களை (முகத்தை) மாற்றலாம், வர்க்கங்களுக்கு இடையில் சமரசத்தை (சீர்திருத்தத்தைச்) செய்யலாம், வர்க்க சர்வாதிகாரத்தை தேர்தல் வழியில் மாற்ற முடியாது.

அரசு குறித்த இந்தக் கண்ணோட்டம் மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஓன்று. இதனால் தான் வர்க்கப் போராட்டம் மூலமே வர்க்க சர்வாதிகாரத்தை மாற்ற முடியும் என்று, மார்ச்சியம் முன்வைக்கின்றது.

இதனால் மக்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையை மார்க்சியம் முற்றாக நிராகரிக்கின்றதா என்றால் இல்லை. பெண்களுக்கான வாக்குரிமை, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கான வாக்குரிமை, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான வாக்குரிமை, கறுப்பின மக்களினது வாக்குரிமை, பூர்வீக மக்களின் வாக்குரிமைகளைக் கோரி, அனைவருக்குமான சமவுரிமைக்கான போராட்டத்தை கம்யூனிச இயக்கங்களே முன்னின்று நடத்தியிருக்கின்றது, வர்க்கங்களை வர்க்கப் போராட்டத்துக்கு என அணிதிரட்ட தேர்தலில் பங்குபற்றி இருக்கின்றது. இதையொட்டிய போராட்டமும், போராட்ட முறைமைகளும் காலாவதியாகிவிடவில்லை. இன்று பர்மாவில் தேர்தல் ஜனநாயகத்துக்காக போராட வேண்டி இருக்கின்றது.

இதற்கு மாறாக இந்திய கம்யூனிஸ்ட்டுகள் வரட்டுவாதிகளாகவும், இடது சந்தர்ப்பவாதிகளாகவும் தங்களை முன்னிறுத்துகின்றனர்.

வர்க்க சர்வாதிகாரத்தை ஆளும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறைமையை வரட்டுத்தனமாக நிராகரிக்கவும், அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமற்றது என்று கூறியும் வருகின்றனர். இதன் மூலம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜனநாயக முறையை ஒழித்துக்கட்டுவதை, மறைமுகமாக ஆதரிக்கின்றனர். தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜனநாயக வடிவம் மூலம் மக்களை ஒடுக்கியாள முடியாத சூழலிலேயே, பாசிசம் ஆட்சிக்கு வருகின்றது. பாசிசத்தின் குணாம்சம் என்னவெனில், தேர்தல் முறை உள்ளிட்ட எல்லா ஜனநாயக வடிவங்களையும் ஓடுக்குவதும், அதை இல்லாதாக்குவதுமே. இன்று இந்திய தேர்தல் ஜனநாயகத்தை இல்லாதாக்கவும், அதை தனக்கு ஏற்றதாக மாற்றவும் பாசிசம் முனைகின்றது. இன்று இந்திய தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டம் என்பது, பாசிசத்துக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டமாக இந்திய மக்கள் முன் மாறி இருக்கின்றது.

இப்படி எதார்த்தம் இருக்க வர்க்கம் மற்றும் தேர்தல்முறை குறித்த மார்ச்சியத்தின் இயங்கியல் விதியை வரட்டுத்தனமாக விளங்குவதும், விளக்க முனைவதும் நடக்கின்றது. இது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்டாது. தேர்தல் ஜனநாயகம் எதையெல்லாம் கொண்டு இருக்கின்றதோ, அவை அனைத்தையும் உள்ளடங்கிய நிலையிலேயே, லெனின் தேர்தலையும் தேர்தல் ஜனநாயகத்தையும் வர்க்கப் போராட்டத்துக்கு பயன்படுத்தியவர்.

லெனினிய வழிவந்த இந்திய கம்யூனிஸ்ட்டுக்கள், லெனினிய கண்ணோட்டத்தை மறுதளிக்கும் வரட்டுவாதத்தில் முடங்கி இடது சந்தப்பவாத அரசியல் மூலம், பாசிசத்துக்கு மறைமுகமாக துணை போகின்றனர். தேர்தல்முறை மூலம் பாசிசம் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் சந்தர்ப்பத்தை மறுதளித்து, மக்கள் திரள் போராட்டம் மூலம் பாசிசத்தை தோற்கடிப்போம் வாருங்கள் என்கின்றனர். இந்த அரசியல் வழிமுறை அனாகிஸ்டுகளின் (அராஜக) வழிமுறை. ட்ராஸ்கியின் நிரந்தரப்புரட்சிக் கோட்பாடு. புரட்சியின் பல இடைக் கட்டங்களை மறுக்கின்ற அதிதீவிர இடது சந்தர்ப்பவாதமும், குறுங்குழுவாதமுமாகும்.

முதலாளித்துவ சட்ட வடிவங்கள், முதலாளித்துவ நீதிமன்றங்கள் என்று எல்லாவற்றையும் புரட்சிக்காக பயன்படுத்துபவர்கள், தேர்தல் ஜனநாயகத்தை பயன்படுத்த மாட்டோம் என்று கூறுவது, எந்த வகையில் தர்க்க ரீதியானது?. அண்மைக்கால ஜரோப்பாவில் தீவிர வலதுசாரி பாசிட்டுக்கள் தேர்தல் மூலம் வெல்வதைத் தடுக்க, இடதுசாரிகள் தேர்தலில் முதலாளித்துவக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர்;. உதாரணமாக கடந்த 30 ஆண்டுகளில் பிரான்சில் இரண்டு தரம், 80 சதவீதத்துக்கும் அதிகமாக மக்கள் பாசிசத்துக்கு எதிரான அறைகூவல்களுடன் வாக்களித்தனர்.

1970 களில் நக்சல்பாரிகளின் எழுச்சி தேர்தல்முறை மூலம் புரட்சி என்ற ருசியா திரிபுவாதத்துக்கு எதிரான அரசியலில் எழுந்தது. தேர்தல் பாதைக்கு சென்றவர்கள் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டதால், தேர்தல் பாதைக்கு எதிரான அரசியல் என்பது படிப்படியாக வரட்டுவாதமாக, அதிதீவிர இடதுவாதமாக மாறியது. இந்த அரசியல் கூறு ஜனநாயக மத்தியத்துவத்தை அதிகாரத்துக்கான கருவியாக குறுக்கிவிடும் இடது சந்தர்பவாதமாக மாறி, அரசியல் ரீதியாக திரும்பியே வரமுடியாத குழிக்குள்ளே வீழ்ந்து கிடக்கின்றது.

அண்மையில் ம.க.இ.க.வின் தொடர் சிதைவுகளும், பிளவுகளுடன், தங்களை புரட்சிகரமானவராக நிறுவ தேர்தலைப் பற்றிய முடிவை கையில் எடுத்திருக்கின்றது. தேர்தல்முறை குறித்து 50 வருடமாக பின்பற்றும் மாற்ற முடியாத வரட்டுவாத இடது கண்ணோட்டமானது, குறுங்குழுவாதமாக மாறத் தொடங்கி இருக்கின்றது. மறுதரப்பும் தங்கள் முந்தைய வரட்டுவாத அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து கொண்டு, பாசிசத்துக்கு எதிரான மக்களின் தன்னியல்புவாத பாசிச எதிர்ப்புக் கோசத்தை தூக்கிப் பிடிக்கின்றது. இந்த தன்னியல்புவாத அரசியல், வலது சந்தர்ப்பவாதத்துக்கான அரசியல் அடித்தளத்தைக் கொண்டது.

சுயவிமர்சனமற்ற வர்க்கக் கண்ணோட்டமற்ற பரந்துபட்ட மக்களில் இருந்து விலகியதும் - வால் பிடிக்கின்றதுமான அனைத்தும், வர்க்கப் புரட்சிக்கு எதிரானது.

தேர்தல் புரட்சியாகாது என்பதால்!

தேர்தல் கட்சிகளின் தேர்தல் முறைமையை வர்க்கக் கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்ற இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடு என்பது, இடது சந்தர்ப்பவாத வரட்டு வாதமாகும். மறுபக்கத்தில் தேர்தல் மூலம் வர்க்கப் புரட்சியை செய்ய முடியும் என்பது, வலது சந்தர்ப்பவாதமாகும்.

தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் "மாற்றத்தை" கொண்டுவர முடியும் என்று மக்கள் நம்பும் வரை, இது எந்த மாற்றத்தையும் தராது என்று கூறியபடி, தேர்தலை வர்க்கப் போராட்டதிற்கு பயன்படுத்த வேண்டும். மக்கள் மாற்றங்களை வேறு வடிவங்களில் கோருகின்ற போது, தேர்தலைப் பகிஸ்கரிக்கவும், மக்கள் திரள் பாதையை மாற்று வழிமுறையாக முன்வைக்கவும் வேண்டும்.

எனது முந்தைய கட்டுரையான "பாசிச பா.ஜ.கவை தேர்தல் மூலம் தோற்கடிக்க முடியுமா!?" என்பதை, அவரவர் அரசியல் நிலைக்குள் இருந்து குறுகிய அர்த்தத்தில் விளங்கிக் கொள்வதாலும் - புரிந்து கொள்வதாலும், மேலும் இதை விளக்க வேண்டி இருக்கின்றது. 21.03.2021 திகதி சீ-தமிழில் "தமிழா தமிழா" இதையொட்டிய விவாதம், சம்மந்தப்பட்ட தரப்புகள் உள்ளடங்கிய வகையில் நடந்தது.

"தேர்தல் புறக்கணிப்பு" என்ற நக்சல்வாதிகளின் பொது அரசியல் கண்ணோட்டமானது மாறவும் மாற்றவும் முடியாத, இடது வரட்டுவாதமாக மாறியிருப்பதைக் காணமுடிகின்றது. இயங்கியலற்ற இந்த வரட்டுவாதத்தை வெளிப்படையாகவும், வரலாற்று ரீதியாகவும் முழுமையான விமர்சனம், சுயவிமர்சனமும் செய்யாது எடுக்கும் எந்த முடிவும் தவறானதே. நேர்மையற்றதும், வர்க்க சக்திகளை ஏமாற்றுகின்ற அரசியல் பித்தலாட்டத்தாலானது. சூழல் சார்ந்த சந்தர்ப்பவாதம், தன்னியல்புவாதம், இருப்பை தக்கவைக்கும் வரட்டுவாதம் அனைத்தும், தம்மை முன்னிறுத்த முன்வைக்கும் குறுகிய அரசியலிலானது.

குறிப்பாக தமிழகத்தில் ம.க.இ.கவை மையப்படுத்தி கட்சி, இடைக்கால கமிட்டி, இடைவெளி.. என பிளவுகளை எடுத்தால், அதை நேர்கோட்டில் வைத்து ஒன்றாக ஓருநாளும் அணுக முடியாது. நேர்கோட்டில் வைத்து அணுகும் அரசியல் கண்ணோட்டம் என்பது, மக்கள் மத்தியில் முழுமையான சுயவிமர்சனத்தை, சம்மந்தப்பட்ட அனைவரும் செய்தால் மட்டுமே சாத்தியம். பிற தரப்பு மீதான அரைகுறையான சந்தர்ப்பவாத விமர்சனத்தைக் கொண்டு, தங்கள் தரப்பு சுயவிமர்சனத்தையே மறுதளிக்கின்றனர். சுயவிமர்சனம் என்ற ஒன்றை இதுவரை எந்தத் தரப்பும் செய்யவில்லை. மாறாக குற்றச்சாட்டுகளையே முன்வைக்கின்றனர். இதன் பொருள் இவர்கள் ஒரு நாளும் வர்க்கத்தின் கட்சியாக, கட்சி முதல் தனிநபர்; வரை உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க தயாராக இல்லை என்பது தான். வர்க்க சக்திகள் விரும்புவது, கோருவது, எதிர்பார்ப்பது உண்மையான வர்க்கத்தின் கட்சியையே. அது சுயவிமர்சனத்திலானது. மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாலானதல்ல. சுயவிமர்சனமற்ற நடத்தையே, தொடர்ந்து வர்க்க சக்திகளை சுக்குநூறக்கிக் கொண்டிருக்கின்றது. நம்பிக்கையைத் தகர்த்துக் கொண்டு, அவதூறுகளில் புகலிடம் காண்கின்றது. கட்சிகள், தனிநபர்கள் சீமான் போல் பேசுவதால், எழுதுவதால், வர்க்கத்தை அணிதிரட்டிவிட முடியாது. பொறுக்கிகளை அணிதிரட்ட முடியும்;. சுயவிமர்சனம் என்ற ஆயுதமே வர்க்கங்ளை அணிதிரட்டும். அதைத்தான் வர்க்க சக்திகள் எதிர்பார்க்கின்றனர்.

பாசிசம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதை தடுக்கும் தேர்தல் அரசியல் உத்தியை விட மிகவும் ஆபத்தானது, வர்க்க சக்திகளை சுயவிமர்சனமின்றி கலைப்புவாதத்திற்குள் சிதறடிப்பது.

உதாரணமாக பாசிட் சீமானை உருவாக்கியது யார்? பா.ஜ.க. என்று சொல்லிவிட்டு தப்பிச் செல்ல முடியாது. கம்யூனிச இயக்கம் தொடங்கி பெரியாரிய இயக்கம் வரை, சீமான் போன்ற இனவாதம் பேசும் பாசிட்டுகளை உருவாக்கினார்கள்;. இது தான் உண்மை. புலிப் பாசிசத்தை விமர்ச்சிக்காத புலி ஆதரவு அரசியல், மற்றொரு பாசிசத்தையே அறுவடை செய்யும்.

2009 இல் புலிகளின் அழிவுக்கு முன்னும் பின்னும் புலிகளின் தமிழினவாத பாசிசத்தை ஆதரித்தது யார்?. இனவாத பாசிசம் குறித்து மார்க்சிய வர்க்கக் கொள்கை, பெரியாரிய பகுத்தறிவுவாத கொள்கை, அம்பேத்கரிய சாதி எதிர்ப்பு கொள்கைகள் எல்லாம் வெறும் கோட்பாடாக இருந்ததே ஒழிய, நடைமுறையில் தன்னியல்புவாத பாசிசத்தை ஆதரித்ததே நடந்தேறியது. விமர்சனமற்ற, தெளிவான வர்க்க கோசங்களற்ற தன்னியல்புவாத அரசியல் போக்கில், இனவாத வெள்ளாளிய புலிப் பாசிசத்தை ஆதரித்து நடத்திய வழிபாட்டு அரசியலே, சீமான் என்ற பாசிட் பொறுக்கியை அறுவடை செய்தது. பாசிட்டுகளை தவிர வேறு யாரும், பாசிசத்தை அறுவடை செய்ய முடியாது. இன்று சீமானை பாசிட்டாக இனம் காணும் யார், இன்று தங்களின் கடந்தகால பாசிச ஆதரவு அரசியலுக்காக சுயவிமர்சனம் செய்து இருக்கின்றனர்.

நீங்கள் மறைமுகமாக இலங்கையில் புலிப் பாசிசத்தை ஆதரித்து உருவாக்கிய சீமான், பாசிட்டுகளுக்கு உரிய வடிவில் வெற்றுக் கோசங்கள், போலி உரிமைகளை முன்வைத்து, மதவெறி பாசிசத்துக்கு நிகராக புலிகள் வழியில் இனவெறி பாசிசத்தை முன்வைத்து வருகின்றான். இதற்கான அரசியல் அடித்தளத்தை கம்யூனிஸ்ட்டுகளின் தன்னியல்புவாத தமிழினவாதமே அடித்தளம் இட்டுக் கொடுத்தது. இதைத் தான் ம.க.இ.க 2009 இல் செய்தது. இதன் மீதான எந்த சுயவிமர்சனமும் இல்லை என்றால், சீமானின் தமிழினவாத பாசிசத்துக்கு தொடர்ந்து துணைபோவது தான். ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றொரு உதாரணம். ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரிப்பது என்றால், அதை ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கக் கண்ணோட்டத்தில் இருந்து அணுக வேண்டும்;. நிச்சயமாக ஒடுக்கும் கண்ணோட்டம் கொண்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை முதல் ஒடுக்கும் தமிழனுக்கு எதிராக – ஒடுக்கப்பட்ட தமிழனின் தலைமை முன்வைக்கும் கோசங்கள் மூலம் போராட்டத்தை வர்க்க அரசியல் மயப்படுத்தி இருக்க வேண்டும். அது நடக்கவில்லை, சுயவிமர்சனமும் செய்யவுமில்லை.

சுயவிமர்சனமற்ற இந்த அரசியல் பின்னணியில், கண்மூடித்தனமான பாசிச எதிர்ப்புக் கண்ணோட்டம், வெறும் தி.மு.க ஆதரவு அரசியலாக மாறும். பாசிச எதிர்ப்பு, தி.மு.க ஆதரவு கண்ணோட்டத்தில், வர்க்க கண்ணோட்டத்தை முன்வைத்து அணுகப்படவில்லை என்பதே உண்மை. சுயவிமர்சனமற்ற கடந்தகால அரசியல் போக்கு, இதற்கான தொடர் அரசியல் அடித்தளமாக இருக்கின்றது.

தமிழகத்தில் பாசிசத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் தேர்தலில் வர்க்கச் சக்திகள் தீர்மானிக்கும் நிலையில் இல்லை என்பது உண்மை. மறுபக்கம் பாசிசத்துக்கு எதிரான பிரச்சாரம் என்பது தெளிவாக வர்க்கக் கோசங்கள் உள்ளடங்கிய – எதிர்காலத்தில் தொடர்சியாக தி.மு.கவை பாசிசத்துக்கு எதிராக போராடக் கோரும் வர்க்க அடித்தளத்தை உருவாக்க வேண்டும்;.

இந்தியாவில் வர்க்கத்தின் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. அதை கீழ் இருந்து கட்ட வேண்டி இருக்கின்றது. இருக்கும் கட்சிகள் பல்வேறு சீரழிந்து, சுயவிமர்சனமின்றி, வர்க்கத்தில் இருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றது என்ற உண்மையில் இருந்து கற்றுக்கொள்ள மனித வரலாறு கோருகின்றது.

பாசிச பா.ஜ.கவை தேர்தல் மூலம் தோற்கடிக்க முடியுமா!?