Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2009 இற்குப் பின் அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டங்களுக்கும், போராட்டங்களில் முன்னின்றவர்களின் வீடுகளுக்கும் கழிவு ஓயில் ஊற்றப்பட்டது. இதையடுத்து திடீர் "கிறிஸ்" மனிதன் தோன்றி, குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. இதன்பின் காணாமல் போன கழிவு ஒயில் இன்று, இந்து வெள்ளாளியக் கலாச்சாரமாக நல்லூரில் காட்சி அளித்திருக்கின்றது.

குறிப்பாக நல்லூருக்கு வழிபட வரும் முதியவர்கள் தங்கள் உடல் இயலாமையால் அமருகின்ற, சாய்கின்ற இடங்களை குறிவைத்து, கழிவு ஒயில்களை ஊற்றி இருக்கின்றார்கள் கலாச்சாரக் காவலர்கள்.

அண்மையில் "நல்லூரை இடித்து மலசலகூடத்தை" கட்ட வேண்டும் என்று ஒரு "துரோகி" கூறியதாக சிங்களத்தை தமக்கு ஏற்ப மொழிபெயர்த்து பொங்கிய தமிழினவாதிகள், நல்லூர் கோயிலில் மக்கள் அமரக் கூடாது என்று கூறி கலாச்சாரக் காவலர்கள் கழிவு ஒயிலை ஊற்றிய போது எங்கேயோ காணாமல் போய்விட்டார்கள். இதன் பொருள் கழிவு ஊற்றிய பகுதிகள் இடிக்கப்பட வேண்டும் என்பதையே, வெள்ளாளியக் கலாச்சாரம் முன்வைக்கின்றது.

நல்லூரில் மக்களுக்கு பொது மலசலகூடம் கட்டப்படுகின்றதோ இல்லையோ, மக்கள் அமருகின்ற இடங்கள் இடிக்கப்படுவது நடக்கும். இதை இடிக்க தமிழினவாதம் பேசும் புலம்பெயர் வெள்ளாளியம் பணத்தை அனுப்பும். கழிவு ஒயில் ஊற்றியது என்பது ஒரு வெறும் ஒரு வெள்ளோட்டம். மக்கள் எப்படி கோயில்களில் அமருவார்கள் என்பதை அவதானிக்கவும், அதை அகற்றவுமான தேரோட்டம் தொடரும்.

தமிழன் என்று தங்களை முன்னிறுத்திக் கொண்டு தமிழினவாதிகளாக பொங்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, இங்கு மட்டும் தமிழ் மக்கள் கோயிலில் அமரக் கூடாது என்று கூறி நடத்திய இந்த வெள்ளாளிய காவாலித்தனத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை. இந்தப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தான், கலாச்சாரத்தை பாதுகாக்க பெண்கள் சாறியைக் கட்டிக் கொண்டு பல்கலைக்கழகம் வரக் கோரியது. பெண் சுதந்திரம் என்றாலே கலாச்சாரம் சீரழிந்து போகும் என்று நம்பும் வெள்ளாளிய மனப்பாங்கு, பெண்களை புலிகள் இயக்கத்தில் இணைக்கக் கூடாது என்று பிரபாகரன் அன்று உறுமிய அந்தக் காலங்களிலிமிருந்ததே. இப்படிப்பட்டதே தமிழ் கலாச்சாரம். அக் கலாச்சாரம் தான்; கழிவு ஒயிலையும் ஊற்றுகின்றது.

கோயிலில் மக்கள் அமர்வது என்பது "கலாச்சாரத்துக்கு" முரணானதாம்! குறி;ப்பாக பெண்கள், அதிலும் ஆண்களுடன் அமரக் கூடவே கூடாது. இதை மௌனமாக கடந்து செல்லும் தமிழ் சமூகத்தின் மனநிலை என்பது, வெள்ளாளிய மனப்பாங்காலானது. இந்து, தமிழ் என்று பொங்குகின்ற வெள்ளாளியம் இதுதான். கள்ள மௌனம் இதற்கான சம்மதம். இதை "துரோகிகளின்" செயல் என்றும், அரசின் செயல் என்றும் பொங்க வெளிக்கிட்டவர்கள், திடீரென பொங்குவதை நிறுத்தினர். வெள்ளாளிய கலாச்சாரத்துக்காக "எங்கடையாக்கள்" செய்தது என்ற குறிப்புடன், கள்ளத்தனமாக எதுவும் நடவாதது போல் நடந்து கொள்கின்றனர்;.

வெள்ளாளியத்தின் மனம் எவ்வளவு வரண்டது, வக்கிரமானது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடும் இந்த வெள்ளாளிய இந்துக் கோயில்கள், வெள்ளாளிய மனம் போல் வரண்டுதான் கிடக்கின்றது.

கொங்கிரிட் பாளங்களாக மாறி வரும் கோயில்கள் எல்லாம் கடும் வெயிலில் வரண்டு கொதிக்கின்ற நிலையிலும், செருப்பைக் கழட்டு! சேட்டை கழட்டு! என்று உறுமும் அடியாட்;படைகளாக "அடியார்கள்" வேசங்களுடன் பவனி வருகின்றனர். செக்குமாட்டுக்கு கண்ணைக் கட்டிவிட்டது போல் மக்களைக் கண்காணிக்க, மக்கள் அடிமைகள் போல் கோயில்களில் உணர்ச்சியின்றி நடமாடுகின்றனர்.

கோயில்களில் நிழலே இருக்கக் கூடாது என்பதால், நிழல் தரும் மரங்களே கிடையாது. அமர்ந்து இருக்க இடம் கிடையாது. இலங்கையிலுள்ள கிறிஸ்துவ, பௌத்த கோயில்கள் இதற்கு நேர்மாறானது. இதற்கு பின்னால் இருப்பது வெள்ளாளிய சாதி மனப்பாங்கு தான்.

கடந்தகால சாதியப் போராட்டம் பல கோயில்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளை வழிபட அனுமதித்தாலும், அவர்கள் கோயில்களில் ஓன்று கலப்பதையும் - ஒன்றாக அமர்வதையும் தடுக்கவே, இந்த கலாச்சார எடுபிடிகளும் - ஏற்பாடுகளும்.

மக்கள் கூடவும், கூடி இருக்கவும் கூடாது என்பது சாதிக் கலாச்சாரம். இது வெள்ளாளிய கலாச்சாரம்;. சாதி அடையாளம் தெரியாது மக்கள் அமர்ந்து விட்டால், இந்து வெள்ளாளிய கலாச்சாரத்திற்கு என்ன நடக்கும் என்ற, சாதிய அங்கலாய்ப்பு.

குறிப்பாக மக்கள் கூடும் இடங்களில் ஆண் பெண் சந்திக்கவும், காதல் செய்வதும் வெள்ளாளிய கலாச்சாரத்துக்கு கேடானது என்பது இந்துத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றாக இருக்கின்றது. அதுதான் ஓயில் கழிவை ஊற்றி வெள்ளாளிய கலாச்சாரத்தை நிறுவி இருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் பொங்கியெழும் வெள்ளாளியம் அங்கீகரிக்க, இந்துத்துவம் என்று திடீர் கம்பு சுத்தும் பன்னாடைகள் தியானத்தில் இருக்கும் பின்னணி என்பது, தமிழனைத் தமிழன் ஒடுக்கும் வெள்ளாளியம் தான்.