Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழீழப் போராட்டம் ஆயுதம் தாங்கிய வடிவம் பெற்றபோதே, கொள்ளைகளைச் சார்ந்தே இயங்கத் தொடங்கியது. மக்கள் திரள் வடிவமல்லாத, மக்களிலிருந்து அன்னியப்பட்ட தனிநபர் பயங்கரவாதமானது, பொருளாதாரரீதியாக இவ்வாறான கொள்ளைகளிலேயே தங்கியிருந்தது. 1983 ம் ஆண்டுக்குப் பின்பும் இவ்வாறே தொடர்ந்து வங்கி மற்றும் தனிப்பட்ட வீட்டுக் கொள்ளைகளை நடத்தினர். அதேநேரம் அந்நிய சக்திகளிடமிருந்தும் மற்றும் இலங்கை மீதான அரசியல் - பொருளாதார நலன்களைப் பூர்த்தி செய்ததன் மூலமாகவும் நிதிகளைப் பெற்றும், அதே அந்நிய சக்திகளின் ஆயுதங்களில் தங்கியிருந்ததன் மூலமும், அரசியல் ரீதியாகவும் போராட்டம் சீரழிக்கப்பட்டது.

ஆரம்பகாலம் தொட்டு வரலாறு இப்படித்தான் நகர்ந்தது. வடகிழக்கில் 1000 க்கு மேற்பட்ட பணம் மற்றும் நகைக் கொள்ளைகள் நடந்துள்ளது. தனியார் வீடுகள் முதல் அரச தனியார் வங்கிகள் பொது நிறுவனங்கள் வரை கொள்ளையிடப்பட்டன. உணவுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டன. சற்றேறக் குறைய 15 வங்கிகள் கொள்ளையிடப்பட்டது.

ஏன் இந்தக் கொள்ளை, கொள்ளையடிக்கப்பட்ட பணத்துக்கு என்ன நடந்தது என்ற பொதுக் கேள்வியையும், இதன் பின்னான அரசியல் பின்புலங்களையும் விமர்சனம் சுயவிமர்சனம் அடிப்படையில் ஆராய்வது அவசியமானது.

இந்த வகையில் வரலாற்று ரீதியான அரசியல் உள்ளடக்கத்தில் கேள்விகளுக்கும், விமர்சனத்துக்கும் இவற்றை உள்ளாக்குவதே சமூகம் சார்ந்த அறமாக இருக்கும்.

இப்படி நடந்த கொள்ளைகளைப் பற்றிய விளக்கமான ஆய்வு, இதன் மீதான சுயவிமர்சனம், விமர்சனம் எதுவும் இன்றுவரை சமூகத்தில் கிடையாது. நடந்த எந்த வங்கிக் கொள்ளைகளையும், தனிநபர் கொள்ளைகளையும் குறித்து எதுவும், சமூக அக்கறையுடன் யாரும் அணுகவில்லை. சமூகம் குறித்த அக்கறையற்ற சமூகத்தில், கடந்தகாலம் மீதான பார்வை என்பது, ஒற்றை வரி கொண்ட அவதூறுகள் தான்.

அக்கால கொள்ளைகள் பற்றிய தகவல்களையோ, எத்தனையோ வேறு கொள்ளைப் பணத்துக்கு என்ன நடந்தது என்ற பொறுப்பான கேள்வி பதில்களை தருமாறோ யாரும் யாரையும் சுட்டி கைகாட்டவுமில்லை, கேட்கவும் இல்லை. எழுதவும் இல்லை. பேசவும் இல்லை. கணக்கு எங்கே என்று அறிக்கை இடவும் இல்லை. ஆனால் இவற்றை எல்லாம் வசதியாய் மறந்தாற் போல் விட்டுவிட்டு, கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை ஒன்றை மட்டும் இழுத்து வந்து நிறுத்துவதும், அதேநேரம் அக் கொள்ளை ஒரு இயக்கத்தின் கூட்டுப் பொறுப்பில் நடாத்தப்பட்ட ஒன்று என்பதை நாசூக்காக மூடிமறைத்துவிட்டு, அதற்கான கணக்கிடும் பொறுப்பை அந்த இயக்கத்தின் ஒரு நபர் மேல் அள்ளிப் போட்டு அவதூறு பரப்புவதன் பின்னணி என்ன?

இப்படிப் அவதூறு பரப்பும் அரசியல் பின்னணியில் கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை தொடர்பாக மட்டும், உள்நோக்கோடு பேசுவது நடந்தேறுகின்றது.

அதிலும் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பை மட்டும் கேட்கின்றனர். அன்று கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து இரு இயக்கங்கள் செய்தன. ஒரு இயக்கம் எடுத்துச் சென்றதன் பின்னால், மிகுதியாக இருந்ததை, இராணுவம் குருநகர் முகாமுக்கு எடுத்துச் சென்ற போது, முதல் நடந்த கொள்ளையில் எஞ்சியதை வேறு ஒரு இயக்கம் கொள்ளையிட்டது. இப்படி இருக்க ஒரு தரப்பை மட்டும் இலக்கு வைத்து, கணக்கு கேட்பது ஏன்? ஆக இதன் நோக்கம் சந்தேகத்திற்கு இடமின்றி அவதூறை அடிப்படையாகக் கொண்டதே.

இந்த வகையில் என்.எல்.எவ்.ரி.யை மட்டும் இலக்கு வைத்திருப்பதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியலும், அந்த அமைப்பில் நான் அங்கம் வகித்தவன் என்ற காரணத்தினால், என்னை மட்டும் இலக்கு வைத்தே, இந்தக் கேள்வியும் - அவதூறும் கட்டமைக்கப்படுகின்றது.

இப்படி இலக்கு வைப்பதன் பின்னிருக்கக் கூடிய உள்நோக்கம் கொண்ட அரசியல்ரீதியான நோக்கம் என்ன என்பதைக் கடந்து, இதற்கு பதில் சொல்ல வேண்டியது எனது அமைப்பை சேர்ந்தவர்களே ஒழிய, தனியே நான் அல்ல. நான் அன்று என்.எல்.எவ்.ரி அமைப்பில் இருந்த எல்லோரையும் போல், அமைப்பின் ஒரு உறுப்பினர். ஒரு இடைக் காலகட்டத்தில் மட்டும், அந்த அமைப்பின் ஒன்பது பேர் கொண்ட மத்தியகுழுவில் ஒரு உறுப்பினராக இருந்து இருக்கின்றேன்.

நான் மட்டுமே அந்த அமைப்பல்ல. அப்படி என்னை மட்டும் இலக்கு வைத்து, என்னை நோக்கி கற்றன் நசனல் வங்கி பற்றி கேள்வி எழுப்புவதும், என்.எல்.எவ்.ரி. ஜச் சேர்ந்த மற்றவர்களை நோக்கி அவ்வாறு கேள்வி எழுப்பாதிருப்பதும் ஏன்? நான் அமைப்பில் இணைந்திருந்த குறுகிய காலத்தில் நானறிய எடுக்கப்பட்ட அமைப்பின் கூட்டு முடிவுகள் சார்ந்து, எந்த ஒரு விடையத்துக்கும் பொறுப்புக் கூற முடியும். அதை விமர்சனம் செய்யவும், சுயவிமர்சனம் செய்யவும் முடியும். ஆனால் அவ்வாறு அப்படி எதையும் யாரும் முன்வைப்பதுமில்லை, கோருவதுமில்லை.

மாறாக என்.எல்.எவ்.ரி. என்றால் அது நான் மட்டுமே, அனைத்துமே நான் என்று தனிநபர் விவகாரமாக குறுக்கியும், குறிப்பாக என்னை மட்டும் பிரித்தெடுத்துக் குதறியும் குற்றஞ்சாட்டும் அரசியல் பின்னணியில், என்.எல்.எவ்.ரி.யைச் சேர்ந்த வேறு எந்த அமைப்பிலுமிருந்த பிறரிடமும் இக் கேள்விகளை முன்வைப்பதுமில்லை, பதில் கோருவதுமில்லை. ஏன் தன்னை நோக்கியும் (அவரும் மத்தியகுழு உறுப்பினர்தான். அவர் இருந்த இயக்கமும் கொள்ளை அடித்தது) கேட்பதில்லை. அதேநேரம் உள்நோக்கம் கொண்ட இந்த அவதூறுகளின் போது, என்.எல்.எவ்.ரி. இல் இருந்த ஏனைய பொறுப்பான மத்தியகுழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் கள்ளமௌனம் சாதிப்பது, அவர்களின் நேர்மையீனத்தையே காட்டுகின்றது.

இந்த வகையில்

1. என்.எல்.எவ்.ரி. சம்மந்தப்பட்ட கொள்ளைப் பணம் எதற்கு, எந்த வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை, அதன் உறுப்பினராக இருந்த அனைவரும் தமக்கு தெரிந்ததை வெளிப்படையாக முன்வைக்க முடியும்.

இதை அவர்கள் தாமாக முன்வந்து வெளியரங்கில் இன்னமும் கூட முன்வைக்காத வரை, அவர்களின் நேர்மை குறித்து, அடிப்படைக் கேள்வி எழுகின்றது.

2. என்.எல்.எவ்.ரி. சம்மந்தப்பட்ட கொள்ளையை தனிப்பட்ட என்மீது மட்டும் சுமத்தும் இந்த அவதூறு அரசியல் வடிவத்தை, கேள்விக்குள்ளாக மறுப்பது, எந்த வகை "ஜனநாயகம்"?

கடந்தகால ஜனநாயக விரோத இயக்க அரசியலை கண்டும் காணாமல் இருப்பது, தொடர்ந்து அதை அனுமதிப்பதேயாகும்.. கடந்தகாலத்தில் உள் இயக்க, வெளி இயக்க படுகொலைக்காகவும் ஆதாரமற்ற அவதூறுக்காகவும் பயன்படுத்திய அதே வரலாற்று அடிப்படையிலானது இவை. அரசியல் ரீதியாக முரண்பட்ட நபர்கள் மீது நிதி மோசடி தொடங்கி பாலியல் வல்லுறவு செய்ததாக அன்று குற்றம் சுமத்திய, அதற்கு தலைமை தாங்கிய அதே நபர்கள், அதே அரசியல் வடிவத்தில் இதையே இன்றும் தொடர்ந்து செய்கின்றனர்.

இதை வரலாற்று ரீதியாக புரிந்துகொள்ளவும், அதை பொது வெளியில் கேட்கத் தயாரற்றதாகவும் மாறும் போது, "ஜனநாயகம்" முதல் நேர்மை வரை எல்லாம் போலியானதாகி விடுகின்றது.

என்.எல்.எவ்.ரி.யும், ஜனநாயக மத்தியத்துவ அமைப்பு வடிவமும்

நான் 1984 என்.எல்.எவ்.ரி. இன் மத்தியகுழு உறுப்பினராக இருந்த குறுகிய காலத்தில், அதே காலத்தில் மத்தியகுழுவில் இருந்த மூவர் புலிகளால் கொல்லப்பட்ட நிலையில், மிகுதி ஜவர் உயிருடன் தான் இருக்கின்றனர் என்றே நம்புகின்றேன்.

1987 புலிகள் என்னைக் கடத்திச் சென்று, காணாமலாக்கப்பட்ட சூழலில், மீள உருவாக்கிய புதிய மத்தியகுழுவில் ஏழு பேர் (அவர்கள் யார் யார் என்பது முழுமையாக ஞாபகம் இல்லை) இருந்தனர் என நினைக்கின்றேன். அதில் இருவர் இன்று உயிருடன் இல்லை என்று நம்புகின்றேன்.

இதைவிட என்.எல்.எவ்.ரி.யில் இருந்து உடைந்த பின் உருவான பி.எல்.எவ்.ரீ. இல் குறைந்தது ஐவர் அல்லது ஏழு பேர் மத்தியகுழுவில் இருந்தனர். அதில் இருவர் அல்லது மூவர் புலிகளால் கொல்லப்பட்டு இருக்க, மிகுதியான மத்தியகுழு உறுப்பினர்கள் உயிருடன் இருந்தனர் என்றே நம்புகின்றேன். மீண்டும் அதில் ஒருவர் புலிகளால் கொல்லப்பட்டதாக நம்புகின்றேன். மிகுதி நான்கு பேர் இன்று உயிருடன் இருப்பதாகவே நம்புகின்றேன். இதை விட அமைப்புக்குள் கட்சியும், அதற்கு ஐந்து பேர் கொண்ட ஒரு மத்தியகுழுவும் இருந்தது. இதில் இருவர் புலிகளால் பின்னர் கொல்லப்பட்டனர் என்றே நம்புகின்றேன். இந்தக் கட்சிக்கு கீழ் இருந்த இராணுவக் குழுவில் ஜவர் இருந்தனர். இதில் ஒருவர் புலிகளால் கொல்லப்பட்டனர் என்றே நம்புகின்றேன்.

இப்படி உருவான மத்தியகுழுக்கள், இராணுவக் குழுக்கள் சிந்தியும் சிதறியும் இருக்க, இவர்கள் அனைவருக்குமாக நான் எப்படி பொறுப்பாக, பதிலாக இருக்க முடியும். அதே நேரம் அனைவரையும் நோக்கி கேள்வியை எழுப்பாது என்னை நோக்கி மட்டும் குறிவைத்து எழுப்புவதும், அவதூறுகளைப் பரப்புவதும் எந்த வகையில் நேர்மையானது? அவதூறுவாதிகள் பொதுவானதை தனித்த நபர் சார்ந்த குறிப்பாக்கி விடுவதும், அனைவரும் சேர்ந்து பொதுவாக செய்ததை சொல்லாமல் இருப்பதும் நேர்மையின் பாலானதல்ல.

இதில் தீப்பொறி என்.எல்.எவ்.ரி. இடம் எவ்வளவு பணத்தைப் பெற்றது (நான் ஒருக்காலும் தீப்பொறியினரை சந்தித்ததும் கிடையாது - பணம் கொடுத்ததும் கிடையாது. பணம் அமைப்பால் தீப்பொறியினருக்கு கொடுக்கப்பட்ட தகவல், மத்தியகுழு உறுப்பினர் என்பதால் மட்டும் எனக்கு தெரியும். பணம் கொடுக்கும் இந்தியாவில் இருந்த மத்தியகுழு கூடி எடுத்த முடிவு அது. அங்கு நான் இருக்கவேயில்லை) என்பதை கூறாமல் விடுவதும், அவர்களை நோக்கி கேள்வி எழுப்பாமல் என்னை நோக்கி எழுப்புவதும் - எந்தவகையில் நேர்மையானது?

இங்கு என்னைத் தனியே பிரித்தெடுத்து இலக்கு வைப்பது என்பது, உண்மைகளை கண்டறிவதற்கல்ல. என் மீது அவதூறுகளை புனைவதற்கே. மக்கள் அரசியலை முன்வைக்காத சிலருக்கு, இது கொசிப்பு.

என்.எல்.எவ்.ரி.யுடனான எனது அரசியல் காலமே வரம்புக்கு உட்பட்டது.

அமைப்பில் நான் இருந்த காலம், செயற்பட்ட இடங்கள் வரம்புக்கு உட்பட்டது. நான் எங்கும் எல்லாமாகவும் இருக்க முடியாது. தனிமனிதனுக்குரிய வரம்பு கடந்து, எல்லாம் முழுமையாக எனக்கு தெரியாது. அமைப்பு பாதுகாப்பு சார்ந்து தெரிந்திருக்கத் தேவையற்றது எதுவும் எனக்கு தெரியக் கிடைக்காது. அது போல் தான் அமைப்பில் அனைவருக்கும்.

சண் தலைமையிலான கட்சியில் இருந்து உருவானதே தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (ரி.பி.டி.எப்.) என்ற அமைப்பு. என்.எல்.எப்.ரிக்கு முந்தைய இந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் (ரி.பி.டி.எப் இல்), 1980 களில் இணைந்து வேலை செய்தேன். 1983 இல் ரி.பி.டி.எப் என்ற அமைப்பு என்.எல்.எப்.ரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது, ஏழு பேர் கொண்ட மத்தியகுழு தெரிவு செய்யப்பட்டது. அப்போது நான் மத்தியகுழு உறுப்பினர் அல்ல, நான் அந்த அமைப்பின் சாதாரண உறுப்பினர் மட்டுமே.

1984 இன் பிற்பகுதியில் மத்தியகுழு ஒன்பது பேர்கள் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்ட போது, ஒற்றை எண்ணுக்காக மத்தியகுழுவில் ஒன்பதாவது நபராக மத்தியகுழுவால் நான் இணைக்கப்பட்டவன். அமைப்பில் தகுதி மற்றும் பொறுப்புக்கு ஒன்பதாவது இடத்தில் நான் இருந்து இருக்கின்றேன்.

பின்னர் 1987 இல் புலிகளால் கடத்தப்பட்டுக் காணாமல் போன காலத்தில், (நான் உயிருடன் இல்லை என்ற அமைப்பு கருதிய போதும்) இந்தியாவில் 1987 இல் என்.எல்.எப்.ரி நடத்திய இரண்டாவது மாநாட்டில், மீளவும் மத்தியகுழுவுக்கு, நான் உயிரோடு இல்லை என அமைப்புக் கருதியிருந்தும் எனது பிரசன்னமின்றி மீள தெரிவு செய்யப்பட்டேன்.

நான் புலிகளில் இருந்து தப்பிய பின் கொழும்பு வழியாக இந்தியா சென்று, முந்தைய எனது முரண்பாடுகள் மேலும் அதிகரித்த நிலையில், மீள கொழும்பில் வந்து தங்கி தொடர்ந்து விவாதித்த நிலையில், 1988 நடுப்பகுதியில் என்.எல்.எப்.ரி இல் இருந்து விலகும் கடிதத்தை சமர்ப்பித்தேன். அமைப்பு தனிப்பட்ட எனக்கு வெளியில் இருந்தது, தொடர்ந்து இயங்கியது.

இதன் பின் புலிகள் என்.எல்.எப்.ரியை முற்றாக 1991 இல் அழிக்கும் வரை (அக்காலத்தில் 15 பேர் அளவில் புலிகளால் கொல்லப்பட்டனர்), என்.எல்.எப்.ரி. தொடர்ந்தும் இயங்கியது. இந்த இடைக் காலத்தில் பலர் அமைப்பை விட்டு தொடர்ந்து விலகியதை அறியக் கூடியதாக இருந்தது.

என்.எல்.எப்.ரியில் எனது காலம் என்பது, இப்படி வரம்புக்கு உட்பட்டது. காலத்தால், அமைப்பின் கட்டமைப்பு மற்றும் நிறுவன கோட்பாட்டு வரைமுறைகளால் அனைத்தையும் தெரிந்தவனுமல்ல. ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் தெரிந்தவைகளே எனக்கான வரம்பு.

என் பற்றிய விபரம், என்னிடம் என்ன இருந்தது என்பதை, புலிகள் தங்கள் சித்திரவதைகள் மற்றும் வெளி விசாரணைகளில் பெற்றதை அடிப்படையாகக் கொண்டு, பகிரங்கமாகவே மேடையில் வைத்துக் கூறி இருக்கின்றனர்;. அவை என்னவென்பது வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.

28.04.1987 இல் புலிகள் என்னைக் கடத்தி காணாமலாக்கிய நிலையில், 80 நாள் அவர்களின் வதைமுகாமில் சித்திரவதையின் பின்பாக 17.07.1987 அன்று தப்பி இருந்தேன். இதன் பின் 35 நாட்கள் தலைமறைவாக இருந்தேன். இந்த தலைமறைவு வாழ்க்கையில் ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்கவைத்து அரசியல் ரீதியாக உதவியது நாவலன். நான் தப்பி இருப்பதை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாவலன் மூலம் தெரியப்படுத்தியதை அடுத்து, புலியின் கடத்தலுக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை தடுக்க, மாத்தையா - திலீபன் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்கள் மேடையில் வைத்து எனது உயிருக்கு உத்தரவாதத்தை தரக் கோரினர். இதையடுத்து கைலாசபதி கலையரங்கில் நடாத்தப்பட்ட அக் கூட்டத்தில், மேடையில் வைத்து பகிரங்கமாக எனது உயிருக்கு உத்தரவாதத்தை மாத்தையா வழங்கினார்;. கூட்டத்தில் அறிவிப்பின்றி திடீரென நான் மேடையில் தோன்றியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததுடன், அதனை எதிர்பார்க்காத அவர்கள் கூட்டத்தில் தாங்கள் மேலும் அம்பலப்படுவதில் இருந்து விலக இடைநடுவில் வெளிநடப்பு செய்தனர்;. இவை அன்றைய செய்திப் பத்திரிகையில் வெளியாகி இருக்கின்றது. 23.08.1987 அன்றைய ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி பத்திரிகைகளில் அந்த செய்திகள் இருக்கின்றது. இதற்கு முந்தைய பத்திரிகைளிலும் இதையொட்டிய பல செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின.

பார்க்க அன்றைய செய்திகள்

https://padippakam.com/padippakam/index.php/nortes/475-unijaffna

அக் கூட்டத்தில், என்னிடமிருந்து எவற்றைக் கைப்பற்றினர், நான் யார் என்ற விபரங்களை புலிகள் கூறி இருக்கின்றனர். என்னிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியையும், 154 ரவைகளையும் கைப்பற்றியதாக அவர்களே கூறுகின்றனர்;. மேலும் நான் அன்றைய காலத்தில் (மாத்தையாவின் மொழியில் தற்போது) மத்தியகுழு உறுப்பினர் என்ற தகவலையும் கூறுகின்றனர்;. அதேநேரம் எனது கைதுக்கு காரணமாக, ஆயுதம் வாங்க சென்ற தொடர்ச்சியில் சம்பந்தப்பட்ட ஆறாவது நபர் பற்றியும் கூறுகின்றனர். அந்த நபரிடம் கைப்பற்றியவை என்ன என்ற தகவலை, அன்று பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் தலைமைதாங்கிய அவ்வையிடம், மாத்தையா மற்றும் திலீபன் கூறிய தகவலை, அவ்வை அந்த மேடையிலேயே தெரிவிக்கின்றார். 80000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டது என்ற குறிப்பையும், அப் பணத்தைக் கொண்டு ஆயுதம் வாங்க முற்பட்டதாகவும் மாத்தையா கூறுகிறார்.

அன்றைய மொத்த உரையின் முழு ஒலி வடிவம்

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை

80 ஆயிரம் ரூபா ஏ.கே-47 வாங்க பணம் கைமாறியது. இந்த ஆறாவது நபர் கைதாவதற்கு முன் எனது தொடர்பில் இருந்தவர் சரிநிகர் சிவகுமார்.

சிவகுமாருக்கு முன் தொடர்பில் இருந்தவர் குருபரன். குருபரனுக்கு முன் தொடர்பில் இருந்தவர் அதியன்(புளட் - லெபனானில் பயிற்சி பெற்றவர்). அதியனின் தொடர்பில் இருந்தவர் யார் என்று தெரியாது. சிவகுமார் ஊடாக ஆயுதம் வாங்கியதும், கைதானதும், சித்;திரவதைகளை சந்தித்ததும் நடந்தேறியது. நான் எண்பது நாள் வதைமுகாமில் இருந்ததைவிட, சரிநிகர் சிவகுமார் அதைவிட அதிக நாள் அங்கு இருந்தார். நான் தப்பியதால் அவர் விடுவிக்கப்பட்டார். என்னைக் கடத்தி வைத்திருப்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இவர்கள் பின்னர் புலிகளால் விடுவிக்கப்பட்டு உயிருடன் உள்ளனர். அவர்களுக்கு தெரியும் என்ன நடந்தது என்பது. சிவகுமாரிடம் நான் கொடுத்திருந்த ஆவணங்கள், நூல்கள் என அனைத்தையும் புலிகள் எடுத்திருந்தனர்.

புலிகள் கூறியது போல் அன்று என்னிடம் இருந்தது இவைகளே தான். அவர்கள் கைப்பற்றியது இவைகளைத் தான். நான் தப்பிய பின் கொழும்பு சென்று, இந்தியாவுக்கு சென்றேன். அங்கு இருந்து திரும்பிய சிறிது காலத்தில் இயக்கத்தில் இருந்து விலகினேன்.

இப்படி இருக்க புலிகள் என்னிடம் எடுக்காத ஒன்றைப் பற்றி பேசுவதும், என்னிடம் எல்லாம் இருந்தது என்று சொல்வதும் எந்தவகையில் சரியானது, தர்க்க ரீதியானது?

கற்றன் நசனல் வங்கி தொடர்பாக எனக்குத் தெரிந்தவை என்ன?

அமைப்பில் என்ன நடந்தது என்ற அனைத்தும் அனைவருக்கும் தெரியாவிட்டாலும், நடந்தவை தெரிந்தவை என்பது எல்லைக்குட்பட்டவை. இந்த வகையில் எனக்கு தெரிந்ததையே இங்கு நான் வெளிப்படையாக பேச முடியும்.

முதலில் கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை "இருபது கோடி" ரூபாய்கள் என்பதே, இட்டுக்கட்டப்பட்ட கடைந்தெடுத்த கற்பனைப் பொய். இப்படி சேறடிக்கும் அவதூற்றுக் கற்பனைக்கு எதிரானதாகவே, அன்றைய பத்திரிகைச் செய்திகள் உள்ளது.

இதைவிட மற்றொரு பொய், என்.எல்.எப்.ரி.யே கற்றன் நசனல் வங்கியை முழுமையாக கொள்ளை செய்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அதை என்.எல்.எப்.ரி.க்கும், தனிப்பட்ட எனக்கு எதிராகவும் கட்டுக்கதையாக்குவது.

கற்றன் நசனல் வங்கி கொள்ளையானது இரு இயக்கங்களால் செய்யப்பட்டது. மூன்று நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து நடந்தது. அன்றைய பத்திரிகைச் செய்திகள் இதையே சொல்லுகின்றது. முதல் நாள் கொள்ளை என்.எல்.எப்.ரி.யால் செய்யப்பட்டது. (என்.எல்.எப்.ரி. முதல் நாள் செய்த கொள்ளையை புளட் தாங்கள் செய்ததாக கூறி வந்தனர்.) இரண்டாவது கொள்ளையானது மூன்று நாட்களுக்கு முன் வங்கியில் இருந்து எடுக்காது விட்டுச் சென்ற மிகுதியை இராணுவத்திடம் வங்கி எடுத்துச் சென்ற போது, ஈ.பி.ஆர்.எல்.எவ். அதை அறிந்து கொள்ளை அடிக்கப்பட்டது.

இரண்டு கொள்ளைகளையும் அவதூறுக்காக மொத்தமாக என்.எல்.எப்.ரி.யிடம் சுமத்தி கேட்பவர்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ். இடம் அதைக் கேட்பதில்லை. ஏன்?

இது இரண்டு தரம் நடந்ததான தரவுகளையும், கொள்ளை எவ்வளவு என்ற தரவுகளையும் - அன்றைய செய்திப்பத்திரிகையில் காணமுடியும்.

25.01.1985 அன்று இரவு இந்த கொள்ளை நடந்ததாக, 27.01.1985 அன்றைய பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. 27.01.1985 திகதிய ஈழமுரசு ஏறத்தாழ 50 இலட்சம் பெறுமதியான நகைக் கொள்ளை என்கின்றது. அதே திகதியில் 27.01.1985 ஈழநாடு பல இலட்சம் நகையும் 60 ஆயிரம் ரொக்கப் பணமும் கொள்ளை என்கின்றது. அதேநேரம் ஈழநாடு இத்தகவல்கள் உத்தியோகபூர்வமானதல்ல என்கின்றது.

31.01.1985 அன்றைய ஈழமுரசு பத்திரிகையில் எஞ்சிய நகையும் கொள்ளை எனவும் அவை சுமார் 50 இலட்சம் பெறுமதி என்கின்றது. 30.01.1985 ஈழநாடு எஞ்சிய நகையும் கொள்ளை ஆனால் பெறுமதி சுமார் ஒரு கோடி என்கின்றது.

29.01.1985 ஈழநாடு செய்தியில் முதல் நாள் ஒரு கோடி பெறுமதியான நகைகள் கொள்ளையில் இருந்து தப்பின என்ற செய்தியை வெளியிட்டது.

28.01.1985 ஈழமுரசு வங்கி கொள்ளையின் பெறுமதி 200 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று வங்கி மதிப்பிட்டதாக செய்தியை வெளியிட்டு இருக்கின்றது. இரண்டு கொள்ளைகளுக்கும் பின் 31.01.1985 ஈழநாடு உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடு என்று கூறி, இரண்டு கொள்ளைகளிலும் மொத்தமாக 6.5 கோடியாக இருக்கலாம் என்று கூறுகின்றது. இது தான் அன்றைய பத்திரிகைகளில் வெளியான தகவல்கள்.

அன்று உத்தியோகபூர்வமற்றதாக கூறிக்கொண்டு பத்திரிகை பரப்பரப்புக்கு ஏற்பவும், தனிப்பட்டவர்கள் இழப்பீட்டை பெறுவதற்காகவும் தொகையை பெருப்பித்துக் காட்டுகின்ற பொது மனநிலையை வைத்தும் பார்க்கும் போது, இந்தக் கொள்ளை இவர்கள் கூறுவது போன்ற தொகையைவிடக் குறைவானதே. முள்ளிவாய்க்கால் படுகொலை எண்ணிக்கை போல், ஊகங்கள் முதல் கற்பனைகள் வரை இதில் அடங்கும்.

இதையே நாங்கள் கிளிநொச்சி வங்கிக் கொள்ளையிலும் பொருத்திப் பார்க்க முடியும். கிளிநொச்சி வங்கிக் கொள்ளை தொடர்பாக 23.10.1981 ஈழநாடு பத்திரிகை செய்தியில் 40 இலட்சம் நகை கொள்ளை எனவும் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றது. 24.10.1981 அன்றைய ஈழநாடு பத்திரிகையில் நகையின் பெறுமதி 4 கோடி ரூபா என்ற உத்தியோகபூர்வ தகவலை மேற்கோள் காட்டுகின்றது. கிளிநொச்சி வங்கிக் கொள்ளையில் புளாட் 116 கிலோ தங்க நகை எடுத்தாக, நிலா என்ற பெயரில் புளாட் ஜென்னி தேசம்நெற்றில் எழுத்திய வரலாறு பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

கற்றன் நசனல் வங்கி கொள்ளையின் இந்தப் பணம் எனக்கு தெரிந்தவகையில் எப்படி எதற்கு செலவு செய்யப்பட்டது அல்லது என்ன நடந்தது என்பதை மட்டும் நானறிந்த வரையில் என்னால் இங்கு கூற முடியும்.

பெறுமதிகள் குறித்த அனுமானங்களுக்கும் கற்பனைகளுக்கும் அப்பால், அன்று மத்தியகுழு கணித்த மதிப்பீடு அண்ணளவாக 80 இலட்சம் ரூபா. கொள்ளையிடப்பட்ட நகை அண்ணளவாக 30 கிலோவாகும். இதில் சில பொருட்கள் (கோயிலைச் சேர்ந்ததாக இருக்கலாம்) செப்பு மற்றும் மெழுகு, ஊற்றப்பட்டு இருந்ததையும் உள்ளடக்கிய மொத்த நி;றை. இதுதான் அமைப்பின் மத்தியகுழுத் தரவுகள். இது அனைத்து மத்தியகுழு உறுப்பினருக்கும் தெரிந்த ஒன்று, அதுபோலவே தான் எனக்கும் தெரியும்.

எனக்கு தெரிந்தவகையில் கொள்ளையின் பின் அவை ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு பிராந்தியங்களில் - இராணுவக் குழுவைச் சேர்ந்தவர்களின் கண்காணிப்பில், தனித்தனியாக குறைந்தது இருவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. எங்கு, யார் எப்படி, வைத்திருந்தனர் என்பது, எந்த ஒரு தனிநபருக்கோ, மத்தியகுழுவுக்கோ முழுமையாக தெரியாது. அமைப்பின் இரகசிய அமைப்புக்கு ஏற்றதான வடிவில், நடைமுறையில் அது வைக்கப்பட்டது.

இந்தக் கொள்ளை நடந்து 10 மாதங்களின் பின்னால், அதாவது 1985 களின் கடைசியில் என்.எல்.எப்.ரி. உடைந்தது. குறிப்பாக சந்ததியார் 18.09.1985 அன்று கடத்தப்பட்டதற்கு முன்பாகவே, என்.எல்.எப்.ரி. முரண்பாடு தோன்றிவிட்டது. இந்தக் காலத்தில் என்.எல்.எப்.ரி - பி.எல்.எப்.ரி. என இரு பிரிவுகளாக உடைகின்றது. அமைப்பின் விவாதங்கள், மத்தியகுழுவின் நீண்ட அரசியல் விவாதங்களின் இறுதியில் அமைப்பு உடைந்தது. உடைந்ததன் பின் கூட்டு விவாதத்தில் முரண்பாடுகளுக்குள் சில உடன்பாடுகள் எட்டப்பட்டது. அமைப்பில் இருந்த அனைத்துப் பொருட்களும் கணக்குப் பார்க்கப்பட்டு, அவற்றில் மூன்றில் ஒருபங்கு பி.எல்.எப்.ரி. கொடுக்கும் - எடுக்கும் என்ற உடன்பாடு எட்டப்பட்டது. இதற்குள் ஆயுதம், பணம், நகை.. அனைத்தும்; அடங்கும். அப்போது வங்கிக் கொள்ளையில் இலங்கையில் எஞ்சி இருந்தது, ஐந்தில் ஒரு பகுதி தான். அண்ணளவாக ஆறு கிலோ நகைகள். அதில் அண்ணளவாக 2 கிலோ நகைகள் பி.எல்.எப்.ரி. க்குச் சென்றது. மிஞ்சியது அண்ணளவாக என்.எல்.எப்.ரி. க்கு நாலு கிலோ நகைகள்.

அமைப்பு உடைவுக்கு முன்பாகவே கொள்ளையின் பெரும்பகுதி இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பணமாக்கப்பட்டு, அமைப்பின் தேவைகளுக்கென பயன்படுத்தப்பட்டு வந்தது. இது எந்த வகையில் செலவு செய்யப்பட்டது என்பது பூரணமாக எனக்குத் தெரியாவிட்டாலும் (இக்காலத்தில் நான் இந்தியாவில் இருந்ததில்லை), பொதுப்படையாக கூற முடியும்.

1. இலங்கையில் இருந்து நகைகள் சிறிது சிறிதாக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட போது, இரு தரம் அமைப்பு அதை இழந்து இருக்கின்றது. வள்ளத்தில் கொண்டு சென்ற போது, 30.04.1985 அன்று வேதாரணியத்துக்கு கிட்டவாக வள்ளம் அலையில் புரண்டு மூழ்கிப் போனது. இதன் போது எமது தோழர் தவம் மரணித்ததும், மூன்று எஞ்சினைக் கொண்ட வள்ளத்தையும் - நகையையும் இழந்த சம்பவமும் நடந்தது. வள்ளம் கூட இந்தக் கொள்ளையில் வாங்கியது தான்.

இரண்டாவது சம்பவம் மதுரையில் (சரியாக நினைவில்லை) நடந்தது. நகையுடன் இந்திய அதிகாரிகள் கைது செய்த சம்பவம் நடந்தேறியது. அது அன்றைய பத்திரிகையில் இனந்தெரியாத இலங்கைத் தமிழர்கள் கைது என செய்திகளில் வந்ததாக அறிந்தேன். அக்காலத்தில் என்.எல்.எவ்.ரி. கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை செய்தது என்பது வெளி உலகுக்கு தெரியாது. அமைப்பு உடைந்ததன் மூலம், 1987 இல் வெளியுலகுக்கு தெரிய வந்தது. இக்காலத்தில் இந்தியாவில் நகையுடன் கைதான பல சம்பவங்கள் நடந்தேறியது. இந்தியாவில் அக்காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை ஆவணமாகவுள்ள பதிவுகளில், இரு குறிப்புகள் இது தொடர்பாக இருக்கின்றது. குறிப்பாக சுங்கத் திணைக்களக் குறிப்பு ஒன்றில் 27.02.1984 ரெலோ யாழ்ப்பாணம் மக்கள் வங்கியில் கொள்ளையடித்த நகைகள் 11.774 கிலோ பிடிபட்டதான செய்தி. இரண்டாவது சம்பவம் 18.05.1985 அன்று மதுரையில் 21.22 கிலோ நகைகள் பிடிபட்டதான செய்தி. அந்த பஸ்சில் 19 இலங்கைத் தமிழர்கள் இருந்திருக்கின்றனர்;. யாரும் உரிமை கோராததால் குறிப்பாக எந்த இயக்கம் என்பது அடையாளம் காணப்படவில்லை, யாரையும் குற்றவாளியாக்கவுமில்லை.

இப்படி அமைப்பின் உடைவிற்கு முன்பாகவே, எம்மிடம் முதல் வள்ளம் இருந்த காலத்திலேயே பெரும்பகுதி இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.

2. இக்கால கட்டத்தில் நான் இந்தியாவிற்கு சென்றதில்லை. நான் 1987 புலிகளில் இருந்து தப்பிய பின், கொழும்பில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு சென்றேன். அங்கு சென்று தங்கியிருந்த போது, அனைவருக்கும் (அண்ணளவாக அங்கு 15 பேர் அளவில் இருந்தனர்.) கொடுத்தது போல் - நாளொன்றுக்கு எனக்கும் 10 ரூபா தரப்பட்ட ஞாபகம். உணவு, போக்குவரத்து, உடை அனைத்துக்குமாக இது கொடுக்கப்பட்டது. 10 முதல் 20 பேர் வரை, 1983 முதல் இந்தியாவில் தங்கி இ;ருந்தனர். பயிற்சி முகாம்கள் இருந்திருக்கின்றது. இந்தியாவில் இருந்தபோது தலைமறைவாகவே எப்போதும் அமைப்பு இருந்தது. பிற இயக்கங்கள் போல் இந்தியாவிடமோ, வேறு எந்த நாட்டிடமோ பணமோ, ஆயுதமோ வாங்கியதில்லை. வங்கிப் பணமே இதற்கு இப்படியும் பயன்படுத்தப்பட்டது.

3. இக்காலத்தில் இலங்கையின் ஏற்பட்ட செலவுக்கு இந்தியாவில் இருந்து தான் பணம் வந்தது. இருப்பினும் இலங்கையில் பணம் பெரியளவில் தேவைப்படவில்லை. முழுநேர உறுப்பினர்கள் கூட வீட்டில் அல்லது தோழர்கள் வீடுகளிலேயே, உணவுக்காகத் தங்கியிருந்தனர். 1986 ஏப்ரலில் ரெலொ அழிப்பின் பின்பாக, அவ்வியக்கம் சார்ந்த ஆயுதங்கள் உதிரி நபர்களால் விற்பனைக்கு வந்த போது தான் - அவற்றை விலைக்கு வாங்குவதற்கு இலங்கையில் அதிகளவில் பணம் தேவைப்பட்டது. பணம் செலுத்தி பல ஆயுதங்கள் வாங்கப்பட்டது. இப்படி வாங்கப்பட்ட முயற்சியின் பின்னணியில் தான், நான் கைது செய்யப்பட்டேன்;. ரெலோ அழிக்கப்பட்ட பின்னர் அவ் இயக்கத்தின் ஆயுதங்கள் இரகசியமாக விற்பனைக்கு வந்தபோது அவ் ஆயுதங்கள் வாங்கப்பட்டது. சிவகுமார் புலிகளிடம் பிடிபட முன், அவர் மூலம் எஸ்.எம்.ஜி. மகசின் வாங்கிய ஞாபகம் உண்டு. அமைப்பின் தோழர்;கள் வாங்கிய சம்பவங்களும் உண்டு. ரெலோ இயக்கம் அழிக்கப்படுவதற்கு முன்பு, பெரிய லொறிகளின் மேல் பொருத்திக்கொண்டு திரிந்த எல்.எம்.ஜி வரை அமைப்பால் வாங்கப்பட்டு இருந்ததை நான் பார்த்தேன். இதேபோல் பல ஆயுதங்கள் இலங்கையில் வாங்கப்பட்டு அமைப்பிடம் இருந்தது.

4. இந்தியாவிலும் ஆயுதங்கள் வாங்கப்பட்டது. என்னிடம் இருந்து ஆயுதம் எடுத்தது போல் அன்ரனிடம் எடுக்கப்பட்டது குறித்து, அவர் குறித்து வெளிவந்த வரலாற்றுக் குறிப்பில்; குறிப்பிடப்பட்டுள்ளது. பி.எல்.எப்.ரி. யைச் சேர்ந்த விசுவானந்ததேவன் கடலில்; வைத்து காணாமல் போன போது, அவருடன் அதே படகில் சென்ற மேலும் இருவர் (கண்ணன், மற்றும் புளட்டில் இருந்து வெளியேறிய விசு) அவரோடு காணாமல் போனார்கள். அன்று மூவரிடமும் ஆயுதமிருந்ததையும், வங்கி நகையை எடுத்துச் சென்றதாகவும் பி.எல்.எப்.ரி. யினர் கூறுகின்றனர். பி.எல்.எப்.ரி. இடம் இருந்த ஆயுத எண்ணிக்கையை விட, பல மடங்கு ஆயுதங்கள் என்.எல்.எப்.ரி இடம் இருந்தது. என்.எல்.எப்.ரி - பி.எல்.எப்.ரி. வைத்திருந்த ஆயுதங்கள், இந்தப் பணத்தில் தான் வாங்கப்பட்டு இருந்தது.

5. இந்தப் பணத்தில் 1000 க்கு மேற்பட்ட கைக்குண்டு தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இப்படி எம்மால் இந்தியாவில் வார்க்கப்பட்ட கைக்குண்டுகளின் கோது மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இந்தியாவில் இருந்து எமது தோழர்கள் இருவரால் கொண்டு வரப்பட்ட போது 14.05.1984 அன்று வேதாரணியம் பஸ்சில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். (அமைப்பின் பெயர் உட்பட குறிப்பிட்டு வழக்கு நம்பர் 303-85) இந்திய ஆவணங்களில் பதிவாகி இருக்கின்றது. இப்படி வார்க்கப்பட்ட கைக்குண்டுக் கோதுகள் ஆயிரமளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. இதற்கு தேவையான வெடிமருந்துகளும் இதனுள் அடங்கும். 30.03.1985 அன்று இது போல் ஆயுதங்களுடன் சித்திலைபாக்கத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். (பெயர் உட்பட அமைப்பும் குறிப்பிட்டு வழக்கு நம்பர் 145-85). இப்படி ஆயுதங்கள், வெடிமருந்துகள் இந்தப் பணத்தில் தான் வாங்கப்பட்டது.

6. இக்காலத்தில் இலக்கு பத்திரிகை, முன்னணிச் செய்தி பத்திரிகை, லெனினிஸ்ட், பயணம், என்ற பத்திரிகை வெளிவந்திருக்கின்றது. சில தனி வெளியீடுகள் வெளிவந்திருக்கின்றது. உட்கட்சி விவாதங்கள் நடந்தபோது 500 பக்கத்திற்கு குறையாத உட்சுற்று அறிக்கைகள் அனைத்தும் அச்சில் இடப்பட்டு (றோனியோவில்), அனைத்து உறுப்பினருக்கும் கொடுக்கப்பட்டது. இதைவிட பி.எல்.எவ்.ரி. பத்திரிகையை வெளியிட்டு இருக்கின்றது. குறைந்தது 15 க்கு மேற்பட்ட துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு இருக்கின்றது.

ரெலோ, நேரு என்ற எமது தோழரை கொன்ற போது, 19.02.1985 "புரட்சிகர முத்திரைகளும் கொலைவெறி பிடித்த முகங்களும்" என்ற துண்டுப்பிரசுரம், ஒரு இலட்சம் பிரதிகள் வெளியிடப்பட்டது. இதன் மூலம் ரெலோ அரசியல்ரீதியாக அம்பலமாக்கப்பட்டது. 30.06.1985 அன்று கொலைவெறியுடன் ரெலோ எமது தோழர்களை கடத்திச் சென்ற பின் "ஏனிந்த மனித வேட்டை" (பார்க்க ஆவணத்தில்) என்ற துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது.

சந்ததியார் கொல்லப்பட்ட போது, 1985 இன் இறுதியில் 1000 பெரிய போஸ்டர்கள் இந்தியாவில் அச்சடிக்கப்பட்டு, வடக்கில் ஒட்டப்பட்டது. இது தான் புளட்டை முழுமையாக அம்பலப்படுத்தியது. இப்படி எல்லாம் பணம் செலவு செய்யப்பட்டது.

7. பணம் எங்கே என்றால், எனக்குத் தெரிய இப்படித்தான் பணம் கையாளப்பட்டது. தீப்பொறி அமைப்பானது, புளட் கொலைகார கும்பலிடம் இருந்து தப்பி மத்தியகுழுவில் இருந்து ஓடிய போது, அவர்களை என்.எல்.ப்.ரி. பாதுகாத்தது. தங்குமிடம் பணம் உட்பட அனைத்துக்கும் உதவியது. இலங்கையில் புளட்டின் இராணுவத்துக்கு பொறுப்பாக இருந்த மத்தியகுழு உறுப்பினர் சந்திரன் என்பவரை, 10.04.1984 அன்று புளட் கைதுசெய்து சித்திரவதை செய்து கொல்ல முனைந்தபோது, புளட் மத்தியகுழுவைச் சேர்ந்த கந்தன் எதிர்ப்பால் விடுவிக்கப்பட்டார். சந்திரன் ஆறு நாட்கள் கைகால் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இதையடுத்து 08.02.1985 புளட் மத்தியகுழு கூட்டம் புளட் கொலைகாரர்களின் கண்காணிப்பில் கூட்டப்பட்ட அசாதாரணமான அச்சுறுத்திய பின்னணியிலேயே - தீப்பொறி அங்கு மௌனம் சாதித்து தப்பி தலைமறைவாகியது.

இந்த வரலாறுகளை அடிப்படையாக கொண்டு "புதியதோர் உலகம்" நாவல், "தீப்பொறி" பத்திரிகை எல்லாம், கற்றன் நசனல் வங்கிப் பணத்தில் தான் மக்கள் முன்கொண்டு வரப்பட்டது. தீப்பொறிக்கு கொடுக்கப்பட்ட பணம் இந்தியாவில் வைத்தே கொடுக்கப்பட்டது. இதில் நான் சம்மந்தப்பட்டது கிடையாது. தீப்பொறியை அரசியல்ரீதியாகவோ, வேறு எந்தவகையிலும், எக்காலத்திலும் நான் சந்தித்தது கிடையாது. ஆனால் அவர்களுக்காக இப்படியும் பணம் செலவு செய்யப்பட்டது.

8.இலங்கையில் அமைப்புக்குச் சொந்தமாக உயர்வலுவுள்ள குறைந்தது மூன்று எஞ்சின் பூட்டிய வள்ளம் இருந்தது. அதைவிட வாகனம் இருந்தது. குறைந்தது இரு சிறிய மோட்டார் சைக்கிள் இருந்தது. பல மிதி (சைக்கிள்) சைக்கிள்கள் இருந்தன. எனக்குத் தெரிந்தவகையில் கற்றன் நசனல் பணம் இப்படி தான் செலவு செய்யப்பட்டது. அடிக்கடி வள்ளம் இந்தியா சென்று வந்த போது, எரிபொருளுக்கு செலவு செய்யப்பட்டது. இப்படித் தான் பணம் செலவு செய்யப்பட்டது.

9.யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் புலிகளால் அடித்து நொருக்கப்பட்ட பின், ஏற்பட்ட சேதம் 20 ஆயிரம் ரூபா. பல்கலைக்கழக விடுமுறையாலும் - புலிகளின் மேலான பயத்தாலும் போராட்டம் கலைந்துவிட்டது. அந்தப் பணத்தை அமைப்பிடம் இருந்து நான் வாங்கிக் கொடுத்தேன். இது நடக்கவேயில்லை என்ற கூற்றுக்கு முரணாக, அன்றைய பத்திரிகைச் செய்தி தகவல் வழங்குகின்றது. 09.12.1986 அன்று ஈழநாடு "குருதி உறைந்த தேசத்தில் குண்டர்களின் அடக்குமுறை" என்ற தலைப்பில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரூபா சேதம் பற்றிய தகவலை குறிப்பிட்டு இருக்கின்றது. இப்படி தான் அமைப்புப் பணம் கையாளப்பட்டது.

10. யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதியில் (எனக்கு இடம் தெரியாது) இராணுவத் தேவைக்காக நிறுவப்பட்ட, பொது மக்கள் பாவனையில் எம்மிடம், லேத் மெசின் இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த லேத்தின் எண்ணிக்கை மிகச் சிலவே. அங்கு வேலை செய்த தோழர் ஒருவரை பின்னால் புலிகள் கொன்றனர். புலிகள் லேத்தை அபகரித்தனர். இங்கும் கற்றன் நசனல் பணம் கையாளப்பட்டது.

11. இந்தியா - இலங்கையில் சிறியளவில், ஒரு ஆயுதப் பயிற்சி முகாம் இருந்தது. இதற்கு பணம் செலவு செய்யப்பட்டது. எல்.எல்.எல்.ரி. – பி.எல்.எவ்.ரி. உடைவின் பின்பாக, 1986 எப்பிரல் ரெலோ அழிக்கப்பட்ட போது, எல்.எல்.எல்.ரி. அதை ஆய்வு செய்தது. அதை வெள்ளைப் பயங்கரவாதம் (சீனாவில் நடந்தை அப்படித்தான் அழைக்கப்பட்டது) என்ற அழைத்து, இந்தியாவுக்கு பின்வாங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் போது மத்திய குழு உறுப்பினார் உட்பட பலர் இந்தியா சென்றனர். அதன் போது அமைப்பில் எஞ்சிய இருந்த நகையின் பெரும்பகுதி (எல்.எல்.எல்.ரி. – பி.எல்.எவ்.ரி. உடைவின் போது எல்.எல்.எல்.ரி. இருந்த அண்ணளவாக நாலு கிலோ) இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அத்துடன் இந்தியாவில் பயிற்சி முகம் நிறுவப்பட்ட பயிற்சிகள் ஆரப்பிகப்பட்டது. தொடர்ந்து தோழர்கள் இலங்கையில் இருந்து அனுப்பட்டனர். இப்படி அனுப்பப்பட்வர்களில் இருந்து தான், 1987 இல் நான் இன்றி நடந்த அமைப்பு மாநாட்டில் புதிய மத்திய குழுவுக் தெரிவானர்கள்.

12. அமைப்பு ஆதரவாளர் மூலம் நெல்லியடியில் போக்குவரத்து பஸ் ஒன்று சேவையில் இருந்தது. அந்த அமைப்பு ஆதரவாளர் 1986 - 1987 புலிகளிடம் காட்டிக் கொடுப்போம் என்று கூறி, பஸ்சை மோசடி செய்ததாக அறிந்தேன்.

13. அமைப்பில் வாங்கப்பட்ட ஆயுதங்கள், இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள், 1990-1991 இல் புலிகளால் கடத்தப்பட்டு 15 பேர் கொல்லப்பட்ட காலத்தில் - கொல்லப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவே அறிய முடிகின்றது.

14. 1990 களில் என்.எல்.எப்.ரி. இடம் எஞ்சிய பணம், நகை தீப்பொறியிடம் கொடுக்கப்பட்டதாக தகவல். அப்போது அமைப்பில் நான் இருக்கவில்லை. தீப்பொறியிடம் கொடுக்கப்பட்டதை, அவர்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்ததை மீள எடுக்கப் போனபோது தான் கேசவன் பிடிபட்டதென்பது ஒரு தகவல்.

இவைகளே தான் எனக்குத் தெரிந்தவை.

குறிப்பு:

1. என்னோடு தொடர்புபடுத்தி வேறு நபர்களை இணைக்கும் அவதூறுகள் அனைத்தும் இட்டுக் கட்டப்பட்ட பொய்கள்.

2. தனிப்பட்ட இன்றைய என் வாழ்க்கையைச் சுற்றி கூறப்பட்ட அவதூறுகள் எல்லாவற்றுக்கும், இங்குள்ள வாழ்க்கை முறைக்குள்ளும் - இங்குள்ள ஆவணங்களின் அடிப்படையில், இவை எப்படிப்பட்ட அவதூறாக இருக்கின்றது என்பதை காட்டவும் முடியும் - நிறுவவும் முடியும்.

இப்படி இதை முன்வைப்பவர்கள் 1984 - 1985 இல் புளட் என்ற இயக்கத்தையே அழித்தவர்கள். கட்டுக்கதையும், அவதூறுகள் மூலமும் போட்டுத் தள்ளிய தங்கள் புளட் அழிவு அரசியலுக்கு, அரசியல் முலாம் பூசியும், புளட்டை அழித்தவர்கள் வேறு யாருமல்ல இவர்கள் தான். புலிகள் 1986 இறுதியில் புளட்டை தடை செய்த போது, புளட் என்பது வெறும் கோது தான். இப்படி தங்கள் சொந்த இயக்கத்தை அழித்த கும்பல், இன்று எனக்கு எதிராக, அதே வடிவத்தில் களமிறங்கி இருக்கின்றனர். அவ்வளவு தான்.

3. என்.எல்.எப்.ரி. கொள்ளை அடித்தது சரியா, ஆயுதங்கள் வாங்கியது சரியா, குறிப்பாக ரெலோ அழிப்பின் பின் ஆயுதங்கள் வாங்கியது ஏன்? எதற்கு?

இது குறித்து விரிவான வரலாறாக எழுதி வருவதால், இங்கு இந்த விடையம் பேசவில்லை. இங்கு அவை அவசியமுமில்லை.