Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

950 களில் தமிழினவாத கண்ணோட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தைக் கோரிய காலத்தில், பாடசாலைகள் தனியார்மயமாக இருந்தது. அதேநேரம் அரச உதவி பெறுவனவாக இருந்தன. இந்தக் கல்விமுறையானது அனைவருக்குமான கல்வி மறுக்கப்பட்டு, வர்க்கம், மதம், சாதி, பால்.. சார்ந்த கல்வியாக குறுகியிருந்த காலம். குறிப்பாக யாழ்ப்;பாண வெள்ளாளிய சமூக அமைப்பில் "தீண்டத்தகாத" சாதிகளாகக் கருதப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, கல்வி கற்கும் உரிமையே கிடையாது. எப்படி "தீண்டத்தகாதவர்கள்" கோயில்களில் வழிபடும் உரிமை இருக்கவில்லையோ, அதேபோல் கல்வியும் கற்க முடியாது. இந்த வெள்ளாளிய சமூக மேலாதிக்க ஒடுக்குமுறையையே, தமிழினவாதிகள் தங்கள் இனவாதக் கொள்கையாக முன்வைத்தனர். 1949 இல் உருவான இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்த சமூகப் பின்னணியில் இருந்தே உருவானது.

இந்த வெள்ளாளிய சமூக அரசியல் பின்னணியில் இருந்த தனியார் பாடசாலைகளை, 1960 இல் அரசு தேசியமயமாக்கிய போது தமிழினவாதிகள் எதிர்த்தனர். தமிழினவாதிகளின் இந்த இனவாத எதிர்ப்பை மீறி, இலங்கை அரசு, பாடசாலைகளை தேசியமயமாக்கியே, இலவச தாய்மொழிக் கல்வியை அனைவருக்கும் கட்டாயமாக்கியது. இந்த பின்னணியிலேயே பரந்துபட்டளவில் தமிழ் மொழிக் கல்வி, தமிழ் மக்களுக்கு கிடைத்தது. தாய்மொழியிலான தமிழில் அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது, தமிழினவாதிகளின் வெள்ளாளிய மேலாதிக்கத்துக்கு எதிரானதாகவே பார்க்கப்பட்டது. சமூகத்தில் எத்தகைய மாற்றமும், வெள்ளாளிய சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துவதாக இருந்தால், தமிழினவாதம் மூலம் அவை அனைத்தையும் தமிழினவாதிகள் எதிர்த்தனர். இது தான் தமிழினவாதத்தின் வரலாறு.

1தங்கள் தமிழினவாதத்தை உசுப்பேற்ற தமிழினவாதிகள் 1950 இல் முன்வைத்த தமிழ்ப் பல்கலைக்கழகம், அனைத்து தமிழ் மக்களுக்குமானதல்ல. மாறாக வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பில், வர்க்க ரீதியாக சாதிய ரீதியாக, இன ரீதியாக தகுதி பெற்ற ஆண்களுக்காகவே, தமிழ் பல்கலைக்கழகத்தைக் கோரினர்.

இவர்கள் அரசியல்ரீதியாக பிரதிநிதித்துவம் செய்த சமூகம் எப்படிப்பட்டது. 1940 – 1950 களில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த "தீண்டத்தகாதோர்" ஊருக்குள் வருவதாக இருந்தால் காவோலையை இழுத்தபடி, கழுத்தில் சிரட்டையைத் தொங்கவிட்டபடி தான் நுழைய முடியும். கால் தடத்தில் ஏற்படும் "தீண்டாமையை" அழிக்க காவோலையையும், எச்சில் துப்பும் போது ஏற்படும் "தீண்டாமையை" தடுக்க, சிரட்டையையும் கட்டி தொங்கவிட்ட சமூகம் தான், 1950 இல் தமிழ் பல்கலைக்கழகத்தை கோரியது. தமிழினவாத மூலம் இவர்கள் யாருக்காக கோரினர் என்பது, ஒளிவுமறைவற்ற வெளிப்படையான சமூக வடிவிலானது. அதேநேரம் ஒடுக்கும் உயர் சாதிப் பெண்களுக்கும், கல்வி மறுக்கப்பட்டிருந்த காலம்.

1900 (18-19 நூற்றாண்டில்) களில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் சாதிகள் தங்கள் அடிமைகளாகவும், அவர்களைச் சீதனமாகவும் கொடுக்குமளவுக்கு இருந்த காலத்தையே, தமிழனைத் தமிழன் ஆண்டதாகவும், தங்களை ஆண்ட பரம்பரை என்று பீற்றிக் கொள்ளுவதை, இதனுடன் இணைத்துப் பார்க்கவேண்டும். இவர்கள் தான் தமிழினவாதிகள். தங்களை ஆறுமுகநாவலர் வழி வந்த வெள்ளாளியப் பரம்பரை என்று கூறிக்கொள்ளும் தமிழினவாதிகள், தங்களுக்கான வெள்ளாளிய தமிழ் பல்கலைக்கழகத்தையே 1950 களில் கோரினர்.

யாழ்ப்பாணத்தில் இருந்த கிறிஸ்துவ மதப் பாடசாலைகள் உருவாக்கிய உயர் அதிகார வர்க்கம் பெருமளவில் வெள்ளாளிய கிறிஸ்துவ பின்னணியைக் கொண்டிருந்த சூழலில், போட்டிக்கு வெள்ளாளிய இந்துப் பாடசாலைகள் மத அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருந்தது. இவை அரசிடம் உதவி பெற்ற தனியார்; பாடசாலைகளாகவும், அனைவருக்கும் தமிழ்மொழிக் கல்வியை மறுதளித்தது. அனைருக்கும் கல்வி என்பது, அடிப்படையில் வெள்ளாளிய தமிழினவாதத்துக்கும், அதன் சிந்தனைமுறைக்கும் முரணானதாக இருந்தது. இந்த வகையில் 1950 தமிழினவாதிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ் பல்கலைக்கழகம் அனைத்து தமிழ் மக்களும் கற்கும் வாய்ப்பை முன்வைத்ததில்லை. அப்படியொரு வாய்ப்பை கொடுக்கும் வண்ணம் பாடசாலைகளை தேசியமயமாக்குதலையும், இலவசக் கல்வியையும், சிங்கள மொழித் திணிப்பாகக் காட்டி, தமிழின வெறுப்பூட்;டப்பட்டது. இதை மீறி அரசு வழங்கிய அனைவருக்குமான கல்வியுரிமையானது, யாழ்ப்பாணத்தில் சாதி ரீதியாக தொடர்ந்து மறுதளிக்கப்பட்டது. பொது இடங்களைப் பயன்படுத்துவதில் இருந்த "தீண்டாமையானது", ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான கல்வியைத் தடுத்து நிறுத்தியது.

1960 களில் பொது இடங்களைப் பயன்படுத்துவதை தடுக்கும் "தீண்டாமைக்கு" எதிரான இடதுசாரிகளின் போராட்டமே "தீண்டாமை" முறையின் சில கூறுகளைத் தகர்த்தது. இதன் பின் ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து கல்வி கற்றவர்களுக்கான அரச வேலைவாய்ப்பை வழங்குவதற்கு, தொடர்ந்து தமிழினவாதிகள் தடையாகவே இருந்து வந்தனர். தமிழினவாதிகள் யாரைத் "துரோகி" என்று கூறினரோ, அவர்கள் மூலமே 'தீண்டாமை" சமூகத்தில் இருந்து வந்த ஒடுக்கப்பட்ட சாதிகள் அரச வேலைகளைப் பெற முடிந்தது.

"தீண்டாமை" சாதியில் பிறந்தவர்களும் கல்வி கற்கும் வண்ணம் இலவசப் பாடசாலைகளை அரசு கொண்டு வந்த போது, அதை எப்படி எந்தக் காரணத்தைக் கூறி தமிழினவாதிகள் எதிர்த்தார்கள் என்பதைப் பார்ப்போம். 11.09.1960 சுதந்திரனில் "பாடசாலைகளை பறித்தெடுப்பது அடாத செயல்" என்ற தலைப்பில், தாய்;மொழி இலவசக் கல்விக்கான தேசியமயமாக்கலை தமிழினவாதிகள் எதிர்க்கின்றனர். இப்படி எதிர்த்து மக்களை தமிழின ரீதியாக சிந்திக்கும் வண்ணம், உபதலையங்கங்கள் மூலம் வெள்ளாளிய கண்ணோட்டத்தை முன்வைக்கின்றனர். "..உள்ள தமிழ் கல்வி நிலையங்களை சீரழிக்கின்ற – மேலதிக சுமை அரசாங்கத்திற்கு எதற்கு – பெற்றோரின் உரிமையில் தலையிடுவது சர்வாதிகாரப் போக்கு" இப்படி தமிழினவாதிகளின் வெள்ளாளிய சமூக உடமையைப் பற்றியும், உரிமையைப் பற்றியும் பேசுகின்றனர். கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திற்கு, கல்வி கிடைக்கும் விடையம் பற்றிப் பேசவில்லை. இது வெள்ளாளிய மொழியில் "கண்கண்ட இழி சாதிகள்" கல்வி கற்பதை சீரழிவாகவும், சாதியை மையப்படுத்தி மதத்தை முன்னிலைப்படுத்திய தங்கள் கல்வியையும் - கல்விமுறையையும் பறித்தெடுப்பதே அடாத செயல் என்கின்றனர். "அரசாங்கத்துக்கு மேலதிக சுமை" எதற்கு என்று முதலைக்கண்ணீர் வடிக்கும் வெள்ளாளிய தமிழினவாதம், அரசின் சுமையைக் குறைக்க இரு மொழி கல்விக் கொள்கையை அமுல்படுத்தக் கோரி இருக்கவேண்டும். இரு மொழிக் கற்கைமுறையை, நாட்டில் வாழும் அனைவருக்கும் கட்டாயமாக்கி, மொழிப் பயன்பாடு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கவேண்டும். இரு மொழியையும் கற்க மாட்டோம், இரண்டு மொழியும் அரசகரும மொழியாக இருக்க வேண்டும் என்பது, அரசதுறையில் மொழி சார்ந்து இரண்டு மடங்கு ஊழியர்களை பணிக்கு அமர்த்தக் கோருகின்ற இனவாதக் கண்ணோட்டமே, எதிர்மறையில் 1956 இல் சிங்களம் மட்டுமே அரச மொழி என்ற இனவாதச் சட்டமாக மாறுகின்றது.

இனரீதியாக பிரிவினையை அரசியலாகக் கொண்ட வெள்ளாளியச் சமூகமானது, தனது மேலாதிக்க கல்வியைப் பாதுகாக்கவே, தேசியமயமாக்கலை சிங்களமயமாதலாகக் காட்டுகின்றது. 28.09.1960 சுதந்திரனில் "அரசாங்கம் பாடசாலைகளை கையேற்றல்" என்ற தலைப்பில், உபதலைப்புகளாக "வடக்கிலும் கிழக்கிலும் சிங்களம் திணிக்கப்படும் - யாழ்ப்பாணப் பாடசாலைகள் தரத்திலும் குறைக்கப்படும்" என்கின்றது. சிங்களம் திணிக்கப்படும் என்று கூறி அனைவருக்கும் இலவச மொழிக் கல்வி என்ற தேசியமயமாதலை எதிர்க்கும் அதேநேரம்;, யாழ்ப்பாணப் பாடசாலைகள் தரத்தில் குறைக்கப்படும் என்று, யாழ்பாணிய மேலாதிக்கத்துக்கு எதிரானதாகக் காட்டியே, தமிழினவாதம் முன்வைக்கப்படுகின்றது. நாட்டில் இலவச மொழிக் கல்வி வளர்ச்சி என்பது, அனைத்து மாணவர்களின் சமச்சீரான கல்வியாக மாறுவதும், யாழ்ப்பாணத்து ஒடுக்கப்பட்ட சாதிகள் கல்வி கற்பது என்பது, தங்கள் யாழ் மேலாதிக்க கல்வி சார்ந்த இலங்கை மீதான அதிகாரம் கேள்வியாவது குறித்த சொந்த அச்சத்தையே - தமிழினவாதம் மூலம் முன்வைத்தனர். யாழ் சமூகம் இலங்கை தளுவிய அளவில் கல்வி மூலம் பெற்று இருந்த அதிகாரத்தினை, அனைவருக்குமான சமச்சீரான கல்வி தகர்த்து விடும் என்ற வெள்ளாளிய சிந்தனைமுறை கொண்டிருந்த அச்சத்தை மூடிமறைக்க, தமிழினவாதத்தை பயன்படுத்தினர். இன்று கல்வி கற்ற தமிழ் சமூகம், தமிழினவாத சிந்தனை முறைக்கு முரணாக தங்களை அறியாமல் கற்ற பின்னணியிலேயே சாத்தியமானது.

பாடசாலைகள் தேசியமயமாதல் என்பது மதச் சிறுபான்மை உரிமை மீதான பௌத்த ஒடுக்குமுறையாக தமிழினவாதம் கட்டமைத்து காட்டவும் தயங்கவில்லை. 13.11.1960 சுதந்திரனில் "பாடசாலைகள் அரசாங்கம் தேசியமயமாக்குவது, மதம் சார்பான சிறுபான்மையினருக்கு எதிரானது" "அவர்களின் உரிமை மீது கை வைப்பது" இதை எதிர்த்து "சத்தியாக்கிரகத்தையும் - கையெழுத்துப் போராட்டத்தையும்" நடத்துவதற்கான அழைப்பை விடுக்கின்றது. காலனிய வழிவந்த கிறிஸ்துவ பின்னணியிலான கல்வி சார்ந்த அதிகாரம் மற்றும் வெள்ளாளிய சமூகத்தின் உயர் சாதிய அதிகாரமாக கட்டமைக்கப்பட்ட கல்வி மீதான ஒடுக்குமுறையாகவே தேசியமயமாதலை அது காண்கின்றது. தங்கள் சொந்த வர்க்க அதிகார வெள்ளாளிய நலன் சார்ந்தே, தமிழினவாத கண்ணோட்டத்தை தேசியமயமாக்கலுக்கு எதிராக முன்வைத்தனர்.

இந்த வகையிலேயே 18.10.1964 சுதந்திரனில் "பாட நூல்களை வெளியிடும் அரசாங்க முயற்சியையும்" தமிழினவாதிகள் எதிர்க்கின்றனர். காலாகாலமாக புகட்டி வந்த தங்கள் வெள்ளாளியக் கல்விமுறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே, அரசு பாட நூல்களை தயாரிப்பதைக் காண்கின்றனர்.

இந்த அடிப்படையிலேயே தாய்மொழி தமிழ்க் கல்வியை, தமிழினவாதிகள் எதிர்த்தனர். இந்த வெள்ளாளிய தமிழினவாதத்தை ஆழமாக விளங்கிக் கொள்ள, காலனியவாதிகள் 1931 டொனமூர் ஆணைக்குழு அனைவருக்குமான வாக்குரிமையை வழங்க முன்வந்த போது, வெள்ளாளிய தமிழ் தலைமை அதை எதிர்த்தது. அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கக் கூடாது, மாறாக வர்க்கம், சாதி, பால்.. அடிப்படையில் வாக்குரிமையையே வழங்க வேண்டும் என்று, காலனியாதிக்கவாதிகளிடம் கோரியவர்களின் பரம்பரையே அன்று முதல் இன்று வரையான தமிழினவாதிகள். இது தான் வரலாறு. இந்த வரலாற்று வழிவந்த வெள்ளாளிய தலைமை தான், தமிழினவாதத்தையும் தன் வெள்ளாளிய நலனில் இருந்தே முன்வைத்தது.

வாக்குரிமையில் வர்க்கம், சாதியம், பால் போன்றவற்றை முன்னிறுத்தியே தமிழினவாதத்தை முன்வைத்தவர்கள், அனைவருக்கும் தாய்மொழிக் கல்வி என்பது, தங்கள் வெள்ளாளிய சமூக மேலாதிக்கத்துக்கான அச்சுறுத்தலாகவே கருதினார். தீவிர இனவாதத்தை முன்வைத்தவர்கள் அனைவரும், தாய்மொழியிலான தாய் வழிக் கல்வியை மறுத்து மதக் கல்வியை தாய் மொழியில் முன்னிறுத்தினர். மதமல்லாத கல்வியில், ஆங்கிலத்தையே கோரினர்.

சிங்கள மொழியைத் திணிக்கவே கல்வி தேசியமயமாகல் என்று கூறியவர்களின் தமிழினவாத வெள்ளாளிய கூச்சல்களைக் கடந்து பார்த்தால், சிங்கள மொழி திணிக்கப்;பட்டது கிடையாது. இன்று கல்வி பெற்றிருக்கும் சமூகமானது கற்றிருக்கக் கூடாது என்பதே, இன்று தமிழினவாதம் பேசும் மூதாதையர்களின் கொள்கையாகவும் - நடைமுறையாகவும் இருந்தது. வரலாற்றை மூடிமறைக்கவும் - கற்றுக்கொள்வதை மறுக்கவும் முனையும் போது, தமிழினவாதத்தின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்க முடியாது.

தமிழினவாதிகள் தாய்மொழிக் கல்வியை எதிர்த்து ஆங்கிலவழிக் கல்;வி முறையைத்தான் தங்கள் வெள்ளாளிய சமூக மேலாதிக்கத்தினை பேணும் நோக்கில் முன்வைத்;தனர். பிற இனங்கள் மேலான அரசு உத்தியோக மூலமான அதிகாரங்களை முன்னிறுத்தும் தமிழினவாதக் கண்ணோட்டம், 1956 இல் சிங்கள தேசிய மொழி இனவாதச் சட்டத்துக்கு வித்திட்டது.

1948 இல் கறுப்புக் காலனியவாதிகளின் கையில் கைமாறிய ஆட்சியானது, இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இரண்டாம் உலக யுத்தம், அதன் பின்னான உலகளவில் தேசிய எழுச்;சிகள் பரந்துபட்ட மக்கள் மத்தியில் தேசிய உணர்வுகளுக்கும், சமூக விழிப்புணர்வுகளுக்கும் வித்திட்டது. சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்த மக்கள் கூட்டங்கள், சமூகத்தின் மேல் எழுந்து வந்தன. தங்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிராக ஜனநாயகத்தைக் கோரின.

இதை தடுத்து நிறுத்தவே சொந்த தமிழினம் மீதான எந்த இனவாதத் தூண்டுதலுமின்றி, மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பறிப்பை (பிரஜாவுரிமை பறிப்பில் இருந்த வர்க்கக் கூறை மறைத்து) இனரீதியானதாக காட்டி, 1949 இல் தமிழினவாத வலதுசாரிய வெள்ளாளிய இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கி, அரசியலில் இனவாதத்தைப் புகுத்தினர். மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிப்பை எதிர்த்து அவர்கள் போராட்டத்தை நடத்தவில்லை. இவர்கள் செய்தது பிரஜாவுரிமையைப் பறித்தவர்களின் வர்க்க நோக்கை மூடிமறைத்து, அதை இனவுணர்வாக காட்டி – குறுகிய இனவுணர்வை தமிழ் சமூகத்தில் ஊட்டியது தான்.

1940 -1950 களில் எழுந்த தேசியவாதமானது ஆங்கில அரச நிர்வாகத்திற்கு பதில், சொந்த மொழி நிர்வாகத்தை கோரியது. இந்த நிலையில், 1949 இல் உருவான தமிழரசுக் கட்சி அதை மறுதளிக்கும் வண்ணம் தமிழினவாதத்தை முன்வைக்க, மறுதளத்தில் 1951 இல் உருவான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிங்களத்தை அரசகரும மொழியாக முன்வைத்தது.

ஆங்கிலம் அரசகரும மொழியாக இருந்த போது காலனிய ஆட்சியாளர்கள், கறுப்பு காலனிய தரகர்களை கொண்டே, சிங்கள - தமிழ் மொழி பேசும் மக்களைக் கையாண்டனர். இங்கு ஆங்கிலம் ஆட்சி மொழி என்பது, காலனிய தரகர்களின் மொழியாகவே இருந்து வந்தது.

சுதந்திரத்தின் பின் மக்கள் ஆங்கிலத்துக்கு பதில் சொந்த மொழியில் ஆட்சியாளர்களுடன் தொடர்பு கொள்ளும் நிலை உருவானது. ஆங்கிலம் மூலமே அதைத் தொடர வேண்டும் என்று, தமிழினவாதத் தரப்பு கோரியது. தேசிய மொழித் தொடர்பாடல் மறுதளிக்கப்பட்ட பின்னணியில், அனைவருக்கும் தேசிய மொழிக் கல்வி மறுக்கப்பட்ட பின்னணியில், இனவாதம் இயங்கியது.

ஆங்கிலம் உழைக்கும் மக்கள் பேசும் அல்லது தொடர்பு கொள்ளும் மொழியாக இருக்கவில்லை. வர்க்க, சாதி, பால் சார்ந்த அதிகார மொழியாகவே இருந்தது. அதிகாரத்தின் மொழி சமூக மேலாண்மை சார்ந்து இருந்ததால், தமிழினவாதம் சொந்த தாய்மொழியை மறுதளிக்கும் கொள்கை என்பது, வர்க்க, சாதி, பால் சார்ந்ததாக இருந்தது. சிங்களம் - தமிழ் இரண்டு மொழியும் அரச மொழியாக முன்வைக்கும் கொள்கை, தமிழினவாதிகளுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. இது தாய்மொழிக் கல்வியை மறுக்குமளவுக்கு வெள்ளாளிய சமூக அதிகாரமானது, இன்னுமொரு தேசிய மொழியையும் சேர்த்துக் கற்பது என்பது - தங்கள் அதிகார இருப்புக்கு தாங்களாகவே வேட்டு வைப்பதாகக் கருதியது. இதுவே இனவாத வரலாறு. இதே போன்றே சிங்கள இனவாதத் தரப்பும் இருந்தது.

சிங்கள மொழியை கற்பதை மறுத்த தமிழினவாதத் தலைவர்கள், சிங்கள மொழியைப் பேசுகின்றவராக இருப்பதும், இதன் மூலம் தங்கள் தனிப்பட்ட சுயநல அரசியல் மற்றும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொண்டதையும் காணமுடியும். சாதாரண மக்கள் கல்வி கற்பதை எதிர்த்த அரசியல் பின்னணி, சிங்கள – தமிழ் பரஸ்பரம் கற்பது என்பது தங்கள் இனரீதியான வெள்ளாளிய அதிகாரம் பறிபோய்விடும் என்பதே.

சாதாரண மக்கள் வாக்குரிமை பெற்றால், கல்வி கற்றால் என்ன நடக்கும் என்று தமிழினவாத வெள்ளாளிய நலன் சார்ந்த கண்ணோட்டமே, சிங்களத்தையும் - தமிழையும் சாதாரண மக்கள் கற்றுக்கொள்வதை எதிர்த்தது. மக்கள் தமக்குள் பேசிவிடுவார்கள், பிரச்சனைகளைத் தீர்க்க தமக்குள் அணிதிரளுவார்கள் என்ற அச்சமே எல்லா இனவாதிகளுக்கும் உண்டு. இதை எப்படி தமிழினவாதம் மூலம் அரங்கேற்றினர் என்பதை, அவர்களின் தமிழினவாதங்களில் இருந்து தெரிந்து கொள்வோம், கற்றுக் கொள்வோம்.

தொடரும்

 மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03

பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04

ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05

1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய போராட்டம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 06

சர்வதேசியத்தின் கருவாக இருந்த என்.எல்.எப்.ரி. - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 07

தேசியமும் - சர்வதேசியமும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 08

இன-மத பல்கலைக்கழகத்தைக் கோரியவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 09

இனவாத காலனியத்தின் நீட்சியாக கோரியதே, தமிழ்ப் பல்கலைக்கழகம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 10

தமிழினவாத வாக்குக் கோரி "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 11

காணாமல் போன "தமிழ் பல்கலைக்கழகம்" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12