Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வர்க்கமற்ற பொதுவுடமைச் சமுதாயத்தை தன் இலக்காக்கிக் கொண்டு சிந்தித்தவன். உணர்ச்சியின் பிளம்பாக எப்போதும் கேள்விகளுடன் வாழ்ந்தவனே எங்கள் விஜயன், சாதியம், இனவாதம், மதவாதம், பிரதேசவாதம், நிறவாதம் .. என்று எல்லா மனித விரோத குறுகிய சமூக மனப்பாங்குகளுடனும், எப்போதும் முரண்பட்டு நின்றவன். அதற்காக நடைமுறையிலும் போராட முற்பட்டவன். போராடுவதற்காக அமைப்பைக் கட்ட வேண்டும் - ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்பதில், தோளோடு தோள் நின்றவன் - இன்று அவன் எம்மோடில்லை.


குறுகிய மனப்பாங்கைச் சிந்தனையாகக் கொண்ட தமிழ் சமூகத்தில் நாம் தோற்றுப் போனவர்கள் தான். தொடர் போராட்டத்தில் விடிவெள்ளியாக ஒளிர்ந்து கொண்டு பயணித்தவன். இதை நாம் மறுக்கத்தான் முடியுமா? மறக்கத்தான் முடியுமா?

எம்மைச் சுற்றிய சிந்தனைகளே இனவாதமாக, சாதியமாக,.. அதுவே ஆயுதம் தாங்கிய அராஜகமாக மாறி, மனித அறத்தை அதிகாரங்கள் கொண்டு வெட்டிப் புதைத்த போது, வரண்டு போன எங்கள் சமூகத்தில் முளைக்கும் முளை போல் எம் முன் மின்னியவன். மக்களுடன் வாழ்வதும், போராடுவதுமே சமத்துவமான சமுதாயம் ஒன்றைக் கொண்டு வரும் என்ற பொதுவுடமைத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு, அதற்காக முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவனாக எங்கள் விஜயன் இருந்தான்.

இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையக மக்களுக்கிடையிலான ஒற்றுமையையும், இன ஜக்கியத்தையும், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தையும் முன்னிறுத்தி கட்டப்பட்ட சமவுரிமை இயக்கத்தின் உறுப்பினர். பிரான்ஸ் சமவுரிமை இயக்கத்தை முன்கொண்டு சென்றதில் - தனித்துவம் மிக்கவன்.

அவன் தன் குடும்ப உறவுகளுடன் கூட மானிடம் குறித்து - போராட்டம் பற்றியுமே பேசியவன். வாழ்வதற்காக உழைப்பதைக் கடந்து, மிகுதி நேரம் சமூகத்திற்காகவே சிந்தித்தவன் - செயற்பட்டவன்.

இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்பே ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்வைத்த, புலம்பெயர் அரசியல் பயணத்தில் தன்னை முன்னோடியாக - முன்னிறுத்திக் கொண்டவன். 2009 இன் பின் சமவுரிமை இயக்கம், புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயற்பாட்டில் - முதல் அணியில் முன்னின்று பயணித்தவன்;. நாடகம், தப்பாட்டம், புகைப்படம் என்ற கலை சார்ந்து அத் தடங்களில் பயணித்தவன். பவ்வேறு சமூகக் கனவுகளுடன் பயணித்தவன் - முன்னோக்கிச் செல்ல முடியாத சமூகத்தில் பின்தங்கிய போது, அவனின் நேர்மையான - உண்மையான கனவுகளே - இன்று எம்முன் ஒளிர் விடுகின்றது. அது தான் இன்று அவனை நினைக்கவும் - கொண்டாடவும் வைக்கின்றது.

1980களில் தமிழீழப் போராட்ட அலையில் புளட் என்ற இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவன். புளட் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலுடன், அராஜகங்களையும் ஒடுக்குமுறையையும் கையாண்ட போது, அதை எதிர்த்து இயக்கத்தை விட்டு வெளியேறியவன்;. புலம்பெயர்ந்த அரசியல் சூழலில் அனைத்தும் புலி மயமாக – பாசிசமாக மாறி வந்த சூழிலில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான புதிய அரசியலைத்; தேடியவன்.

23 வருடங்களுக்கு முன் சமர் - ம.க.இ.க ஒலிப்பேழையை தற்செயலாக வாசிக்கவும் - கேட்கவும் கிடைத்த சந்தர்ப்பதில், ஒடுக்கப்பட்ட அரசியலுடனான உறவு ஆரம்பமானது. தொடர்ந்து அரசியல் ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்வதில் முனைப்பானவன், நூல்களை வாசிக்கத் தொடங்கினான். தனது வீட்டில் 1000க்கும் மேற்பட்ட நூல்களை கொண்ட நூலகத்தை அமைத்தான். இப்படித்தான் அவனின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புலம்பெயர் அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

புலம்பெயர் அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது, புலிகளையும் - புலியெதிர்ப்பையும் அரசியலாக்கிய போது, அதற்கு எதிராக தன்னை முன்னிறுத்திக் கொண்டவன். ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து புலியெதிர்ப்பு மற்றும் புலி அரசியல் இரண்டையும் எதிர்ப்பதில் - விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரில் - ஒருவனாக தன்னை முன்னிறுத்திக் கொண்டவன்.

2009 இல் புலிகளின் அழிவின் பின் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கிய ஆரம்ப அமைப்பு வடிவங்களில் - முன்னோடியாக பயணிக்கத் தொடங்கியவன்.

2009 இல் இந்த அமைப்பிற்கான முதல் மாநாட்டை தனது வீட்டில் முன்னின்று நடத்தியவன். இதே போன்று 2017 இல் மூன்றாவது மாநாடும் அவன் வீட்டில் தான் நடந்தது. அவனும், அவனின் இணையர் வனிதாவும் எப்போதும் எமது அனைத்து முயற்சியிலும் - தங்களை இணைத்துக் கொண்டவர்;கள். அதுவே குடும்ப உறவுகளாகவும் மாறியது.

2012 இல் எமது இரண்டாவது மாநாடு டென்மார்க்கில் நடந்தது. அங்கு முன்னிலை சோசலிசக் கட்சியுடனான உறவும் - சமவுரிமை இயக்கத்தை தோற்றுவித்தது. அங்கு உருவான சமவுரிமை இயக்கத்தின் முதல் வரிசையில் அணி வகுத்தவன். அனைத்துவித இனவாதங்கள், மதவாதங்கள் கடந்து சிந்திக்கும் சமவுரிமை இயக்கத்தில் இணைந்து கொண்ட மனிதர்களில், எங்கள் விஜயன் எம்முடன் இருந்தான். இப்படி அரசியலில் சிந்தித்தவர்கள் மிகச் சிலரே.

முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கூட்டாக கொண்டு வந்த, போராட்டம் பத்திரிகையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் முன்னோடியாக நின்று உழைத்தவன்;. போராட்டத்தின் 34 இதழ்கள் கூட்டாக வெளிவந்தது. இதை பாரிஸ் வீதிகளில் மக்கள் முன் அறிமுகம் செய்வதில், முதன்மையானவாக நின்று - எம்மை வழிகாட்டியவன். பல்வேறு நாடுகளில் இதை பின்பற்றக் கோரியவன்.

எங்கள் விஜயன் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மட்டும் வாழ்ந்தவனல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் வாழ்ந்தவன்;. இதனால் அவனை பலரும் நேசிக்கின்றனர்;.

முரண்பாடுகள் கொண்ட சமூகத்தில் போராடுதல் என்பது சவால் மிக்கதே. அதிலும் இனவாதம், மதவாதம், சாதியவாதம் கொண்ட தமிழ் சமூகத்தில், இதை எதிர்த்துப் போராடும் மனிதர்களை கீழே இழுத்து வீழ்த்தி விடுகின்றது. எதிர் நீச்சல் என்பது, தப்பிப் பிழைத்தலே. தனிநபர் சிந்தனைகளாக குறுகிவிட்ட சமூக சூழலில், ஜனநாயகத்தை முன்வைப்பது, அதை கடைப்பிடிப்பது என்பது போராட்டமின்றி சாத்தியமில்லை. எப்போதும் கேள்விகளாலும்;, சரியாகத் தான் போராடுகின்றோமா என்பதை பரீசிலிக்காத நாட்கள், அவன் முன் கிடையாது.

இப்படி அவனின் இடைவிடாத தொடர் போராட்டக் குணமே, எமக்கு அவனைத் தோழனாக்கியது. சமூகம் குறித்து சிந்திக்கும் நாளைய மனிதர்களுக்கு முன்மாதிரியாக - எங்கள் விஜயன் இருப்பான்.