Language Selection

பி.இரயாகரன் -2023
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தத்துவமும், கோட்பாடுகளுமின்றி எதையும் முத்திரை குத்தமுடியாது, வழிபடவும் முடியாது. தத்துவமும், கோட்பாடுகளுமின்றிய முன்முடிவுகள், அக விருப்புக்கும், சுயநலனுக்கும் உட்பட்டவையே. புலிகள் ஒரு பாசிச இயக்கம் என்று தத்துவமும், கோட்பாடுகளுமின்றி கூறும் போது, அவை மக்கள் விரோத அரசியலிலிருந்து கூறுகின்றனரே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்தல்ல. 

புலிகள் என்ற ஆயுதமேந்திய பாசிச சர்வாதிகார அதிகார அமைப்பு இன்று இல்லையென்ற போதும், அதன் கோட்பாடுகளே தமிழ் தேசியமாக தொடர்ந்து முன்தள்ளப்படுகின்றது. இப்படித் தமிழ் தேசியமாக உயர்த்தப்படுவது, தமிழ் தேசியமல்ல தமிழ் இனவாதமே. இந்த இனவாதமே, மதவாதமாகவும் திரிவுபடுகின்றது.

இந்த வரலாற்றுப் போக்கில் வளர்ச்சியுற்ற தமிழ் பாசிசத்தை மூடிமறைக்கின்றனர்;. இன்றைய சாதிய சமூக அமைப்பின் வெள்ளாளியச் சிந்தனையை எப்படி மூடிமறைக்கின்றனரோ, அதேபோல் புலிப் பாசிசத்தை மறுதளிக்கின்றனர். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. இதுவே ஒடுக்கும் இனவாத சாதிய அரசியலாக நீடிக்கின்றது.

இதை மூடிமறைக்க புலிகளை தேசிய இயக்கமாகக் காட்டுகின்ற பித்தலாட்டத்தை செய்கின்றனர்.  இதனை விரிவாக ஆராய்வது அவசியமாகின்றது.   

புலிகள் தேசிய இயக்கமா? 

தமிழ் இனவாதிகள் கூறுவது போல், புலிகள் தேசிய இயக்கமல்ல. புலிகள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாத, அவர்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடாத எந்த இயக்கமும், தேசிய இயக்கமல்ல. இந்த வகையில் 1980களில் தோன்றிய தமிழ் தேசிய இயக்கங்களுக்கு இது பொருந்தும். 

தேசியம் என்பது சமூகப் – பொருளாதாரக் கோட்பாடுகளாலானது. தனிநபர் பயங்கரவாதத்தை நடத்துவதாலோ, இராணுவத் தாக்குதலை நடத்தி விடுவதாலோ அது தேசிய விடுதலை இயக்கமாகிவிடுவதில்லை. உரத்துக் குரல் கொடுத்துவிடுவதால் தேசியவாதியாகி விடுவதில்லை. 

தேசியம் என்பது அந்த தேசத்தில் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளை முன்வைத்து போராடும் அதேநேரம், அந்த மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அணிதிரட்டுவதே. சமூக - பொருளாதாரக் கண்ணோட்டத்தில், தேசத்துக்கும் - தேசியத்துக்கும் எதிரான எல்லா பிற்போக்குக் கூறுகளையும் எதிர்த்துப் போராடுதே தேசியம். இந்த வகையில் நிலவும் நிலப்பிரபுத்துவ கூறுகளை எதிர்த்தும் - ஏகாதிபத்திய காலனிய பொருளாதார மற்றும் பண்பாட்டுக் கூறுகளை எதிர்த்தும் மக்களை அணிதிரட்டுவதே தேசியம்.

குறைந்தபட்சம் தேசிய முதலாளித்துவத்தை முன்வைத்து, தேசிய முதலாளித்துவத்துக்கு எதிரான சக்திகளை இனம்காட்டி போராடுவதே தேசியத்துக்கான அடிப்படையாகும்;.   

தமிழ் தேசத்தை, தேசியத்தை ஒடுக்குவது யார்?

1. தமிழரை தமிழர் ஒடுக்கி பிளக்கின்ற வெள்ளாளிய அதிகாரம் முதல், அதன் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள் தமிழ் தேசியத்திற்கு எதிராக இருக்கின்றது.

2. பிற்போக்கான தமிழ் நிலப்பிரபுத்துவ இனவாத - மதவாதக் கூறுகள், தமிழ் தேசியத்துக்கு எதிராக இருக்கின்றது. 

3. சிங்கள இனவாத தேசியத்தின் பெயரில் ஆட்சியமைக்கும் ஏகாதிபத்திய நவகாலனிய பொருளாதாரத்தை முன்தள்ளும் தேசவிரோத சக்திகள், தமிழ் தேசியத்துக்கு எதிராக இருக்கின்றது. இதே போல் ஏகாதிபத்திய நவகாலனிய பொருளாதாரத்துக்கு ஆதரவு வழங்கும், இனவாத தமிழ்தேசியவாதமும் எதிராக இருக்கின்றது.   

4. பிற்போக்கான சிங்கள நிலப்பிரபுத்துவ இனவாத - மதவாதக்  கூறுகள்,  தமிழ் தேசியத்துக்கு எதிராக இருக்கின்றது. 
  
தேசத்தில் வாழும் மக்களினது சமூக - பொருளாதார உரிமைகளையும் நலன்களையும்  உயர்த்திப் பிடிப்பதும். தேசத்தில் வாழும் அனைத்து மக்களின் மீதான அக ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராட்டத்தை நடத்துவதுமே, தேசவிடுதலைப்போராட்டம். அவர்கள் தான் தேசிய சக்திகள். 

இந்த வகையில் அகவொடுக்குமுறைகளை களைந்து அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் இனம், மதம், சாதி, பால், நிறம், பிரதேசம், வர்க்கம் … கடந்த, சிந்தனை முறையை முன்னிறுத்தி நிற்பதே தேசவிடுதலைக்கான அரசியல் அடித்தளமாகும். இந்த ஒற்றுமை, ஜக்கியம் என்பது தனக்குள்ளான அனைத்து ஒடுக்குமறைகளையும் களைந்து, ஜக்கியப்பட்டு அணிதிரள்வதையே அடிப்படையாக கொள்கின்றது. 

தேசத்தின் பொருளாதாரத்தை முன்நோக்காகக் கொண்ட சமூகப் பண்பாடு அடிப்படையில், குறைந்தபட்சம் முரணற்ற தேசிய முதலாளித்துவத்தை முன்வைத்துப் போராடும் போது, அது தேசிய விடுதலை இயக்கத்துக்கான அடையாளத்தைக் கொடுக்கின்றது.  

இந்த வகையில் புலிகள் போராடியதில்லை. பிற ஈழ விடுதலை இயக்கங்கள் போராடியதில்லை. இதை கோரிப் போராடிய தேசவிடுதலைச் சக்திகளை இவர்கள் வேட்டையாடினர்;. பாசிசம் இப்படி தான் படிப்படியாக எம்மண்ணில் வளரச்சியுற்றது. தேசத்தையும், தேசியத்தையும்.. அதில் வாழும் மக்களையும் முன்னிறுத்தியவர்களைக் கொன்று குவித்த பின்னணியில் இருந்த அரசியல், தமிழ் பாசிசமாக வளர்ச்சியுற்றது.                
இந்த பாசிச அரசியல் பின்னணியில் இருந்துதான் இன்று இனவாத, மதவாத அரசியல் பேசப்படுகின்றது. புலிகள் இல்லாத இன்று கூட, ஒடுக்கப்பட்ட தேச மக்களின் ஜனநாயகம் பேசப்படுவதில்லை. தேசத்தின் தேசியக் கூறுகளை அழித்ததில் புலிக்கும் - புலிப் பாசிச சிந்தனைக்கும் நடத்தைக்கும் முக்கிய பங்குண்டு. தேசத்தின் தேசிய கூறுகளை அழித்த புலியிசத்தின் மேல் தான், அரசு தனது மேலாதிக்கத்தை நிறுவி இருக்கின்றது.

பாசிசம் என்பது என்ன?

பாசிசம் என்பது கோட்பாட்டு ரீதியாக நிதிமூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்தியவாதிகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும். இதுவே பாசிசம் குறித்த சர்வதேசிய அரசியல் அடிப்படையாகும்.

பாசிசம் குறித்த இந்த சர்வதேசிய கண்ணோட்டத்துக்கு அமைவாக, பாசிசம் ஒரே மாதிரி தோன்றுவதில்லை. ஏகாதிபத்திய நாடுகளில் தோன்றுவது போல் நவகாலனிய நாடுகளில் தோன்றிவிடுவதில்லை. இனம், மதம், நிறம்.. சார்ந்த விடுதலையில் பாசிசமானது, வெவ்வேறு வடிவங்களில் தோன்றுகின்றது.
   
பாசிசமானது வேறுபட்ட நோக்குகளுடன் தன்னை வெளிப்படுத்துகின்றது. வரலாற்று வளர்ச்சியில்; இனவெறி கொண்ட அல்லது மத வெறி கொண்ட, … ஜனநாயகமற்ற, வெளிப்படையான சர்வாதிகாரத்துடன் தன்னை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் ஏகாதிபத்திய மூலதனத்துடன் முரண்படாது (ஏகாதிபத்திய இராணுவத்துடன் முரண்படும்) தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, பயங்கரவாத வன்முறைகள் மூலம் தன்னை வெளிப்படுத்துகின்றது. இந்த வகையில் புலிகளின் பாசிசக் கூறுகளை ஆராய்வோம்.  

புலிகள் பாசிச இயக்கம் 

புலிகள் அடிப்படையில் ஜனநாயகத்தை மறுக்கும் தனிமனித சர்வாதிகார அமைப்பாகும். ஏகாதிபத்திய மூலதனத்துடன் முரண்படாத அதை தங்கள் பொருளாதாரக் கொள்கையாக கொண்டு, தேசிய மூலதனத்தையும், அதன் சமூகக் கூறுகளையும் அழித்தது.

இதன் மூலம் ஏகாதிபத்திய மூலதனத்துக்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியது. ஏகாதிபத்தியங்களை தமது நண்பனாகக் காட்டி, ராஜதந்திரத்தின் பெயரில் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கினர். தங்கள் சர்வாதிகார தனிமனித அதிகாரத்துக்காக, தேச மக்களை வாய் பேச முடியாத ஊமைகளாக்கினர்.

மக்களை மந்தைகளாக்கி, விசிலடிக்கும் லும்பன்களாக்கினர். பகுத்தறிய முடியாத நடைபிணங்கள் மூலம் வன்முறைகளை ஏவினர். சொந்த அரசியல் வாதங்களை, தர்க்கங்களை முன்வைக்க வக்கற்ற ஆதரவாளர்களைக் கொண்டு, தூசணங்களை தேசிய மொழியாக்கினர்.

புலியை விளம்பரப் பொருளாக்கிய வியாபாரிகளும், ஏகாதிபத்திய அரசியல் தரகர்களுமே புலிகளின் முதுகெலும்பாக மாறிய பின்னணியில், புலிப் பாசிசம் தேசத்தின் அனைத்து சமூகக் கூறுகளையும் அழித்து சுடுகாடாக்கினர். 

இந்த வகையில்            

1.தமிழ்மொழி பேசும் மக்களை பிரித்தொடுக்கினர். தமிழ் மொழி பேசும் முஸ்லிம் மக்களை எதிரியாகக் காட்டி, கொன்று குவித்ததுடன் சொந்த மண்ணிலிருந்து விரட்டினர்.

2.காலகாலமாக தமிழ் மண்ணில் வாழ்ந்த சிங்கள மக்களை கொன்றதுடன் - அவர்களை விரட்டியடித்ததனர்;.

3.மக்களினது ஜனநாயகத்தை மறுத்ததுடன், சுதந்திரமான மனித நடத்தையை மரணதண்டனைக்குரிய துரோகமாக பிரகடனம் செய்து கொன்று குவித்தனர்.

4.;இடதுசாரிகளையும், புத்திஜீவிகளையும், ஜனநாயகவாதிகளையும், சமூக செயற்பாட்டாளர்களையும் வேட்டையாடினர். 

5.மாற்று அமைப்புகள், மாற்று அரசியலை துரோகமாக காட்டி கொன்று குவித்தனர்.

6.அப்பாவி சிங்கள மக்களை கிராமம் கிராமமாக இனவெறியுடன் வேட்டையாடினர். 

7.தேசத்தை, தேசியத்தை நேசித்த தேசபக்தர்களை கொடிய சித்திரவதைக்கு உள்ளாக்கி - இறுதியில் அவர்களைப் புதைத்தனர்.                        

8.மக்களின் ஜனநாயகத்தை மறுதளித்த புலிகள், மக்கள் சிந்தித்துச் செயற்படும் அடிப்படை உரிமையையும், மனித இயல்பையும் துடைத்தெடுத்தனர்.  

9.அதிகாரமிக்க ஒரு சர்வாதிகார தலைவரை முன்னிறுத்தி, கண்மூடித்தனமாக பின்பற்றுமாறும் - வழிபடுமாறும் கட்டாயப்படுத்தினர். .

10.தேசத்தின் சமாதானத்தை மறுத்து, வன்முறையை மனிதப் பண்பாக மாற்றினர். 

11.பொய், புரட்டு, அடக்குமுறை, சந்தர்ப்பவாதம், அதிகார ஆசை, பகட்டுத்தனம், வன்முறை மேலான நாட்டம், ஒருதலைப்பட்சமான போர்வெறியை முன்னிறுத்தி, மக்களை தங்களின் காலில் போட்டு மிதித்தனர். 

12.தங்கள் சுய பாசிச நடத்தைகளுக்கு தெளிவான விளக்கத்தை முன்வைப்பதில்லை. கோட்பாட்டை விட செயற்பாட்டையே முன்னிறுத்தி, இறுதியில் தங்களின் கண்மூடித்தனமான செயற்பாட்டை நியாயப்படுத்தும் பாசிச கோட்பாட்டை முன்வைத்தனர். 

13.சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப கோட்பாட்டையும் செயற்பாட்டையும் மாற்றியமைத்துக் கொண்டு, அதை  நம்பும்படி கட்டாயப்படுத்தினர்.

14.இனவெறி - போர்வெறி மூலம், மக்கள் மேல் சர்வாதிகாரத்தை நிறுவிக்கொண்டனர்.

15.எதிர்க்கட்சியில்லாத, விமர்சனமில்லாத… எல்லாவற்றையும் இனவெறியுணர்வுடன், ஜனநாயகமற்ற வன்முறை மூலம் தங்களை முதன்மைப்படுத்தினர். 

16.தனிநபர் பயங்கரவாதத்தை விடுதலைக்கான அரசியல் பாதையாக காட்டி, இதை ஏற்க மறுப்பதை துரோகமாக காட்டி பயங்கரவாதத்தை சமூகம் மீது ஏவினர்.

17.வெள்ளாளிய சமூக பொருளாதார அதிகார அமைப்பை தக்கவைக்க, அதை மாற்ற முடியாத உறைநிலையில் வைத்ததுடன், இதன் மேல் தங்கள் பாசிச சிம்மாசனத்தை நிறுவிக்கொண்டனர்.
      
18.இந்தப் புலிப் பாசிமானது தனிமனிதனையோ, சமூகங்களையோ கடுகளவும் மதித்ததில்லை. தனிமனிதர்களை நிபந்தனையின்றி புலிக்கு அடிபணிய வைக்கப்பட்டதுடன். தனிமனிதன் தனது உரிமைகளை வலியுறுத்தாமல் புலிக்குரிய சமூகக் கடமைகளில் அக்கறை காட்ட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டான். 

19.தங்களை முதன்மைப்படுத்தி சமூகத்தை மறுத்தவர்கள், தனிமனிதனை அடிமையாக்கினர். மனிதன் அறிவாளியாகவோ, ஆற்றல்மிக்கவனாகவோ, ஆளத்தகுதியானவனாகவோ இருப்பதை மறுதளித்த புலிப்பாசிசம், புலியை மட்டும் தகுதியுள்ளதாக முன்னிறுத்தி தனிமனித சர்வாதிகாரியை  கொண்டாடியது. 

ஒடுக்கும் இந்தப் புலிப் பாசிசம் தேசியத்துக்குப் பதில் தமிழ் இனவாதத்தை முன்தள்ளியது. மிகத் தெளிவாக தமிழ் ஆணாதிக்கத்தை பாதுகாத்தது. பிரதேசவாதத்தை முன்னிறுத்தியது. சாதிய அமைப்பு முறையை தமிழ் கலாச்சாரமாக கொண்டாடியது. மதவாதத்தை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தூக்கிப்பிடித்தது. ஒடுக்கும் வர்க்க அதிகாரத்தை அடிநாதமாக கொண்ட ஏகாதிபத்திய  பொருளாதாரத்தை பாதுகாத்தது. 

ஒடுக்கும் இந்தப் பாசிச குணாம்சங்களை உயர்த்திக் கொண்டு, சமூக - பொருளாதார நலன்களை பெற்றவர்கள், சாதி ரீதியாக தம்மை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டவர்களே. அதாவது வெள்ளாளிய சிந்தனை மூலம் சமூக அதிகாரம் பெற்றவர்களை அடிப்படையாகக் கொண்டு, புலிப் பாசிசம் வக்கிரமடைந்தது. 

புலியை தங்கள் விளம்பரப் பொருளாக்கிய வியாபாரிகளும், ஏகாதிபத்திய கால்களை நக்கும் அரசியல் தரகர்களும் …, தேசத்தையும், தேச மக்களையும் விற்றுப் பிழைக்க புலிப் பாசிசம் செங்கம்பளம் விரித்து வழிகாட்டியது. தமிழ் தேசமானது அனைத்தையும் இழந்து விட்டதை புலிபாசிச வரலாறு எமக்கு வெட்ட வெளிச்சமாக்கி இருக்கின்றது. இந்த இனவாத பாசிசமே தன் முகத்தை மூடிமறைக்க மதவெறி வேசம் மூலம் ஆட்டம் போடுகின்றது.      

27.10.2023