புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்
2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக தடுத்தனர் என்பது குறித்தான இன்றைய சர்ச்சை, யுத்தத்தின் பின்னான வெள்ளாளிய சாதி எழுச்சியுடன் தொடர்புபட்டது. சமூகம் சாதியமாகவும், அதேநேரம் இந்துத்துவ சாதியமாகவும் பரிணாமமடைந்து வரும் இன்றைய சமூகப் போக்கை, தமிழ் தேசியமாக நிறுவ "சாதியற்ற" புலிகள் தேவைப்படுகின்றது.
புலிகள் ஒடுக்கப்பட்ட தேசியத்தை மறுத்து ஒடுக்கும் தேசியத்தை முன்னிறுத்தியதன் மூலம், சமூகத்தை பின்நோக்கி இழுத்துச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக எழுச்சிபெற்று வரும் சாதியத்தை, புலித் தேசியத்தின் நீட்சியாக காட்ட முற்படுகின்றனர்.
இதனாலேயே புலிகளின் காலத்தில் சாதி இருக்கவில்லை என்கின்றனர். இப்படி நிறுவுவதன் மூலம் சாதிய ஒடுக்குமுறை கூர்மையடைந்து வரும் இன்றைய சூழலை, மறுக்கவும் - மறைக்கவும் முனைகின்றனர்.
இதற்காக வெள்ளாளிய ஒடுக்குமுறையே இல்லை என்று கூறுமளவுக்கு, ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை களத்தில் இறக்கி இருக்கின்றது வெள்ளாளியம். அது வெள்ளாளிய ஒடுக்குமுறையா! அது என்ன? என்று கேட்குமளவுக்கு வெள்ளாளியம் தன்னை மூடிமறைக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களாகிய எங்களைப் பாருங்கள், நாங்கள் உயரத்தில் பறந்து கொண்டு இருக்கின்றோம், என்று வெள்;ளாளியத்தைப் பாதுகாக்கும் அற்பனத்தனங்களை முன்தள்ளுகின்றது.
இப்படி நவீனமாகும் வெள்ளாளிய ஒடுக்குமுறையைக் கூர்மையாக்க புலிப் பின்புலத்தைக் கொண்ட அறிவுத்துறையினரையும், ஒடுக்கும் சாதிக்காக உழைக்கும் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த புத்திஜீவிகளையும் களத்தில் இறக்கி இருக்கின்றது. இதற்காக கடந்த வரலாறுகள் திரிக்கப்படுகின்றது, புனையப்படுகின்றது. எதையும் மறுக்க, கடைந்தெடுத்த மோசடிகள்.
யாழ் நூலகத்தில் நடந்த சாதிய ஒடுக்குமுறை குறித்து..
யாழ் நூலக திறப்புவிழா மீதான ஒடுக்குமுறை சாதி அடிப்படையில் நடந்தது என்று 2003 இல் கூறப்பட்ட போது, வெள்ளாளிய பாசிச தேசியவாதிகள் யாரும் களத்தில் இறங்கவுமில்லை, கொடுக்குக் கட்டவுமில்லை. புலிகள் மறுக்கவுமில்லை, புலிகளின் பெயரில் இயங்கிய புலிப் பினாமிகள், 300 வெகுஞன அமைப்புகளின் பெயரில் மிரட்டல் கலந்த வெளியிட்ட அறிக்கையோ, புலிகளின் சாதிய ஒடுக்குமுறையை பூசி மெழுக முடியவில்லை.
தினக்குரல் முன்பக்கத்தில் புலியின் வெள்ளாளிய சிந்தனைக்கு – புலியின் நாடித் துடிப்புக்கு ஏற்ப வெளியிட்ட கேலிச்சித்திரத்தை வெளியிட்டதற்காக, புலிகள் யாரையும் தண்டிக்கவுமில்லை, 300 வெகுஞன அமைப்பின் அறிக்கையோ – போராடும் தமிழ் மக்களை சாதிரீதியாக பிரித்த வெள்ளாளிய அயோக்கியத்தனத்தை உச்சிமோந்;தது. சாதிரீதியாக ஒடுக்கியதாக கூறியதற்;கு எதிராக மிரட்டலும் - சாதிரீதியாக பிளந்து காட்டியதை கொண்டாடும் வெள்ளாளிய மனப்பாவம், புலிச் சிந்தனைக்கும் – செயலுக்கும் முரணாக நிகழவில்லை.