யாழ் நூலக எரிப்பும் - இரு முகங்களும்
பேரினவாத அரச ஒடுக்குமுறையாளர்களால் 1981 யூன் 1ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. மாவட்டசபையை ஏற்று தேர்தலில் பங்குகொண்டோரை தனிநபர் பயங்கரவாதம் மூலம் கொன்றதற்கு பதிலடியாக, அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அன்று எரிக்கப்பட்ட - உடைக்கப்பட்ட – கொல்லப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில், எரிந்த யாழ் நூலகமும் அடங்கும்.
இதில் யாழ் நூலகமானது இனவொடுக்குமுறையின் வரலாற்று அடையாளமாகிப் போனது. இச் சம்பவம் மூலம் ஓடுக்கப்பட்ட தமிழ் தேசமும், அதில் வாழும் தேசிய இனங்களும், தனிமனிதர்களும் எதைக் கற்றுக்கொண்டு, எதை மீள உருவாக்கினர்!?
சமூகம் சார்ந்த வரலாற்று அழிவை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பணியை - ஒடுக்கப்பட்டவர்கள் செய்யவில்லை. பதிலுக்கு யாழ் நூலகத்தை எரியூட்டியவனின் அதே இனவாத உணர்வுக்கு நிகராக - தமிழினவாதத்தை பேசுகின்றதைத் தாண்டி, எதையும் சமூகத்துக்காக உருவாக்கவில்லை, எதையும் கற்றுக்கொள்ளவுமில்லை.
1981 இல் எரிக்கப்பட்ட நூலகத்துக்கு மாற்றாக, இன்று எத்தனை நூலகங்களை உருவாக்கி இருக்கின்றனர். ஏத்தனை தனிநபர்கள் தங்கள் வீடுகளில் நூலகங்களை வைத்திருக்கின்றனர். வாசிப்பைத் தூண்டும் வண்ணம் எத்தனை சமூக ஊக்குவிப்புகளை சமூகம் வழங்குகின்றது? எதுவுமில்லை.
அன்று எம்மிடம் யாழ் நூலகம் மட்டும் இருக்கவில்லை. ஊருக்கு ஊர் பொது நூலகங்களும், நூல்களும் இருந்தன. வாசிக்கும் பழக்கமும், அதன் அடிப்படையில் மனித வாழ்க்கையை வளப்படுத்தும் அறிவு வளர்ச்சியும் இருந்தது. புதிய அறிவுத்தேடல் சமூக அசைவின் உயிர் நாடியாக இருந்தது. இன்று எதையும் காண முடியவில்லை. நூலகங்களை உருவாக்கும் சமூக நோக்கு கொண்ட சமூகப் பார்வை கூட, சமூகத்திடம் காணாமல் போய் இருக்கின்றது.