அலுக்கோசுகளின் சினிமா தான் "மேதகு"
தூக்குமேடையில் தூக்கு போடும் அலுக்கோசுகள் போன்றே, பிழைப்புவாத ஈழ ஆதரவு தமிழக கும்பல்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளும் குறுகிய வழிபாட்டை ஊக்குவிக்கின்றனர். இதன் மூலம் புலிப் பாசிசத்தின் கீழ் உருவான ஈழத்து தற்குறிகளிடம் இருந்து பணத்தைக் கறக்கவும், அதேநேரம் சொந்த மக்களை ஏமாற்றிப் பிழைக்கவும் – தமிழகத்தில் புலி ஆதரவு கும்பல்கள் இயங்குகின்றது. "மேதகு" என்ற புரட்டு, இப்படித்தான் புளுத்து வெளிவந்திருக்கின்றது.
"திருப்பி அடித்தால்" அது விடுதலைப் போராட்டமாகிவிடும், "துரோகி"யாக்கி கொன்றால் மானிட விடுதலை கிடைத்துவிடுமா? இப்படி நம்புகின்ற, நம்பக் கோருகின்ற பகுத்தறிவற்ற அலுக்கோசுகளே, "மேதகு" மூலம், தம்மைத் தாம் முன்னிறுத்திக் கொள்கின்றனர்.
கடத்தல்காரர்கள், குற்றவாளிகளுடன் சேர்ந்து செய்த தனிநபர் பயங்கரவாதம் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை நடத்த முடியும் என்று, அலுக்கோசுகளால் மட்டுமே சொல்ல முடியும். அப்படி சொல்லப்பட்டது தான் "மேதகு". தோற்றுப் போன அரசியல் வழிமுறையை சரியென்று புனைய, சம்பவங்களையும் – வரலாறுகளையும் திரிக்கின்றனர்.