ஜே.வி.பி. எதைச் செய்யவிவில்லை என்ற பொதுக் கண்காணிப்பு மூலம், மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். செய்ததைக் கொண்டு மக்களைச் செயலற்றவர்களாக்காதீர்கள்.
இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. எதிரான மக்களின் கோபமானது, அரசியல் மாற்றத்துக்கான வாக்குகளாக மாறியது. இது ஜே.வி.பி.யின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. ஜனாதிபதியின் வெற்றியின் பின்பாக ஜே.வி.பி.யின் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள், மக்களால் கொண்டாடப்படும் அளவுக்கு ஆதரவு அலையாக மாறிவருகின்றது. பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகவும், மூன்;றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்பது சாத்தியமானது என்ற அளவுக்கு அரசியற் சூழல் மாறி வருகின்றது. ஜே.வி.பி.யின் அடுத்தகட்டப் பிரச்சாரங்கள், கோசங்கள்.. இந்த வெற்றியை உறுதி செய்யும் நோக்கிலேயே அமையும்.
கடந்தகால ஊழல் என்பது பல பில்லியனைக் கொண்டது. ஒவ்வொரு ஆட்சியும், அதை சுற்றி அபிவிருத்தி என்ற பெயரில் உருவாக்கப்படும் திட்டங்கள் ஊழலுக்கானவையே ஒழிய மக்களுக்கானதல்ல. வாங்கிய கடன்கள் ஊழலுக்காக விரையமாக்கப்பட்டது. மக்களுக்கு பயன்படாத வகையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கான பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், அவை அன்னிய நாடுகளுக்கு தாரைவார்க்கப்பட்டதுடன், நாட்டில் சுயாதீனமாக சுதந்திரத்தை இழந்துள்ளது.
அரசியல்ரீதியாக புதிய ஊழல்கள் தடுத்து நிறுத்தப்படுவதன் மூலமும், பழைய ஊழல் பணத்தை மீளப்பெறுவதன் மூலமும், வரிப் பாக்கிகளை அறவிடுவதன் மூலமும் மக்களுக்கு உடனடி நிவாரணமளிக்க முடியும். இந்த வகையில் வழங்கப்படும் சம்பள உயர்வுகள், விவசாய-மீனவர் மானியங்கள், எரிபொருள்-மின்சாரக் கட்டணக் குறைப்புகள், அத்தியாவசியமான பொருள்களுக்கான மானியத்தை … வழங்க முடியும். பொருளாதாரரீதியான பொது நெருக்கடியை அதிகமாக்காது. இதுவே ஜ.எம்.எப். ஊழலுக்கு எதிரான கொள்கையும் கூட. இந்த அடிப்படையில் ஜே.வி.பி. பயணிக்கின்றது.
இந்த வகையில் ஜே.வி.பி. முன்னெடுக்கும் முதலாளித்துவ சீர்திருத்தம் அரசியல்ரீதியான புதிய அத்தியாயத்தை உருவாக்குவதுடன், அரசியல் விழிப்புணர்வையும் – மக்கள் சார்ந்த சமூக பண்பாட்டையும் மக்களிடையே தோற்றுவிக்கும்.
இனவாதத்தை, மதவாதத்தை, பிரதேசவாதத்தை, சாதியவாதத்தை, ஆணாதிக்கவாதத்தை.. முன்வைக்காத அரசியல், பொருளாதார தளத்தில் ஏற்படுத்தும் மாற்றம், கடந்த இலங்கை அரசியல் வரலாற்றுக்கு முரணானது. இதை உறுதி செய்யும் வண்ணம், ஜே.வி.பி.க்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இது தான் புரட்சிகர அரசியல்.
இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்களுக்கு.. எதிரான ஜே.வி.பி.யின் வெற்றியை நோக்கி மக்கள் உணர்வும், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுமளவுக்கான வெற்றியை நோக்கி தெளிவான அரசியலும் அவசியமானது. அந்த வகையில் பழைய ஊழல்வாதிகள் தொடங்கி ஊழலுடன் பயணித்த அரசியல்வாதிகள் வரை, அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.