16
Sun, Jun

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாட்டை நவதாராளவாதம் விழுங்கி வருகின்றது. அடிப்படை மனித வாழ்வாதாரங்கள் எல்லாம் தனியார்மயமாக்கப்பட்டு, சந்தைப் பொருளாகின்றது. இயற்கை மூலதனத்தின் சூறையாடலுக்கு தாரைவார்க்கப்படுகின்றது. இனம், மதம், சாதி, பிரதேசம்… என்று, எந்தத் தடையுமின்றி, இதுவே தேர்தல் அரசியலாகவும், அரசின் சமூகப் பொருளாதாரக் கொள்கையாகவும் இருக்கின்றது.

தண்ணீர், கல்வி, மருத்துவம்.. என்று எதுவும் மக்களுக்கு எஞ்சவில்லை. நவதாராளவாதத்தின் கடன் கொள்கைக்காக மக்களின் அடிப்படைத் தேவைக்கான அடிப்படை உற்பத்தியை மறுத்து, ஏற்றுமதிக்கான உற்பத்தியே நாட்டின் கொள்கையாகி இருக்கின்றது. அன்றாட மனித தேவைகளையே, மக்களுக்கு மறுதளித்துவிடுவதே, தேர்தல் அரசியல் கட்சிகளின் கொள்கையாகி இருக்கின்றது. மக்களையும், தேசத்தையும் கொள்ளையிடும் மூலதனத்தின் கொள்கையே, நாட்டை ஆளுகின்றது.

மக்களின் உழைப்பைக் கொள்ளையிடும் இந்தக் கூட்டமே, மக்களை மோதவிட்டுப் பிரித்தாளுகின்றது. இனம், மதம், சாதி, பிரதேசம்.. என்று மக்களை ஒடுக்குவதன் மூலம், குறுகிய வட்டத்துக்குள் நின்று மக்களை மோதுமாறு வழிநடத்துகின்றது.

அண்மைக்காலமாக தமிழ் மொழி பேசும் வடகிழக்கு மக்கள் மத்தியில், இன ரீதியான, மத ரீதியான, சாதி ரீதியான, பிரதேச ரீதியான முரண்பாடுகள் கூர்மையாக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் தமிழ் மொழி பேசும் மக்கள் மேலான இனவொடுக்குமுறையை மூடிமறைக்கவும், நவதாராளவாத சூறையாடலை இனங்கண்டு கொள்ளமுடியாத வண்ணம், வடகிழக்கு மக்களிடையேயான மோதலைத் தூண்டிவிட்டு இருக்கின்றது.

 

முகமூடி போட்டு ஆட்சிக்கு வந்த "நல்லாட்சி" அரசு, தமிழ் மொழி பேசும் மக்களை பிரித்தாளும் வண்ணம், அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் தலைவர்களைக் கொண்டு தமிழ் மக்களை இனரீதியான ஒடுக்கி வருகின்றனர். வடகிழக்கில் சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கத்தை எப்படி முன்னெடுக்கின்றதோ, அதேபோன்று அரசியல் அதிகாரத்தை முஸ்லிம்மயமாக்கத்தை வடகிழக்கில் அரங்கேற்றி வருகின்றது.

இவை அனைத்தும் தமிழ் இனவாதத் தலைவர்களுக்கு தீர்வு என்ற மாயப் பொதியைக் காட்டியபடி, அரசியல் ரீதியாக அவர்களை செயலற்ற பொம்மைகளாக்கிவிட்ட ஒரு அரசியல் பின்னணியில் அரங்கேறுகின்றது. இனவொடுக்குமுறைகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு தமிழ் மக்களை சாதிவாதத்துக்குள், மதவாதத்துக்குள், பிரதேசவாதத்துக்குள் முடக்கி விடப்பட் பின்னணியில் நடந்தேறுகின்றது.

யுத்தத்துக்கு முன் புலிகள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவொடுக்குமுறை மூலம், தமிழ் மொழி பேசும் மக்களை பிரித்ததன் மூலம், தமிழ் மக்களை இனவாதமாக்கினர். இதன் எதிர்மறைக் கூறு இன்று அரங்கேறுகின்றது. அதாவது புலிகள் தமிழ் மொழி பேசும் மக்களை பிரிக்க எதைச் செய்தனரோ, அதை இன்று முஸ்லிம் தலைவர்கள் செய்கின்றனர். இவை இரண்டும் ஓரு நாணயத்தின் இருபக்கங்கள். தமிழ் மொழி பேசும் மக்களை மோத வைத்து, அரசியல் செய்யும் இனவாத வக்கிரங்களே, இன்று மீண்டும் அரங்கேறுகின்றது.

இந்தப் பின்னணியில் தேர்தல் அரசியல் மூலம் வங்குரோத்து அடைந்து தோற்ற தமிழ் - முஸ்லிம் தரப்புகள், தேர்தல் அரசியல் மூலம் வெற்றி பெறுவதற்காக, தமிழ் - முஸ்லிம் இனவாத முரண்பாடுகளை தம் பங்குக்குத் தூண்டி விடுகின்றனர். இதே போன்று இன்று தேர்தல் அரசியலால் தெரிவு செய்யப்பட்ட, அதேநேரம் மக்களின் வாழ்வியலுடன் தொடர்பற்ற அரசியல்வாதிகள், மீண்டும் தேர்தல் மூலம் மக்களால் மீள தாம் தெரிவு செய்யப்படும் குறுகிய நோக்கில், இனவாதம், பிரதேசவாதம் மதவாதத்தைத் தூண்டி விடுகின்றனர். இந்த பின்னணியில் உழைத்து வாழாது பொறுக்கித்தின்னும்; கும்பல்களும், லும்பன்களும் செயற்படுகின்றனர். சொந்த இனவாதத்தை எதிர்க்காது பிற இனவாதத்தை மட்டும் எதிர்க்கும், இனரீதியான வன்முறைகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் தம்மை இன, மத, பிரதேச, சாதிய மீட்பாளராகக் காட்டிக் கொண்டு, தேர்தல் அரசியல் மூலம் சுயலாபம் அடைய முனைகின்றனர்.

தமிழ் மொழி பேசும் மக்கள் மேலான இனவாத ஒடுக்குமுறையை ஒன்றுபட்டு எதிர்ப்பதற்குப் பதில், தங்களுக்கு இடையில் இனவாத ஒடுக்குமுறையை தூண்டிவிடப்பட்ட பின்னணியில்,  இன்று அங்குமிங்கமாக இனவாதம் கொழுந்துவிட்டு எரிகின்றது. இதேபோன்று வடக்கு கிழக்கு மக்களிடையே பிரதேசவாதங்களும் தூண்டிவிடப்படுகின்றது. சமூகத்தின் எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் தமக்கு இடையிலான முரண்பாடாக்கி, ஒடுக்குமுறையாக வீரியம் பெற்று வருகின்றது. அனைத்து மக்கள் மீதான நவதாராளவாத ஒடுக்குமுறைளை திசைதிருப்பும் வண்ணம், மக்களுக்கு இடையில் மத, இன, சாதி, பிரதேச மோதல்கள் முதன்மைப்படுத்தப்பட்டு, கண் மண் தெரியாத திசையில் மோத வைக்கப்படுகின்றனர்.

அதேநேரம் அன்றாடம் உழைத்து வாழ்கின்ற மக்களின், ஒன்றுபட்டு வாழும் வாழ்வாதார சமூகக் கட்டமைப்பை இனவாதம், மதவாதம், சாதிவாதம், பிரதேசவாதம் மூலம் கத்தரித்து விடுகின்றனர். யுத்தத்தின் பின் உழைக்கும் மக்களுக்கு இடையில் உருவாகி வந்த ஐக்கியமாக கூடி வாழ்ந்த வாழ்வு, இன்று அங்குமிங்குமாக சிதைக்கப்படுகின்றது.

 

அன்றாடம் உணவுக்காக உழைத்து மாரடிக்கும் மக்கள், அடுத்த நேர உணவுக்கு போக்கிடமின்றி அலைகின்றனர். தமிழ் - முஸ்லிம் பகுதிகஞக்கு தாம் அல்லாத மறுதரப்புகள் வருவதையும், உழைப்பதையும், வியாபாரம் செய்வதையும் தடைசெய்யும் அதிகாரத்தை, இனவாதம் மூலம் மீண்டும் அரங்கேற்றுகின்ற காட்சி, நல்லாட்சி அரசின் கொள்கையாக இருப்பதை நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றது.

அரசியல் அமைப்பு மாற்றம், தீர்வுப்பொதி என்று முகமாற்ற "நல்லாட்சி" அரசு நடத்தும் போலி நாடகத்தை, கீழ் இருந்து கவிழ்க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதன் வெளிப்பாடே, வடகிழக்கில் அரங்கேறும் முஸ்லிம் - தமிழ் இனவாதச் செயற்பாடுகள்.

உழைக்கும் சிங்கள - தமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் இந்த இனவாதத்துக்கு பலியாகாமல் இருப்பதன் மூலம், இனவாதத் தலைவர்களைத் தூக்கி எறிவதே வரலாற்றின் கடமை. உழைக்கும் மக்கள் என்ற பொது அடையாளத்தில் அணிதிரள்வதன் மூலம், தம் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளையும் தாமே களைவதற்கான சுய தீர்வுகளைக் காண முடியும். மாறாக இன, மத, சாதி, பிரதேச ரீதியாக அணிதிரள்வது தீர்வாக இருக்கப் போவதில்லை. மாறாக இவை தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேலும் அதிகரிக்கவே உதவும். இது தான் கடந்த மனித வரலாறும், தமிழ் மக்களின் வரலாறும் கூட.