16
Sun, Jun

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெள்ளாளிய இந்துமதத்துக்கு "இஸ்லாமியர்" ஒருவரை அமைச்சாராக்கியதன் (தற்போது விலகியுள்ளார்) மூலம், சமூகப் பிளவுகளை உருவாக்கி, "இஸ்லாமிய பயங்கரவாதிகளை" தோற்றுவிக்க அரசு முனைகின்றது.

நவதாராளவாத சுரண்டலுக்;கு எதிராக மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்க, மக்களிடையே இனம் - மதம் - சாதி.. முரண்பாடுகளை உருவாக்குவதே அரசின் கொள்கை. இதுதான் நவதாராளவாதக் தேர்தல் கட்சிகளின் கொள்கையாகவும் இருக்கின்றது. நவதாராளவாதக் கட்சிகள் மக்களை தம் பின் திரட்டிக்கொள்ள, தம்மை இனம், மதம், சாதி .. சார்ந்த பிரதிநிதிகளாக முன்னிறுத்திக் கொண்டு, தாம் அல்லாத தரப்பை ஒடுக்குகின்றவராக மாறிவிடுகின்றனர். இதுதான் இன்றைய தேர்தல் அரசியலாகி இருக்கின்றது.

உலகளாவில் ஏகாதிபத்தியங்கள் இஸ்லாமிய மக்களை "பயங்கரவாதியாகவும்" - மக்களின்  எதிரியாகவும் காட்டியே, தத்தம் நாட்டு மக்களை மூலதனத்தின் பின் அணிதிரட்டுவது உலக ஒழுங்காக இருக்கின்றது. அதைச் செய்வதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதங்களை வளர்த்தெடுப்பதும், "பயங்கரவாத" வன்முறையை தூண்டிவிடுவதன் மூலம், மக்களைப் பிரித்து உலகைச் சுரண்ட முடிகின்றது.

பின்தங்கிய மதச் சமூகங்களின் வன்முறை வடிவங்களையும் - அதன் கோட்பாடுகளையும் காட்டி, அந்த மதம் சார்ந்த மக்கள் கூட்டத்தை மனிதகுலத்தின் எதிரியாக சித்தரிக்கின்றது. இதன் மூலம் அவர்களை பிற மக்களில் இருந்து பிரிப்பதுடன், இது தொடர்பாக மக்களிடையே பிளவுகளை உண்டாக்கி, இதைக் கட்டுப்படுத்துவதன் பெயரில் புதிய ஒடுக்குமுறைச் சட்டங்களை உருவாக்கி, மொத்த மக்களையும் ஒடுக்குகின்றது.

 

உலக மக்களை சுரண்டிக் குவிக்கும் உலகமயமாக்கம், இஸ்லாமிய "பயங்கரவாதத்தை" முன்னிறுத்தி செயற்படுவது போல் இலங்கையிலும் அதைக் கொண்டு வரவே முனைகின்றனர். வெள்ளாளிய இந்து மதத்துக்கு "இஸ்லாமியர்" ஒருவரை அமைச்சராக்கியதும், இந்த அரசியல் பின்னணியில் தான்.

இலங்கையின் ஆளும் வர்க்கமும், அதன் எடுபிடி அரசும், மக்களை ஒடுக்கியாள பௌத்த மதத்தையே முன்னிறுத்துகின்றது. அதேநேரம், பிற மதங்களுக்கு இடையில் மதப்பிளவுகளை ஏற்படுத்தி, பிரித்தாள முனைகின்றது. வெள்ளாளிய இந்துத்துவ அடிப்படைவாதத்தை இஸ்லாமிய மதத்துக்கு எதிராகத் தூண்டிவிடுவதன் மூலம், அதற்கு நிகரான பௌத்த அடிப்படைவாதத்துடன், வெள்ளாளிய இந்துத்துவ ஒன்றிணைவை ஏற்படுத்த முனைகின்றனர்.

"இஸ்லாமிய" மதத்தை பிற மதங்களுக்கு எதிரியாக மாற்றி அமைக்க, அரசு திட்டமிட்டு காய்நகர்த்துகின்றது. "இஸ்லாமியர்" ஒருவரை அமைச்சராக்கியது போல், கிழக்கில் இன – மத ரீதியாக முஸ்லிம் அமைச்சர்கள் ஊடாக கட்டமைக்கும் அதிகார வன்முறைகள் மூலம், இன – மத பதற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

அதாவது திட்டமிட்ட அரச அதிகாரங்கள் மூலம், "தமிழ் - இந்து" மதத்துக்கு எதிரான ஒடுக்குமுறைகள், அரசின் அனுசரணையுடன் அரங்கேறி வருகின்றது. இதற்கு நிகராக வெள்ளாளிய இந்துத்துவமும் - பௌத்த அடிப்படைவாதமும் எதிர்வினையாற்றுவது  அரசியல் நிகழ்ச்சிநிரலாக மாறி வருகின்றது.

மக்கள் இடையே மதம் - இனப் பிளவுகளை தடுத்து நிறுத்த, அந்தந்த இன-மத மக்கள் விழிப்புடன், தன் இனம் - மதம் செயற்பாடுகளுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் இதைத் தடுத்து நிறுத்த முடியும்;. வேறு வழிகளில் அல்ல.

நவதாராளவாத தேர்தல் கட்சிகள் இதைச் செய்யப்போவதில்லை, அவர்கள் இதையே தங்கள் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டவர்கள். அவர்கள் தான், தன் இனம் - மதத்தின் பெயரில் பிறருக்கு எதிராக செயல்படுபவராக இருக்கின்றனர்.

இந்த வகையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வெள்ளாளிய இந்துத்துவமும் - பௌத்த அடிப்படைவாதமும் அணிதிரண்டு, ஒடுக்குமுறையை செய்ய முனைகின்றது. இது உருவாவதற்கான சூழலுக்கு இஸ்லாமிய – முஸ்லிம் மக்கள் பலியாகக் கூடாது. இஸ்லாமிய – முஸ்லிம்  மக்களின் பெயரில் பிற மக்களுக்கு எதிராக செயற்படும் முஸ்லிம் தலைவர்களின் செயற்பாட்டை எதிர்த்து அவர்கள் அணிதிரள வேண்டும். இதன் மூலம் தான் இலங்கை இஸ்லாமிய – முஸ்லிம்  மக்களை பிரித்து ஒடுக்கும் அபாயத்தில் இருந்து தற்காக்க முடியும்.

இலங்கையில பிற இனமதங்களின் அடிப்படைவாதங்களுக்கு எதிரான செயற்பாடுகள் - கருத்துக்களை, அந்தந்த மக்கள் செய்யுமளவுக்கு இஸ்லாமிய – முஸ்லிம்  மக்கள் மத்தியில் இல்லையென்பதால், அவர்கள் இரண்டு ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு  புதிய நெருக்கடிகள் தோன்றி வளர்ந்து வருகின்றது.

1.வெள்ளாளிய இந்துத்துவ - பௌத்த அடிப்படைவாதத்தின் தனித்தனியானதும் - கூட்டு ஒடுக்குமுறைகளும் 

2.முஸ்லிம் மக்களை ஒடுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத ஒடுக்குமுறைகள்;; 

தோன்றி வளர்கின்றது. அரசின் திட்டமிட்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, இஸ்லாமிய - முஸ்லிம் சமூகம் பலியாகும் ஆபத்து இலங்கையில் தோன்றி இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய - முஸ்லிம் மக்கள் இதற்கு பலியாகாது, இதை எதிர்த்து அனைத்து ஒடுக்கப்பட்ட இலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து இதைத் தடுத்து நிறுத்துவதே அவர்கள் முன்னுள்ள ஒரேயொரு தீர்வாகும். இதுவே முஸ்லிம் சமூகத்தின் முன்னுள்ள சமுதாயக் கடமையும் கூட.