16
Sun, Jun

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.துரைராஜா அவர்கள், நோர்வே பல்கலைக்கழகங்களில் ஒன்றான தொரம்சோ(Tromso) பல்கலைக்கழகத்துடன் கடல்வளத் துறை பீடம் மற்றும் அத் துறைசார்ந்த நிபுணத்துவத்தினை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையினை ஒப்பமிடுவதற்காக 1995 ம் ஆண்டு அழைக்கப்பட்டிருந்தார்.

அப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை மேற்கொண்டிருந்த தமிழ் மாணவர்களால் கருத்தரங்கு ஒன்று அவ்வேளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக் கருத்தரங்கில் அவரிடம் முஸ்லிம் மக்கள் வெளியேற்றுகை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது வருந்தத்தக்கதே என்று தனது பதிலில் குறிப்பிட்டார். அறிவியல்துறை சார்ந்த ஒரு தமிழ் தேசிய ஆதரவாளராக முதல் முதலாக தமிழ் தேசியத்தின் தவறான இப் போக்கு குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டவராக அன்று நெருக்கடியான சூழலிலும் அவர் இருந்தார்.

ஆனால் முஸ்லிம் மக்கள் மேலான தமிழ் தேசியத்தின் அத்துமீறல் அனைத்தையும் தமிழ் சமூகத்துக்குள்ளேயே முரண்பட்டு எதிர்த்து நின்று போராடி இருக்கிறார்கள். இனவாத அரசு, புலிகளின் இனத் துரோகி முத்திரை மற்றும் படுகொலை அச்சுறுத்தல் எல்லாவற்றையும் எதிர்கொண்டிருந்த அன்றைய ஆபத்தான சூழலிலும் அவர்கள் அதனைச் செய்யாதிருந்தனர் இல்லை.

பல திசைகளிலும் இருந்து உறுதியாக எதிர்ப்புகள் எழுந்தன. வட துருவத்திலும் அக் கேள்வி எழுந்தது. அக் குரல்களின் கேள்வியின் கனதியின் வெளிப்பாடு தான் திரு துரைராஜா அவர்கள் அறிவுத்துறை சார்ந்த ஒருவராக மேற்கண்டவாறு தனது வருத்தத்தினை வெளிப்படுத்த வைத்தது.

அன்றைய சரிநிகர் பத்திரிகையில் இச் செய்தியை துருவன் என்ற பெயரில் நான் எழுதியிருந்தேன்(1995).

முதன்முதலாக ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட « வருந்தத்தக்கது» என்று இச் செய்தி முதல்பக்கத்தில் அன்றைய சரிநிகர் வெளியிட்டிருந்தது. அச் செய்தி போலவே வேறும் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட படுகொலைகளையும் தாக்குதல்களையும் அவலங்களையும் அப் பத்திரிகையும் ஜரோப்பிய தமிழ் சஞ்சிகைகள் பலவும் வெளியிட்டு அதற்கான தீர்க்கமான உறுதியான எதிர்ப்புக்களை வெளியிட்டு மனிதத்துவத்தைப் பேணின.


உதாரணத்துக்கு சரிநிகர் பத்திரிகையின் அன்றைய அந்த முகப்பு செய்தியையும், ஆக்கமொன்றையும் இங்கு காணலாம். (பெரிதாக்க படங்களின் மேல் அழுத்தவும்)

 


இவ்வாறு சமூகத்தின் ஜனநாயகக் குரல்கள் இன்றைய இஸ்லாமிய பயங்கரவாதத்தினை ஊற்றுக்கண் எடுக்க வைத்த மத அடிப்படைவாதத்தினை எதிர்த்தெழுந்த முஸ்லிம் சமூகத்திற்குள்ளான குரல்களாக எவையும் தோற்றம் பெற்றிருக்கவில்லை அல்லது சமூக வியூகம் பெற்றிருக்கவில்லை.

வெறுமனே «ஏகாதிபத்தியங்கள் மற்றும் பேரினவாத அரசு, புலிகளின் முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள் தான் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தோற்றுவாய்». அதைப்பற்றி பேசுவது மட்டும் தேவை மற்றும்படி வெளியே மட்டும் விரலைக் காட்டிவிட்டு உள்ளீடாக இருக்கக்கூடிய மத அடிப்படைவாதத்தினை சுட்டிக் காட்டினால் இது முஸ்லிம் மக்கள் மீதான கரிச்சுக் கொட்டுதலாக காட்டப்படுகின்றது.
எல்லா முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதத்துடன் பொதுமைப்படுத்திப் பார்ப்பது தவறு. ஆனால் அம் மதமாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த மதமாக இருக்கட்டும் அவ்வவ் மதங்களுக்குள் இருக்கும் அடிப்படைவாதத்திலிருந்து அந்த மக்கள் வெளியே வரவேண்டும். அதற்கு அவர்கள் தாங்களாகவே தமக்குள்ளாக மிகவும் கடினமான நீண்ட வெளிப்படையான மத அடிப்படைவாத நிராகரிப்புக்களை செய்தேயாக வேண்டும். இந்த அடிப்படைவாதங்கள் தான் ஏகாதிபத்தியங்களுக்கும், பேரினவாத அரசுகளுக்கும் இனவாதிகளுக்கும் பசளை.


பசளை இல்லாத நிலத்தில் பயங்கரவாதத்துக்கு நீரூற்றி வளர்த்தெடுப்பது அவ்வளவு இலகுவானதல்ல.