16
Sun, Jun

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று அதிகாரத்தில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியாளர்களை பதவி விலக்கக் கோரி, பௌத்த பேரினவாத அதிகார சக்திகளின ஒரு பகுதியினர் கோருகின்றனர். பௌத்த பேரினவாத சக்திகளுடன் தங்களை அடையாளப்படுத்தும் வெள்ளாளிய இந்துத்துவமும், பேரினவாத தயவில் கிறிஸ்துவத்தின் மகிமையைக் காணும் கும்பலும், இதன் பின்னால் கும்மி அடிக்கின்றது. அத்துடன் தமிழ் இனவாதிகளும், பதவிக்கும் பணத்துக்கும் அலையும் தமிழ் தரப்புகளும் இணைந்து, மனிதகுலத்தை கூறுபோட்டு நாட்டை நவதாராளவாதத்துக்கு இரையாக்குகின்றனர்.


நாடோ இன-மதவாத பதற்றத்துக்குள்ளாகி நிற்கின்றது. இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியாளர்களை பதவி விலக்க கோரும் உண்ணாவிரதம், சட்ட அமைப்புமுறையை ஒடுக்கும் இன – மத அதிகாரத்தின் கட்டைப் பஞசாயத்துக்கு உட்படுத்தக் கோருகின்றது.


காப்பரேட் மயமாக்கும் நவதாராளவாதத்துக்கு தலைமை தாங்கும் இன-மதவாதிகள் தமக்குள் முரண்பட்டுக் கொள்வதும், தங்கள் முரண்பாட்டை நாட்டின் பிரச்சனையாகக் காட்டி, மக்களை தம் பின்னால் அணிதிரட்டுகின்ற வன்முறை அரசியல், தேர்தல் காலத்தில் மேலெழுந்திருக்கின்றது.

இந்த அரசியல் பின்னணியானது ஒடுக்கும் பௌத்த - சிங்கள மேலாதிக்கத்தின் அதிகாரம் சார்ந்ததாக இருக்கின்றது. இதனால் இதை ஒடுக்கப்பட்ட சிறுபான்மை அதிகார பிரிவுக்கு எதிரான ஒன்றாக காண்பது என்பது, இனவாதத்துக்கும் - மதவாதத்துக்கும் பலியாவதேயாகும்.

பதவி விலக்கக் கோரும் மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் அல்ல. ஒடுக்கும் தங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, மக்களை பிளந்த மானிட விரோதிகளே. இனவாதம், மதவாதம் மூலம் நாட்டைப் பிளந்தவர்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அரசியல்ரீதியாக சமூகத்தில் விதைத்ததுடன், பிற மக்களில் இருந்து முஸ்லிம் மக்களை அன்னியப்படுத்தும் அளவுக்கு, தன் சமூகத்தையும் - பிரதேசத்தையும் இஸ்லாமிய மயமாக்கி குறுக்கியவர்கள்.

இந்த அரசியல் பின்புலம் தான் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் வேர். குறிப்பாக தமிழ் மக்களை பௌத்த பேரினவாதத்துடன் கூடி ஒடுக்கியதுடன், அதிகாரம் மூலம் இன-மத ரீதியாக திட்டமிட்ட குடியேற்றத்தை நடத்தியவர்கள். தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீதான ஆக்கிரமிப்பை நடத்துவதற்கும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியவர்கள்.

அதேநேரம் காப்பரேட் மயமாக்கும் நவதாராளவாதத்துக்கு நாட்டை விற்று பெரும் செல்வத்தை கொள்ளை அடித்தவர்கள். பேரினவாதத்துக்கு நிகராக தம் பங்குக்கு ஆட்டையைப் போட்டவர்கள், தங்கள் ஆட்சி அதிகாரம் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அடித்தளத்தை பாதுகாக்கும் பின்புலமே, இவர்களுக்கு ஆப்பாகி நிற்கின்றது.

பௌத்த – பேரினவாதமானது தனக்கு நிகராக இன்னொரு இஸ்லாமிய அடிப்படைவாத அதிகாரத்தை அனுமதிப்பது என்பது, தற்கொலையில் முடியும்;. அதனால் அது கொதித்தெழுந்திருக்கின்றது.

இதற்கு துணையாக பௌத்த – பேரினவாதியை சிறையில் இருந்து விடுவித்துள்ள ஜனாதிபதி, இன மத வன்முறைக்கு தூபம் இட்டுள்ளார். முன்கூட்டியே இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்தும், பயங்கரவாத தாக்குதல் குறித்துமான தகவல்கள் பல இருந்தும், சட்டரீதியாக கையாள்வதை தடுத்த பின்னணியிலும் கூட, அரசியல் உள்நோக்கம் இருந்து இருக்கின்றது. தேர்தலுக்கு ஏற்ற இன-மதவாத அரசியலாக, அதை வன்முறை கொண்ட நகர்வுகளாக மாற்றி இருப்பதையே, இவை எடுத்துக் காட்டுகின்றது.

ஆக காப்பரேட் மயமாக்கும் நவதாராளவாதத்துக்கு ஏற்ற இன மத வாத வன்முறைகள் மூலம், மக்களை பிரித்தாளுகின்ற கூத்துக்குள் அரசியலை முடக்கும் காட்சிகளே இன்று அரங்கேறுகின்றது.