16
Sun, Jun

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனவாத, மதவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, எந்த அரசியல் நடைமுறைகளையும் கொண்டு செயற்படாதவர்களே இலங்கை இடதுசாரிகள். இன-மத வன்முறைகளின் போது திடீரென கோசம் போடுவதால், சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. இதைத்தான் இலங்கை இடதுசாரிகள் செய்கின்றனர்.

இன-மத வன்முறைக்கு எதிராக "இன்னொரு யுத்தம் வேண்டாம்!" என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைக்கின்றனர். "எங்கள் பிள்ளைகளுக்கு யுத்தம் வேண்டாம்" என்று சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கமும் முன்வைத்திருக்கின்றது.

இதன் மூலம் "யுத்தம்" வருமளவுக்கு இனவாத, மதவாத முரண்பாடுகள் சமூகத்தில் காணப்படுகின்றது என்பதை இந்த கோசம் ஏற்றுக்கொள்கின்றது. ஆனால் இந்த முரண்பாடுகளைக் களைவதற்கான எந்த அரசியல் நடைமுறை வேலைத்திட்டங்களுமின்றி, வெறுமனே கோசம் போடுவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. இதன் பின்னான அரசியலென்பது கோட்பாடுகள் மீதான வரட்டுத்தனங்களே, வெற்றுக் கோசங்களாகி விடுகின்றது. சமவுரிமை இயக்கமோ "சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பலத்தால் தீவிரவாதத்தை தோற்கடிப்போம்" என்கின்றது. சமவுரிமை இயக்கத்திடம் இதற்கான நடைமுறை வேலைத்திட்டம் இருக்கின்றதா எனின் இல்லை. வெறும் கோட்பாடுகள் மீதான, வரட்டுக் கருத்துக்களையே, கோசங்களாக முன்வைக்க முடிகின்றது.

வர்க்கப் போராட்டங்கள் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த வர்க்க ஓற்றுமையை கட்டியமைத்து, இன-மத மற்றும் பிற சமூக ஒடுக்குமுறைகளை களையமுடியும் என்று கூறுவதென்பது இடதுசாரிய வரட்டுத்தனமாகும். அதாவது தனித்தனியான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மறுப்பதென்பது, அரசியல் வரட்டுத்தனமாகும். கொள்கை அளவில் பிற போராட்டங்களை ஏற்றுக் கொள்வது, ஆனால் நடைமுறையில் அதை முன்னெடுக்க மறுப்பதே இலங்கையின் இடதுசாரியமாக இருக்கின்றது. இது இலங்கை இடதுசாரிகளின் கடந்தகால வரலாறு மட்டுமின்றி, எமது அண்மைக்கால அனுபவமும் கூட.

நேரடியாக வர்க்க முரண்பாடல்லாத பிற சமூக ஒடுக்குமுறைகள் மீது, பாட்டாளி வர்க்க கட்சிகள் நடைமுறையில் எந்த அரசியல் தலையீட்டையும் நடத்துவதில்லை. குறிப்பாக அரசு ஆதரவு பெற்றதும், இலங்கையில் பெரும்பான்மை இன-மத சார்ந்து இயங்கும், இனவாத, மதவாத ஒடுக்குமுறைக்கு எதிராக எந்த அரசியல் நடைமுறையும் கிடையாது. இந்த ஒடுக்குமுறையை பொதுமைப்படுத்தி, அனைத்தையும் தீவிரவாதமாக கட்டமைத்துக் காட்டுவதன் மூலம், ஓடுக்குமுறைக்கு ஆதரவாக அரசியல்ரீதியாக நழுவி விடுவதையே அரசியல் நடைமுறையாக இருக்கின்றது.

வன்முறைகளை பொதுமைப்படுத்தி கோசம் போடுவது, அறிக்கையை விடுவதுடன், இதற்கு எதிரான அரசியலை முடித்து விடுகின்றனர். இலங்கையில் நடப்பது இன-மத தீவிரவாதமல்ல. மாறாக இன-மத ஒடுக்குமுறைகளும், அதற்கு எதிரான போராட்டங்களுமே. இதன் பின்னாலேயே இனவாதம், மதவாதம் முதல் வன்முறைகள் வரை உருவாகின்றது.

ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்க சமூகமாக, வர்க்க ரீதியாக மட்டும் பிரிந்து கிடக்கவில்லை. மாறாக பல்வேறான சமூகரீதியான சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி, ஒடுக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளாக சமூகம் பிரிந்து கிடக்கின்றது.

இதில் பெரும்பான்மை இன-மதம் சார்ந்த சமூகப் பிரிவுகள் அரசு ஆதரவு பெற்ற அடிப்படைவாதமாகவும், பிற சமூகங்கள் மீதான ஒடுக்குமுறைகளைக் கொண்ட அதிகாரமாகவும் காணப்படுகின்றது.

இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் இயக்கத்தையும், போராட்டத்தையும் நடத்தாத வரலாற்றுச் சூழலில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் சுலோகங்கள் வரட்டுத்தனமாகி விடுகின்றது. இப்படி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைக்கும்

"இன்னொரு யுத்தம் வேண்டாம்!

சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களே இனவாத மதவாத பொறியில் அகப்படாமல் இருப்போம்!

மக்களை கொல்லும் கொடூரமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்போம்!

தீவிரவாதற்கு எதிராக ஒன்றாகப் போராடுவோம்!"

என்ற கோசங்களை முன் வைப்பதால், ஒடுக்குமுறையை மூடிமறைக்கவே முடிகின்றது. இங்கு அரசு ஆதரவு பெற்ற பெரும்பான்மை சார்ந்த ஓடுக்குமுறை, ஒடுக்குமுறையாகவே உணர்வதில்லை. மாறாக சமூகத்தின் பொது இயல்பானதாக, பழக்கப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. அதை இடதுசாரிய கோசங்கள் கொஞ்சி விளையாடுகின்றனவே ஓழிய, எதிர்த்து நிற்பதில்லை.

இலங்கையில் ஒடுக்கும் இனவாதம், மதவாதம் குறித்தும், அதற்கு எதிரான போராட்டம் குறித்து எதையும் முன்வைக்காது, அனைத்தையும் தீவிரவாதமாக்கி காட்டிவிடுவதன் மூலம் ஓடுக்குமுறையை பாதுகாக்கும் மையவாதியாக, அரசியல் நடுநிலைவாதியாக தம்மை முன்னிறுத்திக் காட்டுவதையே வர்க்க அரசியலாக்கி விடுகின்றனர். இதைத்தான் இன்று இனவாத, மதவாத ஒடுக்கமுறைக்கு பின்னாலான, இடதுசாரிய அரசியலாக காண்கின்றோம்.