16
Sun, Jun

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நவம்பர் 26, 27 முன்னிறுத்தி புலிகள் பிரபாகரனின் பிறந்த தினத்தையும், புலிகளின் மாவீரர் நாளையும் நினைவுகொள்வதை எதிர்த்து, புலியெதிர்ப்புப் புராணங்கள் பாடப்படுகின்றது.

புலிகள் செய்த மனிதவிரோதக் குற்றங்களையும், அது ஏற்படுத்திய சமுதாயப் பின்னடைவுகளையும் காட்டி, ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த போலியான பொது விம்பத்தைக் கட்டமைத்துவிட முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு ஒளிவட்டம் போடுவதன் மூலம், சமூகத்தை தவறாக வழிநடத்த முனைகின்றனர்.

இப்படி செய்வதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் தேச மற்றும் தேசிய உணர்வை மழுங்கடிக்கவும், அதேநேரம் ஒடுக்கும் பேரினவாதத்தை பாதுகாக்கவும் முனைகின்றனர். இப்படிப்பட்ட புலியெதிர்ப்பு அரசியல் என்பது சாராம்சத்தில் பேரினவாதத்தை ஆதரிப்பதுடன், புதிதாக பேரினவாத ஆட்சிக்கு தலைமை தாங்கும் கோத்தபாயவை முன்னிறுத்துவதும் நடந்தேறுகின்றது.

இந்த பின்னணியில் முன்பு புலம்பெயர் நாடுகளில் ஜனநாயகத்தை முன்வைத்து, ஒடுக்கும் பேரினவாத அரசுக்கு ஆதரவான புலியெதிர்ப்பாக சீரழிந்தவர்களைக் காண முடியும். இவர்களுடன் புலிப் புராணம் பாடி அண்டிப் பிழைத்தவர்களும், இன்று புலியெதிர்ப்பு புராணம் பாடுகின்றனர். இன்று இவர்கள் ஆளும் தரப்புகளுடன் கூடிப் குலாவுவதன் மூலம் பிழைக்கும் புலியெதிர்ப்பாகும்.

புலிகள் தோன்றக் காரணமான இனவொடுக்குமுறையையும், புலிகளை விட பல மடங்கு மனித விரோத குற்றங்களைச் செய்த அரசு குறித்து, இந்தப் புலியெதிர்ப்புப் பன்னாடைகள் புலம்புவதில்லை. மாறாக புலியை அழிக்க அவசியமானது அரச வன்முறைகளே என்று பிதற்றுகின்ற அளவுக்கு, புலியெதிர்ப்பு வக்கிரங்களைத் கொட்டித் தீர்க்கின்றனர். இதைத்தான் கோத்தபாய அரசு கூறுகின்றது. நாங்கள் "சர்வாதிகாரிகளல்ல", புலியை அழித்து மக்களை மீட்ட மீட்பாளர்கள், ஜனநாயகவாதிகள்" என்கின்றனர்.

புலிகளின் மீதான விமர்சனம் என்பது ஜனநாயக சமூகத்தை கட்டமைக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குமானதாகவே இருக்க முடியும். இதுவல்லாத புலியெதிர்ப்பு அரசியலும், விமர்சனங்களும், கருத்துக்களும், ஒடுக்குகின்ற ஆளும் ஆட்சியாளர்களின், குண்டியை கழுவி விடுகின்றதையே நோக்காகக் கொண்டது.

இதன் மூலம் கடந்தகால மனிதவிரோத குற்றங்களை புலிகளுக்கு மட்டும் உரியனதாகவும், அரசின் குற்றங்களல்ல என்று கூறுவதன் மூலம் அரசை பாதுகாப்பதும், அதேநேரம் தொடரும் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே இதன் பின்னுள்ள நோக்கமாகும்.