16
Sun, Jun

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

இனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களை நினைவுகொள்ளும் முகமாக, மனிதவுரிமை தினத்தை முன்னிறுத்தி மூன்றாவது ஆண்டு நிகழ்வு 07.10.2019 பாரிசில் நடைபெற்றது. 9 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்வாக அது சுருங்கிப் போனது. நடைபெறும் வேலைநிறுத்தமானது கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்திய போதும், சமூகத்துக்காக மரணித்த மனிதர்களை முன்னிறுத்தும் சமூக உணர்வின் பொது வீழ்ச்சியையும் பறைசாற்றி நிற்கின்றது. இந்த வகையில்

1.இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்வைத்து உருவான இயக்கங்கள், மக்களை ஒடுக்கும் அன்னிய நாடுகளின் கூலிப்படையாக மாறிய போது, இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திப் போராடிய பலர் கொல்லப்பட்டனர். அவர்கள் தான் இயக்கங்கள் இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான - நேர்மையான தோழர்களாக இருந்தவர்கள். அவர்கள் தங்கள் உயிர்த் தியாகங்கள் மூலம், செவ்வணக்கத்துக்குரிய கதாநாயகர்கள். இன்று இவர்களுக்காக யாரும் அரசியல்ரீதியாக அஞ்சலி செய்வதில்லை. மனிதவுரிமை தினத்தில் இவர்களை முன்னிறுத்துவதன் மூலம், தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுடன் எமது அரசியலை முன்வைத்து வருகின்றோம்.

2.ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கிய இயக்கங்களில், தங்கள் அறியாமை சார்ந்து, இதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான பாதையென்று நம்பி சமூகத்துக்கு தங்கள் உயிரை அர்ப்பணித்த மனிதர்களின் சமூக உணர்வை யாரும் கொண்டாடுவதில்லை. மனிதவுரிமை தினத்தில் மரணித்த மனிதர்களின் சமூக உணர்வை முன்னிறுத்தி, எமது அஞ்சலிகள் அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து நிற்பதில் தனித்துவமானவை.

ஒடுக்குமுறையாளர்களும், வியாபாரிகளும், தேர்தல் கட்சிகளும், பிழைப்புவாத தனிநபர்வாத அரசியல் -இலக்கிய பிரமுகர்களும் தங்கள் சுயநலத்துக்கு, கடந்தகால தியாகங்களை முன்னிறுத்துகின்ற கேவலங்களே அரங்கேறுகின்றது. இதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி, தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகின்ற அஞ்சலியை மனிதவுரிமை தினத்தில் நாம் முன்வைத்து வருகின்றோம்.

நேற்று இந்த அஞ்சலியைத் தொடர்ந்து, எதிர்கால அரசியல் குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தினோம். குறிப்பாக இனவாத ஒடுக்குமுறைகள் குறித்தும், அதில் இடதுசாரிகளின் செயற்பாடு குறித்த விமர்சனத்தை முன்வைத்தோம்.

குறிப்பாக ஒடுக்கும் பேரினவாத - மதவாதம் மீது, இடதுசாரிகளின் செயற்தந்திரமற்ற அரசியற் போக்குத் தான், தேர்தலில் இனவாதத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்வதை சுட்டிக் காட்டினோம். இனவாதத்துக்கு எதிரான அரசியல் வேலைத்திட்டத்தினை நடைமுறைச் செயற்பாடாக முன்னெடுக்காதிருப்பதையும், அதற்காக முழுநேர உறுப்பினர்களைக் கூட கட்சிகள் ஒதுக்கி இருக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினோம். மக்கள்திரள் வேலைத்திட்டத்தை முன்வைத்து செயற்படும் நடைமுறை வேலைத்திட்டத்தை யாரும் கொண்டிருக்கவில்லை. சமவுரிமை என்பது சுயநிர்ணயத்தின் அகக் கூறுகளை முன்வைத்து, மக்களை சோசலிசத்திற்காக அணிதிரட்டுவதே. அதற்கான நடைமுறையிலான மக்கள்திரள் திட்டத்தை யாரும் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக ஒடுக்கும் பேரினவாத - மதவாத கூறுகளுக்கும் - சிந்தனைக்கும் எதிரான செயலற்ற தன்மை தான், இனவாதமானது சமூகத்தில் கூர்மையடைவதும் - அது தேர்தல் முடிவுகளைக் கூட தீர்மானிக்கும் காரணமாகவும் மாறியிருக்கின்றது.