16
Sun, Jun

2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வைரஸ் குறித்து உலகறிந்த உண்மையை பொய்யாகவும், நம்பகத்தன்மையற்றதாக்கிய அரசுகள், ஊடகங்கள் தொடங்கி அதையே வாந்தியாக்கிய தனிநபர்கள் வரை, மனித இனத்துக்கு எதிரான குற்றத்தை இழைத்துள்ளனர். வைரஸ் மூலம் நிகழும் ஒவ்வொரு மரணங்களுக்கும், இவர்கள் தான் முழுப் பொறுப்பாளிகள்.

சீனா அல்லாத பிற நாடுகள் தொற்றை முன்கூட்டியே தடுத்து இருக்க முடியும். முன்கூட்டியே மருத்துவத்தை தயார் செய்திருந்தால், நிகழும் வைரஸ் மரணங்களைக் குறைத்திருக்க முடியும்;. சீனாவுக்கு வெளியில் எல்லாவற்றுக்கும் போதிய அவகாசம் இருந்தது. ஆனால் அதைச் செய்யவில்லை. இதன் பின்னால் மக்கள் குறித்து அக்கறையற்ற ஆட்சிகள், அதை நக்கிப் பிழைக்கும் ஊடகங்கள். தனிமனிதர்களிடையே வக்கரித்துக் கிடக்கும் மனிதவிரோதச் சிந்தனைமுறைகளே காரணமாக இருந்தன.

இந்தப் பின்னணியில் கொரோனா வைரஸ்சை உலகெங்கும் சுதந்திரமாக பரப்பியது மேற்கு ஊடகங்களும் - ஏகாதிபத்தியங்களும், இந்த சிந்தனைமுறையைக் காவிய தனிமனிதர்களும் தான். தங்கள் போலி அறிவியல் பொய்களையும், தர்க்கங்களையும் கொண்டு, மக்கள் இன்று மரணிக்க காரணமாகி இருக்கின்றனர். இந்த மேற்கு ஏகாதிபத்திய பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்தி உருவான உலகமயமாக்கலை அடியொற்றி முடிவுகளை எடுக்கும் பிறநாடுகள், மேற்கின் மருத்துவக் கொள்கை முடிவைப் பின்பற்றியதன் மூலம், தங்கள் நாட்டு மக்களின் பிணங்களை எண்ணத் தொடங்கி இருக்கின்றனர்.

மேற்கு ஊடகங்களும் அது உருவாக்கிய ஏகாதிபத்திய சிந்தனைமுறையும், கொரோனா வைரஸ் குறித்த சீனத் தரவுகளை நம்பகத்தன்மையற்றதாக காட்டின. அதை ஊர்ஜிதமற்ற, சுயாதீனமாக உறுதி செய்யப்;படாத தகவல்கள் என்று கூறி, உலகை ஏமாற்றியதன் மூலம் மேற்கில் வைரஸ் செழித்து வளர உதவினர். இன்னமும் அதையே சொல்லிக் கொண்டு, சீனா கட்டுப்படுத்திய மருத்துவ வழிமுறைகளை "சர்வாதிகாரமானது" என்று கூறி, சீன வழிமுறைகள் தங்கள் "ஜனநாயக" நாட்டுக்குப் பொருந்தாது என்று கூறுகின்றன. ஏகாதிபத்திய பொருளாதார சிந்தனையிலான வாந்திகளையே ஊடகங்கள் தொடர்ந்து பரப்புவதன் மூலம், சீன வழிமுறையை முன்னெடுக்க மறுக்கின்றனர். இதன் பொருள் தொடர்ந்தும், இலாப வெறி மூலதனத்தைக் கொழுக்க வைக்கும் ஏற்பாட்டின் மூலம், வைரஸ் பரவுவதற்கான எல்லா இடைவெளிகளையும் உருவாக்கி வைத்துக் கொண்டு, அதை சீனாவுக்கு முரணான தங்கள் "ஜனநாயகமாக" காட்டி வக்கரிக்கின்றனர். இதன் மூலம் தங்கள் ஏகாதிபத்திய "ஜனநாயக" வழிகளில் மக்களைக் கொன்று வருவதும் - பிணங்களை எண்ணிக் கொண்டும் இருக்கின்றனர்.

மேற்கு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து கூறும் சீன "சர்வாதிகாரம்" என்ன? மேற்கு "ஜனநாயகம்” என்ன என்பதை, கொரோனா வைரஸ்சைக் கொண்டு விளங்கிக் கொள்ள முனைவோம். சீன ஏகாதிபத்திய முதலாளித்துவம், மேற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவம் சாராம்சத்தில் ஒன்று. இரண்டும் தனியுடமை முறையை அடிப்படையாகக் கொண்டது. இதில் வேறுபாடுகள் கிடையாது.

ஆனால் மேற்கு ஏகாதிபத்தியம் சீன முதலாளித்துவத்தை "சர்வாதிகாரமானது" என்று வேறுபடுத்தும் அதன் அளவுகோல் என்ன? சீன அரசு தங்கள் நாட்டு பன்நாட்டு முதலாளிகளை ஆலோசித்து முடிவுகளை எடுப்பதில்லை. சீனா சோசலிச மக்கள் அரசில் இருந்து உருவான முதலாளித்துவம் என்பதால், மக்களுக்கும் முதலாளிக்கும் இடையில் அரசே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இடத்தில் சுதந்திரமாக இருக்கின்றது. இதற்குப் பின்னால் ஒரு கட்சி ஆட்சிமுறை இருக்கின்றது. ஏகாதிபத்திய "ஜனநாயகம்" என்பது, அரசு மக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் இருந்து சுதந்திரமான முடிவுகளை எடுப்பதில்லை. சீனாவுக்கு மாறாக முதலாளிகளே முடிவுகளை எடுக்கின்றனர். அதை அரசுகள் அமுல்படுத்துகின்றனர். முதலாளிகள் எடுக்கும் முடிவுகள் ஏகாதிபத்திய "ஜனநாயகமாக" இருப்பதால், மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றது. இதன் பொருள், முற்றாக முதலாளிகளின் நலன் சார்ந்து இருக்கின்றது. சீன "ஜனநாயகம்" மக்களுக்கு இடையில் இருப்பதால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டி இருக்கின்றது. இது தான் அடிப்படையில் வேறுபாடு.

இதைத்தான் கொரோனா வைரஸ்வுக்கு எதிரான அரசுகளின் அணுகுமுறை வெளிப்படுத்துகின்றது. சீனாவில் மக்களுக்கு மருத்துவத்தை வழங்குவதில் காட்டிய அக்கறை, மேற்கில் மக்களை மருத்துவரீதியாக கைவிட்டு மரணிக்க விடுவது, இந்த அடிப்படை வேறுபாட்டினால் தான். இங்கு "சர்வாதிகரம் - ஜனநாயகம்" குறித்து, மேற்கத்தைய அணுகுமுறையை விளங்கிக் கொள்ள, கொரோனாவுக்கு வழங்கிய மருத்துவரீதியான வேறுபட்ட அணுகுமுறை மிகச் சிறந்த உதாரணமாகிவிட்டது.