16
Sun, Jun

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இது ஒரு சிறு குறிப்பு மட்டுமே. விரிவாக பல ஆயிரம் பக்கங்கள் எழுதப்பட வேண்டிய விடையங்களை ஒரு வரியில் இங்கு பதிந்துள்ளேன். மேலும், இது இலக்கியம் பற்றிய கட்டுரை அல்ல. அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

1.

இந்திய எழுத்தாளர் ஜெயமோகன், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை பூச்சி மருந்தடித்து, இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறிய வீடியோ பிரபலமாகியுள்ளது. இதனால் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

விவாதங்களில் ஜெயமோகன், இந்திய - பார்ப்பன மேலாதிக்கத்தை இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் மீது நிறுவுவதற்காக முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஜெயமோகன் புலம்பெயர்ந்த மற்றும் இலங்கை வாழ் எழுத்தாளர்களை வரிசைப்படுத்தி "ஒரு" பாரம்பரியத்தை முன்மொழிகிறார். அத்துடன், இலங்கையில் இலக்கிய ஆய்வுமுறை மற்றும் விமர்சனப் பாரம்பரியம் இருந்ததில்லை என்பது போன்ற கருத்தையும் முன்வைக்கிறார். இவரது இந்த கருத்துக்கள்,  உண்மையிலேயே அவரது இந்திய மேலாதிக்க பார்ப்பன கண்ணோட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதில், எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

அதேவேளை, ஒரு வலதுசாரிய பார்வையுடன், இந்துத்துவா கருத்துக்கள் ஊடாக உலகத்தை தரிசிக்கும் ஒரு எழுத்தாளனிடம், ஒரு சரியான-நியாயமான ஈழத்து இலக்கிய பாரம்பரியத்தைப் பற்றிய கருத்துக்களை- கண்ணோட்டங்களை எதிர்பார்ப்பதென்பது எந்த வகையில் நியாயம்? ஜெயமோகன் தனது வர்க்க, சாதிய, மற்றும் தன் தேச நலனிலிருந்தே, இலக்கிய கருத்துக்களை பிரச்சாரப் படுத்துகிறார். ஜெயமோகன், ஈழத்து இலக்கியத்தின் உயர் ஆதீனமாக- ஈழத்து இலக்கியத்தை வரையறுக்கும் சட்டாம்பியாகத் தன்னை நிலைநிறுத்த முயல்கிறார். ஜெயமோகனின் ஒத்த கருத்துடைய, மேல்தட்டு வர்க்க, ஆதிக்க சாதிய பற்றுக்கொண்ட, இலங்கை சார்ந்த தமிழ் எழுத்தாளர்கள் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதும், அவரது அங்கீகாரத்துக்காக அலைவதும் ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல. இவர்கள் அனைவரும், ஜெயமோகனின் தொண்டரடிப்பொடிகளாக கரசேவை செய்ய முண்டியடிக்கிறார்கள்.

2.

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் கூட ஜெயமோகனைப் போல இலக்கிய ஆதீனங்கள், இன்றும் இருக்கின்றன. ஜெயமோகன் தற்போது செய்ய முயன்றுள்ளது, இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பாரம்பரியத்தின் ஆதீனங்களாகவிருந்த, யாழ். சைவ வேளாள மேலாதிக்க சிந்தனையின்  அடிப்படையில் இலக்கியம் செய்வோர், காலகாலமாக செய்துவந்த ஒன்றையே!

எனது சிற்றறிவின் அடிப்படையில், எது இலக்கியம், எவர் இலக்கியவாதி, எவர் தகுதியுள்ள எழுத்தாளர் என்ற விடயங்களை வரையறுப்பதில் அறுபதுகளில் இருந்து இன்றுவரை,  மேற்குறிப்பிட்டது போல யாழ். சைவ வேளாளர் சிந்தனையின் ஆதிக்கமே உச்சத்தில் இருந்து வருகிறது.

ஒடுக்கப்பட்ட சாதிகள், அவர்களின் கதைகள் இலக்கியம் ஆக்கப்பட்டபோது யாழ். சைவவேளாளர் சிந்தனைவாதிகள் அதை ரசிக்கவில்லை. அந்த சிந்தனைவாதிகள், வலதுசாரிகள் முகாமில் மட்டுமல்ல இடதுசாரிகள் முகாமிலும் இருந்தார்கள். உதாரணமாக, எனக்குத் தெரிந்த மட்டில், எழுத்தாளர் தோழர்.டானியலின் இலக்கிய படைப்புகள், மார்க்சிச- லெனினிச இடதுசாரிகள் என்று தம்மைக் கூறிக் கொண்ட இலக்கியவாதிகளினாலேயே, படு கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டது. அவரின் எழுத்துக்கள் இலக்கியம் அல்ல, ஆதிக்க சாதிகளை பழிவாங்கும் நோக்கத்துடன் புனையப்பட்ட குப்பை என விமர்சிக்கப்பட்டது.

இதே காலத்தில், மேற்படி சிந்தனை வாதத்துக்கு வெளியிலிருந்து மார்க்சிச மற்றும் வர்க்க அடிப்படையிலான இலக்கிய ஆய்வுமுறை இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதுவும் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மார்க்சிச இலக்கிய ஆய்வுமுறையை தமிழில் இலங்கையில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான கார்த்திகேசு சிவத்தம்பி, தனிப்பட்ட முறையில் அவருடைய துறை சார்ந்து பழிவாங்கப்பட்டார், ஒதுக்கப்பட்டார்.

3.

83 க்கு பின்னான தேசிய எழுச்சி காலத்தில், தமிழ் தேசியத்தை மட்டுமே முன்னிறுத்தி- அது சார்ந்த போராட்டங்களை மட்டுமே முன்னிறுத்தி இலக்கியம் படைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு, புது வடிவம் எடுத்தது- யாழ் சைவ. வேளாள சிந்தனை வாதம். இந்தக் காலத்தில் சாதிய, சமூக, ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கிய இயக்கம் முற்று முழுதாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. அதிதீவிர தேசிய உணர்வும், இனவாதமும் கலந்த கவிதைகளும்- கலைப்படைப்புகளும் அரங்கேறின. அக்காலத்தில் யாழ் பல்கலைக்கழக சூழல் இவ்வகை இலக்கியத்தை முன்னெடுக்கும் முக்கிய களமாக இருந்தது. சிற்றிதழ்கள், கவிதை மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. இவ்விலக்கிய வெளியீடுகள் "போர்க்கால இலக்கியம்" என்று சித்தரிக்கப்பட்டது. சேரன், ஜெயபாலன் போன்றோர் தலையில் வைத்து கொண்டாடப்பட்டார்கள். இன்றும் கிடைக்கக்கூடிய இக்கால வெளியீடுகளை எடுத்துப் பார்த்தால் மிக இலகுவாக விளங்கும் யாரின் ஆதிக்கம் இலக்கியத்தில்-இலக்கிய வெளியில் நிலவியது என்பதனை.

இதே காலகட்டத்தில், பல ஒடுக்கப்பட்ட சாதிய சமூகங்களைச் சேர்ந்த இலக்கியவாதிகள், மற்றும் பெண் எழுத்தாளர்கள் இருந்தபோதும் அவர்களில் பெரும்பான்மையானோர் கண்டும் காணாமல் விடப்பட்டனர். ஆதிக்கத்திலிருந்த சைவ வேளாள சிந்தனாவாதிகள், ஒடுக்கப்பட்ட சமூக எழுத்தாளர்களின் எழுத்துக்களை- பெண்களின் எழுத்துக்களை அங்கீகரிப்பதில் மிகவும் தயங்கினார்கள்.

4.

இந்திய இராணுவ வருகைக்குப் பின்னான காலத்தில், மேற்கு நாடுகளுக்கு மக்கள் பெருமளவில் புலம்பெயர்ந்த பின், எனக்குத் தெரிந்த மட்டில், இலங்கையில் மாற்று அரசியல் மற்றும் இலக்கியம் சார்ந்து கொழும்பில் இருந்த சரிநிகர் குழு ஆதீனமாக செயற்பட்டது. அவர்கள் பிரசுரிக்கும் கருத்துக்களும், இலக்கிய வெளிப்பாடுகளும் புலம்பெயர்ந்த அரசியல் மற்றும் இலக்கிய ஆர்வலர்களிடையே ஆதிக்கத்தைச் செலுத்தியது. இந்த சரிநிகர் குழுவின் பின்னணி ஆனது, ஒருவகையில் மேற்கூறிய யாழ் பல்கலைக்கழகத்தில் "போர்க்கால இலக்கியம்" செய்தவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தது. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து(ஐNபுழு) பெற்ற நிதியுதவியுடன் நடாத்தப்பட்ட சரிநிகர் பத்திரிகையானது, பின்னாளில் புலம்பெயர்ந்த அரசியல்-இலக்கிய ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்;தது. அரசியல், சமூக, பொருளாதார, இலக்கியத் தளத்தில் மாற்றத்தை கொண்டுவர விரும்பிய- இடதுசாரிகள் என்று தம்மை அடையாளப்படுத்தியவர்களின் "மூன்றாவது பாதையாக" சரிநிகர் தன்னை இலக்கிய -அரசியல் வெளியில் கட்டமைத்து-காட்டிக் கொண்டது. ஆதலினால் சரிநிகர் கோஸ்ட்டியின்-குழுவின் ஆசிபெற்ற புலம்பெயர் சஞ்சிகைகள் முற்போக்கானதாகவும்- இலக்கிய நயம் உள்ளதாகவும் கணிக்கப்பட்டது.

மேலும், ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளும் ஐரோப்பாவில் தமிழ் அரசியல்- இலக்கிய விவாதக் களத்தை விரிவுபடுத்தியது. அதேவேளை, இந்த இலக்கியச் சந்திப்புகளில் ஆளுமை செலுத்தியவர்கள், ஐரோப்பிய புலம்பெயர் இலக்கிய பீடத்தின் ஆதீனத் தலைவர்கள் ஆனார்கள். இவர்கள் பிற்காலத்தில் உடைந்து, ஒரு பகுதியினர் மேற்கூறிய சரிநிகர்குழு சார்ந்தவர்களுடன் இணைந்து "இடதுசாரிய" தமிழீழ அரசியலை-இலக்கியத்தை முன்னெடுக்க முயன்றார்கள். பின் கதவால் புலிகளின் "ஆசியுடன்" இயங்கினார்கள்.

5.

இன்னொரு பகுதி, புலி எதிர்ப்பை முன்னிறுத்தி அரசியல் மற்றும் இலக்கியம் செய்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள், இந்தியாவிலிருந்து வெளிவந்த நிறப்பிரிகை என்ற சஞ்சிகை, மற்றும் அந்தோணிசாமி மார்க்ஸ் போன்றோரின் சிந்தனையில் ஈர்க்கப்பட்டு தம்மை தலித்தியவாதிகளாகவும், பின்நவீனத்துவவாதிகளாகவும் அடையாளப்படுத்தினார்கள். குறிப்பாக, பாரிஸில் இருந்த பலர், இந்த தலித்திய-பின்நவீனத்துவ குழுக்களின் ஆதிக்க சக்தியாக இருந்தார்கள். பின்நவீனத்துவ சிந்தனைக்கும், எழுத்துக்கும், இலக்கிய ஆய்வுக்கும் பிரபலமான பாரிஸில் இவர்கள் வசித்த போதும் கூட, இந்தியாவிலிருந்து, தமிழுக்கு, ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட "பின்நவீனத்துவம் என்றால் என்ன?"  "அதன் உள்ளடக்கம் என்றால் என்ன?" என்பது போன்ற பிரசுரங்களை  வாசித்துவிட்டு- தாம் தான் பின்நவீனத்துவத்தின் அதியுச்ச இலக்கியவாதிகள் என்று துள்ளிக் குதித்தார்கள். ஆனால், இவர்களின் பிள்ளைகள் பிரான்ஸ் பள்ளிகளில், அவர்களின் கல்வி சார்ந்து நேரடியாகவே பின்நவீனத்துவம் மற்றும் இலக்கிய கல்விகளை பெற்றுக் கொண்டார்கள்.

தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகள் இயக்கமும் கூட, இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்தது. புலம்பெயர் நாடுகளில் புலிகள் சார்ந்து இயங்கியவர்கள் பலர் இலக்கிய முயற்சியில் ஈடுபட்டார்கள். இவர்கள் செய்த இந்த இலக்கியத்தை, மேற்படி "பின்நவீனத்துவவாதிகள் ", மற்றும் பிற்காலத்தில் ஐரோப்பிய- அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்ந்த சரிநிகர் சார்ந்த இலக்கிய செம்மல்களும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அவை வெறும் புலிகளுக்கு புகழ்பாடும் பிரச்சாரமாகவே கணிக்கப்பட்டது. 2009 யுத்த முடிவின் பின், புலிகளுடன் சேர்ந்து இயங்கிய எழுத்தாளர்களில்,  புலியை விமர்சனம் செய்த எழுத்தாளர்கள் மட்டுமே, மேற்படி தலித்திய பின்நவீனத்துவ ஆதீனங்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றவரானார்கள்.

அதேவேளை, பின்நவீனத்துவம் மற்றும் தலித்தியம் பேசியவர்கள் இலக்கியச் சந்திப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இவர்களின் ஆதர்ச எழுத்தாளர்களாக- தத்துவ ஆசிரியர்களாக சில இந்திய எழுத்தாளர்களே இருந்தார்கள். அவர்களின் அங்கீகாரமே மிக முக்கியமானது என்ற வகையில், அவர்களை ஐரோப்பாவுக்கு அழைத்து கொண்டாடினார்கள். அப்படி கொண்டாடப்பட்ட இந்திய எழுத்தாளர்களில் ஒருவர், தனது இணையத்தள பக்கத்தில், இவர்களில் சிலரை சிலாகிப்பது தமக்கான அங்கீகாரமாக கருதினார்கள்.

ஒரு கட்டத்தில், புலி எதிர்ப்பும், இலங்கை அரசுக்கான ஆதரவும், புலம்பெயர் இலக்கிய- அரசியல் களத்தை இவர்கள் கட்டியாளும் நிலைக்கு வந்தது. மாற்றுக் கருத்துக் கொண்டோர் ஒரு சிலரை தவிர மற்றவர்கள், மௌனிக்கும் நிலை உருவானது. இந்நிலையின் தொடர்ச்சியாக, 2009 போர் முடிவின் பின்- இவர்கள் இலக்கியச் சந்திப்பை இலங்கைக்கு எடுத்துச் சென்றார்கள். அப்போது, மௌனமாக இருந்த, இவர்களுக்கு எதிரான இலக்கிய ஆதீனங்கள், வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தார்கள். ஏதோ இவர்கள் இனப்படுகொலை செய்தது போன்றும், ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணையை இவர்கள் நிறுத்தியது போன்றும் பிரச்சாரம் செய்தார்கள். இவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தோர், சமீப காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடுவதும், இலக்கிய பரிசுகள் பெறுவதும், மந்திரிகளுடன் சந்திப்பை மேற்கொள்வதும் வெளிப்படையான விடயம்.

6.

மேற்கூறிய எல்லா ஈழத் தமிழ் முகாமும் எந்தக் காலத்திலும் பெண்களை - பெண்சார் இலக்கியத்தை முன்னேற்ற முயலவில்லை. சில இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, இவர்களால் - இந்த ஆணாதிக்க கும்பலால் பொதுவெளியில் அங்கீகரிக்கப்படவில்லை. நிசடக, டவவந, வநடழ, pடழவ என அன்று எல்லா இயக்கங்களிலும் மிகத் திறமையான பெண் எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்கள் எவ்வாறு அவ் இயக்கங்கள் இல்லாமல் போயினவோ, அதேபோன்றே ஆனார்கள்.

7.

தற்போது, புலம்பெயர் தலித்திய முகாமும், முன்னாள் இலக்கிய - இடதுசாரிகளும், முன்னாள் சரிநிகர் சார்ந்தவர்களும் இலங்கையின் வடக்கு கிழக்கில் தமக்கான தொண்டரடிப்பொடிகளை, பொருளாதார ரீதியாக உதவுவதன் மூலம் உருவாக்க முயன்று வருகிறார்கள். இந்நிலையில் தான், ஜெயமோகன் தலையீடு நிகழ்த்தியுள்ளார். ஜெயமோகன், ஓரளவுக்கேனும் வலுக்குறைந்த யாழ். சைவ வேளாள சித்தாந்த மரபை மறுபடியும் புனருத்தாரணம் செய்ய முனைகிறார். இது எந்த வகையிலும் ஈழ தமிழ் இலக்கியத்துக்கு நன்மை பயக்கப் போவதில்லை.

உண்மையான, நேர்மையான, கலைத்துவம் மிக்க, ரசனை மிக்க, சமூக உணர்வு மிக்க, முற்போக்கான ஈழத்து இலக்கியத்தை - விமர்சன பாரம்பரியத்தை உருவாக்க வேண்டுமெனில், இந்திய மேலாதிக்க பார்ப்பனிய சக்திகள் மட்டுமல்ல- நம்மிடையே நிலவும் ஆதீனங்களாக இயங்கி வருபவர்களும், அவர்களின்  இலக்கிய மேலாதிக்க சிந்தனையும் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.