16
Sun, Jun

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முஸ்லிம் மக்கள் மேலான வன்முறை, "கலவரம்" கிடையாது. மாறாக சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்கான வன்முறை. பவுத்த மதத்தின் அடிமையாக அவர்களின் அனுசரணையில் வாழக் கோரிய, கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் கூற்றிக்கான வன்முறை வடிவம் தான், இஸ்லாமிய அடையாளங்கள் மீதான வன்முறை.

பேரினவாத - பௌத்த அடிப்படைவாதத்தின் பயங்கரவாதமே நடந்தேறியது. அரசு ஆதரவு பெற்ற, ஆட்சியை பிடிக்கும் தேர்தல் கட்சிகள் நடத்துகின்ற அரசியல்ரீதியான வன்முறை. இனவாதத்தையும் மதவாதத்தையும் தங்கள் கட்சிகளின் கொள்கையாக கொண்டிருக்கின்ற பொதுப் பின்னணியிலேயே, பேரினவாத, பௌத்த அடிப்படைவாத வன்முறை நடந்தேறுகின்றது. குறித்த ஒரு கட்சியின் நடத்தையல்ல. கூட்டு வன்முறை, இதில் ஒன்று முனைப்பு பெற்று இயங்குகின்றது.

நாம் இலங்கையர்கள் என்ற அடிப்படை மனிதக் கோட்பாட்டை மறுக்கின்றவர்கள் தான், இன-மத பிரிவினைவாத வன்முறையை அரங்கேற்றி இருக்கின்றனர். அதையே தங்கள் கருத்துக்களாக கொண்டவர்கள், நாம் இலங்கையர் என்பதை மறுத்து சமூக வலைத்தளங்களில் பொங்குகின்றனர். மானிட சமூகத்தின் பொதுக் கூறுகளை குதறுவதன் மூலம், மக்களை ஒடுக்குவதுதான் நடைபெறுகின்றது. கடையை எரிக்கின்ற காடையர்கள் போல், சமூக வலைத்தளத்தில் பிரிவினைவாதம் முன்வைக்கப்படுகின்றது. இரண்டும் மானிடம் மீதான பயங்கரவாதம் தான்.

இலங்கையில் உழைத்து வாழும் மக்கள் ஒரேவிதமான வாழ்க்கையைக் கொண்டு, இலங்கையராக இருக்கின்றனர். அதேநேரம் இலங்கை மத, இன சார்பற்ற, ஜனநாயக நாடாக இல்லை. மாறாக பிற இன-மத மக்களை ஓடுக்குவதையே அரசியலாகக் கொண்ட தேர்தல் கட்சிகளால், நாடு பிளவுண்டு கிடக்கின்றது. சிறு பொறி காட்டுத் தீயாக மாறக் கூடிய அளவுக்கு, மதவாதங்களும் இனவாதங்களும் மக்களைப் பிரித்து வைத்திருக்கின்றது.

இலங்கையில் பேரினவாதம், பௌத்த அடிப்படைவாதம் மட்டும் கிடையாது, மாறாக பிற இனவாதங்களும் மதவாதங்களும் இருப்பதுடன், தன்னளவில் வன்முறையைக் கொண்டு இருக்கின்றது. இந்த பொதுப் பின்னணியில் பேரினவாத – பௌத்த காடையர்களால், சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவதும், சொத்துக்களை அழிப்பதும், கொல்லப்படுவதும் நடந்தேறுகின்றது.

இந்த வன்முறை பின்னணியென்பது, எதிர்வினையோ - தற்செயலானதோ அல்ல. திட்டமிட்ட வன்முறை. திட்டமிட்ட பயங்கரவாதம் போல், திட்டமிடப்பட்ட முஸ்லிம் அடையாளங்கள் மீதான வன்முறை.

இஸ்லாமிய பயங்கரவாதமோ தமிழ் கிறிஸ்துவ மக்களையும் - மேற்கத்தைய மக்களையும் இலக்கு வைத்து தாக்கியது. பேரினவாத - பௌத்த அடிப்படைவாதமானது, முஸ்லிம் அடையாளங்கள் அனத்தையும் குறிவைத்து தாக்குகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதத்தில் நேரடியாக பாதிக்கப்படாத சமூகத்தின் பெயரில் நடத்திய வன்முறை. அதுவும் திட்டமிட்ட திடீர் வன்முறை. பேரினவாத - பௌத்த அடிப்படைவாதத்துடன் தொடர்புபட்ட பயங்கரவாதம்.

உழைக்கும் பெரும்பான்மை மக்களை ஒடுக்குவதற்கான, பேரினவாத - பௌத்த அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் கட்சிகளின் ஆதரவு பெற்ற வன்முறை. அதிகாரத்தைப் பெறுவதற்காக, அதிகாரத்தில் உள்ளவர்களை கவிழ்ப்பதற்கான வன்முறை.

நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடுத்து பொருளாதாரரீதியாக பெருமளவில் பாதிக்கப்பட்ட மக்கள், உழைக்கும் சிங்கள மக்கள் தான். சுற்றுலாத்துறை சார்ந்து இலட்சக் கணக்கான ஏழை சிங்கள மக்களின்; அன்றாட உழைப்பு முடங்கி, வாழ்க்கையே ஏழ்மைக்குள் சிக்கி இருக்கின்றது. அவர்களின் வாய்களில் மண்ணை அள்ளிப்போடுவதை தான், முஸ்லிம் அடையாளங்கள் மேலான பேரினவாத – பௌத்த அடிப்படைவாதக் காடையர்களின் வன்முறை செய்திருக்கின்றது.

முஸ்லிம் மக்களின் உடனடிப் பாதிப்புகளும், நீண்டகால பாதிப்பு என்பதும் அன்றாடம் உழைத்து வாழும் சிங்கள மக்களுக்கே. சுற்லுலாத்துறை மட்டுமே இன்று இலங்கையில் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்த நிலையில், அதை சார்ந்து உருவான வாழ்க்கை மீதான இஸ்லாமிய – பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதம் என்பது, நீண்டகாலத்திற்கு மீள முடியாத பாரிய அடி.

உழைத்து வாழக் கூடிய ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக சிங்கள மக்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் பேரினவாத - பௌத்த அடிப்படைவாத காடையர்களுக்கு எதிராக அணிதிரளாத வரை, இலங்கையில் மாற்றம் நிகழாது. பொறுக்கித் தின்னும் தேர்தல் அரசியல் போல், அவர்களின் கீழ் இன-மதக் காடையர்கள் இருத்தலே, தேர்தல் அரசியலாகி இருக்கின்றது.

அரசியல்ரீதியாக இன-மத வெறுப்பில் இருந்து ஒட்டுமொத்த சமூகத்தை அறிவூட்டும் சமூக இயக்கங்கள் உருவாகாத வரை, மாறி மாறி இன-மத வெறியூட்டுவதே தேர்தல் கட்சி கொள்கையாகவும், சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டவதற்கு ஏற்ற நடைமுறையாகவும் தொடரும்.

அதைத்தான் இலங்கையில் இன – மத வன்முறை எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு எதிரான இடதுசாரிய அரசியலின் செயலற்ற போலித்தனம், மறைமுகமாக இதற்கு உதவுகின்றது. இலங்கை இடதுசாரியம் தான், இந்த நிலைமை தொடர்வதற்கு பொறுப்பேற்றாக வேண்டும்.

யாரும் இதை சுயவிமர்சனம் செய்யும் ஒரு அரசியல் நடைமுறை மூலம் பதிலளிக்காது, உப்புச்சப்பற்ற வெறும் போலி அறிக்கைகளுடன் முடித்து விடுகின்றனர். அடுத்த வன்முறைக்கு எதிராக அறிக்கை விடக் காத்துக் கிடக்கின்றனர்.