16
Sun, Jun

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரபு மொழி இலங்கை மண்ணிற்கே உரிய தாய் மொழியல்ல. அரபு மொழி பேசவும் வர்த்தக சமூகத்துடன் உரையாடுவதற்கான ஒரு மொழியாக அரபு இலங்கையில் கற்கவில்லை. அரபு நூல்களை கற்க, அரபைக் கற்பிக்கவில்லை. அரபு மொழி அவசியமற்ற மக்கள் கூட்டத்தின் மேல், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஒரு மொழியாக இலங்கையில் அரபு மொழி திணிக்கப்பட்டு இருக்கின்றது. வீதிகள், கட்டிடங்கள்.. பெயர்களில் அரபு முதன்மையான மொழியாகி இருக்கின்றது. குறிப்பாக பிற சமூகங்களில் இருந்து முஸ்லிம் சமூகத்தை அன்னியப்படுத்த விரும்பிய, இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளினால் கடவுளின் பெயரால் ஒரு அன்னிய மொழி திணிக்கப்பட்டது.

தமிழ் மொழி பேசும் முஸ்லிம் மக்களின் தாய் மொழிக்குப் பதில், அரபு மொழியாக்கமானது அடிப்படைவாதிகளின் முயற்சியும், சதியுமாகும்.

இன்று தமிழ் மொழிக்கு எதிராக சமஸ்கிருத மொழி எப்படி கோயில்களில் சாதிய மொழியாக இருக்கின்றதோ, அப்படி தமிழ் மொழிக்குப் பதில் அரபு மொழி புகுத்தப்பட்டுள்ளது. அரபு மொழியை அனைவரும் கற்குமளவுக்கு, இஸ்லாமிய அடிப்படைவாதப் பின்னணி இருந்தது போல், சமஸ்கிருதத்துக்கு கிடையாது. சமஸ்கிருதம் சாதியின் அதிகார மற்றும் பிழைப்பு மொழியாக இருந்ததுடன், அதை மற்ற சாதிகள் கற்க தடையும் இருந்தது. இன்று அதை இந்துக்கள் அனைவரும் கற்க வேண்டும் என்று இந்து அடிப்படைவாதமானது, யாழ்ப்பாணத்தில் அதை கற்பிக்கும் முயற்சியை தொடங்கி இருக்கின்றது. இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை யாழ் மண்ணில் திணிக்கும் இந்துத்துவ அடிப்படைவாதத்தின் முயற்சிக்கான சகல பின்னணிகளும் இன்று தோன்றி இருக்கின்றது. அரபு மொழி குறித்து பேசும் போதும், இதற்கு எதிராக போராடியாக வேண்டியுள்ளது.

அரபு மொழியை இஸ்லாமிய மொழியாக கருதும் பொதுப் பின்னணியில் தான், இலங்கையில் அரபு மொழியை காணமுடியும்;. அரபு மொழி என்பது ஒரு கூட்டம் மக்கள் தமக்கிடையில் உரையாடுவதற்கான மொழியைக் கடந்து, இஸ்லாமிய மதத்தின் மொழியாகும் போது, அது மத அடிப்படைவாதக் கூறாகவே செயற்படுகின்றது. குறித்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்திற்கு மட்டுமான மொழியாக மாறுகின்றது.

உதாரணமாக சமஸ்கிருதம் எப்படி ஒரு சாதியின் மொழியாக வரம்பிட்டு, அதை கடவுளின் மொழியாக்கப்பட்டதோ, அதேபோல் தான் அரபும். இந்தியாவில் இன்று சமஸ்கிருதத்தை இந்துக்களின் மொழியாக்க முனையும் பின்னணியில், அரபு மொழியை இஸ்லாமியத்தின் மொழியாக்கும் முயற்சியென்பது, மக்களை மதரீதியாக பிரித்தாளும் நவதாராளவாதத்தின் அரசியல் கூறாகவே இயங்குகின்றது.

இந்த வகையில் இலங்கையில் அரபு மொழி மத அடிப்படைவாதத்தின் கூறாகவும், தமிழ் தேசம் என்ற தமிழ் தேசத்திற்கு எதிரான மொழியாகவுமே அரபு திணிக்கப்பட்டு இருக்கின்றது. முஸ்லிம் மக்களின் தாய் மொழியான தமிழ் என்ற பொது அடையாளத்திற்குப் பதில், அரபு மொழி மூலம் பின்தங்கிய மதச் சமூகமாக அவர்களைச் சிதைக்கின்ற பின்னணியில் இலங்கையில் வந்தேறிய மொழி தான் அரபு.

தமிழ் மொழியை மையப்படுத்தி ஒரு தேசமாக, மதம் கடந்து சமூகங்களாக ஒன்;றிணைய வேண்டிய சமூகத்தை மதத்தால் பிளவுபடுத்தியது மட்டுமல்லாமல், மொழியால் வேறுபடுத்தவும் அரபு மொழி வெளியில் இருந்து, பேரினவாத அரசு ஆதரவோடு கொண்டு வரப்பட்டது.

இன்று வானொலி மற்றும் தொலைக்காட்சிகளின் மூலம் தமிழ் மொழியானது கொச்சை மொழியாகி உள்ளதுடன், மதம் கலந்த இலக்கணம் இலக்கியமற்ற மொழியாக சிதைந்து வருகின்றது. தமிழ் இலக்கண, இலக்கிய அடிப்படையிலான மொழியின் பொதுத்தன்மையை அழித்து இருக்கின்றது. அரசு சார்ந்த மொழிப் பயன்பாட்டிலும் தமிழ் கொச்சை வடிவம் பெற்று இருக்கின்ற பொது பின்னணியில், தமிழ் மொழி மேல் இருந்து கீழாக திரிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் தமிழ் மொழிச் சிதைவு என்பது பல வடிவங்களில் தொடருகின்றது என்பதும், அதில் அரபு மொழி ஒரு கூறாக இயங்குகின்றது.

தமிழ் மொழியில் இருந்த சாதிய - இந்துத்துவ மொழி மற்றும் பெயர்களை வைப்பது படிப்படியாக சிதைந்து, தமிழ் தேசத்தின் மொழியாக பரிணாமம் பெற்று வந்த சூழலில், மத பெயர்களைச் சூட்டுவது இஸ்லாமிய, கிறிஸ்துவ பின்னணியில் கூர்மையடைந்து வருகின்றது. தமிழ் மொழி பேசும் சமூகத்தை பின்தங்கிய மதச் சமூகமாக சிதைகின்ற அளவுக்கு, மத அடிப்படைவாதிகள் தமிழ் சமூகத்தை கூறுபோட்டு வருகின்றனர். மொழியையும் விட்டு வைக்கவில்லை.

பெயரைக் கொண்டு அடையாளம் காணுமளவுக்கும் மனிதர்களை குறுக்கி விடவும், மொழியைக் கொண்டு பிரதேசங்களை அடையாளம் காணுமளவுக்கும் மொழியில் மதவாதமும், மொழியில் பினதங்கிய அறியாமையே புலமையாக சமூகத்தில் புகுந்து இருக்கின்றது. முன்பு சாதியை அடையாளம் காணுமளவுக்கு யாழ் மையவாத தமிழ் மொழி சாதிய - மத மொழியாக இருந்ததுடன், யார் என்ன பெயர் வைக்க வேண்டும் என்ற கட்டளைகளுக்கும், மொழி கட்டுப்பட்டு இருந்த இடத்தில் இன்று மதமும், மொழிக் கல்வியற்ற குருட்டுத்தனமும் மொழியாகி வருகின்றது.

தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் அரபென்பது, தமிழ் மொழியை அழிக்கின்ற மொழியாக, மத முரண்பாடுகளை கூர்மையாக்கி தமிழ் மக்களைப் பிரிக்கின்ற கூறாக, அரபு மயமாக்கத்தை இனம்கண்டு, அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும்.