16
Sun, Jun

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பேரினவாதத்துக்கு எதிராக, தமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். கடந்தகால அனுபவமும், தேசங்களினதும் - தேசிய இனங்களினதும் சமவுரிமையை மறுக்கும் தேர்தல் கட்சிகளின் பிரச்சாரமுமே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இனவொடுக்குமுறை அதிகரித்துள்ளதையும், அதற்கு எதிராக தேர்தல் கட்சிகள் முதல் தனிநபர் செயற்பாட்டாளர்கள் வரை, யாரும் அக்கறையற்றுக் கிடப்பதையே, இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது.

இனவொடுக்குமுறைக்கு எதிராகவும், சமவுரிமை கொண்ட தேசங்கள் - தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை முன்வைத்து, பெரும்பான்மை மக்களை அணிதிரட்ட வேண்டிய இடதுசாரிகள், அரசியல்ரீதியாக செயலற்றுக் கிடப்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றது.

இன-மத ஒடுக்குமுறை மீதான தமிழ் - முஸ்லிம் - மலையக மக்களின் பொது அச்சத்தை, தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகின்றது.

தமிழ் - சிங்கள தேசங்கள், தேசிய இனங்கள் சமவுரிமைக்கு உரித்துடையவர்கள் அல்ல, மாறாக ஒடுக்கும் உரிமை கொண்ட சிங்களப் பேரினவாதத்தின் அரசியல் அதிகாரமாக அடையாளப்படுத்திய பொதுப் பின்னணியில், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைத் தோற்கடிக்க முனைந்தனர். ஒடுக்கும் தேசிய இனவுணர்வு, அதை வெல்ல வைத்திருக்கின்றது.

ஒடுக்கும் இந்த வெற்றியின் பின்னணியில், பிரதான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு எதிராக ஒடுக்கும் சாதிய உணர்வும் உசுப்பி விடப்பட்டது. சொந்தக் கட்சியின் சாதி உணர்வு, தன் கட்சி வேட்பாளரை தோற்கடிக்கும் சதியுடன் இணைந்து கொண்டது.

தமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் பிசாசை விட பேய் பரவாயில்லை என்ற பொது மனநிலையிலேயே தேர்தலை அணுகினர். எந்தத் தேர்தல் கட்சியினதும் முடிவுக்கு கட்டுப்பட்டோ, இனவாத – மதவாத அடிப்படையில் தங்கள் வாக்கை அளிக்கவில்லை.

பேரினவாதம் குறித்த அச்சம், பொது மனவியல்பாக எழுந்திருக்கின்றது. இது கடந்தகால அனுபவம். பொது அச்சத்தை நீக்கும் எந்தச் செயற்பாட்டையும் வென்றவர்கள் அரசியல் ரீதியாக முன்வைக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய பிந்தைய இன – மத ரீதியான வன்முறை, மிரட்டல்கள், எதிர்காலம் குறித்த தமிழ் - முஸ்லிம் - மலையக மக்களின் பொது அச்சத்தை உறுதி செய்கின்றது. பதவி ஏற்பு எங்கிருந்து எப்படி தொடங்கி யாருக்கு பதவிகள் வழங்கப்படுகின்றது என்பது வரை, அனைத்தும் சமூகத்தை மிரள வைக்கின்றது. சிவில் சமூக கட்டமைப்புக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி, மீள எழும்பத் தொடங்கி இருக்கின்றது.

கடந்து ஐந்து வருடங்களில் மீள உருவாகி இருந்த சிவில் சமூக கட்டமைப்புகள் தொடங்கி ஜனநாயகத்திற்கு கிடைத்த பொது வெளி என்பவை, இனி தொடருமா என்பதே இன்று கேள்வியாக மாறி இருக்கின்றது.

தமிழ் - முஸ்லிம் - மலையக மக்களால் தோற்கடிக்கப்பட்ட, முன்பு கூலிப்படையாக செயற்பட்ட முன்னாள் தமிழ் இராணுவக் குழுக்களின் உறுப்பினர்கள் அரசு துணையுடன் கையாளக் கூடிய அதிகாரம் என்பது, தமிழ் சிவில் சமூக கட்டமைப்பையே இல்லாதாக்கும் என்ற பொது அச்சம் எழுந்திருக்கின்றது. இவர்கள் ஜனநாயகத்தை முன்வைத்து நடக்கின்ற, மக்களுக்கான களச் செயற்பாட்டாளர்களல்ல. அபிவிருத்தியின் பெயரில் பொறுக்கித் தின்னவும், அதிகாரத்தைக் கொண்டு மக்களை அச்சுறுத்தி வாழ்வதையுமே, அரசியல் வழிமுறையாகக் கொண்டவர்கள்.

பேரினவாத அதிகாரம் அரசு அதிகாரமாக, அதை அண்டிப் பிழைக்கும் ஜனநாயக விரோத தமிழ் குழுக்கள், தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சுதந்திரமாக சிந்திக்கவும் - செயலாற்றவும் கூடிய அடிப்படைகளை ஒடுக்குவதைத் தாண்டி, எதையும் செய்யப் போவதில்லை.

"அபிவிருத்தி" என பொதுப்படையாக கூறுகின்ற திட்டங்கள் ஊழலுக்கானதே ஒழிய, மனிதநலன் சார்ந்து முன்னெடுக்கப்படுபவையல்ல. ஊழலுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் பெரும்பாலானவை சுற்றுச்சூழலை மீறுகின்றனவாக, மக்களின் பொது தேவை - விருப்பங்களுக்கு முரணானதாகவே இருக்கின்றது.

சமூகத்தை அச்சமூட்டி ஒடுக்குகின்ற புதிய சூழலுக்குள் இலங்கை பயணிக்கின்றது.

இப்படி நாம் பார்ப்பதற்கும் - கூறுவதற்கும் முரணாக, கடந்த ஐந்து வருடத்தை விடவும் உயர்ந்த ஜனநாயகத்தை புதிய அரசு மக்களுக்கு வழங்கிவிடுமானால் மட்டுமே, அது நடந்தால் மட்டுமே மக்களின் தீர்ப்பும் - அது சார்ந்த எமது கருத்தும் தவறனாதாகிவிடும்.