16
Sun, Jun

2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எல்லைகளற்ற மூலதனம், எல்லையற்ற வைரஸ்சை எதிர்கொள்ள, சுயநலத்துடன் எல்லை வகுத்துக் கொண்டு இறங்கியதன் மூலம், கொரோனா (கோவிட் 19) வைரஸ் பரவவும் - மரணங்கள் நிகழவும் காரணமாகியுள்ளது. எல்லை வகுத்துக் கொண்ட சுயநலமானது, ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தது.

மருத்துவ ரீதியாக கொரோனா (கோவிட் 19) வைரஸ்க்கு மருந்து கண்டறியப்படவில்லை. ஒரேயொரு தீர்வு கொரோனா (கோவிட் 19) பரவுகின்ற முறையை கட்டுப்படுத்துவது தான். மனிதர்களை தனிமைப்படுத்துவது தான். கொரோனா (கோவிட் 19) வைரஸ் பரவியுள்ள எல்லா இடங்களிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டு, மனிதர்கள் தனிமைப்படுத்தப்படாத வரை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. உற்பத்தியை நிறுத்துவதை தாமதப்படுத்திய, இன்னமும் அதைச் செய்யாத அரசுகளும், அரசுக் கொள்கைகளும், சிந்தனைமுறைகளும், மனித உயிர்கள் குறித்து அக்கறையற்றதாக இருக்கின்றது. மாறாக மூலதன நலன்களை முன்னிலைப்படுத்தி, மூலதனத்திற்காக மனிதனைப் பலியிடுகின்ற - மூலதன வெறிபிடித்த கும்பல்களின் ஆட்சியாகவே தங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. அரசுகள் மக்களில் இருந்து தனிமைப்பட்டு இருந்ததையும், இருப்பதையும் – யாராலும் மூடிமறைக்க முடியாது.

மூலதனத்தையே சதா கனவு காணும் அரசுத் தலைவர்களின் கோமாளித்தனமான - முட்டாள்தனமான முடிவுகள், தங்களது ஏகாதிபத்திய சந்தைக்கே எல்லையை உருவாக்கிவிட்டனர். இனி அதை திறப்பது கூட, ஒழுங்கிணைந்ததாக இருக்கப்போவதில்லை. அதாவது தனிமைப்படுத்தல் முறையானது வெவ்வெறு நாடுகளின் - வேறுபட்ட கால இடைவெளியில் - வேறுபட்ட தனிமைப்படுத்தும் முறைகளும் பிரச்சனைக்குரியதாக இருக்கின்றது. தனியுடமை சார்ந்த மூலதனத்தின் வரம்பற்ற இலாபவெறி உருவாக்கியுள்ள எல்லைகளும், நாடுகளும் .. அது தன்னை பாதுகாத்துக் கொள்ள இனம், சாதி, மதம், நிறம் என்று கட்டமைத்துள்ள குறுகிய எந்த வரையறைகளும், வைரஸ்சுக்கு கிடையாது. இதுதான் எதார்த்தம்.

கொரோனா (கோவிட் 19) வைரஸ் மரணங்களுக்கான பொறுப்பு வைரஸ் அல்ல, மாறாக பல முகம் கொண்டது என்ற உண்மையை, நாங்கள் விளங்கிக் கொள்ள

1.கொரோனா (கோவிட் 19) தோற்றம் குறித்தும்

2.வைரஸ்சை எதிர்கொள்ளும் மருத்துவ வழிமுறைகள் குறித்தும்

3.வைரஸ் குறித்து ஏகாதிபத்திய கொள்கை எப்படி, என்ன அடிப்படையில் இருந்து அணுகியது என்பது குறித்தும்

4.வைரஸ்சை முதலில் எதிர்கொண்ட சீனா குறித்து - மேற்கத்தைய எதிர்மறை அணுகுமுறை எப்படி வீரியமாக்கியது என்பது குறித்தும்

5.தனிநபர்களின் சுயநல பாத்திரம் குறித்து

பொதுவாக இவற்றை விளங்கிக் கொண்டால், கொரோனா (கோவிட் 19) மரணங்களுக்கான பொறுப்பை இனம் காணமுடியும். மரணங்கள் இயற்கையல்ல, மாறாக மூலதனத்தினால் நடத்தப்படும் கொலைகள்.

கொரோனா (கோவிட் 19) தோற்றம் குறித்து

கொரோனா (கோவிட் 19) வைரஸ் தோன்றியது இயற்கையானதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்ற கேள்விக்கான பதில் என்பது - இரண்டுமே சாத்தியப்பாடானதே.

இதில் இயற்கையாயின் இயற்கையை மனிதன் பயன்படுத்திய தருணங்களையும் - அதில் சமூகப் பொறுப்பற்ற மூலதனத்தைக் குவிக்கும் தனியுடமை வெறியையும் இனம் கண்டாக வேண்டும். சுற்றுச்சூழல், இயற்கை குறித்த தனியுடமைக் கண்ணோட்டம் - இதற்கு பொறுப்பாக இருக்கின்றதா என்பதை, நாம் அறிந்தாக வேண்டும். இயற்கையை மூலதனம் அழித்து வருவதால், உயிர் வாழ்தல் குறித்த பிரச்சனையுடன் இணைத்து - இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியங்கள் தங்கள் உலக மேலாதிக்க நோக்கத்திற்காக தயாரித்து வைத்துள்ள உயிரியல் ஆயுதங்களில் ஒன்றுதான் - இந்த கொரோனா வைரஸ்சாக இருந்தால், இதற்கான முழுப் பொறுப்பும் மூலதன வெறிபிடித்த ஏகாதிபத்திய மேலாதிக்க கொள்கைகளின் விளைவாகவே இதை இனம் கண்டாக வேண்டும். தனியுடமை வெறிபிடித்த சிந்தனை முறையின் விளைவாக, இனம் கண்டாக வேணடும்.

இப்படி கொரோனா (கோவிட் 19) வைரஸ் தோற்றம் குறித்தும், எதிர்காலத்தில் உருவாகும் வைரஸ்சுகள் குறித்தும் மனிதன் போதியளவுக்கு சுய அறிவு பெற்றவனான இருக்க வேண்டும். அதாவது மூலதனத்தை இலக்காகக் கொண்ட தனியுடமை சிந்தனைமுறை குறித்து - எமது கண்ணோட்டத்தை மாற்றியாக வேண்டும்.

முடமாகிவிட்ட மருத்துவம்

அரசு மருத்துவ மனைகள் மூடப்பட்டு வந்த சூழலில், மருத்துவ ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு உள்ளாகி வந்த பின்னணியில், பணமுள்ளவனுக்கு மட்டுமான மருத்துவம் - மருந்து உற்பத்தி ஏற்படுத்தியுள்ள பொதுப் பற்றாக்குறை.. அரசின் கொள்கையாகி - கொரோனா மரணங்களைத் தீர்மானிக்கின்றது.

கொரோனா வந்து தப்பிப் பிழைத்தவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு பலத்தினால் தான். இதன் பொருள் நவீன மருத்துவத்தில் கிடைக்கக் கூடிய எல்லா மருத்துவ உதவியை பெற்றல்ல. அதை வழங்கக் கூடிய தயார் நிலையில் - மருத்துவக் கொள்கைகளை எந்த நாடும் கொண்டிருக்கவில்லை.

ஒரு நாட்டின் மருத்துவக் கொள்கை என்னவென்பதை உலக வங்கி தீர்மானிக்கின்றது. பணகாரருக்காகவே திட்டம் போடும் ஒரு வங்கியின் நலன்களே, உலக மருத்துவக் கொள்கையாக இருக்கின்றது. மருத்துவத்தை பணம் சம்பாதிக்கும் தொழிலாக்கி – பணம் இருந்தால் தான் மருத்துவம் என்ற கொள்கை, உலகளாவிய மருத்துவக் கொள்கையானது.

சேவை மனப்பாங்கு கொண்ட சமூகத்தன்மை வாய்ந்த மருத்துவம் என்ற பொது சமூக அறம் அழிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மருத்துவத்தை வழங்குவது அரசுகளின் கடமையல்ல, அது பணம் சம்பாதிக்கும் தொழில். இதுதான் நவீPன மருத்துவமாக - மூலதனத்தின் லாப வெறியாகவுள்ள நவீன மருத்துவம். இதனால் கொரோனா வைரஸ்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதுதான் இன்றைய அவலம்.

வைரஸ் குறித்து ஏகாதிபத்திய கொள்கை

மிகத் தெளிவாகவே அரசுகளின் முடிவுகள் எல்லாம், மக்கள் நலனிலிருந்து எடுக்கப்படவில்லை. மாறாக மூலதனத்தின் நலனில் இருந்துதான் முடிவுகள் எடுக்கப்பட்டது. இதுவே வைரஸ் பரவுவதற்கும், மரணங்கள் ஏற்படவும் காரணமாகியது. காலம் தாழ்த்திய தனிமைப்படுத்தும் முடிவுகள், வேறு தீர்வு இன்றி எடுக்கப்பட்டு வருகின்றது. இனியும் தனிமைப்படுத்துவதை எடுக்கத் தவறினால், எதிர்மறையான மீளமுடியாத பொருளாதார பின்விளைவுகளையே உருவாக்கிவிடும். அதாவது தனிமைப்படுத்துவதை செய்யாத நாடுகள் பிற நாடுகளால் தனிமைப்படுத்தப்படும் என்ற பொருளாதார அச்சமே - காலம் தாழ்த்தி எடுக்கும் முடிவிலும் தீர்மானித்திருக்கின்றது.


வைரஸ் முதலில் எதிர்கொண்ட சீனா குறித்து

கொரோனா (கோவிட் 19) வைரஸ்சை முதலில் எதிர்கொண்ட சீனா குறித்து மேற்கத்தைய அணுகுமுறையே, நோய் பரவவும் - மரணங்கள் நிகழவும் காரணமாகியது. சீனாவில் நோய்க்கு எதிரான தீவிர நடவடிக்கை மீது, அது உண்மையல்ல என்ற போலிப் பிம்பத்தையே உருவாக்கி தங்களை நோயாளியாக்கினர்.

மேற்கு ஏகாதிபத்திய அளவுகோலான "ஜனநாயகத்தை" சீனா கொண்டிருக்காததால், சீனாவின் தரவுகள் நம்பகத்தன்மையற்ற கற்பனையாகவும், நோயாகவும் காட்டி வைரஸ்சை ஏகாதிபத்தியம் உலகமயமாக்கியது.

சீனாவின் தீவிர நடவடிக்கை ஏற்படுத்திய பொருளாதார முடக்கத்தை எப்படி தங்கள் லாபம் பார்க்கலாம் என்ற அணுகினார்களே ஓழிய, வைரஸ் பரவுவதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தனிநபர்களின் சுயநல பாத்திரம் குறித்து

1.சுயநலம் பிடித்த தனியுடமைச் சிந்தனைமுறையானது, நோய் காவியாக மாறியது. நோய் இருந்த பிரதேசத்தில் இருந்து தப்பியோடுதல், நோயை மறைத்து தப்பியோடுதல்.. நோயை உலகெங்கும் பரப்பிச் சென்ற வக்கிரமாக மாறியது. சமூகப் பொறுப்பற்ற சுயநலமாக வெளிப்பட்டது. இது நோய் பரவவும், மரணங்கள் நிகழவும் காரணமாகி இருக்கின்றது. இதை கேள்விக்குள்ளாக்க முடியாத வண்ணம், தனியுடமை சிந்தனைமுறை மறுதளித்தது.

2.ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நோய் குறித்து பரப்பிய வதந்திகளும் - போலி மருத்துவங்களும் - பெருமை பேசும் குறுகிய இன-மத-சாதி வக்கிரங்களும், கொரோனா (கோவிட் 19) வைரஸ்சை எதிர்கொள்ளும் அறிவியல் ஆற்றலை அழித்து, நோய் பரவவும் மரணங்கள் நிகழவும் காரணமாகியுள்ளது.

முடிவாக

தனியுடமை சமூக அமைப்பிலான சிந்தனைகளும், கொள்கைகளும், நடைமுறைகளும் கொரோனா (கோவிட் 19) வைரஸ் பரவவும், மக்களை கொல்லவும் காரணமாகியுள்ளது. மனிதனின் கூட்டான சமூகத்தன்மை வாய்ந்த சமூக ஆற்றலானது, வைரஸ்சை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் இருக்கவில்லை. மாறாக தனியுடமைத் தன்மை கொண்டதாக - சுயநலத்தன்மை வாய்ந்த அணுகுமுறையாக, அதுவே ஏகாதிபத்திய தன்மை வாய்ந்த மூலதனக் கொள்கையாக மாறி, உலகளவில் நோய் பரவவும் - மரணங்கள் நிகழ்வதற்கான அடிப்படையாகியுள்ளது.