16
Sun, Jun

2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அறிவியலற்ற புரட்டுகள் இனம், மதம், சாதி, நிறத்தை .. முன்வைத்து கட்டமைக்கப்படும் நிலையில், தனிப்பட்ட நம்பிக்கையை அறிவாக உளறும் வக்கிரங்களும், உள்நோக்குடன் தங்கள் உணவை முன்னிறுத்தி கட்டமைக்கும் புரட்டுத்தனங்களும், கொரோனாவை மிஞ்சும் வைரஸ்சாக உலாவி வருகின்றது.

இதன் பின்னால் உணவுகள், போதைப் பொருட்கள், வெப்பநிலை, மதம் … என்று எண்ணற்ற வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைத்துள்ள போலித்தனத்தின் பின்னணியில் சந்தை, இனவாதம், மதவாதம், நிறவாதம்.. தொடங்கி தனிப்பட்ட மதவாதிகள் கொழுத்து கும்பியடிப்பது வரை நடந்தேறுகின்றது.

இதன் எதிர்மறையில் “அறிவியல்பூர்வமான” பொய்களை அரசுகளும், ஊடகங்களும் முன்வைக்கின்றது. அரசைப் பாதுகாக்க, சந்தையை தக்கவைக்க, மருத்துவக் குறைபாட்டை மூடிமறைக்க.. அறிவையே திரிப்பது நடந்தேறுகின்றது.

அறிவியல் என்பது என்ன? ஆராயும் பொருளிள் இயற்கையை, இயற்கையாக அணுகுவதும் - அதை விளக்குவதும் தான்;. வர்க்கம், சாதி, இனம், நாடு.. சார்ந்து அணுகுவது அறிவல்ல. ஒவ்வொரு நாடும் கோவிட் 19 வைரசை அணுகுகின்ற வேறுபட்ட அணுகுமுறைகளும், அளவுகோல்களும், அறிவியல் திரிபில் இருந்தே வேறுபடுகின்றது. கொரோனா வைரஸ் உலகெங்கும் ஒரேவிதமான நிபந்தனைகளில் தகவமைத்தே பரவுகின்றது என்பதே உண்மை, இயற்கை விதிக்கு உட்பட்டு வைரஸ் இயங்க, இதை வேறுபட்ட விதமாக அணுகும் முறையும் - அதை விளக்கும் வடிவமும் அறிவியல்ரீதியாக திரிபுபட்டது. இங்கு அறிவியலும் திரிக்கப்படுகின்றது என்பதே பொருள்.

உண்மையில் என்ன நடக்கின்றது எனில் சமூக பொருளாதார கட்டமைப்பை தீர்மானிக்கின்ற சந்தைப் பொருளாதார அடிப்படையில், அறிவியலைத் திரிப்பது நடக்கின்றது. மூடிமறைத்து அரைகுறையாக, அரசின் தேவைக்கு ஏற்ப விளக்குவதும் - நடைமுறைப்படுத்துவதும் நடக்கின்றது. இயற்கையில் மக்கள் கூட்டம் என்ற அடிப்படையில் இருந்து, விளக்குவது நடைமுறைப்படுத்துவதும் கிடையாது. இது தான் நாடுகளுக்கு இடையிலான வேறுபட்ட அணுகுமுறைகள்.

கொரோனா குறித்து ஆறு வருடங்கள் (2006-2012) சிறப்புப் பட்டம் பெற்ற பவித்ரா, சண் தொலைக்காட்சியில் முன்வைத்த விடயங்களில் - சமகால கோவிட் 19 குறித்து பல தவறான கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் இந்த கோவிட் 19 குறித்;து கூறுகின்ற தரவுகள் - ஏற்கனவே மேற்கு ஏகாதிபத்தியங்கள் முரண்பட்ட அணுகுமுறையுடன் முன்வைத்த - அறிவியல் புரட்டுக்களை அடிப்படையாகக் கொண்டது.

கொரோனா வைரஸ் வரலாறு குறித்து, பட்டப்படிப்பு அடிப்படையில் உள்ளடங்கிய விடயங்கள் அறிவுபூர்வமானவைதான். ஆனால் கோவிட் 19 வைரஸ் குறித்து முன்வைத்த கருத்துக்கள் தவறானது. இது போன்று பலரும் இதை முன்வைப்பதால், பவித்ராவின் கருத்தை பலரும் காவிச் செல்வதால், விரிவாக சிலவற்றை ஆராய்வோம்.

காற்றில் பரவும், காற்றுள்ள இடத்தில் வைரஸ் செயற்படும் என்ற கூற்று மிகத் தவறானது. அவர் வைரஸ் குறித்து பட்டம் பெற்றவர், காற்று மூலம் பரவும் விதியைக் கூட விளங்கிக் கொள்ளவில்லை.

காற்று மூலம் பரவுதல் என்பது வைரஸ் தானாகவே காற்றின் மூலம் தன்னை தகவமைத்துக் கொண்டு பரவுதல் அல்லது காற்று வைரஸ்சை காவிச் செல்லும் ஊடகமாக தானாகவே செயற்படுவதாக இருந்தால் மட்டும் தான், அது காற்று மூலம் பரவும் நோய்.

1.கொவிட் 19 வைரஸ் என்பது நோயுள்ள ஒருவருடன் நேரடி உறவில் தொடுதல் மற்றும் நோய் உள்ளவரின் கண்ணீர், மூக்கு நீர், எச்சில் பறக்கும் எல்லைக்குள் இருக்கும் போது தொற்றுக்கு உள்ளாகின்றார். ஆனால் இங்கு நிபந்தனை உண்டு, அதாவது நோய் தொற்றுக்கு உள்ளாகாத நபர் வைரஸ்சை, தன் வாய், மூக்கு ஊடாக உடலுக்கு கொண்டு செல்ல வேண்டும். இது தானாகவோ அல்லது புறநிலை இயற்கை கூறுகள் சார்ந்து தற்செயலாகவோ நிகழலாம்.

2.நோய் தொற்றுள்ள நபர் தொடும் பொருளில் வைரஸ் இருக்கும் போது, அதை நோய் தொற்;று அற்றவர் தொடும் போது, வைரஸ் அவரின் கைக்கு செல்லுகின்றது. இங்கு மேற்கூறியது போல் வைரஸ்சை வாய் மூக்கு மூலம் கடத்தினால் மட்டும்தான் நோய் தொற்று நிகழும்.

இந்த அடிப்படை நிபந்தனைகளின்றி காற்று மூலம் வைரஸ் தானாக நகர்ந்து அல்லது காற்று தானாக காவி வந்து, எமது சுவாசத்துக்கு ஊடாக ஊடுருவாது. மூக்கு வாய் இரண்டுக்கும் ஒரே நிபந்தனை தான் உண்டு. இங்கு காற்றுக்கு சம்பந்தமில்லை.

காற்றின் ஈரப்பதனில் வைரஸ் தானாக மிதக்கும் வண்ணம் தகவமைந்தல்ல. நீர், ஈரப்பதன் மூலம் கோவிட் 19 பரவாது. நோய் உள்ளவர் தும்மும் போது, நீர் துளியின் (நுண் திவாலையின்) அடர்த்திக்கு ஏற்ப காற்றில் மிதக்கும். அது சுவாசம் மூலம் உட்செல்லலாம்.

பவித்ரா கூறுகின்றார் பொருட்களின் மேற்பரப்பில் ஒரு சில விநாடிக்கு மேல் “உயிர்” வாழாது என, அதாவது பொருள் காய்ந்தவுடன் வைரஸ் இறந்துவிடும் என்ற வாதம். ஈரப் பரப்பில் வைரஸ் வாழும் என்று கூறுவது நம்பகத்தன்மை கொண்ட தரவல்ல. அப்படியானால் ஈரலிப்புத்தன்மை உள்ளதில் பல நாட்கள், பல வருடங்கள் நீடிக்கும் என்ற முடிவுக்கு வரவேண்டி வரும்.

வைரஸ் பொருட்களின் வேறுபட்ட தன்மைக்கு ஏற்ப ஒரு சில நாட்கள் “உயிர்” வாழும். உதாரணமாக பணத்தாளில் “உயிர்” வாழக்கூடியது. பவித்ரா பேட்டியில் பொதுப் போக்குவரத்தில் தொட்ட இடங்கள் மூலம் பரவும் என்பதும், தொலைபேசி குறித்து கூறிய கூற்றுக்கு முரணானது. பொருளில் வைரஸ் வாழும் என்பதும். வைரஸ்சைக் கட்டுப்படுத்திய சீனா, தென்கொரிய.. போன்ற சில நாடுகளின் அறிவு தான், பொது இடங்களில் தொடர்ச்சியாக வைரஸ் நீக்கி பயன்படுத்தி அதனை அழிப்பதைச் செய்கின்றனர். மேற்கில் சீனாவின் அனுபவத்தை அமுல் செய்யாத அறிவியல் கொள்கை, இது செலவான உபகரணங்கள் மற்றும் மருந்துக்கள் இல்லாமையை மூடிமறைக்க - தவறான அறிவியல் கொள்கை முன்வைக்கப்படுகின்றது. இதைத்தான் பவித்ரா மீள முன்வைக்கின்றார்.

மரணம் குறித்த அச்சம் அவசியமற்றது. அது போலியானது, தகவல் உலகின் கற்பனை என்பது, மக்களின் அரசுகளுக்கு எதிரான கோபத்தை தணிப்பதற்கான அறிவியல் புரட்டு. சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் உள் நோக்கம் கொண்ட வர்க்க, இன, மத, சாதி வக்கிரங்களைக் கடந்து, மரணம் என்பது அச்சமூட்டும் வண்ணம் எதார்த்தமானது.

எனக்கோ, என்னைச் சுற்றிய நபர்களுக்கோ மரணங்கள் நிகழ்ந்;த வண்ணம் உள்ளது. இதை நாம் போலியான அச்சமாக, எப்படி எந்த மனநிலையில் கட்டமைக்கவும், காட்டவும் முடியும்? எனக்கில்லை என்ற மனநிலை, அவை வயது முதிர்ந்தவருக்கோ, நோய் வாய்ப்பட்டவருக்கோ என்ற பொது மனநிலை – அடிப்படையில் சுயநலம் பிடித்த வக்கிரத்தாலானது.

யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற மருத்துவக் குறிப்பைக் கடந்து, அவர்கள் இறப்பதையிட்டு அக்கறையற்ற – அச்சப்பட ஒன்றுமில்லை என்று கூறுகின்ற வக்கிரம் முதலாளித்துவச் சிந்தனைமுறை. கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக போராடும் உடல் ஆரோக்கியமான மருத்துவ ஊழியர்கள் பலர், தொடர்ந்து உயிர் இழந்த வண்ணம் உள்ளனர். இது எதைக் காட்டுகின்றது? அச்சப்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவாக உணர்த்துகின்றது.

உழைப்பில் ஈடுபட முடியாத மனிதர்கள். இந்த பூமியில் வாழ்ந்தால் என்ன வாழாவிட்டால் என்ன, என்ற மனவக்கிரம், அச்சத்தில் இருந்து மீளக் கோருகின்றது. அனைத்தும் உயிர்தான். உயிர் வாழத் தான் போராடுகின்றனர். இந்த உயிரியல் விதி யாருக்கும் விதிவிலக்கல்ல. உடல் ஆரோக்கியமானவனாக நம்பும் கூட்டம், மரணிக்கின்ற மனிதனையிட்டு அலட்டிக் கொள்ளாதே என்பதை, சமூகத்தின் பொது உளவியலாக கட்டமைக்க முதலாளிகள் முனைகின்றனர்.

மரணத்தையிட்டு அலட்டிக்கொள்ளாதே என்பதை அறிவியல்ரீதியாக நிறுவ, போலிப் புள்ளி விபரங்களை முன்வைக்கின்றனர். ஆரம்ப புள்ளிவிபரத் தரவுகள், முதலில் நோய் தோன்றிய சீனாவை மையப்படுத்தியது. சீனாவின் தரவுகள் என்பது வைரஸ் தொற்றை முதலில் அலட்சியப்படுத்திய பின்னணியில், பரவல் தீவிரமான சூழலில் தீவிரமாக அதை கட்டுப்படுத்திய நாடு. ஒரு வாரத்தில் 10000 பேரை பராமரிக்கக் கூடிய மருத்துவமனையைக் கட்டி, போதியளவு மருத்துவ வசதிகளை கொண்டு மரண வீதத்தையும், பரவல் வீதத்தையும் குறைத்த பின்னணியில், வைரஸ்சை முற்றாக கட்டுப்படுத்திய நாட்டின் தரவு. வேறு எந்த நாடும் இன்று வரை, அந்த முறையை பின்பற்றவில்லை.

இந்த நிலையில் சீனாப் புள்ளிவிபரத் தரவுகள், நோய்த்தொற்றை அடிப்படையாகக் கொண்டது. இப்படி உண்மைகள் இருக்க, நோய்த்தொற்று முழு மக்களுக்கும் ஏற்பட்டால், அது தரும் புள்ளிவிபரம் என்னவாக இருக்கும்? கற்பனை பண்ணிப் பாருங்கள். ஆரோக்கியமானவனுக்கு நோய்த்தொற்று ஏற்படாதா!?

திரிக்கப்பட்ட புள்ளிவிபரத்தைக் கொண்டு, மரண விகிதத்தைக் காட்டி பயங்கொள்ளத் தேவையில்லை என்று கூறுவது அபத்தம்;. அனைவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டால், அதன் விளைவு, மொத்த உலக மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் என்ற தரவு வரும். இது பல கோடிகளைத் தாண்டும்;. பயம் கொள்ளாதே என்று கூறுகின்ற பின்னணியில், இதைத் தடுக்கத் தவறிய உலக முதலாளித்துவம் குற்றவாளியாக நிற்பதை மூடிமறைக்க முனைகின்றனர் என்பதே உண்மை.

முழு மக்களுக்கும் தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? மருத்துவரீதியாக என்ன நடக்கும் என்ற எதார்த்தத்தை மக்கள் மத்தியில் முன்வைத்து, ஒருங்கிணைந்து மக்கள் செயற்திட்டத்தை முன்னெடுக்க மறுக்கும் முதலாளித்துவ வக்கிரமே - போலியான அறிவியலாக மாறி வக்கரிக்கின்றது.

இதை விளங்கிக் கொள்ள மக்கள் தொகையில் மிகச் சிறிய தொகை வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், மருத்துவத்தை முழுமையாக கொடுக்க வக்கற்று முதலாளித்துவம் திணறுகின்ற காட்சி இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின்.. எங்குமான மனித அவலமாக மாறி இருக்கின்றது. கியூபா, சீன வைத்தியர்கள் பெருமளவில் வைத்தியம் செய்ய வருகின்ற அளவுக்கு, முதலாளித்துவ மருத்துவக் கொள்கை கந்தலாகி அம்மணமாக நிற்கின்றது. இதை மூடிமறைக்க அறிவியல் திரிபுகள்.