Sun09252022

Last updateSun, 19 Apr 2020 8am

நாசிகளும் - ஐரோப்பாவும், நோர்வே பயங்கரவாத தாக்குதற்கொலைகள்.. (2)

அவர்கள் ஐரோப்பா ஆக்கிரமிக்கப்படுகிறது என்றார்கள். ஒவ்வொரு விவாதங்களிலும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரங்களிலும் ஒவ்வொரு கலந்துரையாடல்களிலும், நாளாந்த செய்தி ஊடகங்களிலும் அவர்கள் தான், அவனிடம் கூறினார்கள் 'நோர்வே ஆக்கிரமிக்கப்படுகின்றது.., ஐரோப்பா இஸ்லாம் மயமாகின்றது பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், பாடசாலைகள், வேலைத்தளங்கள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள் எல்லாவற்றிலும் அவர்கள் வாய்கிழிய ஆவேசமாக கத்தினார்கள். நோர்வே இஸ்லாம் மயமாகிவிடும். நோர்வேஜிய கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கு முடிவு கட்டப்பட்டுவிடும். எழுமின் விழிமின் என்றார்கள். அறைகூவி அழைத்தார்கள். இடதுசாரிக் கட்சிகள் தான், அவர்களுடைய குடிவரவு அகதிக் கொள்கைகள் தான் நாட்டினை நாசப்படுத்துகிறது என்றார்கள். குற்றச் செயல்கள் யாவுமே ஊற்றெடுப்பது இந்த வேற்று நிறங்கொண்டவர்களால் தான் என்றார்கள்.

அவர்கள் இலக்குகளைச் சொன்னார்கள். அவன் இலக்கு வைத்தான். அவர்களுடைய கட்சியின் கடும் ஊழியனாக அவன் சில காலம் பணியாற்றினான். ஆனால்.., அல்லும்பகலும் அவனுக்கு இவர்களே தத்துவம் ஓதினார்கள். குற்றவாளியாக அவன் இன்று கைது செய்யப்பட்டிருக்கின்றான். அவன் தானொரு குற்றவாளி என ஒப்புக் கொள்ளவில்லை. அவன் யாருடைய கொள்கைகளுக்காக உந்தப்பட்டு இவற்றைச் செய்தானோ, அவர்கள் பாராளுமன்றத்திலும், அரசியல் கட்சிகளிலும், அன்றாட வாழ்க்கையில் சந்திக்கின்ற நிறவெறி ஊட்டப்பட்ட - மதவெறி ஊட்டப்பட்ட மனிதர்களாவும், சமூகத்தில் பரவலாகி.., அதே கருத்துக்களையே பவுத்திரப்படுத்துபவர்களாக.., அதன் காவலர்களாக இருக்கின்றார்கள். இவர்களால் தான் இவன் ஒரு ஏவலாளனாக, கொலைவெறியுடன் வெளிவந்தான். ஆனால் தாங்கள் கக்கிய நிறவெறி, இஸ்லாமிய பயங்கரவாதப் பூதம் எனும் பிரச்சாரத்தின் உற்பத்தி இப்படித்தானிருக்கும் என்பது அவர்களுக்குப் புரியாததல்ல. உள்ளீடான அவர்களின் உணர்ச்சிகளின் செயல்வடிவம் தான் இந்தப் பயங்கரவாதம் என்பதை அவர்கள் நரித்தனமான புன்னகையோடு, மிக இலகுவாக இதனைக் கடந்து செல்கிறார்கள். எய்தோர் வெளியே இருக்க, எய்த அம்பு தான் அன்டர்ஸ் பிரைவிக். அவன் ஒரு கருத்தின் திரட்சி. அவன் தன்னிச்சையான தனிநபரல்ல.


ஐரோப்பிய நாடுகளில், நிறவெறி மற்றும் வேற்றுக் கலாச்சாரப் பண்பாடு பற்றிய அச்சங்களை விதைத்து, அதன் மூலம் தமது நலன்களை அறுவடை செய்யும் கட்சிகளின் அடிப்படைகளிலிருந்து வேறுபட்டதல்ல அன்டெர்ஸ் பிரைவிக்கின் பிரகடனம். அவன் தன்னுடைய கருத்துக்களை தானே பகிரங்கப்படுத்தி, தனக்கான அடித் தளத்தை நோர்வேஜிய சமூகத்தில் தேடத் தேவையில்லாத வகையில், சமூகத்தில் நிறவாதத்தை உமிழும் கட்சிகள் அவற்றை தங்களது பிரச்சாரங்கள் மூலம் வளர்த்தெடுக்கின்றன. அன்டர்ஸ் அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்யவில்லை. அவர்களே இவனைப் போன்றவர்களுக்காகப் பிரச்சாரம் செய்தார்கள்.., செய்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சாரத்தையே, இவன் தனது பிரகடனமாகத் தொகுத்தளித்தான் அவ்வளவே.

நோர்வேயிய வரலாற்றில், அரசியல் வன்முறைத் தாக்குதல்கள் அனைத்தும் நாசிகளால் மேற்கொள்ளப்பட்டவை என்ற நிதர்சனத்தை மறைத்து, ஜனநாயக நடைமுறைகளுக்கு அச்சுறுத்தல் இஸ்லாமியர்களே, என்றவாறான விம்பத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துவதில் ஆட்சியிலிருந்த இடதுசாரிக் கட்சிகள் என்று சொல்லப்படுவர்கள் கூட, நிறவாதக் கட்சிகளின் பிரச்சாரத்துக்கு சாய்ந்து போய் குடைபிடித்தார்கள்.


ஆப்கானிஸ்தானுக்கு நோர்வேஜிய படையை அனுப்பி 'பயங்கரவாதத்தை வெற்றிகொள்ளும் போர் அது" என அதனை வரையறுத்தார்கள். அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பின் போதும், போரின் போதும் தளபாடம் மற்றும் செய்மதி உளவுத் தகவல்களைப் பரிமாறி, அந்தப் போரிலும் நயவஞ்சகமாகப் பங்கேற்றுக் கொண்டார்கள். அன்டெர்ஸ் பிரைவிக் ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாதி. அவனது பயங்கரவாத தாக்குதல் கிறிஸ்தவ மதத்தின் மீதோ அல்லது மத நம்பிக்கையாளர் மீதோ பொதுமைப் படுத்தப்படாத திசையில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

ஆனால் இந்தத் தாக்குதல், இஸ்லாமிய தீவிரவாதி ஒருவனால் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் மட்டுமே இருந்திருந்தால் கூட, இன்றைய பெரும்பான்மைப் பிரச்சார வளங்களும், ஊடகங்களும் உலகளாவிய அளவில் இஸ்லாமிய மதத்தினர் மீதான வெறுப்பைக் கக்க முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள். மூச்சேவிட மறந்து, பீரங்கி வேகத்துடன் அடித்துப் பதறி ஆவேசம் கொண்டு, இஸ்லாம் மதத்தினர் மீது பாகுபாடின்றி வெறுப்பைக் கக்கியிருப்பார்கள்.


அந்தப் பிரச்சாரக் கதறலும் அலசலும் ஆய்வுகளும் ஒரு போருக்குக் கைகாட்டியிருக்கும். அதன் வீச்சோ, அந்தப் பயங்கரவாதியை வேட்டையாட வேண்டும் என்ற கூக்குரலோடு, ஆப்கானிஸ்தான் போன்றதொரு போரை உலகில் இன்னுமொரு இஸ்லாமிய நாட்டில் உருவாக்கியிருக்கும். அதற்கு உலகநாடுகள் அனைத்தும் வாய்பேசாது தமக்கு அடிபணியவேண்டும் என்பது அவர்களது கட்டளையாய் இருந்திருக்கும். அமெரிக்க, ஐரோப்பிய நேட்டோப் படைகளின் கூட்டுநடவடிக்கையில் குண்டுகள் பொழியப்பட்டிருக்கும்.


பயங்கரவாதத்திற்கு பதில் நடவடிக்கையாக, மேலும் திறந்த சமூகமும் மேலும் பரந்த ஜனநாயகமுமே பதில் என தொழிற் கட்சிப் பிரதமர் சொல்லியிருக்க முடியாதிருந்திருக்கும். ஆனால் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் மீது, முழு இஸ்லாம் மதத்தினர் மீதும் குற்றம் வீழ்ந்தது. மேற்குலகம் தன்மீது இஸ்லாமியர்கள் தொடுத்த போராக அதனைக் கட்டமைத்து, அதில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என அணிதிரண்டது. போர்களை அதன் பெயரில் நடாத்தி, நாடுகளையே ஆக்கிரமித்தது. தாக்குதல் நடந்ததாக அறியப்பட்ட மறுகணங்களில், எல்லோர் மனதிலும் இது ஒரு இஸ்லாமியனின் பயங்கரவாதத் தாக்குதல் என தீர்ப்பெழுதும் அளவுக்கு அவ்வாறாகவே அவர்களை தயார்படுத்தியிருந்தன, ஊடகங்களும் - பிரச்சாரங்களும். ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் உள்ளே இருப்பது ஒரு பயங்கரவாதியே என்று, ஊடுருவும் பார்வைகளோடு, சந்தேகங்களோடு பார்க்குமாறு பயிற்றுவிக்கப்பட்டவர்கள் வெள்ளையர்கள் மட்டுமல்ல, மாற்று மதத்தவர்கள், கறுப்பின ஆசிய மக்களும் கூடவேதான்.., என்பதே இவர்களது பயங்கரவாதிகள் பற்றிய பிரச்சாரத்தின் வெற்றி.


அமெரிக்கா, ஈராக்கில் செய்த கொத்துக்கொத்தான கொலைகள் பயங்கரவாதமல்ல. ஆப்கானிஸ்தானில் நோர்வேஜியப் படைகள் இணைந்து செய்வது பயங்கரவாதமல்ல. உண்மையான பயங்கரவாதத்தை உற்பத்தி செய்தவர்கள் அவர்களாயிருக்கிறபோது, அவர்கள் தங்கள் மீதான தாக்குதலை மட்டுமே பயங்கரவாதமாக வரையறுத்துப் பிரச்சாரமாக்கிக் கொண்டதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.


அன்டர்ஸ் குறிவைத்த தொழிற்கட்சி அன்டர்ஸ் குற்றம் சுமத்தும் தொழிற்கட்சியே, ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பி பயங்கரவாதத்துக்கு எதிராக போர் புரிகிறது. குண்டுமழையில் அப்பாவி மக்களின் பிணங்களைக்  குவிக்கின்றது. அதாவது அன்டெர்ஸ் விரும்பிய போரை தொழிற்கட்சி செய்து கொண்டிருக்கின்றது. அன்டெஸ்சை உருவாக்கிய அரசியலில், வெளிநாட்டவர் சம்பந்தமான கொள்கையென அவர்கள் சுட்டிக் காட்டுவதை, நடைமுறையாக்குமாறு கோருவதை உள்ளார ஏற்று, சாக்குப் போக்கூடாக நிறைவேற்றும் நிலைக்கே தொழிற்கட்சி இன்று சென்றிருக்கின்றது. அகதிகளின் வரவைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இறுக்கமாக்கியபோது, தொழிற்கட்சியினரின் தர்க்கம், இந்த நிறவாதக் கட்சிகளின் தர்க்கங்களை உள்வாங்கியே வாதிக்கப்பட்டது. நோர்வேஜிய சமுதாயத்தவர்களினுடைய தேசிய கலாச்சார பண்பாட்டுக் கூறுகள், இஸ்லாம் சமூகத்தினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்ற நோர்வேஜிய நிறவாத முன்னேற்றக் கட்சியின் பரப்புரைகளும், பிரச்சாரங்களும் குறிப்பிட்ட சில நிறவாதத்துக்கு எதிரான அமைப்புக்களையும் நபர்களையும் தவிர, வேறு பிரதான கட்சிகளால் எதிர்கொண்டு வாதிடப்படாமல் விடப்படுகின்றது. ஆனால், மாறாக அப்படியான கருத்துக்களுக்கு ஆதரவான வகையில் இப்பிரதான கட்சிகளின் நபர்கள் கருத்துரைத்திருப்பது, அன்டர்ஸ் போன்றவர்களின் கருத்துகளுக்கு எங்கெல்லாம் ஆதரவுண்டு என்பதை வெளிப்படுத்துகின்றது.


தொழிற்கட்சியின் நபர் மாட்டின் கூல்பர்க் மற்றும் நடுநிலைக் கட்சியின் ஊலா போர்த்தென் என்போர்கள், இஸ்லாம் பற்றி எச்சரிக்கை செய்த போது.., 'ஜனநாயகம், சுதந்திரஉணர்வு, சமத்துவப்போக்கு போன்றன நோர்வேயில் இயல்பில் இருக்கின்றதான பிரமையில் வாழ்வது ஆபத்தானது. வேற்றுக் கலாச்சாரங்கள் இவற்றுக்கு அச்சுறுத்தலாக வருகின்றன எனக் கூறியதானது, அவர்கள் பல்கலாச்சாரத்துக்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் அமைந்தது என்றல்லாமல் வேறு வகையில் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்?


இவர்களைப் போலவே, அரசியல் உரையாடல்கள் நடைபெறுகிறபோது, இருபாலினருக்குமான சமத்துவம், தனிநபர் சுதந்திரம் என்றவற்றை வலிந்து இழுத்துவந்து, இஸ்லாம் அவைகளை அச்சுறுத்துகிறது என்று அமுக்கிச் சொல்லும் அநேக அரசியல் கட்சியின் கருத்தாடல்கள் அமைந்துள்ளது. ஆனால், அதேவேளை ஒரு தனி மனிதனுக்குரிய பிரத்தியேக உரிமைகளை பறிக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர்கள் இருப்பார்கள். இதற்கு உதாரணம் தொழிற்கட்சியின் ஆறில்ட் ஸ்தொக்கான் கிறான்ட மற்றும் இடது சோசலிசக்கட்சி (எரிக் சூல்கெய்ம் இனுடைய கட்சி) ஹைக்கி கூல்மோஸ் போன்றோர், இருபால் சமத்துவம் என்ற பெயரில், இஸ்லாமியப் பெண்கள் அணியும் தலைக் கவசத்துக்கு தடைவிதிக்கும் பிரமாணத்துக்கு ஆதரவாக சென்றனர்.


தொழிற்கட்சிக்கு எதிராகவே அன்டெர்ஸ் தனது தாக்குதலை தொடுத்திருந்தான். அவனுக்கு பலம் காற்றிலிருந்து கிடைக்கவில்லை. அவனது மனவுறுதி தன்னைப் போன்ற சித்தங்கொண்டவர்கள் சமூகத்தில் நடமாடுகிறார்கள் என்ற துணிவில் இருந்தே கிடைத்திருக்கின்றது. இது கழிசடை சீமானின் நாம் தமிழர் இயக்கம், அப்பாவிச் சிங்கள மக்கள் மேல் நடத்திய தாக்குதலுக்கு ஒப்பானது.


தாக்குதல் செய்தி பரவிய சிறுகணத்தில், எதிர்ப்பட்ட முஸ்லீம்களைத் வழிமறித்துத் தாக்கினார்கள். வன்மமான குறுஞ்செய்திகளை வெளிநாட்டவர்களுக்கு அனுப்பினார்கள். முஸ்லீம்களை சுட்டுத் தொலையுங்கள் என பகிரங்கமாகவே கூறினார்கள். இஸ்லாம் மதத்தினரோ.., தங்களை இலக்குவைத்து, மென்மேலும் தாக்குதல்கள் பரவலாகலாம் என அச்சத்தில் உறைந்து போனார்கள்.


ஆனால் பயங்கரவாதம் புரிந்தவன் அவர்களில் ஒருவனாக இருந்ததை அறிந்தபோது, தாக்குதலில் ஈடுபட்ட இந்நபர்கள் திகைப்படைந்திருக்க முடியாது. தங்களின் விம்பமே அன்டர்ஸ் என அவர்கள் கருதியிருக்கக் கூடுமோ என்னமோ?
நாசிகளின் தாக்குதலில் குறிவைக்கப்பட்டவர்கள், இன்று தொழிற்கட்சியின் முக்கியஸ்தர்களும் இளைஞர் அணியும் தான். தாக்குதலுக்கான இலக்காக அவர்கள் மீதுள்ள குற்றம் யாதெனில், அவர்கள் பல்கலாச்சாரத்தை ஆதரித்து வளர்க்கும் மார்க்சிய வழிகளை ஆதரிப்பவர்கள் என்பதாகும். பொதுவாக நாசிகள் நிறவெறித் தாக்குதல்களை செய்தபோதும் அவர்களது பிரதான குறி, மார்க்சியர்கள் அல்லது மார்க்சிய அமைப்புகள் மீதானதாகும்.


1977ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொரம்சோ நகரில் புத்தக நிலையம் நாசிகளால் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு பெத்தர் கிறிஸ்தியான் என்பவனால், மே தினத்தில் முன்னணியின் மீது குண்டு வீசப்பட்டது. 1985ஆம் ஆண்டு தேசிய மக்கள் கட்சி என்ற நாசி அமைப்பொன்றின் பெயரில், அகமதியா முஸ்லீம்களின் பள்ளிவாசல் குண்டுவைத்துத் தகர்த்து அழிக்கப்பட்டது.1986ஆம் ஆண்டு ஊலகுறூக்ஸ்தா என்ற நிறவெறியன், ஒஸ்லோவிலிருந்த வெளிநாட்டவர்களுக்கான காரியாலயத்துக்கு குண்டுவைத்து அதனை தகர்த்தான். 1989ஆம் ஆண்டு ஆர்ண மிர்டால் என்பவன், அகதிகளைத் தங்கவைக்கும் இடத்துக்கு குண்டுவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டான். 1991ஆம் ஆண்டு யான் கூல்த என்பவன், வெள்ளை ஆரிய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், இருவேறு நாசிகளுக்கு எதிரான அமைப்புகளின் கட்டடங்களுக்கு குண்டு வைக்கும் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டான். 2001ஆம் ஆண்டு பெஞ்சமின் ஹர்மான்சன் என்ற கறுப்பின இளைஞன், கொலைவெறி பிடித்த நாசிகளால் துரத்தப்பட்டு கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டான். இவ்வாறான நாசிகளின் தாக்குதல்கள் நோர்வேயில் நடந்தேறியுள்ளன.


இந்தத் தாக்குதல்களின் வரிசையில் அன்டெர்ஸ் நடாத்தியது அதன் தொடர்ச்சியானதும் பலமடங்கு விஸ்தீரணமானதும் என்பது, நாசிகளைக் கொதிப்படையும் நிலைக்குத் தள்ளியிருக்கும் நிறவாத இனவாத பகிரங்க அரசியலின் விளைச்சலே ஒழிய, தனிமனிதப் பிறழ்வு நடவடிக்கை என்று தள்ளி ஒதுக்க முனைகிறார்கள் அரசியல்வாதிகளும அவர்களோடு ஒத்தோதும் ஊடகங்களும். 'இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக கைகோர்த்து, மூர்க்கமான நாடுகளுக்குள் ஊடுருவி, பேரழிவுகளையும் அவலங்களையும் விளைவித்தவர்கள், அதே வேகத்தோடும் பலத்தோடும் ஆவேசத்தோடும் விஸ்தீரணத்தோடும் அணி சேர்ந்து, நாசிகள் இவ்வளவு பயங்கரவாதிகளாக இருந்தவகையில், இந்த நாசிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்பார்களா?


அன்டர்ஸ் பிரைவிக் இன் பிரகடனத்திலிருந்து சில பகுதிகள்:


1. உருவத்தோற்றம், சொத்து, தராதரம், வசீகரம் என்னிடம் இருக்கின்றமையினால் எல்லாரையும் போலவே நானும் விரும்பியிருந்தால் இருந்திருக்க முடியும். மிகக் கொடியகவலையில் ஆழ்த்தியது எதுவெனில், என்னுடைய நாடு தீவிர மார்க்சியத்தினால் அரித்துப் பாழ்படுத்தப்படுவதாகும். இது மேலும் நாட்டின் சமுதாய விழுமியங்களையும் சமூக ஒழுங் குகளையும் , நாங்கள் மிகவுயர்வாகப் பேணிவந்த நற்பண்புகளையும், நியமங்களையும் சிதறடித்து சிதைப்பதன் மூலமாக அழிவுக்கு இட்டுச்செல்கின்றது.


2. பொருளாதார பதங்களிலிருந்து, கலாச்சார பதங்களினூடு எடுத்துவரப்படும் மார்க்சியம் கலாச்சார மார்க்சியம் என்று வருகிறது.


3. 'மரபு மார்க்சியம், கலாச்சார மார்க்சியம் என்று இந்த இரண்டு சிந்தனைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டாக வேண்டும் , ஏனெனில் சமவாய்ப்பும் சமத்துவமும் கொண்ட வர்க்கமற்ற சமுதாய உருவாக்கத்துக்காக"என்பது மனித இயற்கைக்கு மாறானது.


மரபு மார்க்சியம் பாட்டாளி வர்க்கம் தான் திறமையுடைய வர்க்கமென்கின்றது. முதலாளிய வர்க்கமும் பூர்சுவா மத்தியதர வர்க்கமும் கொடியது என்கின்றது. கலாச்சார மார்க்சியம் மறுபுறத்தில் சிறுபான்மையினர் தான் தாழ்த்தப்படுகிறார்கள் என வரையறுக்கின்றது. திறமைசாலிகளான முஸ்லீம்கள், பெண்நிலைவாதிகள், தன்னினச் சேர்க்கையாளர்கள் இதற்குள் அடக்கம். கிறிஸ்தவ ஐரோப்பிய இன ஆண்கள் கெட்டவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்" என்பது அன்டர்ஸ் பிரைவிக்கின் தொனியாகும்.


அவர்கள் 'கலாச்சார மார்க்சியர்கள்" எந்த வகைப்பட்ட எங்களது விமர்சனங்களையும் எழுத்துக்களையும் முஸ்லீம்கள், பெண்கள், ஒரினச் சேர்க்கையாளர்கள் மீதான ஒடுக்குமுறையெனவே பொருள் விளக்கம் கொள்கிறார்கள். மேற்குலக சமூகங்களை அச்சுறுத்தும் இப்போக்காய் இது இருக்கின்றது. அரசியலில் வலது இடது என்ற பாகுபாடின்றி இது இரு பக்கங்களிலும் தொற்றிக்கொண்டு விட்டது. ஊடகங்களையும் கலைத் துறைகளையும் இவர் களே கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். பாடசாலைகள் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. உயர்கல்வி நிலையங்களோ, பல்கலைக்கழகங்களோ, கல்லூரிகளோ வட கொரியாவை ஒத்தாற்போலுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கிறிஸ்தவ உயர் பாதிரிகள் பீடங்களையும் தொற்றிக் கொண்டுள்ளது, என ஆவேசப்படுகிறான், கவலைப்படுகிறான் அன்டர்ஸ் பிரைவிக்.

ஐரோப்பிய மக்களுக்கு தகவல்கள் யாவும் வரையறுத்த வழிகளில் ஒழித்து, திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. அவை சென்றடையா வண்ணம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்கிறான். இத்தனைக்கும் காரணகர்த்தாக்கள் அரசும் ஊடகங்களும் தான் என்கின்றான். 90 வீதமான ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் அங்கம் வகிக்கின்றவர்களும் ஐரோப்பிய யூனியன், பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களும், 95 வீதத்துக்கும் அதிகமான ஊடகங்கள் பத்திரிகையாளர்களும் இந்த ஐரோப்பிய பல்கலாச்சார கொள்கைகளை ஆதரித்து வளர்ப்பவர்களாய் இருக்கின்றனர். இதன் மூலம் இவர்களே இன்றைய ஐரோப்பா. இஸ்லாமியரின் காலனியாக்கத்துக்கு இவர்களே உதவுபர்களாய் இருக்கின்றனர் என அவன் கொதிக்கின்றான்.


இவர்கள் மேலே கோபப்படுகின்றான். இந்த கலாச்சார மார்க்சியர்களும், பல்கலாச்சாரவாதிகளும் ஐரோப்பிய சமூகத்தின் அடிக்கட்டுமானத்தையே தகர்த்துவிட்டதாக அவன் கலங்குகின்றான். இவர்கள் பல இலட்சக் கணக்கான முஸ்லீம்களை ஐரோப்பாவுக்குள் அழைத்து வந்தவர்கள் என்கின்றான் அவன். இந்த ஐரோப்பிய இன மக்களின் துரோகிகளுக்கு எதிராகவே தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியதென அவன் உணர்த்துகின்றான்.


அதற்கடுத்தாற் போல், முஸ்லீம்களை ஐரோப்பாவை விட்டு துரத்தியடிப்பதே பணி என்கின்றான். (புலிகள் பாணியை அவன் கற்றுக் கொண்டதில் ஆச்சரியமில்லைத் தான்) அதாவது முஸ்லீம்களின் 'காவலர்களை" முதல் கைபார்ப்பது, அடுத்து ஐரோப்பாவுக்குள் இருக்கின்ற முஸ்லீம்களை மறுகை பார்ப்பது. அதிகாரத்திலிருக்கும் தொழிற்கட்சி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சமூக ஜனநாயகவாதக்கட்சிகள் தான் அவனது இலக்கு.


அவன் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை அவன் வரையறுக்கின்றான். எதிரியை முந்திக்கொண்டு தாக்கும் போர் என அதை வரையறுக்கின்றான்.


அவனது பிரகடனத்தில் கோரிக்கைகளும் நிபந்தனைகளும்:


• முஸ்லீங்களை நாட்டுக்குள்குடியேற அனுமதிக்கும் எல்லா வகையான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
• பல்கலாச்சாரம் சார்ந்த அனைத்து அமுலாக்கங்களும், அரச நடவடிக்கைகளிலிருந்து அனைத்துப் பாடசாலைகளிலுமிருந்து அகற்றப்பட வேண்டும்.
• ஐரோப்பிய யூனியன் கலைக்கப்பட வேண்டும்.
• ஐரோப்பிய அராபிய பேச்சுவார்த்தைகளை நிறுத்து.
• பாலஸ்தீன சுயாட்சி அரசுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்து. அதற்குப் பதிலாக அந்த உதவியின் பாதித் தொகையை இஸ்ரேலிய இராணுவத்துக்கும், மறுபாதியை உலகெங்கும் இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரங்களுக்குமான நிதியமாக மாற்று.


இந்தக் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்படாதவிடத்து:


• நாட்டை ஆளுபவர்கள் எம்இனத்தையும் ஐரோப்பிய மக்களையும் கைவிட்டதாகவே பொருள்படும்.
• அப்படியெனில் உங்களுடைய சட்டங்களையும் வரிகளையும் நாங்கள் ஏற்கமாட்டோம்.
• எங்களது ஐரோப்பிய தேசங்களது மக்களைப் பாதுகாப்பதற்கான பொருத்தமானதெனக் கருதும் எந்தவித நடவடிக்கைகளையும் நாம் எடுக்கத் தயங்கோம்.

கலாச்சார மார்க்சியர்களுக்கும், பல்கலாச்சார ஆதரவாளர்களுக்கும் எதிரான ஆயுதமேந்திய அழிப்பு நடவடிக்கையே அதுவாகவிருக்கும் என்பது.., அவனது முற்கூட்டித் தாக்குதல் பிரகடனத்தில் தெளிவாகவே சொல்லப்படுகின்றது.


அவன் சொல்கிறான் நீங்கள் யார்..? எங்கிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இன்றைக்கு இல்லாவிட்டால் மறுநாள் அல்லது இன்னும் பத்து வருடங்களுக்கு பின்னாலும் அல்லது 50 வருடங்களுக்குப் பின்னாலும் நாங்கள் உங்களைத் தாக்கியே தீருவோம்.., என்கின்றான்.


2083ஆம் ஆண்டு 11ஆம் திகதி செப்ரம்பர் மாதத்திற்கு முன்னதாக, ஐரோப்பாவானது தேசபக்தர்களால் தான் ஆளப்படும் என்கின்றான். இந்தத் தேதி நிர்ணயம் என்பது, துருக்கிய ஒஸ்மானியப் படைகளை, கிறஸ்தவ - ஜேர்மன், போலந்துப் படைகள், வியன்னாவில் வெற்றிகொண்ட 400 வருட நிறைவு தினமாகும்.


முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகி முட்டுச்சந்தியில் நிற்கின்ற இந்த வேளையில், பாசிசமே அதன் வழிமுறையாகும். மக்களின் அதிருப்திகளையும் அதனால் எழக்கூடிய போராட்டங்களையும், மக்களை இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உறிஞ்சிப் பிழியும் முதலாளித்துவத்திற்கு எதிராக கிளர்ந்து எழாத வகையில் திசைதிருப்பி, அவர்களது வெறுப்புக்களை வேறு திசையில் இழுத்துச் செல்வதற்கு தேவைப்படுவது இவ்வாறான குரோதங்களையும், நாடுகள் - மாற்றுக் கலாச்சாரங்கள் - மதங்கள் மேலான வெறுப்புணர்வை வளர்த்து, போர்களையும் மூட்டிவைப்பது தான் என்பதாகும்.


அது தான் இந்தப் பிரகடனம். புலிகளைக் கூட அவன் கற்றுக்கொண்டு, அவர்களைப் பற்றி பிரஸ்தாபிக்கும் வரிகளை.., இங்கே பாருங்கள்.

“Characteristics of 4th Generation War” Fourth Generation War is normally characterised by a “stateless” entity fighting a state or egime (the EUSSR). Fighting can be physically such as Hezbollah or the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to use two modern examples. In this realm the 4GW entity uses all three levels of Fourth Generation War. These are the physical (actual combat; it is considered the least important), mental (the will to fight, belief in victory, etc) and moral (the most important, this includes cultural norms, etc) levels. Fighting can also be without the physical level of war. This is via non-violent means. Examples of this could be Gandhi’s opposition to the British Empire or by Martin Luther King’s marches. Both desired their factions to deescalate the conflict while the state escalates against them, the objective being to target the opponent on the moral and mental levels rather than the physical level. The state is then seen as a bully and loses support. Another characteristic of 4GW is that as with 3rd Generation War the 4GW combatant’s forces are decentralised. With 4GW there may even be no one combatant and that smaller groups organise into impromptu alliances to target a bigger threat (that being the state armed forces or another faction). As a result these alliances are weak and if the state’s military leadership is smart enough they can split their enemy and cause them to fight amongst themselves
(f example get the cultural conservatives (pro Israel) to fight the racial conservatives (anti-Jewish)." (page 1479)

'நான்காம் தலைமுறை போரின் அம்சங்கள்" நான்காம் தலைமுறைப் போரின் அம்சம் எதுவெனில், அரசு அல்லது ஆட்சியதிகாரங்களுக்கு எதிராக அரசுடமையின்றியவர்கள் செய்யும் போராகும். நேரடியான ஆயதம் தாங்கிய போர் என்ற வகைக்குள் இதற்கு நவீன உதாரணமாக விளங்குவது தமிழீழ விடுதலைப் புலிகள், ஹிஜ்புல்லா போன்ற அமைப்புகளாகும். நான்காம் தலைமுறைப் போரின் வடிவமும் படி நிலைகளும் மூன்று வகைப்படும். நான்காம் தலைமுறைப் போர் அலகுகள் இந்த மூன்று படி  நிலைப் போர்வழிகளைக் கையாளுகின்றன.


1. ஆயுதமேந்திய நேரடி மோதல் அல்லது போர் (அதிகுறைந்தளவிலான முக்கியம் கொண்டது)
2. மனவிருப்பு (போராடும் மன உந்துதல், வெற்றிகிட்டும் என்ற நம்பிக்கை போன்றன)
3. தார்மீக உணர்வு (அதிமுக்கியமானது, கலாச்சார நியமங்களை பாரம்பரியங்களை உள்ளடக்கியது) போர்கள் நேரடியான ஆயுதமேந்திய வழியை உள்ளடக்கியிருக்க வேண்டுமென்பதில்லை.


வன்முறையின்றிய வழிகளிலும் போர்கள் நடந்தேகும். இவ்வகையில் காந்தியின் பிரிட்டிஸ் பேரரசுக்கு எதிராக, சாத்வீக வழியிலான எதிர்ப்புப் போர் மற்றும் மாட்டின் லூதர் கிங்கின் அணிவகுப்புகளை உதாரணமாகக் கொள்ளலாம். இந்த இருவருடைய போர்முறைகளும் அரசு தனது பலப்பிரயோகத்தை விஸ்தரிக்கின் வேளையில் அதன் வியாபகத்தை குறைக்கும் வகையில், அரசுக்கான ஆதரவை
சிதைக்கும் வகையில், மக்கள் மத்தியில் தார்மீக மற்றும் மனவுணர்வுகளை தூண்டுவதன்மூலம் நடாத்துவது ஆகும்.


நான்காவது தலைமுறைப் போரின் இன்னொரு அம்சம் என்னவெனில், மூன்றாவது தலைமுறைப் போரை ஒத்தவாறே நான்காவது தலைமுறைப் போரிலும் படையணிகள் பலமுனைப் பரம்பல் கொண்டவையாகும். மேலும் நான்காவது தலைமுறைப் போர் ஒரு எதிரணியை மட்டும் கொண்டிருப்பதில்லை.
சிறு அளவிலாக பல குழுக்கள் தங்களுக்கிடையில் முன்னேற்பாடின்றிய குறித்த அவசர நிலமைகளுக்கான அணிச் சேர்க்கையை உருவாக்கி பாரிய பொது இலக்குகளின் மேல் தாக்குதலை எதிர்கொள்ளுவது என்ற அம்சத்தையும் கொண்டுள்ளது. (அரச இராணு வத்தை எதிர்த்தல் மற்றும் இன்னுமொரு எதிரணிப் பிரிவினை எதிர்த்தல் போன்றவற்றில் இது நிகழும்) அரச இராணுவத்தினர் தகுந்த
கூர்மையுடையவர்களாயின் இவ்வாறான குழுநிலை எதிராளிகளை அவர்களுக்கிடையில்பிளவுகளை ஆழப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கிடையிலேயே மோதல்களை உருவாக்குவதன் மூலம் சிதைக்கமுடியும். இதற்கு உதாரணமாக கலாச்சார தாக்கம் கொண்ட பழமைவாதிகளை (இஸ்ரேல் தரவு) இனவுணர்வு தாக்கம் கொண்ட பழமைவாதிகளுக்கு (இஸ்ரேல் எதிர்ப்பு) எதிராக திருப்புவது" பக்கம் 1479


-சிறி. (முன்னணி இதழ் 3)