Mon06212021

Last updateSun, 19 Apr 2020 8am

அத்தான் இல்லையேல், நான் செத்தேன்...!

சொந்தத்தில் கார், கொழும்பிற் காணி

சோக்கான வீடு,வயல்,கேணி

இந்தளவும் கொண்டு வரின்

இக்கணமே வாணியின் பால்

சிந்தை இழப்பான் தண்டபாணி

                                                   - மகாகவி உருத்திரமூர்த்தி

அறுவைதாசன் சகலதும் ஒடுங்கிப்போய் இருந்தான். அவனிற்கு வாயிலே சனி என்று மற்றவர்கள் சொல்வது உண்மை தானென்று நினைத்துக் கொண்டான். அவன்ரை மனிசி யாழினி ஒரு கலியாண வீட்டிற்கு போக வேணும் எண்டு சொன்னாள். அவனிற்கு கலியாண வீடுகளிற்கு போவதென்றால் வீடியோ கமெராவை கண்ட நித்தியானந்தா மாதிரி ஆகி விடுவான். நாலைந்து மணித்தியாலங்களிற்கு அய்யரின் அறுவையையும், இவனுகள் அடிக்கிற ஆடம்பர கூத்துகளையும் கண்டு அவனிற்கு மண்டை காய்ஞ்சு விடும். என்னத்தை சொல்லி இவளை சமாளிக்கலாம் எண்டு மண்டையை குழப்பிக்கொண்டு இருக்கேக்குள்ளே அய்யாமுத்து வந்து சேர்ந்தான். கவியரங்குகளில் அஞ்சு வரிக்கவிதையை ஒவ்வொரு வரியையும் மூன்று, நாலு தரம் சொல்லி அரைமணித்தியாலத்திற்கு கழுத்தறுக்கிற கவிஞனுகளின் கெட் அப்பில் ஆட்டுத்தாடியும், குர்தாவுமாக கலியாண வீட்டிற்கு இவர்களோடு போக கலாதியாக வந்தான்.


அறுவைதாசன் வெளிக்கிடாமல் இருந்ததை பார்த்ததும் அய்யாமுத்து, ஆகா வசமாக மாட்டியிட்டாய் இன்னைக்கு உனக்கு இருக்குதடா பூசை என்று மனசிற்குள்ளே சந்தோசமாக சிரிச்சபடி, முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு, அக்கா இவன் உன்னை ஏன் ஒரு இடத்திற்கும் கூட்டிக்கொண்டு போறதில்லை என்று குழையடிச்சான். இது இப்பிடித்தான் எல்லா இடத்திற்கும் நான் தான் தனியே போக வேணும் எண்டு அவள் கோவித்துக் கொண்டாள். அவள், அறுவைதாசனை அது, இது எண்டு தான் சொல்லுவாள். அதே மாதிரி அவளின்ரை நாயையும் அது எண்டு சொல்லுவாள். சில நேரங்களில் அவள் யாரைப்பற்றி கதைக்கிறாள் எண்டு அறுவைதாசன் குழம்பி விடுவான். ஏன் உன்ரை சினேகிதி கங்காவும் எல்லா இடத்திற்கும் தனியே தானே போகிறா. அவ உன்னை மாதிரி புருசனோடை சண்டை பிடிக்கிறதில்லை என்றான் அறுவைதாசன்.


கங்காவின்ரை புருசன் அவளை கோயிலிற்கு கூட்டிக்கொண்டு போகிறவர், நீர் அப்பிடி கூட்டிக்கொண்டு போறனீரா என்று யாழினி கேட்டாள். 

நான் என்ன மாட்டேன் எண்டா சொல்லுறேன் அதுக்கு கங்காவெல்லோ ஓமெண்டு சொல்ல வேணும் எண்டு தன்னை மறந்து அறுவைதாசன் ஜொள்ளு விட்டான். யாழினி முறைச்ச முறைப்பிலே அடுத்த கதை இல்லாமல் வெளிக்கிட்டு வந்தான் அறுவை. கலியாணமண்டபத்திலே பக்கத்திலே இருந்த தன்ரை சினேகிதி ஒருத்தியை பார்த்த யாழினி, நல்ல வடிவான சீலை புதிசோ என்று கேட்டாள். ஓமப்பா, நான் ஒவ்வொரு கலியாண வீட்டிற்கும் ஒரு புதுச்சீலை தான் என்று சினேகிதி பெருமையடிச்சுக் கொண்டாள். ஏன் ஒவ்வொரு கலியாணவீட்டிற்கும் ஒரு புதுப்புருசன் வைச்சிருந்தாய் எண்டால் இன்னும் நல்லாயிருக்கும் எண்டு பல்லை கடிச்சுக்கொண்டான் அறுவைதாசன்.


மணவறையில் மாப்பிள்ளையும், பொம்பிளையும் அய்யர் சொல்லிறதையும், செய்யிறதையும் பக்திசிரத்தையாக திருப்பி சொல்லியும் செய்தும் கொண்டுமிருந்தார்கள். தெய்வசன்னிதானத்திலே குரு சொல்லுறதை எவ்வளவு கவனமாக கேட்டு செய்யினம் என்று பக்திக்கடலிலே சுழியோடினான் அய்யாமுத்து. இவ்வளவு சீதனம் தந்தால் தான் தாலி கட்டுவேன் எண்டு இவன் சொல்லியிருப்பான். தான் படிச்ச படிப்பு, வேலை என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு ரேட் வைச்சிருக்கிற இவனுகள் எல்லாம் மனிசங்களா? கமலா ஒரு லட்சம் தந்தால் கமலா மனிசி, விமலா அதை விட கூட தந்தால் விமலா தான் மனிசி சொல்லுற இவனுகளை எல்லாம் செருப்பாலே அடிக்க வேணும். மனிசங்களிற்கு ஆறறிவு, மிருகங்களிற்கு அஞ்சறிவு தான் என்று விஞ்ஞான விளக்கம் சொல்லுவானுகள் இந்த அறிவுக்கொழுந்துகள். ஆனால் ஒரு மாடு இன்னொரு மாட்டோடு கூடுவதற்கு காசு கேட்கிறதா? அல்லது சாதி, சமயம், மொழி என்று மசிர்புடுங்கும் இவனுகளைப்போல நிறம், இனம் பார்த்தா சேர்கிறது. கொடுத்த காசை திருப்பி கேட்பது மாதிரி இவ்வளவு காசு எண்ணி வை எண்டு சீதனம் வாங்கும் இவனுகள் பிறகு "அவ இல்லாவிட்டா நான் சாப்பிடவே மாட்டேன்" எண்டு அன்புமழை பொழிவான். "அத்தான் இல்லையேல் நான் செத்தேன்" என்று இவ அசடு வழிவாள். காசிலே தொடங்கிய வியாபாரத்திலே காதலும் கத்தரிக்காயும் எங்கிருந்து வர முடியும்.


மணவறையில் மாப்பிள்ளைக்கு பெண் எழுந்து நின்று மாலை போட (மரியாதையாம்) மாப்பிள்ளை உட்கார்ந்தபடியே கூடைப்பந்தாட்டக்காரர்கள் பந்தை எட்டி கூடைக்குள்ளே போடுவதுபோல மாலையை எட்டி பெண்ணின் கழுத்தில் போட்டுக் கொண்டிருந்தான். ஏண்டா இவன் இருந்த இடத்தை விட்டு எழும்பாமல் இருக்கிறான், இவனிற்கு என்ன மூலக்கொதியோ என்று கவலைப்பட்டான் அறுவை. பிறகு மாப்பிள்ளை பெண்ணிற்கு கூறைச்சீலையை கொடுத்தான். அவள் அதை வாங்கிக்கொண்டு அன்னநடை போட்டபடி உள்ளே போனாள். கிழிஞ்சுது போ, ஒரு பொம்பிளை ஒரு சீலை உடுக்கவே ஒரு நாள் வேணும். இவனுகள் ஏற்கனவே பாதிநாள் மினக்கெட்டு சீலை கட்டி வந்தவளிட்டை மறுபடி சீலையை கட்டி வரச்சொல்லுறான்கள். அதுவுமில்லாமல் மாப்பிள்ளை எப்படா கழட்டலாம் என்று அவசரப்பட்டு கொண்டிருப்பான். இவனுகள் மாத்தி மாத்தி சீலையை கட்ட வைச்சு அவனை கடுப்பேத்துறானுகள் என்று பொடியனிற்காக பரிதாபப்பட்டான் அறுவை. நீ எங்கடை தமிழ் பண்பாட்டை நக்கலடிக்காதே என்றான் செந்தமிழ் வீரமறவன் அய்யாமுத்து.


எதடா தமிழ்பண்பாடு. சாதகமும், சீதனமும் பொருந்தி கந்தையா தாலியை கட்டினால் கந்தையா கண் நிறைந்த கணவன், அவனிற்கு பொருந்தாமல் முத்தையாவிற்கு பொருந்தினால் முத்தையாவிற்கு முந்தானை விரிக்க வேண்டும் என்று எவரிற்கும் ரெடி என்ற நிலையில் பெண்களை அடக்கி வைத்திருக்கிறீர்களே இதுவா பண்பாடு. தனது துணையை தானே தேடிக்கொண்ட தமிழ்ப்பெண்களை அடிமைகளாக்கியது தான் உனது இன்றைய இந்து சமயப்பண்பாடு. நல்ல சுத்தமான நீர் கிடைக்கும் எனது தாய்வீட்டை விட விலங்குகள் கால் பதிக்கும் சேறும் சகதியுமான குட்டையில் நீர் கிடைக்கும் எனது காதலனின் வீடு தான் எனக்கு விருப்பத்தை தருகிறது என்று பெண் ஒருத்தி சொல்வதாக சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது. சாதி,சமயம் இல்லாத காதலை மட்டும் அடிப்படையாக கொண்ட அது தான் உண்மையான பண்பாடு. ஊர் பொதுமன்றில் மனோகரமான மாலைப்பொழுது முழுதும் நடனமாடும் இளைஞர்களும், இளம்பெண்களும் இரவுப்பொழுதினை தமக்கு பிடித்த இணையுடன் காதல் செய்து களிப்படைவார்கள். அவர்களில் சிலர் கணவன், மனைவி என்று ஆகுவர். சிலர் மனக்கசப்பின்றி பிரிவர். பெண் சுதந்திரம், பாலியல் சுதந்திரம் என்ற நவீன கால சிந்தனைகள் நடைமுறையில் இருந்த சமுதாயம் அது. மத்திய இந்தியாவில் வசிக்கும் திராவிடமொழி பேசும் பழங்குடிகளிடம் இன்றும் அப்பண்பாடு நிலவி வருகிறது. மணமேடையில் இருந்த எல்லோரையும் வெளியே போகச்சொல்லி விட்டு இரண்டு பேர் ஒரு திரைச்சேலையை பிடித்துக்கொண்டு நின்றார்கள். உள்ளே மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் மட்டும் இருந்தார்கள். அறுவைதாசன் திடுக்கிட்டுப்போனான். ஏண்டா, அய்யர் செய்து காட்ட அவங்கள் திருப்பி செய்தாங்களே, இப்ப திரைச்சீலையாலே மூடி விட்டு அய்யர் என்ன செய்து காட்டுறார் என்று பதைபதைத்தான் அறுவை. இவன் என்னத்தை நினைத்து கேட்கிறான் என்பதையும், இவன் தன்னிடம் சொன்னது வெளியிலே கேட்டால் நிலைமை என்னவாகும் என்பதையும் யோசித்து பார்த்த அய்யாமுத்து மின்னலாய் மறைந்து போனான்.


- விஜயகுமாரன்.